
காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 21 - முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்!
வி .எஸ்.நைபால் (V.S.Naipaul) எழுதிய கடைசிப் புத்தகம் (India: A Million Mutinies Now), மிக முக்கியமான புத்தகம். 1990-ம் ஆண்டு மிகுந்த கவனத்துடன் செய்த ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டறிந்தவற்றைச் சொல்லும் இந்தப் புத்தகத்தில், இந்தியா வேகமான முன்னேற்றத்தைச் சந்திக்கப் போகும் ஒரு நாடு என்பதைத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் நைபால்.

நோபல் பரிசு பெற்ற வி.எஸ்.நைபால் கற்பனைக் கதைகள் எழுதுவதிலும் ஆராய்ச்சி செய்து அதில்வரும் முடிவுகள் குறித்துத் தர்க்கரீதியான (Non-fiction) புத்தகங்கள் எழுதுவதிலும் திறமைசாலி. சர் விதியாதர் சுராய்பிரசாத் நைபால் (1932-2018) ட்ரினிடாடில் பிறந்து, பிரிட்டன் குடிமகனாக இருந்தபோதிலும், இந்தியாவைப் பற்றி அவருக்கிருந்த புரிந்துகொள்ளல் மிகச் சிறந்த ஒன்றாக இருந்தது. வெளிநாட்டில் வளர்ந்த ஒருசிலரே இந்தியா குறித்து இந்த அளவுக்குப் புரிந்துவைத்திருக்க முடியும்.

அவருடைய தாத்தா இந்தியாவிலிருந்து ட்ரினிடாடுக்கு வேலை தேடிப் போனவர் என்பதால், இந்தியாவுடன் இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே தொடர்பு இருந்தது. அதனாலேகூட இந்த வகையிலான புரிந்து கொள்ளல் அதிகமாக இருந்திருக்கிறது. அதுவே 1990-ம் ஆண்டில் இதுபோன்ற சிறப்பான ஒரு புத்தகம் எழுத வாய்ப்பாக இருந்திருக்கலாம். 1990-லேயே இந்தப் புத்தகம், இந்தியா பொருளாதாரரீதியாகப் பெரியதொரு வளர்ச்சியை அடுத்த இருபது வருடங்களில் சந்திக்க வாய்ப்பிருப்பதாகத் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருந்தது. கடந்த 20 வருடங்களில் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களில் பெரும் பான்மையானவை நிரூபணமாகியுள்ளது. இன்றைக்குமே இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் பல விஷயங்கள் பொருத்தமாக இருக்கிறது.
எப்படி எழுதினார்?
1988 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் மும்பையில் ஆரம்பித்து கடிகாரச் சுழற்சிக்கு எதிர்சுழற்சி செய்யும் வகையில் இந்தியா முழுவதுமாக அவர் பயணிக்க ஆரம்பித்து, காஷ்மீரில் அவருடைய பயணத்தை முடித்தார். அவருடைய இந்தப் பயணத்தின்போது அவர் மும்பையில் இருந்த ஒரு கிரிமினல் கேங்க்ஸ்டரில் ஆரம்பித்து, வெவ்வேறு ஊர்களில் இந்து மற்றும் முஸ்லீம் மதங்களில் தீவிரமாக இருக்கும் முக்கியஸ்தர்கள், ஒரு தலித் இயக்கத் தலைவர், நக்சலைட்கள், சீக்கியர்கள், கொள்கையில் தீவிரமாக இருப்பவர்கள், பங்குச் சந்தைத் தரகர்கள், அரசு குமாஸ்தாக்கள், அரசியல்வாதிகள், சினிமாத் தயாரிப்பாளர்கள் மற்றும் சாமியார்கள் போன்ற பலரையும் சந்தித்து, நேர்காணல் செய்தார். இந்த உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தபோதிலும் இந்தியாவில் இருப்பவர்களுக்கு இதில் ஒன்றும் ஆச்சர்யப்படும் அளவிலான விஷயம் இல்லை.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம், நைபால் இந்த நேர்காணல்களைச் சிரத்தையாகத் தொகுத்து எழுதி, அந்தத் தொகுப்பிலிருந்து பல விஷயங்களைக் கணித்து தன்னுடைய முடிவுகளைச் சொல்லியிருப்பதுதான். அந்தக் கணிப்புகள் சாமான்யமானவையல்ல. அவர் பார்த்த எல்லா ஆட்களும், சூழ்நிலைகளும் கடந்த 30, 40 ஆண்டு களில் மிகவும் மாறிவிட்டது. தொழில் வளர்ச்சி, அவற்றிற்கான அதிக முதலீடுகள் போன்றவை லஞ்சம், ஊழல், கிரிமினல் குற்றவாளிகள் அரசியலில் நுழைந்தது போன்றவை இதனால்தான் நடந்தது என்று ஒரேமாதிரியாக அனைவரும் சொன்ன போதிலும், நைபாலின் பார்வை வேறு ஒரு கோணத்திலேயே இருந்தது.
இந்தப் புத்தகத்தில் அவர் உறுதியாகச் சொன்னது என்னவென்றால், (1990-களிலும், இன்றைக்குமே பொருந்தும் விஷயம் இது) ‘‘இந்தியா அதற்கே உரித்தான பாணியில் வேகமாக முன்னேற்றத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. இத்தனை பெரிய நாட்டின் குடிமக்களாகிய ஆண்களும் பெண்களும், அவர்களுடைய பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் எதிர்பார்த்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் விட அதிகமான வளர்ச்சியையும் மாற்றத்தையும் எதிர்பார்க்கின்றனர்’’ என்பதைத்தான். இதுதான் மில்லியன் மியூட்டினிஸ் என்ற புத்தக தலைப்பின் சாராம்சமே.

“மக்களிடம் கொஞ்சம் அதிகமாகப் பணம் இருப்பது கர்நாடகாவின் கிராமப்புறங்களில் (கோவாவிற்குச் செல்லும் வழியில்) வெளிப்படையாகத் தெரிகிறது. வறுமை இருக்கிறது என்றாலுமே வயல்வெளிகளில் கரும்பு, பருத்தி மற்றும் ஏனைய பயிர்கள் செழிப்பாகக் காட்சியளிப்பது வறுமை எதிர்காலத்தில் குறையும் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. கிராமப்புறங்களில் வீடுகள் நல்ல சிமென்ட் பூச்சுகளுடனும், சிவப்பு ஓடுகள் வேயப்பட்டும் இருக்கிறது. 26 ஆண்டுகளுக்குமுன் இங்கே வந்தபோது இருந்த வறுமை நிலை இப்போது இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலே சொன்ன விஷயங்களுடன் தலித் மக்கள் கண்டுவரும் முன்னேற்றம், பெண்களின் முன்னேற்றம், சிறுதொழில் செய்பவர்களிடத்தே தொழிலை விரிவாக்கவேண்டும் என்பதில் மின்னுகிற நம்பிக்கை போன்றவற்றை வைத்தே அவர் இந்தியா வேகமாக முன்னேறும் என்ற முடிவை 1990-ல் சொல்லியிருந்தார்.
எப்படி நைபால் இதைச் சொன்னார்?
1990 ஆனாலும் சரி, 2020 ஆனாலும் சரி, நாட்டில் வசிக்கும் நபர்களும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் இந்தியர் மற்றும் அந்நிய நாட்டவர்கள் நம் நாட்டின் முன்னேற்றம் குறித்த சராசரி எண்ணத்தையே கொண்டி ருக்கின்றனர். ஒன்றும் பெரியதாக சொல்வதற்கில்லை. எல்லாமே உறைந்து போனதைப்போல் இருக்கிறது. ஒரே ஊழல் மயம். ஜனநாயகத்தில் உள்ள இடைஞ்சல்கள் இது என்றெல்லாம் சொல்லிவந்த அந்தக் காலகட்டச் சூழ்நிலையின்போது நைபால் மட்டும் எப்படித் தெளிவாக இந்தக் கணிப்பைச் செய்ய முடிந்தது என்பதுதான் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கிறது இல்லையா?
பெரும்பாலானோர் சொன்ன / சொல்லிவந்த கணிப்புகளை விட்டு, ஒட்டுமொத்தமாக விலகி அவரால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று சொல்ல முடிந்ததற்குக் காரணம், அவருடைய திறமையும் கடின உழைப்பும்தான். அவரே 2007-ம் ஆண்டில் இந்தியா படுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேளையில் பின்வருமாறு எழுதினார்.
“இப்போது 2007-ல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தியா செழிப்பாக மாறிவருகிறது என்று உறுதியாகக் கூறமுடிகிறது. 1988-ல் இருந்த சூழ்நிலையே வேறு. நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்த வேளையில் அனைவருமே ஒரு மாறுபட்ட மனச்சோர்வுடன் இருந்தனர். காந்தி போன்ற பெரிய தலைவர்கள் இருந்த அரசியலில் கிரிமினல்கள் புகுந்துவிட்டனரே என்ற சோர்வு. எல்லாம் கெட்டுப்போய்விட்டது என்பதனால் இருந்த சோர்வு. எங்கும் ஊழல் மலிந்துவிட்ட படியால் வந்த சோர்வு அது. இந்தப் பின்னணியில் அடுத்து என்ன நடக்கும் என்று நான் கணிக்க முயற்சி செய்தேன். அது ஒன்றும் சுலபமானதாக இல்லை.
26 ஆண்டு காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நான் பயணித்துள்ளேன். அதனால் பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களையும் என்னால் கேட்டறிய முடிந்தது. அதிலும் பெரிய ஊர்களைவிட சிறிய ஊர்களில் நான் அதிக நேரத்தைச் செலவிட்டேன்” [Source: https://www.theguardian.com/books/2007/mar/10/fiction.vsnaipaul] என்கிறார்.
நடப்புகளைப் பார்த்து எதிர்காலத்தைக் கணிக்கும் நைபாலின் சிறப்பான திறனும், அவர் உழைத்த கடின உழைப்புமே (அதற்கு முன்னால் அவர் பயணித்து எழுதிய ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா குறித்த புத்தகங்களிலிருந்து கிடைத்த அனுபவமும்) ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நபராக இருந்தபோதிலும், இந்தியாவை யாருமே பார்க்காத ஒரு கோணத்தில் அவரைப் பார்க்கவைக்க உதவியது. அவருக்கு இந்தியாவில் வசிக்கும் அனைத்து நபர்களுடைய எண்ணமும் தெளிவாகத் தெரிந்தது.
அதேசமயம், அவர்களுக்கு இருக்கும் ஒருதலைப்பட்ச எண்ணச்சாயல் எதுவும் இல்லாமல் அவரால் பல விஷயங்களைப் பார்க்க முடிந்தது. அதனை அவருடைய வார்த்தை யிலேயே சொல்ல வேண்டும் என்றால், “பல மாதங்கள் இந்தியாவில் பயணித்த பிறகும் கூட நான் அந்நியனாகவே தென் பட்டேன். என்னால் என்னை அந்நியனாக மனதளவில் அடையாளம் செய்துகொள்ள முடியவில்லை. இந்தியாவும், இந்தியா குறித்த எண்ணங்களும் எனக்கு மிக முக்கியமானதாக இருந்தன. அதனாலேயே நான் எப்போதுமே இந்தியாவைப் பற்றி இரண்டுவிதமான எண்ணங்கள் கொண்டவனாக இருந்தேன். இந்த நிலைப் பாட்டாலேயே என்னால் இறுதியாக ஒரு முடிவான வார்த்தையைச் சொல்வது கடினமான ஒன்றாக இருந்தது. [Source: https://www.theguardian.com/books/2007/mar/10/fiction.vsnaipaul ]
நைபாலுக்கும் முதலீட்டுக்கும் என்ன சம்பந்தம்?
இவருடைய திறமையில் ஐம்பது சதவிகிதத்தை நாம் முதலீட்டில் கொண்டுவந்துவிட்டால் நமக்கு நிகரான ஆட்கள் முதலீட்டில் இல்லை என்று சொல்லுமளவிற்கு நாம் சென்றுவிடுவோம். நைபாலின் ஆய்வுமுறைகளிலிருந்து ஒரு முதலீட்டாளர் கற்றுக்கொள்ளவேண்டியவை என்னென்ன..?
1. ஒரு நிறுவனம் குறித்த பல விஷயங்களைப் புரிந்துகொள்ள சில மணி நேரங்களோ அல்லது நாள்களோ போதுமானதாகும். அதேசமயம், அந்த நிறுவனத்தை வெற்றி பெறவைக்கும் போட்டியைத் தவிர்க்கும் குணாதிசயங்களைப் (Competitive Advantage) புரிந்துகொள்ள சில மாதங்களோ அல்லது வருடங்களோகூட ஆகலாம்.
2. ஒரு நிறுவனத்தைப் பற்றி புரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள், டீலர்கள், சப்ளையர்கள் என பலதரப்பினரின் எண்ணங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கும். சிலசமயம், அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற முக்கியஸ்தர்கள்கூட (சி.இ.ஒ /சி.எஃப்.ஓ) நமக்குத் தகவல்களைத் தரலாம்.
3. நிர்வாகம், வாடிக்கையாளர்கள், சப்ளை யர்கள், டிஸ்ட்ரிப்யூட்டர்கள் போன்றவர்களிடம் சேகரித்த தகவல்களை வைத்து ஒரே கோணத்தில் யோசிக்காமல் மாற்றுவழியில் ஏதும் கணிக்க முடிகிறதா என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். உதாரணத்திற்கு, இருசக்கர வாகன விற்பனை உச்சபட்ச நிலைக்கு வந்துவிட்டது. இனி செய் வதற்கு ஒன்றுமில்லை என்ற தகவலை, வாடிக்கை யாளரின் வாங்கும் சக்தி முழுக்க முழுக்க முடிந்துவிட்டது என்றும் அர்த்தம்.
4. அனுபவ அறிவுக்கு ஈடான விஷயம் எதுவும் இல்லை. உதாரணத்திற்கு, நாம் என்னதான் மிளிரும் புத்திசாலித்தனத்துடன் இருக்கிற போதிலும், ஹெச்.டி.எஃப்.சி பேங்கை நாம் புரிந்து கொண்டிருக்கும் அளவைவிட, புத்திசாலியான ஒரு நபர் கடின உழைப்பைச் செலுத்திப் புரிந்துகொள்ளும் அளவு அதிகமாகவே இருக்கும்.
ஒரு முதலீட்டாளராகக் கற்றல் மற்றும் கேட்டறி தலில் நமக்கிருக்கும் பணிவே நம்மை முதலீட்டில் வெற்றிபெற வைக்கும்!
(முதலீடு தொடரும்)
- செளரப் முகர்ஜி , நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் (Marcellus Investment Managers)