Published:Updated:

ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!

ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!

ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!

“தீபாவளிக்காக சொந்த ஊருக்குப் போயிருந்தேன். அப்படியே மும்பைக்கு அவசர வேலையாக

ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!

வந்துவிட்டேன். நீங்கள் கேள்விகளை அனுப்புங்கள்" என வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பவே, உடனே கேள்விகளை அனுப்பினோம். அடுத்த அரை மணி நேரத்தில் பதில்களை அனுப்பி வைத்தார் ஷேர்லக்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நெகட்டிவ் வருமானம் கொடுத்திருக்கின்றனவே?

‘‘கடந்த ஓராண்டில் மொத்தமுள்ள 347 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில், 78% சதவிகிதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. இதில் 106 ஃபண்டுகள் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான இழப்பைக் கொடுத்துள்ளன.
 
இதில், உள்கட்டமைப்பு துறைதான் மிக மோசமான செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. ஹெச்.எஸ்.பி.சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் 35.83% இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி இழப்பு 18.62 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் நிஃப்டி ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 28%,  நிஃப்டி மிட்கேப் இண்டெக்ஸ் 12% சரிந்துள்ளன.

மொத்தமுள்ள 36 மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களுமே கடந்த ஓராண்டில் நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், இதுபற்றி கவலைப்படத் தேவை இல்லை என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள். குறுகிய காலத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளின் வருமான இழப்பைக் கண்டு கலங்கத் தேவையில்லை.  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டு கால இலக்கு இருந்தால் மட்டுமே ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடுசெய்ய வேண்டும் என்கிறார்கள், அவர்கள்.” 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!

புது வியாபார வருடம் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதே?

“தீபாவளிப் பண்டிகையையொட்டி, புதன்கிழமையன்று முகூர்த் டிரேடிங்கில், முதலீட்டாளர்கள் புதிதாகப் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியதால் சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 246 புள்ளிகள் உயர்ந்தது. ஆட்டோ மொபைல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, எஃப்.எம்.சி.ஜி மற்றும்  ஐ.டி உள்ளிட்ட அனைத்துத் துறை குறியீடுகளுமே ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

அதேபோன்று தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி, வர்த்தகத்தின் இடையே 10,600 புள்ளி களைத் தாண்டி, வர்த்தக முடிவில் 68 புள்ளிகள் ஏற்றத்துடன் 10,598-ல் நிலைகொண்டது. பி.எஸ்.இ ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 1.08%, மிட்கேப் இண்டெக்ஸ் 0.62% ஏற்றமடைந்து காணப்பட்டன.”

ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தின் நிதிச் சிக்கல் கமர்ஷியல் பேப்பர்களின் விற்பனையைப் பாதித்துள்ளதே?

“நிதிச் சிக்கலில் சிக்கியுள்ள ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம், நிதி பத்திரங்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தத் தவறிய காரணத்தால்,       என்.பி.எஃப்.சி-களிடையே பணப்புழக்கம் குறைந்துபோனது.

இதன் காரணமாக நிதி நிறுவனங்களால் விற்கப்படும் கமர்ஷியல் பேப்பர்களின் விற்பனை அக்டோபர் மாதத்தில் 54,113 கோடி ரூபாயாகக் குறைந்து போனது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் சராசரி விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 65% சரிவாகும்.”

டிரேடர்கள் தொடர்ந்து கரடியின் பக்கமே இருக்கிறார்களே?

“செப்டம்பர் மாதத்திலிருந்தே சந்தை, பலவீனமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நிஃப்டி, அதன் அதிகபட்ச உச்சத்திலிருந்து 10.5% சரிவடைந்துள்ளது. டெரிவேட்டிவ் பிரிவில், டிரேடர்கள் குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே கவனம் செலுத்தி தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். நவம்பரில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டில் அதிக உச்சமடைந்த பங்குகள், வரும் நாள்களில் எப்படிச் மாறும் என்பதைப் பொறுத்துத்தான் சந்தையின் போக்கு இருக்கும். டிரேடர்கள் தொடர்ந்து கரடியின் பக்கமே இருந்துவருவதால், சந்தை ஏற்ற இறக்கத்திலேயே இருந்துவருகிறது. அதேநேரத்தில், அவ்வப்போது சில பாசிட்டிவ் செய்திகள் வந்து சந்தையை காளையின் பக்கம் திருப்ப முயற்சி செய்கின்றன. தற்போதைய நிலையில் கரடிக்கும் காளைக்கும் மோதல் தொடர்வதாகவே இருக்கிறது.”

பெரிய வங்கிப் பங்குகள் மீண்டும் ஏற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றனவே?

“வாராக் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் எஸ்.பி.ஐ போன்ற பெரிய வங்கிகள், வாராக் கடன் வசூலில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இதனால், லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், ஐ.எல்&எஃப்.எஸ் போன்ற கடன் சுமையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, வங்கிசாரா நிதி நிறுவனங்களில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அவற்றுக்கு ஏற்பட்ட நெருக்கடி இப்போதைக்குத் தீர்வதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது.”

பங்குகளை பிசிக்கல் முறையில் மாற்றுவதற்கு செபி  சலுகை அறிவித்துள்ளதே?

“பங்குகளை பிசிக்கல் முறையில் மாற்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு பத்திரங்களை விற்பவரின் பான் எண்ணைப் பதிவு செய்ய முடியாத நிலை காணப்பட்டால்  2015, டிசம்பர் 1-ம் தேதிக்கு முந்தைய பங்கு பத்திரங்களை, பான் எண் இல்லாமல் பதிவு செய்துகொள்ளலாம் என செபி தெரிவித்துள்ளது.”

நடப்பு நிதியாண்டில் ஐ.பி.ஓ வந்த பங்குகள் பெரும்பாலும் சோபிக்கவில்லையே?

“நடப்பு நிதியாண்டில், பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வந்த 15 நிறுவனங்களில், 10 நிறுவனங்களின் பங்குகள், அதன் வெளியீட்டு விலையைவிட அதிகபட்சம் 53% குறைவாக வர்த்தகமாகி வருகிறது. மிக மோசமாக பாதிக்கப் பட்டிருப்பது ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ்தான். வெளியீட்டு விலையைவிட 53% குறைவாக வர்த்தகமாகி வருகிறது. இண்டோஸ்டார் கேப்பிட்டல் ஃபைனான்ஸ் பங்கு ஒன்றின் விலை, 45.39% குறைவாக வர்த்தகமாகி வருகிறது. ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை 42.91% குறைவாக வர்த்தகமானது.”

பி.எஸ்.இ 500 பட்டியலில் 300 பங்குகளின் இலக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதே?

‘‘ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கிய செய்தி வெளியானதிலிருந்தே, அதாவது செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்தே, பி.எஸ்.இ 500 இண்டெக்ஸில் இடம் பெற்றுள்ள பங்குகளில் சுமார் 300 பங்குகளின் இலக்கு விலை, குறைக்கப் பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ், டிஷ் டிவி, ஹெச்.பி.சி.எல், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், யெஸ் பேங்க், பி.பி.சி.எல் மற்றும் பிரமல் என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனப் பங்குகளின் ஓராண்டுக்கான இலக்கு விலையை புரோக்கரேஜ் நிறுவனங்கள்  35 முதல் 45 சதவிகிதம் வரை குறைத்துள்ளன.”

சந்தை, தற்போது நம்பிக்கை அளிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறதா?

“ரூபாய் மதிப்பு சரிவு, அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை போன்றவற்றால், பங்குகளின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. நிஃப்டி, அதன் உச்சத்திலிருந்து 14 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்துள்ளது.

நிஃப்டி, அக்டோபர் 26-ம் தேதியன்று ஏற்பட்ட மோசமான சரிவிலிருந்து 5% உயர்ந்துள்ளது.   2008-09-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தவிர்த்து, 2006-ம் ஆண்டிலிருந்து இதுபோன்று 15 முறை நடந்துள்ளது. எனவே, நம்பிக்கை இழக்கக்கூடாது என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் இண்டெக்ஸ் 14% சரிவைச் சந்தித்து, அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் இழந்ததை மீண்டும் அடைந்துள்ளது. ஆதலால், வரும் நாள்களில் பங்குகள் ஏற்றத்தைக் காணும் என்பதே அனலிஸ்ட்களின் கருத்தாக உள்ளது.”

- ஷேர்லக், ஓவியம்: அரஸ்