நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: விலை இறங்கிய பங்குகள்... வாங்கிக் குவித்த முதலீட்டாளர்கள்!

ஷேர்லக்: விலை இறங்கிய பங்குகள்... வாங்கிக் குவித்த முதலீட்டாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: விலை இறங்கிய பங்குகள்... வாங்கிக் குவித்த முதலீட்டாளர்கள்!

ஓவியம்: அரஸ்

முதல்நாளே நமக்குத் தகவல் சொன்னபடியே ஷேர்லக் மும்பையிலிருந்து போன் மூலம் நம் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இனி நம் கேள்விகளும் அதற்கு ஷேர்லக் சொன்ன பதில்களும்...  

ஷேர்லக்: விலை இறங்கிய பங்குகள்... வாங்கிக் குவித்த முதலீட்டாளர்கள்!

மார்ச் மாதத்தில்  மிட்கேப் பங்குகள் விலை ஏறும் என்கிறார்களே?

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு இடையே வியாழக்கிழமை அன்று பிப்ரவரி மாதத்துக்கான ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றன. நிஃப்டி ரோல் ஓவர் சுமார் 62 சதவிகிதமாக  உள்ளது. இது கடந்த மூன்று மாத சராசரியுடன் ஒப்பிடும்போது குறைவாகும். லாங்க் பொசிஷன்கள் மார்ச் மாதத்துக்கு கேரி ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கின்றன.  

மார்ச் சீரிஸில் நிஃப்டி குறியீடு 10700 மற்றும் 11000-க்குள் இருக்கும் என சந்தை பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவித் திருக்கிறார்கள். அதேசமயம், நிஃப்டி 50-க்கு வெளியே உள்ள மிகவும் விலை இறங்கிக் காணப்படும் மிட்கேப் மற்றும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.’’

ஜியோஃபின் மற்றும் ஆனந்த் ரதி போன்ற கமாடிட்டி நிறுவனங் களை வர்த்தகம் செய்யத் தகுதியற்ற நிறுவனங்களாக அறிவித்து ஆச்சர்யம் தந்திருக்கிறதே செபி?


‘‘என்.எஸ்.இ.எல், கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் நடந்த ரூ.5,600 கோடி ஊழலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும்  ஜியோஃபின் காம்டிரேட் (முந்தைய பெயர் ஜியோஜித் காம்டிரேட்) மற்றும் ஆனந்த் ரதி ஆகிய கமாடிட்டி நிறுவனங்கள், வர்த்தகம் செய்வதற்கேற்ற மற்றும் சரியான நிறுவனங்கள் அல்ல என்று பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 23-ம் தேதியன்று இதேபோன்ற நடவடிக்கையை மோதிலால் ஓஸ்வால் கமாடிட்டீஸ் புரோக்கர் மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக செபி எடுத்திருந்தது.’’

மோசமான காலாண்டு முடிவுகளால் விலை இறங்கிய பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியிருப்பது சரியா? 


“2018, டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு முடிவில் நிதிநிலை இழப்பைச் சந்தித்ததால் பல நிறுவனங்களின் பங்கு விலை இறக்கம் கண்டன. குறிப்பாக,  யெஸ் பேங்க், டி.ஹெச். எஃப். எல், வக்ராங்கி, ரிலையன்ஸ் கேப்பிட்டல், டாடா மோட்டார்ஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளின் விலை கணிசமாக இறங்கின. இந்தப் பங்குகளை சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்துள்ளனர்.

இவற்றில் செப்டம்பர் காலாண்டுடன் டிசம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் அவர்கள் வசமிருந்த யெஸ் பேங்க் பங்குகள் 11.2 சதவிகிதத்திலிருந்து 16.3 சதவிகிதமாகவும், டி.ஹெச். எஃப். எல் 16.9 சதவிகிதத்திலிருந்து 21.4 சதவிகிதமாகவும், வக்ராங்கி  பங்குகள் 18.2 சதவிகிதத்திலிருந்து 20.9 சதவிகித மாகவும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் 14.7 சதவிகிதத்திலிருந்து 16.9 சதவிகிதமாகவும், டாடா மோட்டார்ஸ் 9.2 சதவிகிதத்திலிருந்து 10.8 சதவிகிதமாகவும், பஞ்சாப் நேஷனல் பேங்க் பங்குகள் 7.1 சதவிகிதத்திலிருந்து 8.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளன.

விலை இறங்கிய பங்குகளை வாங்க வேண்டும் என்ற மனப்பான்மையில், இந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி எப்படியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே சிறு முதலீட்டாளர்கள் இவற்றை வாங்கியுள்ளனர்.

நிறுவனங்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, எது லாபம் கொடுக்கும், எது நஷ்டத்தைக் கொடுக்கும் என்பதை எடை போடும் திறன் சிறு பிரிவு முதலீட்டாளர்களுக்கு கிடையாது. நிறுவனங்கள் தற்போதைய பாதகமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் விலை இறங்கிய பங்குகளை வாங்குகின்றனர். ஆனால், சரிவு நிலையைச் சந்தித்த நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளத் தொடங்கினாலும், நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட சற்று காலஅவகாசம் ஏற்படும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கு விலை, முந்தைய உச்சவிலையை மீண்டும் தொடும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை என  பங்குச் சந்தை பகுப்பாய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக் கிறார்கள்.”

பி.சி.ஏ நடவடிக்கையிலிருந்து மேலும் மூன்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விலக்கு அளித்துள்ளதே?


“வாராக் கடன் விகிதம் குறைந்ததால், பொதுத் துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் தனியார் வங்கியான தனலட்சுமி ‌வங்கி ஆகியவற்றின் மீதான பி.சி.ஏ கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நிபந்தனைகளுடன் விலக்கியுள்ளது. இதற்குமுன், பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ஆகிய வங்கி கள் மீதான பி.சி.ஏ கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் பி.சி.ஏ நடவடிக்கைப் பட்டியலில் இன்னும் ஆறு வங்கிகள் உள்ளன.”

இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்தானே! 


“மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் மீதான அந்நிய முதலீடு பிப்ரவரி மாதம் முந்தைய மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி வரை, மட்டும் 1.86 பில்லியன் டாலர் அளவுக்கு  அந்நிய முதலீட்டாளர்கள் உள்நாட்டு நிறுவனப் பங்கு களை வாங்கிக் குவித்துள்ளனர். ஒரே நாளில் மட்டும் 1.7 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டு களில் இல்லாத அளவாகும்.

கடந்த 2018, மார்ச் மாதத்தில் இரண்டு பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அது குறையத் தொடங்கியது. இந்த நிலையில், மார்ச் மாதத்துக்குப் பின்னர்  தற்போதுதான் இந்த அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.’’

சர்க்கரை ஆலைகளின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இல்லயா?

‘‘கடந்த வாரத்தில் உத்தம் சுகர் மில்ஸ், டி.சி.எம், ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ், டால்மியா பாரத் சுகர் அண்டு இண்டஸ்ட்ரீஸ், அவத் சுகர் & எனர்ஜி, துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ், மவானா சுகர்ஸ் மற்றும் உகர் சுகர் ஒர்க்ஸ் போன்ற சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தைத் தந்திருக்கின்றன. உத்தம் மற்றும் தாம்பூர் சுகர் ஆகிய இரண்டு நிறுவனங் களின் பங்குகள் விலை  கடந்த ஒரு மாதத்திற்குள்  சுமார் 50%  ஏறியிருக்கிறது.

 ஒரு கிலோ சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை 7% அதிகரித்து, ரூ.29-லிருந்து    ரூ.31-ஆக அதிகரிக்க மத்திய மந்திரி சபை அனுமதி அளித்துள்ளது. இதுவே சர்க்கரைப் பங்குகளின் விலை ஏற்றத்தைச் சந்திக்கக் காரணம்.  சர்க்கரை விலை ஏற்றமானது சுமார் ஏழு மாதங்கள் வரையில் அதாவது, அடுத்த சர்க்கரை உற்பத்திப் பருவம் ஆரம்பிக்கும் வரை நீடிக்கும். உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலை அதிகரிப்பால், சர்க்கரை ஆலை உரிமையாளர் களுக்கு ரூ.3,200 - 3,400 கோடி வரையில் கூடுதலாகக் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.’’

சிண்டிகேட் பேங்க்,  சலுகை விலையில் பங்குகளைத் தனது பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தானே!


‘‘சிண்டிகேட் பேங்க்,  தனது நிதித் தேவையைப் பூர்த்து செய்யும்விதமாக, ரூ.500-600 கோடியைப் பணியாளர்களிடமிருந்து திரட்டி, அவர்களுக்குச் சலுகை விலையில் பங்குகளை அளிக்க இருக்கிறது. மார்ச்  முதல் வாரத்திலிருந்து 23% - 25% வரையில்  தள்ளுபடி விலையில் பங்குகளைப் பணியாளர் களுக்கு அளிக்கிறது. சலுகை சதவிகிதம், வங்கிப் பணியாளர்களின் கிரேடு அடிப்படையில் வழங்கப்படுகிறது. குறைவான கிரேடில் இருப்ப வர்களுக்கு அதிகத்  தள்ளுபடி வழங்கப்படுகிறது.’’

ஏர்டெல் ரூ.32,000 கோடி நிதி திரட்டுவது ஏன்? 


‘‘ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர்  குழு நிதித் திரட்ட ஒப்புதல் தரக் காரணம், தொலைப்பேசி சேவை சந்தையில் தற்போது நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்கத்தான். உரிமைப் பங்கு கள் மூலமான இந்தப் பங்கு விற்பனையின்மூலம்  ரூ.25,000 கோடியும், கடன் பத்திர விற்பனையின் மூலம் ரூ.7,000 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.32,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கு திட்டமிடப் பட்டிருக்கிறது.

தற்போதைய விலையிலிருந்து 30% குறைவாக ரூ.220-க்கு 1.14 பில்லியன் உரிமைப் பங்குகளாக வழங்கவிருக்கிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர கடன் 1.15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது’’ என்றவர், அடுத்த வாரம் சந்திப்போம் எனச் சொல்லிவிட்டு போனை கட் செய்தார்!

ஷேர்லக்

ஷேர்லக்: விலை இறங்கிய பங்குகள்... வாங்கிக் குவித்த முதலீட்டாளர்கள்!

நாணயம் விகடன் ஸ்லாக்-ல் வந்தாச்சு!

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பொருளாதாரம், இன்ஷூரன்ஸ், தங்கம், ரியல் எஸ்டேட் தொடர்பாக நாணயம் விகடனில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா?

உங்கள் செல்போனில் ஸ்லாக் (slack) ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். bit.ly/2UBYnJx என்கிற லிங்கில் சென்று, உங்கள் மெயில் ஐடி-யை தந்து பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள் பகுதியைப் படிக்க: https://bit.ly/2SzX6kH