Published:Updated:

ஷேர்லக்: மீண்டும் மோடி... சந்தை மேலும் ஏறுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: மீண்டும் மோடி... சந்தை மேலும் ஏறுமா?
ஷேர்லக்: மீண்டும் மோடி... சந்தை மேலும் ஏறுமா?

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

திசயமாக ஷேர்லக் காலையிலே வந்திருந்தார். புனித வெள்ளி பண்டிகைக்கு பங்குச் சந்தைக்கு விடுமுறை என்பதால் ரிலாக்ஸ் ஆக இருந்தார். நம் கேள்விகளுக்கும் நிதானமாகப் பதில் அளித்தார். 

ஷேர்லக்: மீண்டும் மோடி... சந்தை மேலும் ஏறுமா?

பங்கேற்பு ஆவணங்கள் மூலமான முதலீடு அதிகரித்துள்ளதே?

“பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் பதிவு பெற்ற அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ-கள்), பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனும் பங்கேற்பு ஆவணங்கள்  மூலமாக  முதலீடு செய்கின்றன. அதன் முதலீடு மார்ச் இறுதியில்   ரூ.78,110 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

பங்கேற்பு ஆவணங்கள் மூலமான அந்நிய முதலீடு, நடப்பு ஆண்டு ஜனவரியில் ரூ.1.19 லட்சம் கோடியாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அது ரூ.73,428 கோடியாக இருந்தது. மார்ச் மாதத்தில் இந்த வகை முதலீடு ரூ.78,110 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மார்ச் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மொத்த அந்நிய முதலீட்டில் பங்குகளின் பங்களிப்பு மட்டும் ரூ.56,288 கோடியாகும். கடன் சந்தைகளில் ரூ.20,999 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.119 கோடி முதலீடு முன்பேர வர்த்தக சந்தையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.”

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் நிதித் திரட்டப்போகிறதாமே?

“ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம், இன்ஜினீயரிங், கொள்முதல் மற்றும் கட்டுமானத் துறையைச் சேர்ந்தது. இந்த நிறுவனம், நிதித் தேவைக்காக புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலம் 4,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஐ.பி.ஓ வரும் நிறுவனத்தின் தலைவர் குர்ஷித் யாஸ்தி தருவாலா மற்றும் ஷாபூர்ஜி பலோன்ஜி அண்டு கம்பெனியின் மூலம் ஆஃபர் ஃபார் சேல் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

2018 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனம் பெற்றிருக்கும் ஆர்டர்களின் மொத்த மதிப்பு ரூ.4,309 கோடி. 26 நாடுகளில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளன.”

பாலிகேப் இந்தியா பங்கு விலை முதல் நாளிலியே 20% உயர்ந்துள்ளதே?

“ஒயர் மற்றும் கேபிள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாலிகேப் இந்தியா, பாலிகேப் பிராண்டின் கீழ் மின் உபகரணங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம், அண்மையில் ஐ.பி.ஓ  வெளியீடு மூலம் 1,346 கோடி ரூபாய் நிதி திரட்டியது.

இந்தப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர் களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சுமார் 91.45 கோடி விண்ணப்பங்கள் வந்தன. 2019-ம் ஆண்டில் இதுவரை வெளியிடப்பட்ட ஐ.பி.ஓ-களுக்கு, நிர்ணயிக்கப்பட்டதைவிட           10 மடங்கு விண்ணப்பங்கள் வந்தது இதுவே முதன் முறையாகும். இந்த நிலையில், இந்த நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. முதல் நாளிலேயே பங்கு விலை 20 சதவிகிதம் ஏற்றம் கண்டது.”

சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியதற்குத்  தனியார் வங்கிகள் பெருமளவில் கைகொடுத்துள்ளனவே?

“செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 370 புள்ளிகள் உயர்வுடன் 39276 ஆகவும், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 97 புள்ளிகள் உயர்வுடன் 11787 ஆகவும் புதிய உச்சத்தை எட்டின. இது இந்த மாதத்தின் தொடக்கத்தில் காணப்பட்ட ஏற்றத்தைக் காட்டிலும் அதிகமாகும். இந்த ஏற்றத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி போன்ற முன்னணி தனியார் வங்கிகள் முக்கியக் காரணமாக அமைந்தன. அன்றைய தினம் இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் ஏற்றம் கண்டன. அதேபோன்று ஹெச்.டி.எஃப்.சி வங்கிப் பங்கின் விலை 1 சதவிகிதம் ஏற்றம் கண்டது. இந்த மூன்று வங்கிகளும் சென்செக்ஸ் புள்ளிகளின் ஏற்றத்துக்கு 163 புள்ளிகளை தங்களது பங்களிப்பாக அளித்தன.

பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்ற ஆருடமும், பருவமழை  இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பும் சந்தையில் சாதகமான உணர்வு ஏற்பட்டதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. மேலும், அந்நிய முதலீடுகள் அதிகமாகக் குவிந்ததும் சந்தை ஏற்றத்துக்கு இன்னொரு காரணமாக அமைந்தது. செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் சுமார் 1,039 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அந்நிய முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டன. அதே சமயம் பவர் கிரிட், இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் சென்செக்ஸ் குறியீட்டில் இழப்பைச் சந்தித்தன.”

மீண்டும் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால்  பங்குச் சந்தை மேலும் ஏறும் என சி.எல்.எஸ்.ஏ தெரிவித்துள்ளதே!

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவு, தற்போதைய பங்குச் சந்தை ஏற்றத்துக்கு ஓரளவு காரணமாக உள்ளது. இந்த நிலையில், ஒருவேளை தேர்தல் முடிவு, கருத்துக் கணிப்பு முடிவுக்கு ஏற்ப அமைந்தால், சந்தை இன்னும் ஏற்றமடையும் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ  தெரிவித்துள்ளது.

தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் சந்தை ஓரளவு ஏற்றம் காணும். அதேசமயம் பா.ஜ.க கூட்டணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக இடங்கள் கிடைத்தால் சந்தையின் ஏற்றம் இன்னும் அதிகமாக இருக்கும். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தால், சந்தையில் தொடக்கத்தில் இறக்க நிலை காணப்படலாம் என்றும், அதேசமயம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு அது இருக்காது என்றும், இந்த இறக்க நிலையின் போது பங்குகள் அதிகமாக விற்கப்படலாம் என்பதால், அதை வாங்குவதற்கான சந்தர்ப்பமாக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சி.எல்.எஸ்.ஏ கூறியுள்ளது.

குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ், ஹெச்.டி.எஃப்.சி, ராம்கோ சிமென்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, ஐ.டி.சி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி போன்ற பங்குகளை வாங்க சி.எல்.எஸ்.ஏ பரிந்துரைத்துள்ளது. 

இந்தியாவுக்குச் சாதகமாக அமையக்கூடிய வகையில், அந்நிய முதலீட்டு வரத்தின் பெரும்பகுதி இன்னும் வரவில்லை. சந்தையின் சென்டிமென்டைப் பொறுத்தே அது அதிகரிக்கும். மத்தியில் ஒரு வலுவான அரசு அமையக்கூடிய வகையில் தேர்தல் முடிவு அமைந்தால்தான், அந்நிய முதலீட்டு வரத்தின் உண்மையான அர்த்தத்தை உணரக்கூடிய அளவுக்கு அதில் மாற்றம் இருக்கும் என சி.எல்.எஸ்.ஏ மேலும் தெரிவித்துள்ளது.”

அந்நிய முதலீட்டாளர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளதே?


“உலக சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் மிகவும் விருப்பத்துக்கு உரிய முதலீட்டு இடமாக இந்திய சந்தை மாறிவிட்டது. டவ்ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் உடன் சேர்ந்து நிஃப்டி, அனைத்து உலக சந்தை குறியீடுகளையும் பலமுறை தோற்கடித்ததோடு, டாலர் அடிப்படையிலான காலாண்டு மதிப்பீட்டில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

கடந்த ஒன்று, மூன்று, ஐந்து மற்றும் 10 வருட காலத்தில், டாலர் அடிப்படையிலான வருவாய் முறையே 6%, 42%, 53% மற்றும் 150% ஆக இருந்துள்ளது. கடந்த ஓராண்டு காலகட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்ததற்கு இடையேயும் இந்த வருவாய் கிடைத்துள்ளது. 

