Published:Updated:

குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?
குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?

மியூச்சுவல் ஃபண்ட்

பிரீமியம் ஸ்டோரி

டந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 38896 (28-8-2018) புள்ளிகளிலிருந்து குறைந்து, தற்போது புள்ளிகள் 34760 (10-10-2018) புள்ளிகளாக உள்ளது. அதிகபட்ச புள்ளிகளிலிருந்து இன்றுவரை 12% குறைந்துள்ளது.

பங்குச் சந்தையின் இந்தச் சரிவினால் முதலீட்டாளர்கள் கவலைக்கு உள்ளாகி, பங்கு சார்ந்த ஃபண்ட் திட்டங்களிலிருந்து வெளியேறிய முதலீடு பல ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால், விநோதமான விஷயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாக கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்களிலிருந்தும் பெருமளவு முதலீடு வெளியேறியுள்ளது.

 கடன் ஃபண்ட் திட்டங்களின் லாப விகிதம் குறைந்து வருவது இதற்கு ஒரு முக்கியக் காரணம். இன்னொரு முக்கியக் காரணம், சில நிறுவனங் களில் முதலீடு செய்யப்பட்ட தொகை திரும்ப வருமா என்கிற சந்தேகத்துக்குள்ளானது.

குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?

கடன் பத்திரச் சந்தையில் கலக்கம்

சில வாரங்களுக்குமுன், டி.எஸ்.பி ஃபண்ட் (DSP Mutual funds) நிறுவனம் தங்களது டி.ஹெச்.எஃப்.எல் கடன் பத்திரங்களை (DHFL) மிகக் குறைந்த விலையில் கடன் பத்திரச் சந்தையில் விற்ற காரணத்தால் டி.ஹெச்.எஃப்.எல் பங்கு விலையும் குறைந்து, சந்தையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து இன்று வரை பல தொடர்நிகழ்வுகள் காரணமாக பல நிறுவனங் களின் பங்கு விலை குறைந்து, அதனால் பங்குச் சந்தைப் புள்ளிகளும் குறைந்துள்ளன. 

குறிப்பாக, நிதி சம்பந்தப்பட்ட எல்லா நிறுவனங்களின் பங்கு விலையும், அந்த நிறுவனங் களின் கடன் பத்திர விலையும் குறைந்துள்ளது. இதனால் கடன் பத்திர ஃபண்டுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்தில், பல கடன் திட்ட ஃபண்டுகள் மூலம் கிடைத்த லாபம் மிகவும் குறைவாக உள்ளது. (பார்க்க மேலே உள்ள அட்டவணை) 

கடன் பத்திர ஃபண்டுகளில் பாதிப்பு

ஃபண்டுகளின்          என்.ஏ.வி-ல் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இவ்வளவு இறக்கம் கடன் பத்திர ஃபண்டுகளிலும் ஏற்படும் என்று எதிர்பார்த் திருக்க மாட்டார்கள். முதலீட்டாளர்களும், இந்தத் துறை சார்ந்தவர்களும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நஷ்டம் என்பது வரவே வராது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையில் இப்போது விரிசல் விழுந்திருக்கிறது. இதற்குமுன்பு ஆம் டெக் ஆட்டோ, ஜிண்டால் ஸ்டீல் (Jindal Steel) நிறுவனங்கள் பிரச்னையில் சிக்கியபோது, அதில் முதலீடு செய்திருந்த கடன் சார்ந்த ஃபண்டுகள் நஷ்டம் கண்டது. அதுமாதிரி இப்போதும் நடந்துள்ளது.

குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?

கடன் பத்திர லாப விகிதமும், வங்கி வட்டி விகிதமும்

வங்கி வட்டி விகிதம் தற்போது ஏறி வருகிறது. பல முன்னணி வங்கிகள் 7 - 7.75% வரை வட்டி தந்து வருகிறது. மேலும், 10 ஆண்டு அரசாங்கக் கடன் பத்திர வருமானம் தற்சமயம் ஏறி வருகிறது. முன்னர் 6.8 சதவிகிதமாக இருந்த இந்த வருமானம்,  தற்போது 8.05 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வங்கி வட்டி விகிதம் ஏறும்போது கடன் பத்திரங்களின் விலை குறைந்து, ஃபண்ட் நிறுவனங்களின் வருமானம் குறைந்தது. இதனால், கடன் சார்ந்த ஃபண்டுகளின் என்.ஏ.வி-யும் குறைகிறது.

கடந்த வருடத்தில் கடன் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் மூலம்  4 - 5% லாபம் வந்துள்ளது. வங்கி எஃப்.டி கடந்த மூன்று வருடங் களில் 7% வரை லாபம் தந்துள்ளது. இதனால் கடன் பத்திர லாப விகிதம், வங்கி வட்டி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இதைக் கவனித்த கடன் சார்ந்த ஃபண்ட் முதலீட்டாளர்கள் பலர், கடன் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, தங்களுக்கு நன்கு தெரிந்த வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம் என்று சென்றுவிடுகின்றனர்.

முதலீட்டாளர்கள் இப்படி யோசிப்பது இயற்கையான விஷயமே. ஒரு முதலீட்டின்மூலம் கிடைக்கும் லாபத்தைவிட, இன்னொரு முதலீட்டின்மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த முதலீட்டையே தேடிச் செல்வார்கள். இது காலம் காலமாக நடப்பதுதான்.

குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?

வங்கி வட்டி - கடன் ஃபண்டுகளுக்கான வரி

ஆனால், வங்கி எஃப்.டி-யில் இப்போது கொஞ்சம் கூடுதலான வருமானம் கிடைத்தாலும், கடன் ஃபண்ட் திட்டங்களிலேயே முதலீடு செய்ய வேண்டியதன் அவசியமும் உள்ளது. உதாரணமாக, வரி.

வங்கி வட்டிக்கு வரி கட்டும் முறையும், கடன் ஃபண்டுகளின் லாபத்திற்கான வரிக் கணக்கிடும் முறையும் மாறுபடுபவை. வரிக்குப்பின் கிடைக்கும் தொகையைப் பார்க்கும்போது. கடன் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகமாகவே இருக்கிறது. (பார்க்க, மேலே உள்ள அட்டவணை).

குறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா?

முடிவாக...

எனவே, கடன் பத்திர ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்குமுன் கவனமாக இருக்கவேண்டும். செபியின் சமீபத்திய ஃபண்ட் வகைப்படுத்தல் பிரிவின்படி, கிரெட் ஃபண்டு / கார்ப்பரேட் ஃபண்ட் வகைகளில் முதலீடு செய்வதற்குமுன் நன்கு யோசித்துச் செயல்படுவது அவசியம். தற்சமயம் இருக்கும் சூழலில், மிகக் குறைந்த கால ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

- மீ.கண்ணன்,  நிதி ஆலோசகர், radhaconsultancy.blogspot.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு