Published:Updated:

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

Published:Updated:
பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

ம்மில் பலரும் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் போடுவதற்கு முக்கியக் காரணம், அவை பாதுகாப்பானவை என்கிற எண்ணம் மனதில் திடமாக விழுந்துவிட்டது தான். பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டிலும் பணத்தைப் போட்டால், எதிர்காலத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம்தான் அவர்களை வேறுமாதிரி யோசிக்கவிடாமல், வங்கி எஃப்.டி, வீடு, தங்கம் எனத் திரும்பத் திரும்ப தேடச் செய்கிறது.

முதலீடு குறித்த நமது தவறான எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி, சரியான முதலீடு எது என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சென்னையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்று. மினிஸ்ட்ரி ஆஃப் கார்ப்பரேட் அபயர்ஸ் சென்னை ஐ.சி.ஏ.ஐ பவனில் ‘Save to be Safe’ என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல நிதி நிபுணர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதாவது...

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

கடனா... உஷார்

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார் நிதி ஆலோசகர் ஏ.கே.நாராயண். கடன் என்று வரும்போது எந்தெந்த விஷயங் களை எல்லாம் கவனித்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார் அவர்.

“வங்கிக் கடன் வாங்கும்போது அதற்கான மாதத் தவணைகளை முறையாகக் கட்டியாக வேண்டும். தவறினால் அபராதத்துடன் சேர்த்துக் கட்ட வேண்டியிருக்கும். தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டி வசூலிக்கப் படுவது கூடுதல் பணச் சிக்கலை ஏற்படுத்தும். நமது வருமானத்தைத் தாண்டி விலையுயர்ந்த கார்களை வாங்குவது, அதிகப்படியான மாதத் தவணைக்கு வீட்டுக் கடன் வாங்குவது, அதிக லாபம் பெறலாம் என்ற ஆசையில் கடன் வாங்கி முதலீடு செய்வது, அவசரத் தேவைகளுக்காக அதிக வட்டியில் கடன் வாங்குவது போன்றவை சிக்கலை உருவாக்குகின்றன. இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரெடிட் கார்டுமூலமாக வாங்கிய கடனை, சரியான காலகட்டத்திற்குள் திருப்பிச் செலுத்துதல், திட்டமிட்டு கடன் தொகையைக் குறைத்தல் போன்ற செயல்பாடுகளால் கடன் சிக்கலில் மாட்டாமல் இருக்கலாம். பயன்பாட்டில் இல்லாத சொத்துகளை வீணாகச் சேர்த்துவைக்காமல் விற்று பணமாக்குவது நல்லது. குறிப்பாக, எப்போதோ ஒருநாளைக்குப் போடும் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைத்து அதற்கான வாடகையைக் கட்டுவது பணத்தை வீணடிக்கும் செயலே!

கடன் வாங்கும்போது, கடனுக்காக விதிக்கப் படும் நிபந்தனைகளை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வட்டி எவ்வளவு, குறிப்பிட்ட காலத்துக்குமுன்பே கடனைத் திரும்பக் கட்ட முடியுமா என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்பாராமல் ஏற்படும் அவசரச் செலவுக்கு எமர்ஜென்ஸி ஃபண்ட் ஒன்றை எல்லோரும் அவசியம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ப்பது அவசியம்.

மாதச் சம்பளத்திற்கேற்ப, சொத்து மதிப்புக்கேற்ப குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் பெறலாம். பங்குகளின் பெயரிலும், தங்கத்திற்கு ஈடாகவும் கடன் பெறலாம். ஆனால், தனிநபர் கடனில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். எனவே, தேடிவந்து தந்தாலும் தனிநபர் கடனை வேண்டாம் என்று சொல்வதே புத்திசாலித்தனம். டாப்அப் லோன் பெறவேண்டுமெனில், மாதத்தவணையை மிகச் சரியாகக் கட்டிவந்திருக்க வேண்டும்.  நண்பர்களிடமிருந்து கடனு தவி பெறுவது நட்பை இழக்கச் செய்யும். எனவே, நட்பு முக்கியம் எனில், நண்பர்களிடம் கைநீட்டாமல் இருப்பது நல்லது.

கடன் தொந்தரவு இல்லாமல் வாழவேண்டுமெனில், மூன்று செயல்களை மனதில்கொள்ள வேண்டும். மிகுந்த கவனத்துடன் செலவு செய்தல், வருமானத்தில் எவ்வளவு அதிகம் சேமிக்க முடியுமோ, அவ்வளவு சேமித்தல், மிகவும் அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் ஒழிய,  கடன் வாங்கவே கூடாது என்று சபதம் எடுத்துச் செயல்பட வேண்டும். இந்த மூன்று விஷயங் களையும் முறையாகப் பின்பற்றினாலே போதும், கடன் வாங்கவேண்டிய நிலை யாருக்கும் வராது’’ என்று கூறினார்.

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

யார் சிறந்த முதலீட்டாளர்?

அடுத்ததாகப் பேசிய ஆடிட்டர் அபிஷேக் முரளி, ‘சிறந்த முதலீட்டாளர்களுக்கான பண்புகள்’ என்ற தலைப்பில் பேசினார்...

“முதலீட்டைப் பொறுத்தவரை, பொறுமை மிகவும் முக்கியம். அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவடைந்தாலே அதன் பாதிப்பால் நமக்கும் சரிவு ஏற்படும். உடனே பதற்றப்பட்டு முதலீட்டை எடுத்துவிடாமல் பொறுமை காக்க வேண்டும். சந்தை மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும்.

முதலீட்டைக் குறுகிய காலத்துக்கானதாகப்  பார்க்காமல், பங்குச் சந்தை முதலீட்டை நீண்ட கால முதலீடாகப் பார்க்க வேண்டும். நீண்டகால முதலீட்டின்போது ஏற்றத் தாழ்வுகளையும் தாண்டி வருமானம் பார்க்க இயலும். சந்தை ஏற்ற இறக்கத்தைப் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்கக்கூடாது.

ஒருவருடைய போர்ட் ஃபோலியோ சமநிலைப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒன்றில் இழப்பு ஏற்பட்டாலும், இன்னொன்றில் லாபம் ஏற்பட்டு சீரான வருமானம் கிடைக்கும். எனவே, நமக்கென ஒரு முதலீட்டு வழிமுறையை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். முதலீடுகளையும்கூட மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமே எனக் குறுக்கிக்கொள்ளாமல், பங்குச் சந்தை, வங்கி டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் என ஒருவருடைய எதிர்காலத் தேவைக்கேற்ப பல்வேறு விதமாகப் பிரித்து, முதலீடு செய்வது அவசியம்.

முதலீடுகளைப் பொறுத்தவரை, ரிஸ்க் எடுப்பது தவறல்ல. ஆனால், அது நம்மைப் பாதிக்காதவாறு திட்டமிட்டு எடுப்பது நல்லது. முதலீடு செய்த பணத்தை முற்றிலும் இழந்தாலும்கூட நம்மால் இழப்பைத் தாங்கிக்கொள்ள இயலும் என்று நினைத்தால் மட்டுமே ரிஸ்க் மிகுந்த முதலீடு களை நாடலாம். பங்குச் சந்தையில் சில சமயம் நாம் வாங்கிய பங்கு நஷ்டம் தரலாம். லாபம் தரும் என்று நினைத்தால், நஷ்டம் தந்துவிட்டதே என்று கலங்கத் தேவையில்லை. அப்படி நேர்வது இயல்பான ஒன்றுதான். அந்தத் தவறிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அதே தவறு நேராதபடி நம்மைத் திருத்திக்கொள்வது  புத்திசாலித்தனமே அன்றி, சந்தையிலிருந்து விலக நினைப்பதல்ல.

முதலீடு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. முதலீட்டுக்கு வயது ஒரு தடையல்ல. எந்தச் சூழலிலும் முதலீட்டுக்கான முயற்சியைக் கைவிடாமல் தொடர வேண்டும்’’ என்றார்.

முதலீடுகள் பலவிதம்

இன்றைக்கு முதலீடுகளில் முக்கியமான இடம் வகிக்கும் மியூச்சுவல் ஃபண்டின் வகைகள் குறித்துப் பேசினார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்.

“முதலீடு என்பது வாகனம் ஓட்டுவதைப் போன்றது. அதில் வங்கியில் முதலீடு செய்வது, சைக்கிளில் பயணிப்பதுபோல எளிதானது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பெரிய வாகனத்தை ஓட்டுவது போன்றது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது டிரைவரை நியமித்து நமது வாகனத்தை ஓட்டுகிற மாதிரி. கார் ஓட்ட நாம் ஏன் டிரைவரை வைத்துக் கொள்கிறோம்? அவருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டுமே, செலவு அதிகரிக்குமே, நாமே கார் ஓட்டக் கற்றுக்கொள்ளலாமே என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அதற்கான பதிலாக, டிரைவர் இருந்தால் பாதுகாப்பாகப் பயணிக்க லாம், பயண நேரத்தில் வேறு வேலைகளையும் செய்யலாம். வாகனத்தை பார்க்கிங் செய்யும் பிரச்னை இல்லை. இதை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு டூவீலர்தான் சரி.

வாகனத்திற்கு டிரைவர் வைத்துக்கொண்டால், விபத்து நேராதா என்று நீங்கள் கேட்கலாம். விபத்து நேரலாம். ஆனால், நாமே டிரைவராக இருந்து ஏற்படும் விபத்தைவிடக் குறைவாக இருக்கும். அந்த டிரைவர் நல்ல அனுபவமுள்ளவரா எனக் கேட்டு நியமிக்க வேண்டும். எத்தனை ஆண்டுகள் அனுபவமென்று பார்க்க வேண்டும். எத்தனை விபத்துகளைச் சந்தித்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டபின் நியமிக்கலாம். அதேபோல, முதலீட்டு ஆலோசகர்களையும் அவர்களது அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்து, அவர்களின் ஆலோசனைப்படி முதலீடு செய்யலாம்.