நிஃப்டி 12000 புள்ளிகளைத் தாண்ட தயாராக இருப்பதால், வரவிருக்கும் வாரங்களில் டாலர் வருவாயின் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.”

நிஃப்டியைக் காட்டிலும் பேங்க் நிஃப்டி அதிகரித்துள்ளதே?

“வங்கி பங்குகளின் சமீபத்திய ஏற்றத்துக்கு, முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டுத் துறைகளைச் சிறப்பான முறையில் மாற்றியமைத்ததுதான் முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும், இது பேங்க் நிஃப்டிக்கும் என்.எஸ்.இ  நிஃப்டிக்கும் இடையேயான விலை விகிதத்தை அதிகரித்து, ஒரு புதிய உச்சத்தை எட்ட வைத்துள்ளது.

வங்கிப் பங்குகளின் ஏற்றம், நிஃப்டியை ஒரு புதிய உச்சத்தைத் தொட வைத்ததோடு,  அதன் ஏற்றத்தில் 36 சதவிகித பங்களிப்பைக் கொண்டிருந்தது. என்.எஸ்.இ நிஃப்டி, 2019 பிப்ரவரி மாதத்தில் சந்தித்த சமீபத்திய சரிவுக்குப் பின்னர் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை 10% முதல் 21% ஏற்றம் கண்டுள்ளன.,இண்டெக்ஸை புதிய உச்சத்துக்குத் தள்ளிய 10 பங்குகளில் 7 பங்குகள் வங்கிப் பங்குகளாகும். மேலும், இண்டெக்ஸில்  சமீபத்தில் காணப்பட்ட 1000 புள்ளிகள் உயர்வுக்கு இந்த வங்கிப் பங்குகள்தான் 40% பங்களிப்பை அளித்துள்ளன” என்றவர், “அடுத்த வாரம் சந்திப்போம்” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ஷேர்லக்

ஷேர்லக்: மீண்டும் மோடி... சந்தை மேலும் ஏறுமா?

நாணயம் விகடன் ஸ்லாக்-ல் வந்தாச்சு!

ங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பொருளாதாரம், இன்ஷூரன்ஸ், தங்கம், ரியல் எஸ்டேட் தொடர்பாக நாணயம் விகடனில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா?

உங்கள் செல்போனில் ஸ்லாக் (slack) ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். http://bit.ly/NaanayamSlack என்கிற லிங்கில் சென்று, உங்கள் மெயில் ஐடி-யை தந்து பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!

பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.சி.டி.சி!

டந்த 2018-19-ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை வாயிலாக ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பங்குகள் விற்பனை அந்த இலக்கைத் தாண்டி ஏறக்குறைய ரூ.85,000 கோடியை எட்டியுள்ளது. நடப்பு 2019-20-ம் ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான இலக்கைவிட இது 12.5 சதவிகிதம் அதிகமாகும்.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரயில்வே துறையைச் சேர்ந்த இர்கான் இன்டர்நேஷனல், ரைட்ஸ், ஆர்.வி.என்.எல், ஐ.ஆர்.எஃப்.சி. மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகிய 5 நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிடக் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இன்றைய நிலையில் ரைட்ஸ், இர்கான் இன்டர்நேஷனல் மற்றும் ரயில் விகாஸ் நிகாம் ஆகிய மூன்று  ரயில்வே நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமிருக்கும் இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.எஃப்.சி) மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகிய நிறுவனங்கள், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஆர்.எஃப்.சி-யின் பங்குகள் மூலம் சுமார் ரூ.1,000 கோடியும், ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் மூலம் ரூ.500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு