Published:Updated:

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?
பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

நான் இந்த மாதத்துடன் ஓய்வுபெறவுள்ள வங்கி ஊழியர். நான் பெறவிருக்கும் பி.எஃப்., கிராஜுவிட்டி பணத்தை நல்ல வருமானம் பெறும்விதத்தில் எப்படி முதலீடு செய்யலாம்?

பழனிச்சாமி, மதுரை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“கிடைக்கவிருக்கும் பணத்தை முதலீடு செய்வது குறித்து இரண்டு வகையாகத் திட்டமிடலாம். ஒன்று, உங்கள் அன்றாடத் தேவைகளுக்கு இந்தத் தொகையிலிருந்து எவ்வளவு வருமானம் தேவைப்படுகிறது என்பதையும் அந்த வருமானத்தை ஈட்ட எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் முடிவுசெய்வது. அதுபோக மீதமிருக்கும் தொகையை சற்று தொலைநோக்குடன்  முதலீடு செய்வது. இரண்டாவது வகைக்கு, முதலீட்டுச் சாதனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். தபால் துறை சேமிப்புத் திட்டங்கள், பாதுகாப்பான வைப்பு நிதிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் எனத் தேவைக்கேற்ப கலவையாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.”

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.40,000,  தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு ரூ.15,000  நன்கொடை அளித்துள்ளேன். வீட்டுக் கடன் மாதத் தவணையும் கட்டி வருகிறேன். இவை அனைத்துக்கும் ஒரே வருமானவரிப் பிரிவின்கீழ் வரிச் சலுகை கோர முடியுமா?

சிவராமன், சென்னை

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“வருமான வரிச் சட்டம் 80G செக்‌ஷன்படி, பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை முழுவதும் வரிச் சலுகை பெறும். அதேபோல, தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தொகைக்கு 50% வரை இதே செக்‌ஷனில் வரிச் சலுகை கிடைக்கும். வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000 வரை 80C செக்‌ஷன்படி, வரிச்சலுகை பெறலாம்.”

என் வயது 32. ஆறு வயதுடைய என் மகனுடன் வாழ்ந்துவருகிறேன். சேமிப்பின்மூலம் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது. மேலும், மாதந் தோறும் 8,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு வேறெந்தக் கடனும் இல்லை. என் மகனின் எதிர்காலத்துக்கேற்ற முதலீட்டு ஆலோசனைகளைக் கூறவும்.

சந்தியா, சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“உங்களுடைய அவசரகாலத் தேவைக்காக ஒரு லட்சம் ரூபாயை வைப்புநிதியாக முதலீடு செய்யவும். மாதந்தோறும் முதலீடு செய்யவுள்ள 8,000 ரூபாயை இரண்டாகப் பிரித்து, எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட் மற்றும் யு.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.4,000 என்ற விகிதத்தில் அடுத்தப் பத்தாண்டு காலத்துக்கு முதலீடு செய்துவரவும். இதிலிருந்து கிடைக்கும் வருமானம், உங்கள் மகனின் உயர்கல்விச் செலவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.”

விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல இருந்தேன். அதுதொடர்பாக எனக்கும் என் மனைவிக்குமாக ஒரு பயண மருத்துவக் காப்பீடும் வைத்திருக்கிறேன். உறவினர் ஒருவரின் திடீர் மரணம் காரணமாக என் அமெரிக்கப் பயணம் ரத்தானது. இந்தப் பயணத்தை ரத்து செய்ததற்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்ய முடியுமா?

கிஷோர்குமார், சேலம்

எஸ்.ஸ்ரீதரன், வெல்த்லேடர்

“பொதுவாக, டிராவல் இன்ஷூரன்ஸ் இரண்டு வகைப்படும். முதல்வகை பாலிசி, உங்களது பயணத்தின்போது உடைமைகளைப் பாதுகாக்கவும் மேலும் வேறு ஏதாவது விபத்து ஏற்பட்டு அதன்மூலம் உடம்பின் ஒருபகுதியில் பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டால் அதை ஈடுசெய்யும் வகையிலும் குறிப்பிட்ட ஒரு தொகை கிடைக்க வழிவகுக்கும். ஒருசில பாலிசிகளில் மட்டுமே, பயணம் ரத்து செய்யப் பட்டால் கவரேஜ் கிடைக்கும். ஆகவே, உங்களது பாலிசியில் இதுகுறித்த விவரங்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்த்தபிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி, க்ளெய்ம் பெறலாம்.”

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?

