Published:Updated:

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

கேள்வி - பதில்

ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அரசு தரும் ஊக்கத் தொகைகளை அறிந்துகொள்வது எப்படி?

பாண்டியராஜ், திருத்தணி

எஸ்.சிவராமன், கஸ்டம்ஸ் அட்வகேட்.

‘‘ஓர் ஏற்றுமதியாளர் தனது பொருள்களுக்கு அரசு தரும் ஊக்கத் தொகைகளை அறிந்துகொள்வது மிக அவசியம் ஆகும். இதை நாம் எளிதாக அறிந்துகொள்ள வசதியாக ‘ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன்’ அமைப்பு, ‘நிர்யத் மித்ரா’ (NIRYAT MITRA) என்ற செயலியை அறிமுகப்படுத்திள்ளது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

பின்னர் அதிலுள்ள பிசினஸ் டூல்ஸ் (Business Tools) என்ற லிங்க்கில் நாம் ஏற்றுமதி செய்யும் பொருளின் HS CODE அளித்தால், அரசின் ஏற்றுமதிக் கொள்கை, ஊக்கத்தொகைகள், வட்டி மானியம் மற்றும் புதிய அறிவிப்புகள் அனைத்தையும் அறிய முடியும்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றுக் கிடைக்கும் பரிசுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா அல்லது அவர்களே வரியை எடுத்துக் கொண்டு தருவார்களா?

வி.ராமன், பெங்களூரு

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“பரிசுகளின் அடிப்படையில் இதனை மூன்றாகப் பிரிக்கலாம். முழுவதும் பணமாகப் பரிசுத் தொகை இருந்தால், அது பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால் டி.டி.எஸ் பிடித்தமோ, வருமான வரி கட்டுவதோ தேவையில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் அவர்களே டி.டி.எஸ் பிடித்துத்தான் கொடுப்பார்கள். நீங்களும் வருமான வரிக் கணக்குத் தாக்கலில் இதனைக் குறிப்பிட்டு தாக்கல் செய்யவேண்டும்.

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

பொருளாக மட்டுமே பரிசு கிடைத்தால், அந்தப் பொருளுக்கு அப்போதைய மார்க்கெட் மதிப்பீட்டின்படி கணக்கிட்டு, 30% வரிக் கணக்கீடு செய்வார்கள். அந்த வரியைப் பரிசு பெறுவதற்கு முன்னதாக பரிசு கொடுக்கும் நிறுவனமோ அல்லது பரிசு பெறுபவரோ கட்டியபின்புதான் பரிசைப் பெற வேண்டும்.

 அடுத்ததாக, பணமாகவும், பொருளாகவும் கிடைக்கும்போது, மொத்த மதிப்பீட்டிற்கேற்ப 30% வரி செலுத்த வேண்டும். பரிசுத்தொகையாகக் கிடைக்கும் இந்த வருமானம், அடிப்படை வருமான வரிவரம்புடன் சேர்க்கப்பட மாட்டாது.”

45 வயதுடைய நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். எனது மனைவியின் வயது 40. நான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்தே எனக்கு குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி போட்டுள்ளார்கள். அதில் எனது மனைவிக்கும் கவர் ஆகும். எனது ஓய்வுக்காலமான 58 வயதுக்குப்பிறகு தனியாக பாலிசி எடுத்துக்கொள்ளலாமா?

ராஜேந்திரன், சென்னை

கே.பி.மாரியப்பன் இன்ஷூரன்ஸ் நிபுணர்

“உங்களுடைய குரூப் பாலிசி கவரேஜ் பற்றிய முழுவிவரங்கள் தெரியவில்லை. எனினும், உங்களுடைய பணி ஓய்வுக்குப்பிறகு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கண்டிப்பாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி தேவைப்படும். ஆனால், பணி ஓய்வுக்காலத்தில் உங்களுடைய உடல்நலத்தைப் பொறுத்து காத்திருப்புக் காலம், அதிக பிரீமியம் தொகை போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

குறிப்பிட்ட சில சிக்கலான வியாதிகளுக்கு அதிகபட்ச காத்திருப்புக்காலம் நான்கு ஆண்டுகள் என இருக்கிறது. எனவே, பாலிசி எடுக்கும்போது உங்களுக்கு ஏதும் வியாதி இருந்தால், அது சம்பந்தப்பட்ட மருத்துவத்திற்கு நான்கு வருட காலம் க்ளெய்ம் பெற முடியாது. ஆக, முன்கூட்டியே திட்டமிட்டு உங்களுக்கு 54 வயதாகும்போது, இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றைத் தொடங்கிவிடுவது நல்லது. 58 வயதில் நீங்கள் பணிஓய்வு பெறும்போது இந்தப் புதிய பாலிசி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.”

