Published:Updated:

திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

முதலீடு ரூ.35,000 ஓராண்டில் ரூ.1,21,000

ருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவன்கிட்ட ஆசையைத் தூண்டனும்...’’ ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு வெளியான சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது. ‘ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்கிற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, அப்பாவி மக்களிடமிருந்து பல லட்சங்களை அள்ளிவருகிறது திருச்சியைச் சேர்ந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம். 

திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் மெயின் ரோடு, பி.எல்.ஏ சிவகாமி டவரில் இயங்கிவருகிறது இந்த நிறுவனம். ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற நிறுவனம் என்று தன்னைப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிற இந்த நிறுவனத்தின் திட்டங்கள் பற்றி ஃபேஸ்புக்கிலும், யுடியூபிலும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் இதன் ஏஜென்ட்டுகள். 

வாடகைக் கட்டடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து டெபாசிட்டாகப் பணத்தை வாங்குகிறது. குறிப்பிட்ட தொகையைத் தினமும் வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கிறது. ஓராண்டுக்குள் ஒரு மடங்கு பணத்துக்குப் பதிலாக நான்கு மடங்கு பணத்தைத் தரவே, பணத்துடன் குவிகிறார்கள் மக்கள். 

மிகவும் பரபரப்பாக இயங்கும் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் நாமும் ஒரு வாடிக்கையாளராக நுழைந்தோம். அலுவலகத்தின் வரவேற்பறையில் பரபரப்பாக மூன்று பெண்கள், வாடிக்கையாளர்களின் வருகையைப் பதிவு செய்துகொண்டபின், அந்த நிறுவனத்தின் வணிக ஆலோசனைக் குழு உறுப்பினர் பஷீரிடம் நம்மை அனுப்பினார்கள். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், அடுத்து அலுவலக ஊழியர் கிரகராஜா என்பவரிடம் நம்மை அனுப்பி வைத்தார்கள். தனது நிறுவனத்தின் திட்டங்களை வாடிக்கை யாளர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார் அவர். இனி, அவர் சொன்னது...    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

“கடந்த இருபது வருடங்களாக திருச்சி சென்ட்ரம் எனும் நிறுவனத்தில் பங்குச் சந்தை சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுவந்த திருச்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம், தனியார் வங்கியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஒரு தனியார் வங்கியை உருவாக்கவேண்டு மானால், ரிசர்வ் வங்கி சட்டப்படி முதலில் வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனமாக இயங்கவேண்டும். அந்த நிறுவனம் மூன்று வருடங்கள் சுமார் 4,000 வாடிக்கையாளர்களிடம் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் வரவு செலவுகள் வைத்திருக்க வேண்டும். தவிர, ரூ.100 கோடிக்குமேல் டெபாசிட் செய்து சொத்து மதிப்பினைக் காட்டவேண்டும். இந்த விதிமுறைகள் எல்லாம் சரியாக இருந்தால்தான் ஒரு நிறுவனம் வங்கியாக மாற முடியும்.

அந்த அடிப்படையில் நிறுவனத்துக்கு முதலீடு வேண்டும் என்று கேட்காமல், வாடிக்கையாளர்கள் தரும்  முதலீட்டுக்குத் தகுந்த வகையில் தினமும் வருமானம் கிடைக்க பங்குச் சந்தை மூலம் வழிவகை செய்கிறோம். இதனால் எங்கள் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போதே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 4,000-த்தைக்  கடந்துவிட்டது’’ என்றவர், மேலும் தொடர்ந்தார்.

‘‘கடந்த ஒண்ணே கால் வருடச் செயல்பாடுகள் மூலம் ரிசர்வ் வங்கி கூறிய முதலீட்டைப் பெற்றுள்ளதை அடுத்து, நிறுவனத்தின் சொத்து மதிப்பினைக் காண்பிப்பதற் காக வாடிக்கையாளர்களிடம் வாங்கும் முதலீடுகளைக்கொண்டு சொத்துகள் வாங்கி வருகிறோம். தற்போது கோவையில் உள்ள எங்கள் அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இயங்குகிறது. அதேபோல், திருச்சி தில்லை நகரில் சொந்தக் கட்டடம் வாங்கியுள்ளோம். இந்தச் சொத்து மதிப்பு எங்கள் நிறுவனம் வங்கியாக மாற உதவும்.
 
வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை முழுக்கப் பங்குச் சந்தை, கமாடிட்டி, கரன்சி எனப் பல விதங்களில் முதலீடு செய்கிறோம். வாடிக்கையாளர் களிடமிருந்து பணத்தை வாங்கி, அதனை டாலர் மதிப்பில் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறோம். இதன்மூலம் கிடைக்கும் லாபத்தை தினமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

எங்கள் நிறுவனத்தில் ரூ.3,500 முதல் ரூ.70 லட்சம் வரை முதலீடு செய்ய லாம். 35,000 ரூபாயை ஒருமுறை முதலீடு செய்தால், தினமும் ரூ.300 கிடைக்கும். ஓராண்டு முடிவில் கட்டிய பணத்தை போனஸுடன் திரும்பத் தந்து விடுவோம் (ஓராண்டுக்குப்பின் திரும்பக் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.1,21,000) என்பதால், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அதிகமாக உள்ளது.

பொதுவாக, பங்குச் சந்தை வணிகம் சூதாட்டத்தைப் போல எனச் சொல்வார்கள். ஆனால், நாம் ரூ.100 கோடிக்கு மேல் ‘ஹெட்ஜிங்’ (Hedging) எனப்படும் முறையில் முதலீடு செய்வதால், பணம் நஷ்டம் அடையவிடுவதில்லை.

தோராயமாக 35 ஆயிரத்தை 500 டாலராக மாற்றி முதலீடு செய்கிறோம். தினசரி ஒரு டாலர் இந்திய மதிப்பில் 68 ரூபாய் மதிப்பில் முதலீடு செய்கிறோம் என்றால், பங்குச் சந்தையின் ஏற்றத்தைப் பொறுத்துக் கூடுதல் லாபம் கிடைக்கிறது. அந்த லாபத்தில் தான் தினமும் வாடிக்கையாளர் களுக்கு 300 ரூபாய் வழங்குகிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்கள் செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் அனைத்து வரவும் வங்கி மூலம்தான் நடக்கும். ஒரு வாடிக்கையாளர் முதலீடு செய்த ஏழு நாள்கள் வரை பணம் கிடைக்காது. சான்றிதழ் மற்றும் ஆவணச் சரிபார்ப்புகள் முடிந்தபிறகுதான், தினசரித் தொகை கிடைக்கும். ரூ.35 ஆயிரத்தை 500  டாலராகக் கணக்கிட்டுக்கொண்டு, அதனை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதன் மூலம் தினமும் 300 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொகை செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்தின் வாலட்டில் சேர்ந்துவிடும். அதனை நாம் வங்கிக்குப் பணமாக மாற்றிக்கொள்ளலாம். 

வார விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை தினங்களிலும் குறிப்பாக, ஷேர் மார்க்கெட் எப்போதெல்லாம் விடுமுறை விடப்படுகிறதோ, அப்போதெல்லாம் பணம் வராது. தினசரி பணம் கிடைக்காது. குறிப்பாக, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை பணம் கிடைக்கும். திங்கள் முதல் வியாழன் வரை இ-வாலட்டில் உள்ள பணத்தை வெள்ளிக்கிழமை அன்று ரெக்விஸ்ட், வெரிஃபை அண்டு அக்சப்ட் (request verify & accept) செய்தால் திங்கள்கிழமை அன்று நேரடியாகவே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.

இன்னும் ஐந்து மாதத்தில் ஐந்து கிளைகள் ஆரம்பிக்க இருக்கிறோம். திருச்சி மட்டுமல்லாமல், கோவை, திண்டுக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் எங்களின் கிளை அலுவலகங்களைத் தொடங்கியுள்ளோம். மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் எங்கள் நிறுவனம் கால்பதிக்க உள்ளது.

மூன்று மாதம் பணம் கட்டுங்கள். திருப்தி இல்லை என்றால் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எங்கள் நிறுவனத்தை இந்திய ரிசர்வ் பேங்க் சட்டத்தின்கீழ் (1956) பதிவு செய்துள்ளோம்’’ என்றார்.

இந்த நிறுவனம் சொல்லும் முதலீட்டுத் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். முதலில், வங்கிசாரா நிதி நிறுவனத்தை நடத்த வேண்டும் என்றால், மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவேண்டும். அப்படி அனுமதி வாங்காத எந்தவொரு நிறுவனமும் பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பெறக் கூடாது. அப்படிப் பெற்றால், அது குற்றம். 

இரண்டாவதாக, வாடிக்கையாளர்கள் தந்த பணத்தைக்கொண்டு நிறுவனத்துக்குச் சொத்துகள் வாங்க முடியாது.

திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

மூன்றாவதாக, பொதுமக்களிடமிருந்து பணத்தை வாங்கி அதைப் பங்குச் சந்தை, கமாடிட்டி, கரன்சி என எதிலும் முதலீடு (முதலீடு என்பது நீண்ட காலத்துக்கானவை. வர்த்தகம் (trading) என்பதே சரியான வார்த்தை) செய்யக் கூடாது. காரணம், இந்தச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதன்மூலம் நிச்சயமாக லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நான்காவதாக, வாடிக்கையாளர்கள் தரும் பணத்தினை டாலரில் மாற்றி, முதலீடு செய்வதாகச் சொல்கிறது. இப்படிச் செய்வதற்கு செபி மற்றும் ஆர்.பி.ஐ இடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். (இதற்கான அனுமதி இதுபோன்ற சிறிய தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்க தற்போதிருக்கும் நிலையில் சட்டத்தில் இடமில்லை)

ஐந்தாவதாக, ஒரு நிறுவனம் இவ்வளவு வருமானம் தருகிறேன் என்று எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரக்கூடாது. அப்படி உத்தரவாதமான வருமானம் தருவதாக இருந்தால், வங்கி வைப்பு நிதிபோல, 10 சதவிகிதத்துக்குள் மட்டுமே இருக்கும். இந்த நிறுவனம் சொல்வது போல, மூன்று மடங்கு, நான்கு மடங்கு லாபம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை! ஆனால், அப்பாவி மக்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்பதால், நிறுவனம் சொல்வதை அப்படியே நம்புகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  

நம்மிடம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், இணைய தளங்கள் என எங்கேயும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் புகைப்படங்களோ, நிறுவனப் பதிவு எண்களோ இல்லை. இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்க மீண்டும் அந்த நிறுவனத்துக்குப் போனபோது, அந்த நிறுவன மேலாளர்களில் ஒருவரான வீரய்யாவின் தொலை பேசி எண்ணைத் தந்தார்கள். வீரய்யாவுடன் தொடர்புகொண்டு பேசினோம்.

“செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம், ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம். எங்கள் நிறுவனம் தவறான நிறுவனம் என்றால், ஜி.எஸ்.டி எண் பெற முடியுமா? அனைத்தையும் சட்டத்துக்கு உட்பட்டுச் செய்து வருகிறோம்” என்றார். ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி எண் வாங்கியிருக்கிறது என்பதாலேயே அது முறையாகச் செயல்படுகிற நிறுவனம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்த நிறுவனம் செய்யும் தொழில் குறித்தும், அதற்கு அரசிடமிருந்தும், இந்திய ரிசர்வ் வங்கி யிடமிருந்தும் வாங்க வேண்டிய அனுமதிகள் குறித்த விளக்கங்களைக் கேட்டு செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பி னோம். நாம் அனுப்பிய கடிதத்தில் கேட்டிருந்த கேள்விகள் இனி...

1. மக்களிடம் பணம் பெற்று முதலீடு செய்கிறீர்களே, உங்களுடைய தொழில் எந்த மாதிரியானது? என்ன தொழில், என்ன அளவிலான டேர்ன்ஓவர், லாப விகிதம் என்ன, நீங்கள் வழங்கும் சேவைகள் என்னென்ன என விரிவாக விளக்கவும்.

2. பொதுமக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக பெறுகிறீர்களே – நீங்கள் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமா? வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை நடத்தத் தேவையான அனுமதி களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் வாங்கியிருக் கிறீர்களா? உங்கள் நிறுவனத்தை ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி பதிவு செய்திருக்கிறீர் களா? பதிவு செய்திருக்கிறீர்கள் எனில், அந்த விவரங்களை எங்களுக்குத் தரமுடியுமா?

3. டாலர்களில் முதலீடு செய்வதாக மக்களிடம் சொல்கிறீர்களே – அந்நியச் செலாவணியைக் கையாள்வதற் கான உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து முறைப்படி பெற்றிருக்கிறீர்களா?

4. பொதுமக்களிடமிருந்து பணம் பெற்று முதலீடு செய்வதாகச் சொல்கிறீர்களே, நீங்கள் செய்யும் தொழில் ‘கலெக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்’ போன்று இருப்பதால், இதற்கான அனுமதியை செக்யூரிட்டிஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா-வில் (SEBI - Securities and Exchange Board of India) முறைப்படி பதிவு செய்து அனுமதி வாங்கியிருக்கிறீர்களா? அப்படி வாங்கியிருந்தால், அதுகுறித்த விவரங்களைத் தரமுடியுமா?

5. நீங்கள் செய்வது ‘கலெக்டிவ் இன்வெஸ்ட் மென்ட் அல்ல’ என்பது உங்களுடைய வாதமாக இருந்தால், பின்வருவனற்றில் எந்தப் பிரிவில் உங்களுடைய நிறுவனம் சார்ந்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்

I) Any scheme or arrangement made or offered by a co-operative society or a society being  a society Registered or deemed to be registered under any law relating to co-operative societies for the time being in force in any State

II) Any scheme or arrangement under which deposits are accepted by non-banking financial companies

III) Any scheme or arrangement being a contract of insurance to which the Insurance Act, applies

6.  நீங்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் முதலீட்டுத் தொகையை எங்கு முதலீடு செய்கிறீர்கள்,  மேலும் 35000 ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு தினசரி 300 ரூபாயை எப்படித் தருகிறீர்கள்?

7. உங்கள் வாடிக்கையாளர் களுக்கு நீங்கள் நிச்சயமான வருமானம் (Guaranteed return)  தருவதாகச் சொல்கிறீர்கள். மியூச்சுவல் ஃபண்டுகள்கூட நிச்சயமான வருமானம் தருகிறேன் என்று சொல்லக்கூடாது என்று செபி தடை செய்துள்ளதே! நீங்கள் மட்டும் நிச்சயமான வருமானம் தருவேன் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

8. உங்கள் நிறுவனத்தை வங்கியாக மாற்ற முயல்வதாக நீங்கள் சொல்கிறீர்களே, உங்கள் நிறுவனம் கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படிப் பதிவு செய்யப் பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் கம்பெனி ஐடெண்டிஃபிகேஷன் நம்பர் (CIN) போன்றவற்றைத் தெரியப்படுத்துங்கள்.

9. வங்கி /வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்கும் எண்ணத்தில் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தடையில்லாச் சான்று பெறப்பட வேண்டும். அதைப் பெற்றுவிட்டீர்களா, அதற்கான நகலைத் தரமுடியுமா?

இந்தக் கேள்விகளை செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு நேரில் சென்று கொடுத்து, ஒன்றிரண்டு நாள்களில் பதில் தரும்படி கேட்டோம். ஒரு வாரம் ஆன நிலையில் பதில்  தரப்படவில்லை. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வான முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். நமது சென்னை அலுவலகத்துக்கு நேரில் வந்து பதில் தருவதாகச் சொன்னாரே தவிர, இந்த இதழ் அச்சேறும் வரை எந்தப் பதிலும் தரவில்லை.

இந்த நிறுவனத்தின் சார்பில் நமக்குச் சொல்லப் பட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயணிடம் பேசினோம். பல விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தபின், அவர் சொன்னதாவது....

``மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் (SEBI, RBI, IRDIA) ஆகியவற்றிடம் முறைப்படி பதிவுசெய்து உரிய அனுமதியைப் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து முதலீடு / டெபாசிட் கோரமுடியும். 2014-ம் ஆண்டு செபி சட்டத்தின்படி, ரூ.100 கோடிக்குமேல் திரட்டப்படும் கூட்டுத் திட்டங்கள், ஏதாவது ஒரு அமைப்பின்கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும். கூட்டுறவுச் சங்கம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டங்கள், கார்ப்பரேட் டெபாசிட் மற்றும் சிட்ஸ் உள்ளிட்ட பதிவுசெய்யப்பட்ட அமைப்புகள் மட்டுமே நிதி திரட்ட முடியும்.

செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் தரும் உத்தரவாதங்கள் நம்பும்படியாக இல்லை. எந்தவொரு நிறுவனமும் அளவுக்கு அதிகமான வருமானத்துக்கு உத்தரவாதங்களை வழங்கு வதில்லை. ஆனால், இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வருமானம் பார்க்கலாம் என மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் விளம்பரப்படுத்துகிறது. நிறுவனத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, தவறான விவரங்களை முதலீட்டாளர்கள் மத்தியில் பரப்புவது போன்ற செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது, இதுவும் ஒரு பொன்சி திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதுமாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்தபிறகு, அந்தத் திட்டத்தின் தினசரி நடவடிக்கைகளை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. ஆரம்பத்தில் வருமானம் தருவதுபோல நடித்துவிட்டு, எதிர்பார்த்த பணம் சேர்ந்ததும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படியான மோசடிகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.

எனவே, இதுமாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்யும்முன், அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை முதலில் கவனியுங்கள். அந்த நிறுவனத்தை நடத்துபவர் யார், அவருடைய கடந்தகாலச் செயல்பாடுகள் மற்றும் இதர விவரங்களையும் கட்டாயம் கவனிக்கவேண்டும்.  இன்றைய நிலையில், அதிக லாபம் கிடைக்கவேண்டும் என்றுதான் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர, முதலீடு செய்யும் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதில்லை. இதனால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுமாதிரியான திட்டங்களில் முதலீடு செய்தபின், முதலீடு செய்ததற்கான ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிற்பாடு ஏதேனும் பாதிப்பு வரும்பட்சத்தில் இந்த ஆவனங்கள் நிச்சயம் உதவும்’’ என்றார்.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி மனோகரனின் கவனத்துக்குக்கொண்டு சென்றோம். ‘‘இந்த நிறுவனம் தொடர்பாக யாரேனும் புகார் அளித்தால், நிச்சயமாக அதுகுறித்து விசாரிக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

இதுமாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை, கமாடிட்டி, கரன்சி என எதில் வர்த்தகம் செய்தாலும், ஆண்டுதோறும் சராசரியாக 20% லாபம் பார்ப்பதே மிகப் பெரிய விஷயம் என்கிறபோது, ஓராண்டு காலத்திலேயே ஏறக்குறைய நான்கு மடங்கு லாபம் தருவது, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க நினைக்கும் கதைதான்!

குறுகிய காலத்தில் பணத்தைப் பல மடங்காகப் பெருக்கிவிடலாம் என்கிற பேராசையில் இந்த நிறுவனத்தில் பணத்தைப் போட்டால், பிற்காலத்தில் ஏமார்ந்து நிற்கவேண்டிய நிலை வரலாம். பி.ஏ.சி.எல், சஹாரா, மதுரையின் எம்.ஆர்.டி.டி எனப் பல நிறுவனங்களில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காமல் பல அப்பாவி மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்க, நீங்களும் அந்தப் பட்டியலில் சேர விரும்புகிறீர்களா?

சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம்: ‘‘நான் யாரையும் ஏமாத்தல. ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தேன்’’ என்பார் ஹீரோ. நீங்கள் ஏமாறத் தயாரா?

சி.ய.ஆனந்தகுமார் - செ.கார்த்திகேயன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

எம்.எல்.எம் பாணியில் பணம் திரட்டல்!

செ
ந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம் எம்.எல்.எம் பாணியிலும் செயல்பட்டு, பணத்தைத் திரட்டுகிறது. இந்த நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததும் ஒருவருக்கு ஒரு அடையாள ஐ.டி வழங்கப்படும். இந்த ஐ.டி மூலம் அவருக்குத் தெரிந்த ஐந்து நபர்களை நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தலாம். அந்த ஐந்து நபர்கள் தனித்தனியே ஐந்து நபர்களை நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்துவார்கள். இப்படி அறிமுகமாகி வருகிறவர்கள்மூலம் ‘ரெஃபரல் கமிஷனும்’ கிடைக்கும்.

ஒருவர், ஐந்து நபர்களை அறிமுகப்படுத்துகிறார் எனில், அந்த ஐந்து பேர் தலா ஐந்து நபர்கள் என 25 பேர் இணைக்கப்படுவார்கள். ஒரு வட்டத்திற்குள் மொத்தம் 31 பேர் குழுவாக இணைக்கப்படுவார்கள். அந்தக் குழுவில் ஒருவர் ஒரு லட்சம் டாலர் வரை (இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.70 லட்சம்) சேர்த்துவிட்டால், தினமும் கிடைக்கும் தொகை மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் கிடைக்குமாம். இதுதவிர, ‘கிஃப்ட் ஹாம்பர்’ வழங்கப்படுவதுடன், தேவைப்பட்டால் ரூ.20 லட்சத்துக்கு வீட்டுக் கடனும் வழங்கப்படுமாம்! 

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் ரூ.3,500 செலுத்தலாம். ஆனால், குறைந்த அளவு பணத்தைக் கட்டினால், அடுத்த நிலையில் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் அதே அளவு தொகையைத்தான் கட்டமுடியும். எனவே, கொஞ்சம் கஷ்டப்பட்டு அதிகத் தொகையை முதலீடு செய்தால், அதைவிட இரட்டிப்புப் பணம் கிடைக்கும் என்று ஆலோசனை தருகிறார்கள்!

எங்கு பதிவு செய்திருக்க வேண்டும்?

த்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வெளியிட்டுள்ள கெஜட்டின்படி, முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் நடத்தும் டெபாசிட் திட்டங்கள் அனைத்துமே ஒழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. ஒரு நிறுவனமானது பொதுமக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்க வேண்டுமெனில், மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் ஏதேனும் ஒன்றில் கட்டாயமாகப் பதிவுசெய்து அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அந்த அமைப்புகள் இனி... செபி (SEBI), ஆர்.பி.ஐ. (RBI), ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI), கூட்டுறவுச் சங்கங்கள், மாநில அரசின்கீழ் பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்கள், தேசிய வீட்டு வசதி வங்கி (National Housing Bank), பி.எஃப்.ஆர்.டி.ஏ (PFRDA), இ.பி.எஃப் (EPF), வர்த்தக விவகாரத் துறை அமைச்சகம் (MOCA). இந்த அமைப்புகள் ஏதாவது ஒன்றில் ஒரு நிறுவனம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறதா என்பதை நன்கு விசாரித்து, அதன்பின்பு அந்த நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்யலாமா என்கிற முடிவை மக்கள் எடுப்பதே சரி.