நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

ர் உண்மையை ஒப்புக்கொள்வோம். நம் குடும்பங்களின் முதலீட்டு முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக, ஆனால் மறைமுகமாக உள்ளது. வீட்டின் தலைவருக்கு போனஸ் வந்தால், அதில் குறைந்தபட்சம் 50 சதவிகிதத்துக்குத் தங்கம் வாங்குவதைப் பார்க்கையில் இந்தக் கருத்து மேலும் வலுப்படுகிறது. டெல்லிக்கு ராஜா ஆனாலும், அம்மாவுக்குப் பிள்ளை; மனைவிக்குக் கணவன்; மகளுக்குப் பாசமான அப்பா ஆயிற்றே! பெண்கள் சொல்வதைக் கேட்காமல் ஆண்களால் இருக்க முடியாதே!

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

இன்றைக்கு எல்லாவிதமான படிப்புகள், வேலைகள், துறைகளிலும் பெண்கள் ஜொலிக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என்று இறங்கிவிட்டால், ஆண்களைவிட பெண்கள் 4-6%  கூடுதலாகச் சம்பாதிக்கிறார்கள் என்று ஜெர்மனியின் காம்டைரெக்ட் பேங்க் தன் சர்வேயில் குறிப்பிடுகிறது.

ஆனால், சராசரிப் பெண்களுக்கு, குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு இன்னும் பழைய முதலீட்டு முறைகளில்தான் நம்பிக்கை உள்ளது. தங்கம், நிலம், வங்கி என இவை தவிர, வேறெதிலும் முதலீடு செய்ய அவர்கள் இப்போதும் தயாரில்லை.

தங்கம்

பெண்களை அழகு செய்யவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும் தங்கம் உதவியது. பெண்களுக்கு நிலம் போன்ற அசையாச் சொத்து களில் வாரிசு உரிமை இல்லை என்ற சட்டம் நிலவிய காலத்தில் தங்கம் தான் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கியது. ஆனால், பெண்களுக்குக் கல்வியும், மிதமான அலங்காரமுமே அழகு, அந்தஸ்து என்ற சிந்தனை நிலவும் இந்தக் காலத்தில் தங்கம் என்பது தேவைதானா? ஆண், பெண் இரு பாலருக்குமே சொத்தில் சம உரிமை என்றானபின் தங்கத்தை ஏன் வாங்கிக் குவிக்க வேண்டும்?

திருமண நேரங்களில் மட்டுமே உபயோகிக்கப் படும் கனமான நகைகள், மற்ற சமயங்களில் லாக்கர்களில் தூங்குகிறது. மேலும், வாட்ஸ்அப் களில் வலம்வரும் வீடியோக்களில் தங்கச் சங்கிலிக்காகப் பெண்கள் தாக்கப்படுவதையும், பெரிய கடைகளில்கூட தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதையும் பார்க்கிறோம்.

முதலீடு என்ற நிலையில் பார்த்தாலும், முன்பு நிலையாக ஏறிக்கொண்டிருந்த தங்கம், இப்போது அடிக்கடி ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிறது.    2012-ல் செய்கூலி, சேதாரம் சேர்த்து, ரூ.3,72,600 செலவழித்து, 100 கிராம் வாங்கினாள் என் தோழி. 2015-ல் தங்கம் விலை குறைந்த காலத்தில்  ஏதோ  ஓர் அவசரத்திற்கு விற்கப்போனால், ரூ.2,50,000-க்குத்தான் விற்க நேர்ந்தது. (நஷ்டம் ரூ. 1,22,600 - கிட்டத்தட்ட 32%). கடந்த ஐந்து வருடங்களில் தங்கம் தந்த வருடாந்திர வருமானம் (CAGR) 3.28% அளவு மட்டுமே.

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

நிலம், வீடு

2013 வரை வருடம்தோறும் நிலத்தின் விலை ஏறியது. இதனால் நிலமோசடிகள், அபகரிப்புகள் ஆரம்பித்தன. 2013-க்குப்பிறகு விலை ஸ்தம்பித்தது மட்டுமின்றி, குறையவும் ஆரம்பித்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் அதிக விலைக்கு நிலம், வீடு வாங்கியவர்கள் தாங்கள் எதிர்பார்த்த விலையேற்றம் கிடைக்காமல் துவண்டுபோய் இருக்கிறார்கள்.  

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

நடுத்தர வர்க்கத்தின் கைக்கெட்டாத அளவில் நிலத்தின் விலை நிலைத்துவிட்டது. ஓர் ஒற்றைப் படுக்கை அறை அடுக்குமாடிக் குடியிருப்பை  சென்னை ஏர்போர்ட் அருகில் ரூ.60 லட்சம் கொடுத்து வாங்குபவருக்கு அதில் வரக்கூடிய வாடகை ரூ.18,000 மட்டுமே. இதில்  வரி, வட்டி, பழுது பார்ப்புச் செலவுகள் வேறு. முதலீட்டு நோக்கில் வீடு, மனை வாங்கு பவர்கள் வாங்கும் விலை, வரக்கூடிய வாடகை வருமானத்தைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வங்கிவைப்புக் கணக்குகள்

வங்கிவைப்புக் கணக்கு என்றாலே உறுதியான உத்தரவாதம், உயர்ந்த வருமானம், ஈஸியான செயல்முறைகள், எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை என்று இருந்தது. ஆனால், 16% வரை வருமானம் தந்த வங்கிவைப்புக் கணக்குகள், இன்று 6%, 7% என்று இறங்கிவிட்டன. வாராக் கடன்கள் பற்றிய தினசரி அறிவிப்புகள், வங்கிகளின் ஸ்திரத்தன்மையை கேள்விக் குறியாக்கி, வயதானவர்களின் தூக்கத்தை விரட்டி அடிக்கின்றன.  வங்கி வைப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் நமது வருமானத்தின் ஒரு பகுதியை விழுங்குவதால், கிடைப்பது லாபமா, நஷ்டமா என்று புரியாத சூழ்நிலை! ஆனாலும், வெளிவரத் தோன்றாமல் மீண்டும் மீண்டும் அதிலேயே உழல்கிறோம்.

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

இதற்கெல்லாம் தீர்வு, பெண்கள் கையில் உள்ளது. தங்கம், நிலம், வங்கி வைப்புகள் போன்ற அனைத்துமே நம் வாழ்வுக்குத் தேவை என்றாலும், காலப்போக்கில் அவற்றின் பயன்கள் மங்கி விட்டன என்பதை உணர்ந்து புதிய முதலீட்டு முறைகளைப் பற்றியும் அறிய முற்பட வேண்டும்.

அஸெட் அலோகேஷன்

சமீப காலங்களில் அடிக்கடி சந்திக்கும் வார்த்தை இது. எல்லாவிதமான சொத்துகளும் நம் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டும்; அப்போதுதான் நம் செல்வம் சீரான வளர்ச்சி பெறும் என்பதன் சுருக்கம்தான் இது. உதாரணமாக, தங்கத்தில் 5-10%, வங்கிகளில் 20%, குடியிருக்கும் வீட்டில் 40%, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்ற நிதிச் சொத்துகளில் 30% என்று பிரித்து முதலீடு செய்யலாம்.

எல்லாமே மாறிவிட்ட இந்தக் காலத்தில், இப்போதுகூட தங்கம், வீடு என்று மட்டுமே இருக்காமல்,  மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்ற புதிய முதலீட்டு முறைகளைத் தேடிச் செல்வது அவசியம். (அவை தரும் வருமானத்தைப் பட்டியலில் பார்க்கலாம்.) மூடிய கதவைத் தட்டிக் கொண்டிராமல், புதிய கதவுகளைத் தைரியமாகத் திறந்து பாருங்கள். வளமான வாழ்வு காத்திருக்கிறது.

இன்றைக்கு புதிய முதலீட்டு முறைகளுக்குக் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இந்த எண்ணிக்கை மிக விரைவாக உயர வேண்டும் என்பதே நம் விருப்பம்.

- சுந்தரி ஜகதீசன்