நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆட்சி மாற்றம் குறித்துக் கவலைப்படாதீர்கள்!

ஆட்சி மாற்றம் குறித்துக் கவலைப்படாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்சி மாற்றம் குறித்துக் கவலைப்படாதீர்கள்!

வாரன் பஃபெட்டின் லேட்டஸ்ட் கடிதம்...வாசு கார்த்தி

ங்குச் சந்தை உலகின் பிதாமகன் வாரன் பஃபெட். அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆண்டுதோறும் இவர் கடிதம் எழுதுவது வழக்கம். 1965-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் முதலீட்டாளர்களுக்கான கடிதத்தை எழுதி வருகிறார் வாரன் பஃபெட். இந்த ஆண்டில் அவர் எழுதிய கடிதம் கடந்த வாரம் வெளியானது. இந்தக் கடிதத்தில் உள்ள  சுவாரஸ்யமான விஷயங்கள் இனி...

ஆட்சி மாற்றம் குறித்துக் கவலைப்படாதீர்கள்!

தங்கத்தைவிட அதிக வருமானம்

பங்கு முதலீடு என்பது நீண்ட காலத்துக் கானது. என்னுடைய 11 வயதில் (1942-ம் ஆண்டு) பங்குச் சந்தை முதலீட்டுக்கு வந்தேன். அப்போது என்னிடம் 114.75 டாலர் இருந்தது. இந்தத் தொகையை இண்டெக்ஸ் ஃபண்டுகளில் (இந்த ஃபண்டுகள் அமெரிக்காவில் 1975-ம் ஆண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டன) முதலீடு செய்திருந்தால், தற்போது 6,06,811 டாலர் என்னிடம் இருக்கும்.

பலரும் நினைப்பதுபோல, தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் 114 டாலர் என்பது தற்போது 4,200 டாலராக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்தோம். தற்போது ஒரு பெர்க்‌ஷையர் பங்கு மூன்று லட்சம் டாலருக்கு மேல் வர்த்தகமாகிறது. (நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 40,000 கோடி டாலர்) இவை எங்களுக்கு நல்ல பலனை அளித்திருக்கிறது.

இந்த 77 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அதிபர்கள் அமெரிக்காவை ஆண்டிருக்கிறார்கள். போர், மந்தமான பொருளாதார நிலை, அதிகப் பணவீக்கம் உள்ளிட்ட பல பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இருந்தன. ஆனாலும், பங்குச் சந்தை நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. எனவே, ஆட்சி மாற்றம் குறித்து கவலைப்படாதீர்கள். அடுத்த 77 ஆண்டுகளுக்கும் அமெரிக்க நிறுவனங் கள் எங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

பல சந்தை வல்லுநர்கள் அமெரிக்காவின் கடன் பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சி வரலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். கடந்த 77 ஆண்டுகளில் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை 400 மடங்கு மட்டுமே அதிகரித்திருக் கிறது. அதனால் இதுபோன்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

ரொக்கம் முக்கியம்

போதுமான பணம் கைவசம் இருக்க  வேண்டியது அவசியமாகும். எங்களிடம் 11,200 கோடி டாலருக்கான அமெரிக்கப் பங்குப் பத்திரங்கள் உள்ளன. இவை தவிர, 2,000 கோடி டாலருக்கு எளிதாக மாற்றக்கூடிய பணம் இருக்கிறது. அதிகத் தொகையைக் கையாளும் பட்சத்தில் தவறுகள் நடக்கக்கூடும். அதனால் முதலீட்டாளர்கள் வெளியேறும் சூழல் ஏற்பட லாம். அதனால் ரொக்கம் முக்கியம். அனைத்துத் தொகையையும் முதலீடு செய்யும்பட்சத்தில் அசாதாரண சூழலில் முதலீட்டை எடுக்கமுடியாத சூழல் உருவாகலாம்.

சிறிய ஏமாற்றம் பெரும் நஷ்டம்

ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் நிதிநிலைமை வெளியாக வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் சிறப்பான முடிவுகளை வெளியிட வேண்டிய நெருக்கடியில் நிறுவனங்கள் உள்ளன. அதனால் சிறு சிறு தவறுகள் செய்யத் தொடங்கு கிறார்கள். நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்வதில் இந்த தவறு நடக்கிறது. சந்தைக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் இந்த சிறு தவறு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏற்ற இறக்கத்துக்கு முக்கியத்துவம் வேண்டாம்

பெர்க்‌ஷயர் நிறுவனம் 17,300 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளைக் கையாள்கிறது. இவ்வளவு பெரிய தொகையைக் கையாளும்பட்சத்தில் 200 கோடி டாலர் முதல் 400 கோடி டாலர் வரை ஏற்ற இறக்கம் இருக்கலாம். இதுபோன்ற தினசரி ஏற்ற இறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். நிறுவனத்தின் செயல்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தவும்.

பத்திரங்களைவிட பங்குகள் மேல்

முதலீடு செய்வதற்குப் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன. இதில் பத்திரங்களைவிட பங்குகள் மேல். 10 ஆண்டு கடன் பத்திரங்கள் 2 - 3% வருமானம் தரும். ஆனால், எஸ் அண்டு பி 500 குறியீடு ஆண்டுக்கு 10% வருமானம் (கடந்த 30 ஆண்டுகளாக) கொடுத்து வருகிறது. இனிவரும் காலத்தில் பங்குச் சந்தையைவிடக் கடன் சந்தை அதிக வருமானம் தரலாம். ஆனால், தற்போது 2% வருமானம் மட்டுமே தரும்  கடன் பத்திரங்களில் பத்து ஆண்டுகள் முதலீடு செய்யும்பட்சத்தில், பத்து ஆண்டுகளுக்குப்பிறகு வருத்தப்படும் சூழல் உருவாகலாம்.

அடுத்த தலைமுறை

பெர்க்‌ஷையர் நிறுவனத்திடம் போதுமான தொகை இருக்கிறது. இந்தத் தொகையைச் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யவிருக்கிறோம். ஆனால், தற்போதைக்கு முதலீட்டுக்கேற்ற சூழல் இல்லை. வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பங்குகளின் விலை அதிகமாக இருக்கிறது.

அதேசமயம், வருங்காலத்தில் பெரிய நிறுவனங்களைக் கையகப்படுத்தும் திட்டம் இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு பங்கு எப்படிச் செயல்படும் என்பது குறித்து எனக்கும், சார்லிக்கும் (Carlie Munger) கவலையில்லை. நீண்டகால நோக்கமே எங்களின் இலக்கு.

எங்களுக்கு நம்பிக்கையளிக்கும் நபர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். புதிய நிர்வாக அமைப்பு எங்களுக்கு மேலும் வசதியாக இருக்கிறது. அஜித் ஜெயின் மற்றும் க்ரெக் ஏபெல் (Greg Abel) ஆகியோர் நிறுவனத்தைச் சிறப்பாக நடத்துகின்றனர். 

இப்படிப் பல விஷயங்களை முதலீட்டாளர் களுக்கான கடிதத்தில் சொல்லியிருக்கிறார் வாரன் பஃபெட். இந்தக் கடிதத்திலிருந்து முதலீட்டாளர்கள் பல விஷயங்களை நிச்சயம் கற்கலாம்!

பெரும் பணக்காரர்களுக்குக் கூடுதல் வரி!

பெரும் பணக்காரர்களுக்கு இன்னும் கூடுதலாக வரி விதிக்க வேண்டும் எனச் சொல்லி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார் வாரன் பஃபெட். ‘‘நான் செலுத்துவதுகூட போதுமான வரி கிடையாது. எனக்கும் சேர்த்து அதிக வரி விதிக்க வேண்டும்’’ என்று அவர் சொல்ல, அந்தக் கருத்துக்கு ஆதரவாக பில்கேட்ஸும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதனால் பெரும் பணக்காரர்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்கிற விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இவர் மாதிரி பேசுவதற்கு நாட்டுக்கு ஒருவர் வேண்டும்!

தவறை ஒப்புக்கொண்ட வாரன்!

கிராப்ட் ஹென்ஸ் (Kraft Heinz’s) நிறுவனத்தில் பெர்க்‌ஷையர் நிறுவனம் 26.7% பங்குகளை வைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த வாரம் 27.5% வரை சரிந்தது. இதனால் பெர்க்‌ஷையர் நிறுவனத்துக்கு 430 கோடி டாலர் வரை இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்த நிறுவனத்தை அதிக தொகைக்கு வாங்கி, தவறு செய்துவிட்டோம்’’ என்று வெளிப் படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் வாரன் பஃபெட். இந்த நிறுவனப் பங்குகளைக் கூடுதலாக வாங்கவும் போவதில்லை; ஏற்கெனவே வாங்கிய பங்குகளை விற்கவும் போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார் வாரன்!