சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதுதான் முதலீட்டாளர்கள்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். பல சமயங்களில் தவறான திட்டங்களைத் தேர்வு செய்துவிட்டு, நஷ்டம் வரும்போது, தவறான திட்டத்தைத் தேர்வு செய்ததினால்தான் நஷ்டம் வந்தது என்று நினைப்பதில்லை. ‘‘நான் ஏமார்ந்துவிட்டோன்’’, ‘‘என்னை ஏமாற்றிவிட்டார்கள்’’, ‘‘பங்குச் சந்தை முதலீடே இப்படித்தான்’’ என்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறோம். சரியான திட்டங்களை எப்படித் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இப்போது, ஒரு நிதித் திட்டங்களை மற்ற நிதித் திட்டங்களுடன் ஒப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

அனைத்துத் தேர்வுகளையும் புரிந்துகொள்ளுதல்
கடந்த இதழில், டிசைனர் ஹேமா ரூ.6 லட்சம் ஆயுள் காப்பீடு கவரேஜ் பெறுவதற்காக ஆண்டுக்கு ரூ.25,000 பிரீமியமாகச் செலுத்தி வந்ததை நாம் பார்த்தோம். அதே பிரீமியத்தில், அவருக்குக் கிடைத்த ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய வகையிலான மற்ற தேர்வுகள் என்னென்ன?
ஹேமா அடுத்த 25 ஆண்டுகளுக்கு, ரூ.3 கோடி உயர்மதிப்புக் கொண்ட ஆயுள் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கலாம் (இதிலும் 80சி-யின் கீழ் வரிக் கழிவைக் கோரலாம்) அல்லது அவரது பணம் வளர்ச்சியடையக்கூடிய இன்னொரு நிதித் திட்டத்தில் அதே தொகையை முதலீடு செய்து வரலாம்.
இங்கே, ஹேமா கேட்டிருக்க வேண்டிய முக்கியமான கேள்வி, அவர் அந்த மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் வாங்குவதன் நோக்கம் என்ன என்பதுதான். ஆயுள் காப்பீடு கவரேஜ் இருப்பதை அவர் விரும்பியிருக்கிறார் என்பதே அவர் அளித்த பதில். அப்படியானால், அவர் விரும்பியபடி ரூ.3 கோடி கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளானை அவர் தேர்வு செய்திருக்கலாம்.
ஆனால், ஹேமாவுக்கு ஏற்கெனவே ஒரு டேர்ம் பிளான் இருப்பதாக வைத்துக்கொண்டால், அவர் ஆண்டுக்கு 25,000 ரூபாயை எதில் முதலீடு செய்வார்? பல திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, பி.பி.எஃப், என்.எஸ்.சி, என்.பி.எஸ் (தேசிய ஓய்வூதியத் திட்டம்), வரிச் சேமிப்பு அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ் (பங்குச் சார்ந்த சேமிப்புத் திட்டம்) மியூச்சுவல் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள், கம்பெனி எஃப்.டி-கள், என்.சி.டி (பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள்), கோல்டு இ.டி.எஃப், தங்க நகைகள் மற்றும் பலவகையான நிதித் திட்டங்கள் உள்ளன.