பொதுத்துறை வங்கி ஒன்றில் நான் ஏற்கெனவே வைத்திருந்த வங்கிக் கணக்கு தற்போது எனக்குத் தேவைப்படவில்லை. எனவே, அதை முறையாக வங்கியில் தெரிவித்துக் கணக்கை முடிக்க வேண்டுமா அல்லது அப்படியே விட்டுவிடலாமா, அதனால் எனக்கு ஏதும் சிக்கல் வருமா?

முகிலன், தூத்துக்குடி

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, சங்கரன்கோவில்

“ஏற்கெனவே உள்ள வங்கியில் சம்பளக் கணக்கினை ஒரு கடிதம் எழுதி முறைப்படி முடித்துக் கொள்ள வழிமுறை உள்ளது. நீங்கள் கணக்கை முடிக்கத் தவறினாலும், அதில் மினிமம் பேலன்ஸ் இருந்தால் சிக்கலில்லை. மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, வங்கிக் கணக்கைத் தொடர்வதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கின்றனவா என்றும் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கட்டவேண்டிய அபராதம் குறித்தும் வங்கி கடிதம் மூலமாகத் தெரிவிக்கும். அதற்கு வாடிக்கையாளரிடமிருந்து பதில் இல்லாத போது மீண்டும் கடிதம் அனுப்பி உரிய பதில் இல்லாதபோது அவர்களாகவே கணக்கை முடித்துக்கொள்வார்கள். கணக்கை அவர் களாகவே முடிப்பதற்கான விதிமுறை, வங்கிக்கு வங்கி மாறுபடும்.”

எனக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.20,000 வருகிறது. கைவசம் ரொக்கமாகவும் ரூ.10 லட்சம் உள்ளது. இந்த ரொக்கத்தை வருமான வரிச் சலுகையுடன் முதலீடு செய்வது எப்படி?

சந்திரசேகர், திருச்சி

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“தங்களுக்கு ஓய்வூதிய வருட வருமானம் 2,40,000 ரூபாய். இது வருமானவரி வரம்புக்குள் உள்ளது. ரொக்கத்தொகை பத்து லட்சம் ரூபாயை ஐந்தாகப் பிரித்து, பின்வரும் கடன் சார்ந்த ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இரண்டு லட்சம் ரூபாய் வீதம் முதலீடு செய்யலாம்.

ஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யு டெப்ட் ஃபண்ட், ஃபிராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் - சூப்பர் இன்ஸ்டிட் யூஷனல் பிளான், கோட்டக் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் - ஸ்டாண்டர்டு பிளான், டாடா டிரஷரி அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும்  யூ.டி.ஐ டிரஷரி அட்வான்டேஜ் ஃபண்ட். மாதந்தோறும் பணம் தேவையெனில், சிஸ்ட மேட்டிக் வித்ட்ராயல் திட்டம் மூலம் கேப்பிடல் அப்ரிசியேஷன் மட்டும் அல்லது மாதம் 1,350 ரூபாய் எடுக்கும் வகையில் எழுதிக் கொடுக்கலாம். இதற்கு வரி பிடித்தம் இருக்காது. மேலும், மொத்த வருமானமும் வரம்புக்குள் இருக்கும் என்பதால், வருமான வரி கட்டும் அவசியமும் இருக்காது.”

எனது வீட்டினை விற்ற தொகைக்கு நீண்டகால ஆதாயமாக ரூ.13 லட்சம் வந்துள்ளது. ஏற்கெனவே கட்டப்பட்டுவரும் வீட்டுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணம் செலுத்திவருகிறேன். இறுதித் தவணையாக ரூ.6 லட்சம் மட்டும் கட்டவேண்டியுள்ளது. இதை வீடு விற்ற தொகையிலிருந்து செலுத்தினால் வரிச் சலுகை கிடைக்குமா?

ராகவன், சென்னை

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“நீண்டகால ஆதாயமாகக் கிடைத்துள்ள 13 லட்சம் ரூபாயிலிருந்து இறுதித் தவணையான 6 லட்சம் ரூபாயை தாராளமாகச் செலுத்தலாம். அதற்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். மீதமுள்ள 7 லட்சம் ரூபாயையும்கூட புதிய வீட்டுக்காக வரிச் சலுகையுடன் செலுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கலாம். எனவே, உங்களுடைய வீட்டை விற்றதற்கான பத்திரப்பதிவு விவரங் களுடன் நீண்டகால ஆதாயத்தை ஆடிட்டர் ஒருவரிடம் கலந்தாலோசனை செய்வது நல்லது.”

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

படம் : வீ.நாகமணி

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு