நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நிறுவனங்கள் சந்திக்கும் மூன்று சிக்கல்கள்!

நிறுவனங்கள் சந்திக்கும் மூன்று சிக்கல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிறுவனங்கள் சந்திக்கும் மூன்று சிக்கல்கள்!

நாணயம் புக் செல்ஃப்

வே கமான வளர்ச்சி என்பது ஒரு நிறுவனத்தைச் சிக்கல்கள் மிகுந்ததாக ஆக்கி, அப்படி உருவாகும் சிக்கல்களே வளர்ச்சியை மெள்ளக்கொல்லும் விஷமாக மாறிவிடுகிறது, பெரும்பாலான நிறுவனங்களில்.

நிறுவனங்கள் சந்திக்கும் மூன்று சிக்கல்கள்!

இதனாலேயேதான், கடந்த பத்துவருடங்களில் ஒன்பதில் ஒரு நிறுவனமே குறைந்தபட்ச லாப வளர்ச்சியை எட்டமுடிகிற நிலை இருக்கிறது. லாபத்தில் ஏன் வளர்ச்சி இல்லை என்று மீதமிருக்கும் எட்டு நிறுவன மேலாளர்களைக் கேட்டால், அவர்களில் 85 சதவிகித மேலாளர்கள் நிறுவனத்தினுள் இருக்கும் பிரச்னைகளையே காரணமாகச் சொல்வார்கள். அதாவது, அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பலவிஷயங்களே லாப வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதே தவிர, நிறுவனத்தின் வெளியே அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் முட்டுக்கட்டை போடுவதில்லை என்பதே நிஜத்தில் உண்மை. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நீடித்த தொடர் முன்னேற்றம் என்பது நிறுவனத்தின் உள்ளேயிருந்து வருவதே அன்றி, வெளியேயிருந்து வருவதில்லை என்பதே.  

உள்ளே, வெளியே...

ஒரு பிசினஸ் வெற்றிகொள்ள வேண்டியது இரண்டு விஷயங்களை. ஒன்று, வெளி உலகை. இது வெளிப்படையாகத் தெரியும் வெற்றி. சந்தைப் பங்களிப்பு, காலாண்டு லாப உயர்வு, போட்டி யாளர்களை வெல்லுதல், தொடர்ந்து லாப அதிகரிப்பு போன்ற பல வெளிப்படையான வெற்றிகளை நம்மால் பார்க்க முடியும். நிறுவனத்தின் இயக்குநர்கள், முதலீட்டாளர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் போன்ற அனைவரும் தொடர்ந்து ட்ராக் செய்யும் விஷயம் இது. வாடிக்கையாளர்களையும், போட்டியாளர்களையும் எப்படி வெல்கிறது ஒரு நிறுவனம் என்பதை உள்ளடக்கியது இந்த விஷயங்கள்.

இரண்டாவதாக நிறுவனம் வெல்லவேண்டியது, நிறுவனத்தின் உள்ளே இயங்கும் ஒரு உலகத்தினை. இது வெளி நபருக்கு வெளிப்படையாகத் தெரியாது. எப்படித் தொழில் வளர்க்கப்பட்டது அல்லது வளர்க்கப்படுகிறது, விரிவாக்கங்கள் எப்படிச் செய்யப்படுகிறது, எப்படித் திறமையான நபர்களை பணியில் நிலைத்திருக்கச் செய்கிறது, நல்லதொரு கலாசாரத்தை எப்படி வளர்த்தெடுக்கிறது, எல்லா விஷயங்களிலும் எப்படி மேம்பாடுகளைச் செய்கிறது,  அனுபவத்திலிருந்து  பாடங்களை எப்படிக் கற்கிறது, ஒரு நிறுவனம் எப்படித் தொடர்ந்து லாபத்தைச் சம்பாதித்து வருகிறது, ஒரு பிசினஸ் மாடலை எப்படி உள்ளடக்கிக்கொள்கிறது, பல்வேறு பணியாளர்களை எப்படித் திரட்டி மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக அதனுடைய செயல்பாடுகளை செவ்வனே திட்டமிட்டுச் செய்கிறது என்பது போன்றவற்றை கொண்டதாகும் இது. 

நிறுவனங்கள் சந்திக்கும் மூன்று சிக்கல்கள்!

சில நிறுவனங்கள் வெளியில் வெற்றிகரமாகச் செயல்படுவதுபோலத் தெரியும்; ஆனால், உள்ளுக்குள்ளே பல்வேறு பிரச்னைகளினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும். சில நிறுவனங்கள் நிறுவனத்தின் உள்விவகாரங்களை சூப்பராகவும், வெளிவிவகாரங்களைச் சொதப்பலாகவும் கையாண்டு வரும். 

முழுமையான வளர்ச்சியுடன் கூடிய வெற்றியை அடையவேண்டும் என்றால் நிறுவனத்துக்கு வெளியேயும் உள்ளேயும் நிலவும் சூழல்களில் நிறுவனம் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. வெளியே வெற்றி பெற்று, உள்ளே தோல்வியடைந்தால், தொடர்ந்து நிறுவனத்தினால் வளர்ச்சியடைய முடியாது. வெளியே தோல்வியடைந்தால் உள்ளே நல்லதொரு கலாசாரத்தை வளர்த்தெடுக்க முடியாது என்பதனாலேயே மேலே சொன்ன விஷயம் உண்மையாக நிலைத்து நிற்கிறது.

முதல் சிக்கல்

எந்தவொரு நிறுவனமும் பின்வரும் மூன்று சிக்கல்களைச் சந்திக்கின்றன என்று உறுதி யாகக் கூறமுடியும். முதலாவது சிக்கல், அதிக பணிச்சுமை என்பது. ஆரம்பத்தில் வெற்றியைப் பெற்று, அந்த வெற்றிக்குப் பின்னால் விரிவாக்கங்களைச் செய்து வேரூன்ற நினைக்கும் நிறுவனங்கள் வேகமாக வளர முயற்சி செய்கின்றன. அப்போது அந்த நிறுவனங்கள் அளவுகடந்த பணிச்சுமைகளை பணியாளர் களின்மீது திணிக்க முயற்சி செய்கின்றன. அவ்வாறு பணிச்சுமை திணிக்கப்படும் போது நிறுவனங்களின் உள்கட்டமைப்பு செயலற்ற நிலைக்குச் சென்றுவிடுகிறது.

இரண்டாவது சிக்கல்


இரண்டாவது சிக்கல், வேகமான வளர்ச்சியைத் தொடர்ந்து கண்டுவந்த நிறுவனங்கள் நிச்சயமாக ஓர் இடத்தில் தொய்வடையும்போது வருவதாகும். எந்தவொரு நிறுவனமும் இந்தத் தொய்வு சீசனில் இருந்து தப்பிக்கவே முடியாது. வேகமாக வளர ஆரம்பித்தபின் இரண்டு ஆண்டுகள் கழித்து, ஐந்து ஆண்டுகள் கழித்து, பத்து ஆண்டுகள் கழித்து என்று காலகட்டம் வேண்டுமானால் மாறக்கூடும்.

வேகமான வளர்ச்சியை ஒரு நிறுவனம் சந்திக்கும் பருவத்தில் கன்னாபின்னாவென்ற நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கும் விஷயங்களை ஏற்படுத்தவும், வேகம் ஒன்றே குறியாய் இருக்கும் காலமாகையால் நாம் எதற்காகத் தொழில் செய்கிறோம் என்ற கொள்கைகள்கூட கொஞ்சம் தளர்த்தியே செயல்படுத்தப்படும். வண்டி செல்லும் வேகம் ஆக்சிலேட்டரை மிதிக்க மிதிக்க அதிகமாகும் வேளையில், உற்சாகம் பீரிட ஆரம்பித்து, கிட்டத்தட்ட நம்முடைய பயணம் எதை நோக்கியது என்பதே மறந்துபோய்விட வாய்ப்புள்ளது. 

நிறுவனங்கள் சந்திக்கும் மூன்று சிக்கல்கள்!

ஆனால், பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஒருசமயம் ஆக்சிலேட்டரை மிதித்தால்கூட வேகம் அதிகரிக்காமல் போகும். அந்த வேளையில்தான் நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற கேள்வியே நிறுவனங்களுக்கு வர ஆரம்பிக்கும்.

இந்த சிக்கலிருந்து மீண்டுவருவது கொஞ்சம் கடினமான காரியமேயாகும். அதிலும் போட்டி நிறுவனங்கள் இளமையாகவும், புதுமையாகவும், வேகமாகவும் இயங்கும் தொழிலில் இருந்தால் இந்தவிதச் சிக்கலிலிருந்து மீளவே முடியாது.

மூன்றாவது சிக்கல்

மூன்றாவது சிக்கல் என்பது தடையில்லா வீழ்ச்சி (ஃப்ரீ ஃபால்) எனும் சிக்கலான நிலை ஆகும். இந்த நிலைக்குத் தள்ளப்பட நிறுவனத்தின் அடிப்படையான தொழிலில் வளர்ச்சியடைவது நின்றுபோயிருக்கும். சமீபகாலம் வரை வெகுவாய் உதவிய அதனுடைய பிசினஸ் மாடலே திடீரென வேலை செய்யாமல் போய்விடும் என்கிற நிலையை அடைந்திருக்கும்.

நேரப்பற்றாக்குறை என்பது எக்கச்சக்கமாக இந்த வகை சிக்கலில் இருக்கும் நிறுவனங்களுக்கு இருக்கும். நிர்வாகத்தினருக்கு எல்லாமே தங்களுடைய கையை மீறிப்போனதைப் போன்ற எண்ணமே அதிகமாக மேலோங்கி இருக்கும்.

வெற்றிக்கான சூட்சுமம்

இந்த மூன்று நிலைகளுமே நிறுவனங்களுக்குப் பெரிய இடர்பாடுகளைக் கொண்டுவந்துவிடக் கூடும். நிர்வாகிகளுக்கும், பணியாளர்களுக்கும் கடுமையான மனஉளைச்சலைத் தரக்கூடும். இந்த வகை சிக்கல்கள் வருமென்று எதிர் பார்த்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னேற் பாடாகச் செய்ய ஆரம்பித்தால், இந்தவிதத் தடைக்கல்லாக இருக்கும் சிக்கல்களே வளர்ச்சிக்குப் படிக்கற்களாக மாறிவிட வாய்ப்புள்ளது.

இந்தப் புத்தகம் எதைச் சொல்ல வருகிறது என்றால், இத்தனை சிக்கல்கள் இருந்த போதிலுமே சில நிறுவனங்கள் தொடர் வளர்ச்சியுடனும், வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டும் இருக்கவே செய்கின்றன.

இந்த நிறுவனங்களை ஆராய்ந்து பார்த்தால், நமக்குத் தெரிய வருவது ஒன்றே ஒன்றுதான். இந்த நிறுவனங்களை நிறுவியவர் கொண்டிருந்த தெளிவு, துணிவு, உத்வேகம் போன்றவற்றி னாலேயே அவை சிறந்து விளங்குகின்றன என்பதுதான் அது.  அதனாலேயே நிறுவனர்களின் மனப்பாங்கு என்பது ஒரு நிறுவனத்தின் தொடர் வெற்றியில் பெரும்பங்காற்றுகிறது என்று சொல்லமுடிகிறது.

கிளர்ந்து எழுகிற குணாதிசயம், நிறுவனரின் மனப்பாங்கு, முன்னணியில் இருக்கவேண்டும் என்ற நீங்காத விருப்பம் என்ற மூன்றையுமே நிறுவனரின் குணாதிசயம் என இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களான கிரிஸ் ஜீக் மற்றும் ஜேம்ஸ் ஆலென் என்ற இருவரும் கூறுகின்றனர்.

இவர்களுடைய ஆராய்ச்சியில் இவர்கள் கண்டறிந்தது என்னவென்றால், நிறுவனரின் மனநிலையே நிறுவனங்களின் நீண்ட வெற்றிக்கு வழிவகை செய்கிறது என்பதைத்தான். நிறுவனரின் இந்த மூன்று குணாதிசயங்களுமே நீண்ட நெடும் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஏனைய நிறுவனங்களைவிட நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகமாக இருந்தது என்பதையே 1990-களில் ஆரம்பித்த இந்த ஆராய்ச்சியில் 2014 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் கண்டறிந்த விஷயம்.

இந்தப் புத்தகம் நிறுவனர்களுக்கும், நிர்வாகி களுக்கும், தொழிலில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும், நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இயக்குநர்களுக்கும் உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி காண முடியாமல் போவதற்கான காரண காரியங் களையும், அதை எதிர்கொள்ள உதவும் நிறுவனரின் மனப்பாங்கினையும்  ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக விளக்கும் இந்தப் புத்தகத்தினைத் தொடர்ந்து வெற்றிவாகை சூட நினைக்கும் தொழில் முனைவோர், நிர்வாகிகள் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் டீம்