இந்த நிதித் திட்டங்களில் சில வரித் தள்ளுபடி (Tax deduction) அளிக்கக்கூடியவை; இன்னும் சில வரித் தள்ளுபடி எதுவும் அளிக்காதவை. வரிச் சேமிப்புதான் உங்கள் விருப்பம் என்றாலும், ஒரு திட்டம் அந்த ஒன்றை மட்டுமே நிறைவேற்றுவதாக இருக்கக்கூடாது. ஒரு திட்டத்தின் சாதகங்கள் மற்றும் பாதகங்களையும் மட்டும் பார்க்காமல், இன்னும் பல அம்சங்களை அதாவது, ஒரு முதலீட்டாளராக உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒப்பிடுதலுக்கான அளவீட்டு முறை
ஒரு நிதித் திட்டத்தைத் தேர்வுசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 5-6 அளவீட்டு முறைகளால் (chosen metrics) மதிப்பிடப்படும்போது, முதலீட்டுக் காலம் மற்றும் ஆண்டுக்குக் கிடைக்கக்கூடிய வருவாய் போன்ற சில அளவீட்டு முறைகள் தன்னிச்சையாக நின்று, நம்மை முடிவெடுக்கச் சொல்லும். உதாரணமாக, ‘‘இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 12% வருவாய் கிடைத்தாலே நான் மகிழ்ச்சியடைவேன்” அல்லது, “என்.எஸ்.சி-யில் நான் ரூ.1 லட்சம் முதலீடு செய்து, 5 ஆண்டுகள் கழித்து, எனக்கு ரூ.1.5 லட்சம் கிடைத்தால் நல்லது.”
ஆனாலும், செலவு மற்றும் ரிஸ்க் போன்ற மற்ற சில அளவீட்டு முறைகள், நமக்கு எதையும் தெரிவிக்காம லேயே தனித்து நிற்கும். அதுபோன்ற அளவீட்டு முறைகள், மற்ற நிதித் திட்டங் களுடன் ஒப்பிடும்போது மட்டுமே ஆதாயம் ஈட்டும். உதாரணமாக, இரண்டு லார்ஜ்கேப் பங்குகளின் செயல்பாடுகளை ஒப்பிடுவது எளிதானது. ஓராண்டு, மூன்றாண்டுகளுக்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு அவற்றின் வருவாய் என்ன, செலவு விகிதம் எப்படி, அவற்றின் போர்ட்ஃபோலியோவில் இருப்பவை என்னென்ன அல்லது சந்தையின் சரிவு அல்லது நெருக்கடியின்போது அதன் மதிப்பு எவ்வளவு குறைந்தது என்பதைக்கூட நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
இந்தத் தகவல்களில் பெரும்பாலானவை பல இணையதளங்களிலேயே இன்றைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இந்த மியூச்சுவல் ஃபண்டை, இன்னொரு நிதித் திட்டத்துடன் - உதாரணமாக, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப், என்.பி.எஸ், பி.பி.எஃப் அல்லது என்.சி.டி-யுடன் நீங்கள் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்து, முதலீடு குறித்த முடிவை எடுக்க முடியும்?
உதவி கோருங்கள்
இந்தக் கேள்விக்கான பதில், அந்த அளவீட்டு முறைகளில் மட்டுமே இல்லை; அது முதலீட்டாளரான உங்களிடமே இருக்கிறது. முதலீட்டா ளரின் சொத்துக் கலவைக்கான முன்னுரிமை (Asset-mixpreference), ரிஸ்க்குக்கான வருமான எதிர்பார்ப்பு கள் (risk-reward) மற்றும் மிகவும் முக்கியமானது உங்களது தனிப்பட்ட நிதி இலக்கு களைச் சார்ந்து அது இருக்கும்.
இந்த நிதித் திட்டங்களின் இயல்பு என்னவெனில், ஒரு முதலீட் டாளருக்கு வெறும் வருவாய் ஒப்பீடு (Returns comparison) மட்டுமே அர்த்தமுள்ள உணர்வை ஏற்படுத் தாமல், பல்வேறு விதமாக இருப்பது தான். பலசமயங்களில், ஒரு முதலீட் டாளருக்குத் தனது முதலீட்டில் மறைந்திருக்கும் அபாயங்களை – உதாரணமாக, ஒரு யூலிப் பாலிசியைக் காட்டிலும் ஒரு பேலன்ஸ்டு ஃபண்ட் அதிக அல்லது குறைந்த ரிஸ்க் கொண்டது என்பதை ஒரு முதலீட்டாளர் எப்படிச் சொல்ல முடியும்?
சரியான கேள்விகளைக் கேளுங் கள் அல்லது நிபுணர்கள் / ஆலோ சகர்களிடமிருந்து உதவி கோருங்கள்.
1. எனது மகனுடைய உயர் கல்விக்கான செலவுக்கானது என்ற எனது இலக்குக்கேற்ப இந்த நிதித் திட்டத்தின் முதிர்வு / வருவாய் இருக்குமா?
2. வருவாய் யூகிக்கக்கூடியதா, யூகிக்க முடியாத வருவாய்கள் எனக்குச் சரிப்பட்டு வருமா?
3. இந்த நிதித் திட்டத்தின் செயல் பாடுகள் எளிதாகக் கண்காணிக்கக் கூடியவையாக இருக்குமா?
4. ஒருவேளை, இந்த நிதித் திட்டத்தின் செயல்பாடுகளில் எனக்குத் திருப்தி இல்லையெனில், எனது விருப்பத்துக்கேற்ப அதி லிருந்து வெளியேறும் வாய்ப்புகள் இருக்கின்றனவா?
5. எனது பணத்தை இந்த நிதித் திட்டத்தின் விற்பனையாளர் எங்கே (இன்ஷூரன்ஸ், ஃபண்ட் நிறுவனங்கள், சிட் ஃபண்ட் அல்லது வங்கி) முதலீடு செய்கிறார்?
பெரும்பாலான முதலீட்டாளர்கள் முடிவெடுப்பதில் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். ஆனால், ஒரு நிதித் திட்டத்தின் பயன்களுக்குச் சான்றளிக்கக்கூடிய அளவீட்டு முறைகளைச் சரியாக அமைப்பதில்தான் தவறு செய்துவிடு கிறார்கள். விளம்பரங்கள், ஏஜென்டுகள் மற்றும் விநியோகஸ் தர்கள் எல்லாம் உங்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிற அளவீட்டு முறைகளைத் தரப்போவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு அவர்களது நிதித் திட்டங்களைப் பற்றி மட்டுமே தெரியுமே தவிர, ஒரு முதலீட்டாளராக உங்களுக்கு என்ன தேவை என்பது தெரியாது. அவர்கள் அதை அறிந்திருந்தாலும், அவர்கள் அவர்களது நலன்களுக்காகத்தான் செயல்படுவார்களே தவிர, உங்களது நலன்களுக்காகச் செயல்படமாட்டார்கள்.
எனவே, நிபுணர்கள் அல்லது ஆலோசகர்களின் உதவியை நாடுவது உங்களுக்கு உதவியாக அமையக்கூடும். நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய, உங்களுக்குச் சரியானதாக இருக்கும், அறிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கும் முடிவை எடுக்க ஏதுவாக, நிதித் திட்டத்தில் மறைந்திருக்கக்கூடிய அம்சங்களை, எளிய அளவீட்டு முறைகளில், நீங்கள் புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாக விளக்கிச் சொல்ல முடியும்.
(ரகசியம் தொடரும்)
- தமிழில் பா.முகிலன்
ஹெல்த் பாலிசி எவ்வளவுக்கு எடுக்க வேண்டும்?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை தனக்கு மட்டும் எடுப்பதா, குடும்பத்துக்கும் சேர்த்து எடுப்பதா, எவ்வளவுக்கு எடுப்பது என பலருக்கும் குழப்பம் இருக்கவே செய்கிறது. சம்பாதிக்கும் நபருக்கு மட்டும் சிலர் ஹெல்த் பாலியை எடுத்துக் கொள்கிறார்கள். விபத்து, உடல் நலப் பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்த்து இந்த பாலிசியை எடுத்துக்கொள்வதுதான் நல்லது. மூன்று அல்லது நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். கணவன், மனைவி, ஒரு குழந்தை கொண்ட குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் ஓராண்டு பிரீமியம் தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 இருக்கக்கூடும்.
- சேனா