Published:Updated:

முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்!

முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்!

முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்!

றிவு, ஒழுக்கம் & நேரம்   (Knowledge, Discipline & Time) ஆகியவைதான் ஒரு முதலீட்டு முக்கோணத்தின் முனைகளாக இருக்கின்றன. முதலீடு தொடர்பான ‘அறிவு’ குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

அறிவே முதன்மையானது

சந்தையில் கிடைக்கும் பல்வேறு நிதித் திட்டங்கள் குறித்து ஒரு முதலீட்டாளர் என்கிற முறையில் முழுமையாக நாம் அறிந்திருப்பது அவசியமானது. பல்வேறு நிதித் திட்டங்கள் குறித்த அறிவை நாமே நேரடியாகப் பெறாத வரை, வேகமான விற்பனைத் தந்திரங்களில் நாமே எளிதில் சிக்கிவிடுவதற்கான வாய்ப்பு உள்ளதுடன், நமது பணமும் நமக்குப் பொருந்தாத திட்டங்களுக்குப் போய்விடும்.

தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஆனந்த் என்பவரின் கதையைப் பார்ப்போம். 2017-ல், ஆனந்த் தனது போனஸ் பணத்தைப் பெற்ற போது, அவரது ரிலேசன்ஷிப் மேனேஜர் அவரை அழைத்து, ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளில் (ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட்) முதலீடு செய்யுமாறு பரிந்துரைத்தார்.

முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்!

அந்த ஃபண்டில் முதலீடு செய்யுமாறு ஆனந்தின் மேனேஜர் பரிந்துரைத்ததற்கு முக்கியக் காரணம், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு இணையாகக் கருதப் படுவதால், அதற்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், நீண்ட கால மூலதன ஆதாய வரி  (long term capital gains tax) கிடையாது என்பதால்தான்.

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளின் போர்ட் ஃபோலிவில் இடம் பெற்றிருக்கும் பங்குகளில் ஏதாவது சரிவு ஏற்பட்டால், அதை ஈடு செய்வதற்காக, அந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியின் ஒருபகுதி டெரிவேட்டிவ்களில் முதலீடு செய்யப்படும் என்று ஆனந்துக்கு மேலும் விளக்கப்பட்டது. அதைக்கேட்டு சமாதான மடைந்த ஆனந்த், அவரது போனஸ் பணம் முழுவதையும் ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் முதலீடு செய்தார். ஆனாலும், லிக்விட் ஃபண்டுகளைவிடக் (7.2%)  குறை வாக ஆர்பிட்ரேஜ் ஃபண்டிலிருந்து (6.7%) வருவாய் கிடைத்ததால், ஆனந்த் மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்.

அறிவைத் தேடி...

ஆழம் தெரியாத ஆற்றில் காலை வைக்கும்போது எந்த அளவுக்கு உஷாராக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு எச்சரிக்கை உணர்வுடன் புதிய நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும்போது இருக்க வேண்டும். அந்தத் திட்டங் களில் முதலீடு செய்வதற்கு முன் அந்தத் திட்டங்கள் குறித்த விவரங்களை நன்றாகப் படித்தோ அல்லது நிபுணர்களின் கருத்தைக் கேட்டோ அறிந்துகொள்வது நல்லது.

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் குறித்து ஆனந்த், நிபுணர்கள் அல்லது ஆலோசகர்களின் உதவியை நாடியிருந்தால், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் என்பது, ரொக்கத்திலும் டெரிவேட்டிவ் சந்தையிலும் விலை வேறுபடும் போது, வருவாயை உருவாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார்.

சொத்தின் ஏற்ற இறக்கத்தைப் (volatility) பொறுத்தே வருவாய்கள் அமையும். ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள், ஒரே நேரத்தில் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி, அதை டெரிவேட்டிவ் சந்தையில் விற்கின்றன. பங்குச் சந்தைக்கும் டெரிவேட்டிவ் சந்தைக்குமான விலை வித்தியாசம்தான், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுக்கான வருவாயை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்!

கடந்த 2014-ம் ஆண்டில், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஒருதளமாக பங்குச் சந்தை இருந்தது. சென்செக்ஸில் அப்போது புல் மார்க்கெட் (bull market) தொடங்கியபோது தான், இந்தப் பிரிவில் உள்ள பல ஃபண்டுகள் தொடங்கப்பட்டன. அதே ஆண்டில்தான், எஃப்.எம்.பி-களுக்கான (FMP) ‘வைத்திருக்கும் காலம்’ (holding period), நீண்ட  கால மூலதன ஆதாய வரிச் சலுகை தகுதி பெறுவதற்கான மாதங்கள் 12-லிருந்து 36 ஆக மாற்றியமைக்கப்பட்டது. இது, அதிகபட்சம் 12 மாதம் வைத்திருக்கும் காலத்துடன் கூடிய, வரி விலக்குத் திட்டங்களைத் தேடக்கூடிய முதலீட்டாளர்களைக் கடன் சார்ந்த (debt funds) ஃபண்டு களிலிருந்து பங்கு சார்ந்த ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளுக்கு மாற வைத்தது.

சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறதா?

சும்மா கிடக்கும் பணத்தைக் கொண்டு, குறுகிய காலத்தில்      (ஓராண்டு) வரி விலக்குடன் கூடிய வருவாய்களைப் பெற நினைப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதைப் போன்று தான் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் தோன்றுகின்றன. டெரிவேட்டிவ் களைப் பற்றி நன்கு அறிந்த பங்கு வர்த்தகர் களுக்கேற்றதாகவும் இது இருக்கிறது. குறிப்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்தன. வரி சேமிப்புகளைத் தேடும் சிறு முதலீட்டாளர் களிடம் இவை நன்கு விற்பனையாகின.

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டால், அதனுடன் மூன்று முக்கிய பிரச்னைகள் உள்ளன என்பது தெரிய வரும்.

வரிச் சேமிப்பின்கீழ், ரிஸ்க் எடுப்பவரின் பார்வையில் நோக்கினால், இந்த ஃபண்ட், ஒரு முதலீட்டாளரைக் குறைந்த ரிஸ்க்கிலிருந்து அதிக ரிஸ்க்குக்கு (கடன் சார்ந்த திட்டத்திலிருந்து பங்கு சார்ந்த திட்டத்துக்கு) மாற்றுகிறது.

நிதித் திட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒரு முதலீட்டாளர் பங்குச் சார்ந்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார் எனில், சிறந்த மாற்றாக லார்ஜ்கேப் மற்றும் மல்டிகேப் ஈக்விட்டி ஃபண்டுகள் உள்ளன. ஆர்பிட்ரேஜ் கண்ணோட்டத்தில் பார்த்தால், அதிக பணம் முதலீடாகும்போது ஆர்பிட்ரேஜ் ஃபண்டு களுக்கான வாய்ப்புக் குறைவு என்பதால், வருவாய் பூஜ்யமாகவே இருக்கும். மேலும், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளின் வரிச் சலுகை, 2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டது. 

ஆக மொத்தத்தில், தங்களது நிதி இலக்குகளை அடையும் நோக்கத்துடன், பாரம்பர்ய முறையில் தங்களது போர்ட் ஃபோலியோவை உருவாக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றதல்ல. சரியான சொத்து ஒதுக்கீடுடன்கூடிய நன்றாகத் திட்டமிடப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அல்லது அதைவிடக் கூடுதலான ஒரு போர்ட்ஃபோலியோ, நல்ல வரிச் சேமிப்புத் திறன் கொண்டதாக இருக்கும். இதை விட்டு முதலீட்டாளர்கள் வரியைக் குறைக்கும் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் நோக்கி ஓட வேண்டாம்.

ஒரு முதலீட்டாளருக்கு அறிவு எவ்வாறு உதவுகிறது?

கட்டுக்கதையையும் பயத்தையும்  (myth & fear) போக்கி, ஒரு நிதித் திட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ள அறிவு உதவுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல், வருவாயைத் தேடி நீங்கள் ஓடினால், உங்களது நிதி இலக்குகளுக்கு பணம் சேர்க்கும் வகையில் போதுமான வளர்ச்சியில்லாத, பொருத்தமற்ற நிதித் திட்டங்கள் நிறைந்த போர்ட்ஃபோலியோவே உங்களுக்கு அமையும்.

நீங்கள் முதலீட்டு அறிவைப் பெற்றுவிட்டால், ஒரு நிதித் திட்டம் உங்களுக்குச் சரியானதாக இருக்கும் அல்லது இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு, முன்கூட்டியே முடிவெடுக்கக்கூடிய சிறந்த நிலையை எட்டக்கூடியவராக ஆகிவிடுவீர்கள். ஒரு முதலீட்டாளருக்கு அதுதான் முக்கியமான தேவை.

அடுத்த அத்தியாயத்தில், முதலீட்டு முக்கோணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது முனைகளைப்பற்றி அதாவது ஒழுக்கம் & நேரம் குறித்துப் பார்ப்போம்.

(ரகசியம் தொடரும்)

 - லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

தமிழில்: பா.முகிலன்