நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!

சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!

சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!

ர்வதேச முதலீட்டாளர் மாநாடு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்தபிறகு, மக்கள் அதுபற்றி மறந்தாலும், தமிழக அரசாங்கம் அதனை மறக்காமல், அப்போது நிறைவேறிய ஒப்பந்தங்களுக்கு செயல்வடிவம் தருவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதை, கடந்த வாரம் சென்னையில் நடந்த இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் ஆண்டு தினக் கூட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!

சி.ஐ.ஐ அமைப்பின் ஆண்டு தினம் கடந்த மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்பட்டது. தமிழகத் தொழில் துறையில் போட்டி மனப்பான்மையை வளர்த்தெடுப்பது குறித்து அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார் சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராக இருக்கும் எம்.பொன்னுசாமி.

‘‘தமிழகத்தில் தொழில் சூழல் சரியில்லை; பல நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்கிற பேச்சுதான் சில ஆண்டுகளுக்குமுன்பு வரை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசாங்கம் எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் தொழில் சூழல் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், சமீபத்தில் நடந்துமுடிந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாடு. மூன்று லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு நம்மைத் தேடி வந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தொழில் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது தமிழக அரசாங்கம். ஒரு தொழில் தொடங்க வேண்டு மெனில் முன்பெல்லாம் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டும். இப்போது சிங்கிள் விண்டோ சிஸ்டம் வந்துவிட்டது. அதையும் ஆன்லைனில் இருந்த இடத்திலேயே இருந்து செய்ய முடிவதால், ஒரு ரூபாய்கூட லஞ்சம் தராமல், முப்பதே நாள்களில் தொழில் தொடங்கு வதற்கான அனுமதியைப் பெறமுடிகிறது.

சிங்கிள் விண்டோ சிஸ்டம் சிறப்பாக நடப்ப தாகத் தொழில் துறை சார்ந்த என் நண்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள். அவர்கள் விரிவாக்கம் செய்ய விருந்த தொழில் திட்டத்தை சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலமே விண்ணப்பிக்கச் சொன்னேன். அடுத்த சில நாள்களில் அந்தத் திட்டங்களுக்கான அனுமதி கிடைக்கவே, அவர்கள் ஆச்சர்யப் பட்டுப் போனார்கள்.

முன்பு அரசு அதிகாரிகளையும், அமைச்சர் களையும் சந்திக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் உடனுக்குடன் சந்திக்க முடிவதுடன், பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, தீர்வு காண்பதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிகிறது. இந்தச் சூழல் இனி எப்போதும் தொடர வேண்டும்’’ என்றார் எம்.பொன்னுசாமி.

அடுத்துப் பேசினார் ஊரகத் தொழில் துறை அமைச்சர்  பி.பெஞ்சமின். ‘‘சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் சிறு, குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. இதன்மூலம் சுமார் மூன்று  லட்சம் புதிய வேலைவாய்ப்பு கள் உருவாகும். சிறு, குறு நிறுவனங்கள் இடையே போட்டித்தன்மையை அதிகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்’’ என்றார்.

சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!

இவருக்கு அடுத்தபடியாக பேசினார் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத். ‘‘சர்வதேச முதலீட் டாளர் மாநாடு சிறப்பாக நடந்து முடிய முக்கியக் காரணம், சி.ஐ.ஐ-தான். முதலீட்டாளர் மாநாட்டுக்காக உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச உதவியது. பிற மாநிலங்களில் உள்ள சி.ஐ.ஐ அமைப்பினைத் தொடர்புகொண்டு அந்த மாநிலங்களில் ‘ரோட் ஷோ’ நடத்த உதவியாக இருந்தது. அதற்காக சி.ஐ.ஐ.க்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.

தொழில் வளர்ச்சி என்பது அரசாங்கம் மட்டுமோ அல்லது தொழில் நிறுவன அமைப்புகள் மட்டுமோ பாடுபட்டால் போதாது; இருவரும் சேர்ந்து, உழைத்தால்தான் தொழில் வளர்ச்சி என்பது நிரந்தரமாகச் சாத்தியமாகும். தமிழக அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தொழில் வளர்ச்சிக்காக எல்லாத் தொழில் அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படத் தமிழக அரசு தயாராக இருக்கிறது. தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுவருவதில் என்ன பிரச்னை இருந்தாலும் எங்களின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். அதற்கான தீர்வினை ஏற்படுத்தித் தர நாங்கள் தயார். தொழில் துறை வளர்ச்சியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே லட்சியம். 

புதிதாகத் தொழில் தொடங்கு பவர்கள் அதற்கான அனுமதியைப் பெற 11  அரசுத் துறைகளை ஒருங்கி ணைத்திருக்கிறோம். முப்பதே நாள்களில் பல நிறுவனங்களுக்கு அனுமதியும் தருகிறோம். சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்து முடிந்தபின் ஏறக்குறைய ரூ.14,000 கோடி ஏற்கெனவே வந்துவிட்டது. 12,000 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுவிட்டது. உள்கட்டமைப்பில் எல்லா வசதிகளும் இருக்கும் தமிழகத்தைவிட்டு இனி எந்தத் தொழில் நிறுவனமும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் நம் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்கத் தயாராக இருக்கின்றன’’ என்றார்.

தமிழகத்தில் போட்டித்தன்மையை வளர்த்தெடுக்க அரசுத் துறைகளின் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பேசினார்கள் மூன்று முக்கியத் துறைகளின் உயரதிகாரிகள். மின்சாரத் துறையின் முதன்மைச் செயலாளர் நசீமுதின் ஐ.ஏ.எஸ் முதலில் பேசினார்.

‘‘தமிழகத்தில் முன்பு மின் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால், இன்றைக்குத் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறியிருக்கிறது தமிழகம். ஆனால், தமிழகத்தின் மின் பயன்பாடு வளர்ந்த பிற மாநிலங்களுடனும், நாடுகளுடனும் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருக்கிறது. தமிழகத்தின் மின் பயன்பாட்டினை அதிகப் படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சிங்கிள் விண்டோ முதல் ஜிம் வரை... தொழில் வளர்ச்சியில் வேகமெடுக்கும் தமிழகம்!

தமிழகத்தின் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி அபரிமிதமாகவே இருக்கிறது. இந்த எரிசக்தியை ஒருங்கிணைக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நாம் அதிவிரைவில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். மின் உற்பத்தி நிலையங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் ஏதுமில்லாமல் இருக்க வேண்டும் என்பதால், அதை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் தரமான மின்சாரத்தைத் தட்டுப்பாடில்லாமல் தரப் பாடுபட்டு வருகிறோம்.

கஜா புயல் வந்தபோது கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்பங்கள் மின்சார வசதி பெற முடியாத நிலை உருவானது. ஆனால், அறுபதே நாள்களில் கடுமையாக உழைத்து, மின்வசதியை ஏற்படுத்தித் தந்தது ஒரு சாதனைதான். தமிழகத்தில் மின்துறை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவருகிறது. இனிவரும் நாள்களில் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை’’ என்று பேசி முடித்தார்.

அடுத்துப் பேசினார் தொழில் துறையின் முதன்மை செயலாளர் என்.முருகானந்தம் ஐ.ஏ.எஸ் பேசினார். ‘‘சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின்மூலம் மிகப் பெரிய அளவில் முதலீட்டினைக் கொண்டுவந்திருக் கிறோம். இந்த மாநாட்டின்மூலம் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இத்தனை நிறுவனம் எனப் பிரித்து, அவர்களுக்கான ஒப்புதலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  தமிழகத்தில் புது வகையான தொழில் வாய்ப்பு உருவாகுமெனில், அது தொடர்பான கொள்கை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கிறோம். உதாரணமாக, ஏரோ ஸ்பேஸ் சார்ந்த தொழில், இ-வெஹிக்கிள் போன்ற தொழில்களுக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொழில் துறை தொடர்புடைய அனைத்து அலுவலகங்களையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி எந்தக் காரணத்துக்காகவும் அரசு அலுவலகங் களை நோக்கி வரவேண்டிய அவசியம் இருக்காது. எல்லா அனுமதிகளையும் ஆன்லைன் மூலமே பெறும் வசதி விரைவில் வரும்’’ என்றார்.

மூன்றாவதாகப் பேசிய சிறு, குறு நிறுவனத் துறையின் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ‘‘தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை வாங்குவதாக இருந்தாலும், மின்சார வசதியைப் பெறுவதாக இருந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இந்த செலவைக் கணிசமாகக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா அம்சங்களும் தமிழகத்தில் இருப்பதால் தான் உலக அளவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் செய்யத் தயாராக இருக்கின்றன’’ என்றார்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் நன்றி சொல்லி முடித்தார் டாஃபே நிறுவனத்தின் சி.எஃப்.ஓ-வும், சி.ஐ.ஐ நிறுவனத்தின் உதவித் தலைவருமான எஸ்.சந்திரமோகன். தமிழகத்தில் தற்போது உருவாகியிருக்கிருக்கும் இணக்கமான தொழில் சூழல் என்றென்றும் தொடர வேண்டும் என்றார் அவர்.

தமிழகத்தில் மற்ற துறைகளின் செயல்பாடு எப்படியோ, தொழில் துறையின் செயல்பாடு ஜரூராக இருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியே! 

- ஏ.ஆர்.குமார்
            
படங்கள் : பா.காளிமுத்து