Published:Updated:

பங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா?

பங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா?

விழிப்பு உணர்வு

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த அமலா ஜான், அவரது மகன் ஜோஷ்வா இருவரும் தீபாவளிச் சீட்டு நடத்தி வந்தனர். சுமார் 275 பேரை உறுப்பினராகச் சேர்த்து தீபாவளிச் சீட்டு நடத்திவந்த இவர்கள், சீட்டுப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல, அதிக வருமானம் கிடைக்காததால், தீபாவளிச் சீட்டுக்கு பணம் கட்டியவர் களுக்குப் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லை. இந்த விரக்தியால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

இவர்களின் தற்கொலைக்குப் பங்குச் சந்தைதான் காரணமா? நிச்சயமாக இல்லை. அதிக எதிர்பார்ப்பும், தவறான முதலீட்டு வழிகாட்டலுமே காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் பார்த்துவிடலாம் என்கிற பேராசையில் இறங்குவது ஏமாற்றத்தில்தான் முடியும் என்பதற்கு இந்த தற்கொலை ஒரு சிறந்த உதாரணம்.
 
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பணம், நம் சொந்தப் பணமாக இருக்க வேண்டும். ஏனெனில், நம்முடைய முதலீட்டுக் கணக்கு பல்வேறு புறச்சூழல்களால் தவறாகும்போது, பங்குச் சந்தை இறக்கம் கண்டு, தற்காலிகமாக வருமானம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், சூழ்நிலை சீராகி, பங்குச் சந்தை ஏற்றம்பெறும்போது வருமானம் அதிகரிக்கக்கூடும். இடைப்பட்ட காலத்தில் வருமான இழப்பைத் தாங்கிக்கொண்டு முதலீட்டைத் தொடர நம் முதலீடு சொந்தப்பணமாக இருப்பது அவசியம். 

பங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா?

பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய ஏமாற்றத்தையும், இழப்பையும் தவிர்ப்பதற்கான முதலீட்டு ஆலோசனையை பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். அவர் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

“பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், சில அடிப்படை முதலீட்டு முறைகளைப் பின்பற்றுவது நல்லது. அப்படிப் பின்பற்றும்போது இழப்பு, ஏமாற்றம் என்ற மனச்சோர்வுக்கு ஆளாக வேண்டியிருக்காது. எல்லாச் செலவுகளும் போக மீதமிருக்கும் சேமிப்புப் பணத்திலிருந்துதான் முதலீடு செய்ய வேண்டும். அதிலும்கூட, எல்லாச் சேமிப்பையும் ஒரே மாதிரியான முதலீட்டில் போடாமல், பலவகை முதலீடுகளில் பிரித்து (Diversify) முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கும்.

எந்தக் காரணத்தைக்கொண்டும் கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது. ஏனெனில், கடன் வாங்கும்போது, கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டியைவிடக் கூடுதலாக வருமானம் பார்க்க வேண்டியது கட்டாயம். அந்த அளவிற்குக் கூடுதலாகக் கிடைக்குமென்ற எதிர்பார்ப்போடு கடன் வாங்கி முதலீடுசெய்வது சரியான முறையல்ல. வட்டி கட்ட வேண்டிய கட்டாயத்தில், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவுகளுக்குத் தள்ளப்படுவோம்.

நல்ல தரமான முன்னணிப் பங்குகளைத் தேர்வுசெய்து அவற்றில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். பென்னி ஸ்டாக் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள். அப்படிச் செய்யப்பட்ட முதலீடுகளை நீண்டகால அடிப்படையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும்போது தான் நல்ல வருமானத்தை எதிர்பார்க்க முடியும். அதேசமயம், ஆண்டுக்கு ஒருமுறையாவது முதலீடு களை மறுபரிசீலனை செய்து தேவைப்பட்டால் அதில் மாற்றங்களைச் செய்வது நல்லது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா?

பங்குச் சந்தையில் முதலீட்டுக்கேற்ற சரியான நிறுவனப் பங்குகளைத் தேர்வுசெய்ய முடியாத பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. பங்குச் சந்தையுடன்  ஒப்பிடும் போது மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் ரிஸ்க் குறைவு. அதேபோல, நம் உற்றார்-உறவினர், நண்பர்கள் என, சமூக அழுத்தங்களுக்காக அதிகமாக வருமானம் ஈட்டும் எண்ணத்தில் ரிஸ்க் அதிகம் எடுத்து முதலீடுசெய்வது தவறு. முதலீட்டுக்கான அதீத வருமானம் குறித்த எதிர்பார்ப்பை சற்று குறைத்துக்கொண்டால் எதிர்பாராத இழப்பினால் ஏற்படும் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, நம்பிக்கையான ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகரை அணுகி, நம் வயது, குடும்பம், தேவைகள், திட்டங்கள், வரவு செலவு ஆகிய வற்றைச் சொல்லி, ஆலோசனை பெற்று முதலீடு செய்வது நல்லது” என்றார்.

பங்குச் சந்தையைப் பற்றி தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, அதில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு நஷ்டம் வந்தவுடன், பங்குச் சந்தையில் முதலீடு செய்ததால்தான் நஷ்டம் என்கிற மாதிரி பொய்த் தோற்றம் உருவாக்கப்படுகிறது. மனிதர்கள் பேராசையினால் செய்யும் தவறுகளுக்குப் பங்குச் சந்தையைப் பலிக்கடா ஆக்குவது இன்னும் எத்தனை காலத்துக்கு நடக்குமோ!

- தெ.சு.கவுதமன்