பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய ‘Undaunted - Saving the Idea of India’ என்னும் புத்தகம் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது. மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசி யேஷனில் இந்தப் புத்தக அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கடந்த 220 வாரங்களாக செய்தித்தாள் ஒன்றில் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் ஆகும்.

பொருளாதாரம், குழந்தைகள், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிதம்பரம் எழுதிய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் பட்டுள்ளது. (தமிழில் வெளியாகவில்லை என்பதை சிதம்பரமே மறைமுகமாகக் குறிப்பிட்டார்!)
இந்தப் புத்தக அறிமுக விழாவில் சிதம்பரம் உரை நிகழ்த்தியது மட்டுமல்லாமல், புத்தகம் தொடர்பான விவாதமும் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது...
‘‘இந்தியாவின் ஜிடிபி 7 சதவிகிதத்தைத் தொட்டுவிட்டது என அரசு கூறுகிறது. இது எப்படி உண்மை ஆகும் என யாரும் கேள்வி கேட்கவில்லை. வங்கிகளின் கடன் வழங்கும் விகிதம் உயரவில்லை; முதலீடுகள் உயரவில்லை; ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. ஜி.டி.பி.யை நிர்ணயம் செய்வதில் இவைதான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை மூன்றும் உயராமல், ஜி.டி.பி மட்டும் எப்படி உயரும் என யாரும் கேள்வி கேட்பதில்லை.
மாறாக, என்.எஸ்.ஓ-ல் (National statistical commission) இருந்து மோகனன் மற்றும் மீனாட்சி ஆகிய இரு முக்கிய உறுப்பினர்கள் விலகியிருக் கிறார்கள். இப்போது தலைவர் இல்லாத அமைப்பாக என்.எஸ்.ஓ இருக்கிறது. இந்த நிலையில், ஜி.டி.பி குறித்த தகவல்களை நாம் எப்படி நம்பமுடியும்?
மாற்றுக்கருத்து சொல்வேன்...
டாக்டர் மன்மோகன்சிங் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மேதை. ஆனால், அவர் பிரதமராக இருந்த சமயத்தில் மாண்டேக் சிங் அலுவாலியா, கவுசிக் பாசு, சி.ரங்கராஜன் உள்ளிட்ட பல பொருளாதார அறிஞர்கள் இருந்தார்கள். டாக்டர் மன்மோகன் சிங்குடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார்கள். அந்த அளவுக்கு அறிஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், தற்போதைய அரசுக்குச் சகிப்புத்தன்மை இல்லை; உரையாட வேண்டும் என்கிற எண்ணமில்லை. அரசு சொல்வதையே அறிஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அது எப்படி நடக்கும்?
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சரவையில் முதல்முதலாக நான் இணைந்தபோது, சோமையா என்னும் செயலாளர் இருந்தார். அவர் என்னைவிட வயதும், அனுபவமும் வாய்ந்தவர். அப்போது அவர் கூறியது முக்கியமானது: ‘‘ஒரு அமைச்சராக நீங்கள் என்னிடம் அதிகாரம் செலுத்தலாம். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் என்னுடைய கருத்தை நான் தெரிவிப்பேன். அதைக் கேட்ட பிறகும் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால், நீங்கள் தெரிவியுங்கள். அதற்குக் கட்டுப்படுகிறேன்’’ எனக் கூறுவார். இதுபோன்ற சூழல் இப்போது இருப்பதாக நான் நினைக்கவில்லை.
15% ஏற்றுமதி வளர்ச்சி அவசியம்
இருபது ஆண்டுகளுக்குமுன் உலகமயமாக்கல் குறித்து அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், சீனா எதிர்த்தது. தற்போது அமெரிக்கா எதிர்க்கிறது ஆனால், சீனா வலியுறுத்துகிறது. எனவே, உலகமயமாக்கலைத் தவிர்க்க முடியாது. இப்போதுகூட ஒரு சில நாடுகள் உலகமயமாக்கலை எதிர்த்தாலும், நீண்ட நாளுக்கு எதிர்க்க முடியாது. இந்தியா 8% வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால், ஏற்றுமதியின் வளர்ச்சி ஆண்டுக்கு 15% இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச வருமானம்
91-ம் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவின் ஜி.டி.பி ஆறு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால், இது போதுமானதாக இல்லை. 20% மக்கள் (சுமார் 26 கோடி நபர்கள்) ஏழைகளாக இருக்கின்றனர். 1991-ம் ஆண்டுக்குமுன் இருந்த பட்டினியான சூழல் இல்லை என்றாலும், இவர்களுக்குக் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். இது இந்த நூற்றாண்டின் அறம் என்றுகூட சொல்லலாம். ஏழைகளுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் அவர்கள் சோம்பேறி ஆவார்கள் என்னும் வாதத்தை ஏற்க முடியாது. சீனாவில் 3% மட்டுமே ஏழைகளாக இருக்கிறார்கள். ஆனால், இங்கு 20% என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இதைக் குறைக்க வேண்டும் என்றால், குறைந்தபட்ச வருமானம் வேண்டும்.
புல்லட் ரயில் விடுவதற்கு ஒரு லட்சம் கோடி நிதி கிடைக்கும்போது, இந்தத் திட்டத்துக்கும் நிதி கிடைக்கும். ஏழைகளுக்கு நிலம் வழங்குவது குறித்த யோசனையும் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமில்லை. விவசாயம் செய்ய முன்வரும்பட்சத்தில்தான் இந்தத் திட்டம் வெற்றியடையும். ஆனால், அவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தைப் போடும்போதுதான் ஏழைகளுக்குச் சுதந்திரம் கிடைக்கும்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா
ஜம்மு காஷ்மீர்க்கு எந்தத் தொழிற்சாலையும் தேவையில்லை. ஜம்முவில் அமைதி நீடிக்கும் பட்சத்தில் சுற்றுலாத் துறை வேகமாக வளரும். சுற்றுலா மூலம் அது சார்ந்த துறைகளும் வளரும். மற்ற மாநிலங்களைப் போல, அவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். நம்மைப் போல, இயல்பு வாழ்க்கை அவர்களால் வாழ முடியவில்லை. மாநிலத்தில் எப்போதும் ராணுவம் இருக்கும்பட்சத்தில், இயல்பு வாழ்க்கை பாதிப்படையும்.
பணமதிப்பு நீக்கம் மிகப் பெரிய தவறு
கூட்டணி அரசுகளால் நன்மை உருவாகாது என்னும் கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு கூட்டணி அரசு இருக்கும்பட்சத்தில் பணமதிப்பு நீக்கம் போன்ற மாபெரும் பிழைகள் நடக்க வாய்ப்பில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாகக் கூட்டணி அரசுதான் இந்தியாவில் செயல்பட்டது. பல விஷயங்களை செய்ய முடிந்தது. ஆனால், 282 என்கிற மிகப் பெரிய ஆதரவு கிடைத்தபோது, கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களை செய்திருக்க முடியும்? ஆனால், தற்போதைய அரசு அதைச் செய்ய தவறிவிட்டது’’.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பலரும் கலந்துகொண்டதால், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் அரங்கமே நிரம்பி வழிந்தது!
படங்கள்: வீ.நாகமணி, ப.சரவணக்குமார்