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

என் வயது 25. தற்போது மாதம் 40,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். நான் ஏற்கெனவே மாதாமாதம் 5,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். எனது 55-வது வயதில் 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட மாதாமாதம் எஸ்.ஐ.பி முறையில் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்?

ராஜேஷ், திருநெல்வேலி

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

‘‘உங்களுக்கு 55 வயதாக இன்னும் 30 ஆண்டுகள் இருக்கின்றன. உங்களுடைய 55-வது வயதில், தோராயமாக இரண்டு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கு, ஒவ்வொரு மாதமும் 5,800 ரூபாயை டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். முதலீட்டுக்கு 12% வருமானம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பின்படி, இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

வழக்கறிஞராக இருக்கும் எனது மகள் கிரெடிட் கார்டுக்கு வங்கியில் விண்ணப்பித்தபோது கார்டு தர மறுத்துவிட்டார்கள். வங்கி ஊழியர் ஒருவரிடம் விசாரித்தபோது, தான் ஓர் இல்லத்தரசி எனக் காட்டி மீண்டும் விண்ணப்பித்தால் கிடைக்கும் என்று கூறினார். ஒருவரின் பணியை வைத்து கிரெடிட் கார்டைத் தீர்மானிப்பது வங்கி விதிமுறைகளில் உண்டா?

ஸ்ரீதரன், சேலம்

ஆர்.கணேசன், முதன்மை இயக்க அலுவலர், நவரத்தினா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்

‘‘கிரெடிட் கார்டு கொடுக்கும்போதோ, வங்கிக் கடன் தரும்போதோ விண்ணப்பதாரரின் கே.ஒய்.சி (know your customer (KYC)), அவர்களது வருமானம் ஆகியவற்றைப் பார்ப்பார்கள். சிபில் ஸ்கோர் பார்ப்பது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் ஒரு வாடிக்கையாளரை மதிப்பீடு செய்வதற்கு ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு முறை வைத்திருப்பார்கள்.

வாடிக்கையாளர் இதற்குமுன்னர் கார்டுகளைப் பயன்படுத்தியது, பணத்தைத் திருப்பிச் செலுத்தியது, அதிலிருக்கும் வாடிக்கையாளர் குறித்த எதிர்மறையான தகவல்கள், வாடிக்கையாளரின் வசிப்பிடம், கல்வித் தகுதி, பணி, வங்கியில் அவரது பணப்பரிமாற்றம், தொடர்ச்சியான வருமானம் எனப் பல்வேறு காரணிகள் அதில் இருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு வங்கிகளும் அவர்களுக்கென தனிப்பட்ட கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தக்கூடும். இதன்படி ஏதேனும் மறுப்பு வந்திருக்கலாம்.

ஆனால், பல வழக்கறிஞர்கள் கிரெடிட் கார்டு வசதியைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, இதற்குப் பொத்தாம் பொதுவாக இதுதான் காரணம் என எதையும் கூற இயலாது. எனவே, கிரெடிட் கார்டுகள், வங்கிக் கடன் வழங்குவதென்பது அந்தந்த வங்கிகளை, வாடிக்கையாளர்களைப் பொறுத்ததே.”

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் பற்றி கூறவும். இதில், எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்வது சரியா? அல்லது மொத்தமாக முதலீடு செய்வது சரியா?

மகேஷ் குமார், மதுரை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், பங்குச் சந்தையில் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் சிறப்பான ஃபண்ட் ஆகும். இதில் முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு நல்ல தேர்வே. ஆயினும் ஒரு விஷயம். இந்த வகை ஃபண்டுகளில் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருக்கும். அந்த அசைவுகளை நீங்கள் அதிகம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும். இல்லையேல் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் கைகூடாது. இந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையிலேயே முதலீடு செய்யுங்கள்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.