நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?

இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?
பிரீமியம் ஸ்டோரி
News
இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?

‘மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்’ வி.பாலசுப்ரமணியன் சிறப்புப் பேட்டி

நிதித் துறையில்  நாற்பது ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை பங்குச் சந்தை முதலீட்டு உத்தியாளர் (Chief Equity Strategist)  வி. பாலசுப்ரமணியன் அண்மையில் சென்னை வந்திருந்தார். பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றிய அவர், நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி  இனி... 

இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?

இந்தியப் பங்குச் சந்தை தற்போதைய நிலையில் அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில், வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் லாபமா?

“உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவில்தான் அதிக வளர்ச்சி இருக்கிறது; எதிர்காலத்திலும் வளர்ச்சி யானது அதிகமாகவே இருக்கும். பங்குச்  சந்தை இறங்கி இருக்கும் தற்போதைய நிலைதான் முதலீடு செய்வதற்குச் சரியான தருணம் ஆகும். அப்படிச் செய்யும்பட்சத்தில்  நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

முதலீட்டுக்கான வாய்ப்புகள் நம் நாட்டிலேயே இருக்கும்போது, வெளிநாட்டுப் பங்குகளைத் தேடிப் போகவேண்டியதில்லை. பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்த வரையில், அதனைக் குறுகிய கால நோக்கில் பார்க்கக்கூடாது. குறைந்தது 3-5 ஆண்டு முதலீடாகக் கவனிக்க வேண்டும்.”

நீங்கள் இப்போது புதிதாக லார்ஜ்கேப்  மியூச்சுவல் ஃபண்ட் கொண்டுவர என்ன அவசியம்?

“சந்தை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களின் என்.ஏ.வி மதிப்பு குறைந்து காணப் படுகிறது.  இந்த  என்.ஏ.வி இறக்கம் என்பது, மிட் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் அதிகமாக இருக்கிறது. லார்ஜ்கேப் ஃபண்டுகளில் குறைவாக இருக்கிறது.

லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் எப்போதும் ஏற்ற இறக்கம் குறைவாகத்தான் இருக்கும். கடந்த 1979-ம் ஆண்டு முதல் இன்றுவரைக்கும் சுமார் 40 ஆண்டுகளில் பி.எஸ்.இ-யின் சென்செக்ஸ் குறியீடு ஆண்டுக்குச் சராசரியாக 15% வருமானம் கொடுத்திருக்கிறது. அதேசமயம்,  இதில் ஏற்ற இறக்கம் என்பது குறைவுதான். 

கடந்த 2018-ம் ஆண்டில் நிஃப்டி மிட் கேப் 100 குறியீடு 15% இறக்கம் கண்டிருக்கிறது. ஸ்மால்கேப் 100 குறியீடு 28% வீழ்ச்சி  கண்டுள்ளது. அதேசமயம், நிஃப்டி 50 குறியீடு 4.70% ஏற்றம் கண்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையின் மொத்தப் பங்குச் சந்தை மதிப்பில் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளின் பங்களிப்பு சுமார் 70 சதவிகிதமாக உள்ளது. பெரும்பாலும் இந்த லார்ஜ்கேப் பங்குகள், ஏதாவதொரு பெரிய குறியீட்டில் இடம்பெற்றிருக்கும். இந்த லார்ஜ்கேப் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவரும். அந்த வகையில், அதன் பங்குகளில் ஏற்ற இறக்கம் என்பது குறைவாகவே இருக்கும்.  லார்ஜ்கேப் பங்குகள், லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் எந்தக் காலத்துக்கும் முதலீடு செய்யலாம்.

ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும். லார்ஜ் கேப் நிறுவனங்களில் குறிப்பாக, 20 - 25 நிறுவனங்களில் பணவரத்து சிறப்பாக உள்ளது. அந்தப் பங்குகளின் விலை ஏற்றத்தால்தான்  குறியீடு ஏறிக்கொண்டிருக்கிறது.  நாங்கள் புதிதாக ‘மஹிந்திரா பிரகதி புளூசிப் யோஜனா’ என்கிற லார்ஜ்கேப் ஃபண்டைக் கொண்டு வந்திருக் கிறோம். இதன் புதிய ஃபண்ட் வெளியீடு மார்ச் 8-ம் தேதி நிறைவு பெறுகிறது.”

இறக்கத்தில் இந்தியச் சந்தை... வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தால் லாபமா?

மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி-யை நிறுத்துவது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறதே? 

“பெரிய அளவில் எஸ்.ஐ.பி கணக்குகள் நிறுத்தப்பட வில்லை. நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களில் சிலர், தங்கள் எஸ்.ஐ.பி-யை நிறுத்தியிருப்ப தாகத் தகவல். சந்தை இறங்கியிருக்கும் நேரத்தில்தான் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். அதுவும் எஸ்.ஐ.பி-யை நிறுத்தாமல் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். முடிந்தால் எஸ்.ஐ.பி முதலீட்டுடன், கூடுதலாக முதலீடு செய்வது நல்லது.

இன்னும் சில மாதங்களில் நம் நாட்டில் பொதுத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரைக்கும்தான் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும். அதன் பிறகு சந்தை மேல்நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், மத்தியில் புதிய ஆட்சி அமைவதற்கும், பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கும் எந்த நேரடியானத் தொடர்பும் இருப்பதாகக் கடந்த கால புள்ளிவிவரங்கள் இல்லை. எல்லாவிதமான சவால்களையும் தாண்டி இந்திய நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாப வளர்ச்சி மேம்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.”

தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

“பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பார்க்க முடியும். நிச்சயமற்றத் தன்மை நிலவும் நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீட்டை நிறுத் தாமல் தொடர்ந்து செய்துவர வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதார மேக்ரோ காரணங்கள் நன்றாக இருக்கின்றன.

குறிப்பாக, உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) உயர்வு, பணவீக்க விகிதம் குறைந்து வருவது, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருப்பது போன்றவை பங்குச் சந்தைக்குச் சாதகமான விஷயங்களாக இருக்கின்றன. அந்த வகையில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், நீண்ட காலத்தில் சிறப்பான வருமானத்தைப் பெற முடியும்” என்றார்.

இவர் சொல்வது சரிதானே!

- சி.சரவணன்

படங்கள்: க.பாலாஜி