எதற்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறோம்? ஓரளவு பாதுகாப்பாக இருக்கக்கூடிய நல்ல முதலீடு, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்,  வருமான வரிச் சலுகை - இந்த மூன்றும் இருக்கக்கூடிய மிகச் சில முதலீட்டுத் திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதன்மையானது என்றால் அதை யாரும் மறுத்துப் பேசமுடியாது.

மியூச்சுவல் ஃபண்டுகளை பங்குச் சந்தை சார்ந்தவை, கடன் சந்தை சார்ந்தவை, இவை இரண்டும் கலந்தவை என மூன்று வகைப்படும். இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி எனப் பல வகைகள் உண்டு.

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

பங்கு சார்ந்த திட்டங்களில் டைவர்சிஃபைடு திட்டம், ரிஸ்க் குறைவானது. செக்டோரல் துறை சார்ந்த திட்டம் சற்று ரிஸ்க் அதிகம். இண்டெக்ஸ் குறியீடுத் திட்டமானது, இண்டெக்ஸ் அதிகரித்தால் வருமானம் அதிகரிக்கும். இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதால், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. வரிச் சேமிப்புத் திட்டத்துக்கான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் 80சி-படி வரிச் சலுகை அளிப்பவை. அடுத்ததாக, மிட்கேப், லார்ஜ்கேப், மல்டிகேப் என மூன்று வகை மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன.

இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நமக்கான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சற்று ஆய்வுக்குரிய ஒன்று. நம்முடைய இலக்குக்கு ஏற்ற ஃபண்டா என்று பார்க்க வேண்டும். அந்த ஃபண்டின் செயல்பாடு எப்படி இருக்கும், எவ்வளவு தூரம் லாபம் தரக்கூடும் என்பதை யெல்லாம் பார்க்க வேண்டும். ஒரு ஃபண்ட் நமக்கேற்ற  திட்டமா என்பதைக் கணக்கிட நம்முடைய வயது, குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் எவ்வளவு உள்ளது, கட்டவேண்டிய மாதாந்திரத் தவணை எவ்வளவு என்பதையெல்லாம் கணக்கீடு செய்ய வேண்டும்.

நம்முடைய குறுகிய கால, நீண்ட கால இலக்குகள் என்ன, பிள்ளைகளின் கல்வி, திருமணம், நிலம், வீடு, பயணம் போன்ற வற்றிற்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும், எந்த மாதிரியான முதலீட்டுத் திட்டம், வருவாய்க்கானதா, வளர்ச்சிக்கானதா என்பனவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதேபோல, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களையும், நிறுவனத்தின் பின்னணி, கடந்த காலச் செயல்பாடுகள், மியூச்சுவல் ஃபண்டின் கடந்த காலச் செயல்பாடுகள், ஃபண்ட் மேனேஜரின் திறன், அனுபவம், நெறிமுறைப்படுத்தப்பட்டு     தனிநபர் சாராமல் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்” என்றவர், ஒரு ஃபண்டின் செயல்பாட்டை எவ்வாறு அளவிடுவது என்பதையும் விளக்கினார்.

காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை

இறுதியாக ‘காணாமல் போகும் நிறுவனங்கள் - முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜு பேசினார்.

“காணாமல்போகும் நிறுவனங்கள் என்பது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்டி, இரண்டாண்டுகள் செயல் பட்டபின், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியில் நிறுவனமே இல்லாமல் போவதாகும். இப்படியான நிறுவனங்களின் எண்ணிக்கை மண்டல வாரியாகக் கிடைக்கிறது.

வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிட் ஃபண்டுகள் போன்றவை முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டியபின்னர் காணாமல் போகின்றன. இவற்றை ரிசர்வ் வங்கி, காணாமல்போன நிறுவனங்கள் என்ற கணக்கில் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. 1,550 நிறுவனங்களுக்கும் மேலாக இப்படிக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவற்றைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள http://watchoutinvestors.com என்ற இணையதளத்திற்குச் செல்லலாம். அங்கே பல்வேறு விதமான காணாமல்போன நிறுவனங்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும்முன் அந்த நிறுவனங்கள் இயக்கத்தில் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

எது சரியான முதலீடு, முதலீட்டைத் தேர்வு செய்யும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை மிகத் தெளிவாகச் சொல்வதாக இருந்தது இந்த விழிப்பு உணர்வுக் கூட்டம். 

தெ.சு.கவுதமன் , படங்கள்: வீ.நாகமணி

பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!

விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்!

‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பு’ குறித்துப் பேசிய கம்பெனி செகரட்டரி எஸ்.தனபால், “எந்த அக்ரிமென்டில் கையெழுத்துப் போடுவதானாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முழுமையாக வாசித்து அறிந்தபின் கையெழுத்திட வேண்டும். நமக்குப் புரியாதபட்சத்தில் சட்ட ஆலோசகரிடம் கேட்டுத் தெளிந்தபின் கையெழுத்திட வேண்டும். இல்லையேல் ஏதேனும் தவறு நேரும்போது நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அதிலுள்ள விதிமுறைகளைக் காரணம் காட்டி, நாம் ஏற்கெனவே அனைத்திற்கும் உடன்பட்டிருப்பதாகக் கூறிவிடுவார்கள். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் சற்று கவனமாக விதிமுறைகளைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism