Published:Updated:

பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை!
பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை!

மனம்... மதி... பணம்!

பிரீமியம் ஸ்டோரி

லகமே மாயை என்பார்கள் துறவிகள்.  அனைத்திலும் பெரிய மாயை நம் மனம் செய்யும் மாயைதான். நம் கட்டுப்பாட்டுக்கு அடங்காத விஷயங்களை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி, அவற்றில் இருக்கும் ரிஸ்க்கின் ஆழத்தைக் குறைத்து மதிப்பிடச் செய்கிறது இந்த மாயை. அதிக ரிஸ்க் இல்லாதவற்றை மிகவும் பயங்கரமானதாக உருவகிக்கவும் இதனால் முடியும். இந்தக் கட்டுப்பாட்டு மாயை (Illusion of Control) என்பதை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் எல்லன் லஞ்சர் என்ற உளவியல் வல்லுநர்.

பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை!

விமானப் பயணம் Vs கார் பயணம்

2001-ல் நடந்த 9/11 தாக்குதலுக்குப்பிறகு விமானப் பயணம் அதிக ரிஸ்க் நிறைந்ததாகக் கருதப்பட்டது. ஆகவே, மக்கள் அதிக அளவில் விமானப் பயணத்திற்குக் காப்பீடு எடுக்க ஆரம்பித்தார்கள். விமான நிலையங்களில், சில நிமிடங்களில் ரெடிமேட் இன்ஷூரன்ஸ் வழங்கும் தானியங்கி மெஷின்கள் நிறுவப்பட்டன. ஆனால், கார் இன்ஷூரன்ஸ் வாங்குவதற்கு மக்களில் பலருக்கு விருப்பமில்லை. காரணம், கார் பயணம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக மக்கள் நினைத்ததுதான். 

வருடாவருடம் 5000 பயணிகளில் ஒருவர் கார் விபத்தில் இறக்கிறார். விமான விபத்தில் இறப்பது பத்து லட்சம் பயணிகளில் ஒருவர்தான். விமானத்தை ஓட்டுவது அதற்காகவே பயிற்று விக்கப்பட்ட விமானிகள். இருந்தும் “காரைவிட விமானப் போக்குவரத்தே ரிஸ்க் நிறைந்தது; இன்ஷூரன்ஸ் செய்யப்பட வேண்டியது” என்று மக்கள் எண்ணுவதன் காரணம், கார் நம் கட்டுப் பாட்டில் இயங்குகிறது. விபத்துக்கெல்லாம் சான்ஸே இல்லை என்ற அதீத தைரியம்தான். போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது, குடித்துவிட்டு ஓட்டுவது போன்ற தவறுகளுக்கும் இந்த தைரியம்தான் காரணம்.

நான் ஒரு எக்ஸ்பர்ட்

அதேபோல், ஒரு கம்பெனியில் வேலை செய் வதாலேயே அந்த கம்பெனியின் செயல்பாடுகளை நன்கு அறிவோம் என்றும், அதன் ஏற்ற இறக்கங் களை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றும் மனம் கூறுவதை நம்பி, அந்த கம்பெனியிலேயே மேலும் மேலும் முதலீடு செய்கிறோம். சந்தை பற்றி சிலபல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருப்பதாலேயே, அதில் நாம் எக்ஸ்பர்ட் என்று எண்ணிக்கொண்டு, ஆலோசகர்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக சந்தையில் இயங்க முயல்கிறோம். இதுபோன்ற செயல்களுக்கும் இந்த மாயைதான் காரணம்.

சத்யம், ஐ.எல்&எஃப்.எஸ், ஆர்.காம் போன்ற கம்பெனிகள் விவகாரத்திலோ, வங்கிகளின் வாராக் கடன் விவகாரத்திலோ நம் போன்ற சிறு முதலீட்டாளர்கள் செய்யக்கூடியது என்ன? நாம் அந்த கம்பெனிகளிலேயே பெரிய பதவியில் இருந்தால்கூட நம் முதலீடுகளை எவ்வளவு தூரம் காப்பாற்றிக்கொள்ள முடியும்? ஆனால், கட்டுப்பாட்டு மாயையில் மூழ்கி இருக்கும் மனதிற்கு இவையெல்லாம் புரியாது.

பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை!

இதுபோலவே, குறைந்தபட்ச அறிவுடன், பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் இறங்கத் துணியும் நாம், துறை வல்லுநர்களால் நடத்தப்படும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தயங்குகிறோம். விமானத்தின் காக்பிட்டில் இருக்கும் பைலட்டின் செயல்பாடுகள் நமக்குத் தெரியாததாலேயே, விமானப் பயணம் ரிஸ்க் என்று எண்ணுவதுபோல, ஃபண்ட் மேனேஜர் களின் செயல்பாடுகள் தெரியாததால், மியூச்சுவல் ஃபண்டைவிட நேரடி முதலீடே சிறந்தது என்று நினைக்கிறோம். சந்தையில் ஏதாவது நிகழ்ந்தால் நம்மால் உடனே செயல்பட்டு, கட்டுப்படுத்த முடியும் என்று நம் மனம் ஊக்குவிக்கிறது.

நாம் செய்யும் தவறுகள்

இப்படி நம் கட்டுப்பாட்டில்தான் விஷயங்கள் இருப்பதாக நம் மனதின் அதீத நம்பிக்கைதான் பின்வரும் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது.

* நம் திறமையின்மீது அளவுக்கதிக நம்பிக்கை வைப்பதால், பிற கருத்துகளுக்கு செவி சாய்க்காதிருத்தல்.

* நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாம் எண்ணும் பங்குகளை அதிகம் வாங்குதல்.

* மற்ற நல்ல முதலீடுகளை வாங்கும் வாய்ப்பை இழத்தல்

* இதன்மூலம் போர்ட்ஃபோலியோவின் பரவல்தன்மையை இழத்தல் (Diversification).

* அடிக்கடி சந்தையின் போக்குப்படி வாங்கல், விற்றல்களில் ஈடுபடுதல்

என்னதான் தீர்வு?

இந்தக் கட்டுப்பாட்டுப் பிழையைக் கட்டுப்படுத்துவது எப்படி? முதலாவதாக, கடந்த வாரம் நான் சொன்னது போல, சந்தை யாராலும் அடக்கமுடியாத ஜல்லிக் கட்டுக்காளை என்பதைப் புரிந்துகொள்வது. 

உலகப் புகழ்பெற்ற பீட்டர் லின்ச்சின் அலுவலக அறை முழுவதும் ஒவ்வொரு பங்கையும் வாங்கியதன் பின்னணி என்ன, அந்த கம்பெனியில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன, எப்போது அதிகம் வாங்கலாம், எப்போது விற்கலாம் என்பது போன்ற விவரங்கள் குறிக்கப்பட்ட ரிஜிஸ்டர்கள் நிறைந்திருக்குமாம். நாமும் ஒவ்வொரு முதலீட்டில் இறங்கும்போதும் இதை ஏன் வாங்குகிறோம், இதில் இருக்கக்கூடிய ரிஸ்க்குகள் என்ன, இதை எப்போது விற்க வேண்டும் என்பனவற்றை ஆராய்ந்தறிந்து குறித்து வைக்கவேண்டும். மாற்றுக் கருத்துகளைக் கேட்கத் தயங்கக்கூடாது. இவற்றை நாம் செய்ய முற்படும் போது, அறிவு விழித்தெழுந்து நம்மைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும்.

சந்தை மற்றும் கம்பெனிகளின் செயல்பாடுகளும், நாட்டின் பொருளாதார நிகழ்வுகளும் கண்டிப்பாக நம் போன்ற சிறு முதலீட்டாளர்களின் கட்டுப் பாட்டில் இல்லை என நம் மனம் புரிந்து கொண்டாலே இந்தக் கட்டுப்பாட்டு மாயையில் இருந்து விடுபடலாம்!

(பணம் பெருகும்)

சுந்தரி ஜகதீசன் முதலீட்டு ஆலோசகர்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு