பிரீமியம் ஸ்டோரி

சர்ச்சையில் ஜாக் மா!

நாணயம் பிட்ஸ்

‘‘காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை வாரத்துக்கு ஆறு நாள்களுக்கு உழைக்கத் தயாராக வேண்டும்’’ என அலிபாபா நிறுவனர் ஜாக் மா சமீபத்தில் சொல்லப்போக, அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று செயல்படுபவர்கள் ஜாக் மாவின் கருத்தினைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய கருத்தினை 996ஐசியு (காலை 9 முதல் இரவு 9 வரை வாரத்தில் 6 நாள்களுக்கு) என்கிற தலைப்பின்கீழ் பகிர, அந்த விமர்சனங்களைப் பார்த்து துளியும் கவலைப்படாமல் தன் கருத்தில் உறுதியாக இருக்கிறார் ஜாக் மா!

ஜாக் மா, ஜாக் மாதான்!

சென்னையில் தயாராகும் ஐபோன்!

நாணயம் பிட்ஸ்

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் ஐபோன் இத்தனை நாளும் சீனாவில்தான் தயாராகிவந்தது. இனி இந்த போனை சென்னையில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது ஆப்பிள் செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான். ஆப்பிள் நிறுவனத்தின் சில பழைய மாடல் போன்கள் பெங்களூருவில் தயார் செய்யப்பட்டுவந்த நிலையில், புதிய மாடல் போன்களை சென்னையில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்ததாலும், அங்கு ஐபோன்களைத் தயாரிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும் சென்னைக்கு வருகிறது ஃபாக்ஸ்கான். சென்னையில் ஐபோன் தயாராவதால், ஆப்பிள் ஐபோன்களின் விலை இனி இந்தியாவில் குறையும் என்கிறார்கள்.

இனி சாதாரண மனிதனின் கையில் ஐபோன் தவழுமா?

இந்தியாவில் முதலீடு: முதலிடத்தில் அமெரிக்கா!

நாணயம் பிட்ஸ்

இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. ஏறக்குறைய ரூ.10.93 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. மொரிஷியஸ் நாட்டின்மூலம் ரூ.4.58 லட்சம் கோடியும், லக்சம்பர்மூலம் ரூ.3.26 லட்சம் கோடியும், சிங்கப்பூர்மூலம் 3.10 லட்சம் கோடியும் முதலீடாகியுள்ளது. ஜப்பான், கனடா போன்ற நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே தலா ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமாக முதலீடு செய்திருக்க, பொருளாதார ரீதியில் உறுதியற்ற நாடான மொரிஷியஸிலிருந்து மட்டும் அதிக அளவில் பணம் இந்தியாவுக்கு வருவது எப்படி என்பதை ஆராயத் தொடங்கியிருக்கிறது ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கமிஷன்!  நல்லா பாருங்க ஆபீஸர்ஸ்!

நஷ்டத்தில் போட்டிபோடும் தபால் துறை!

நாணயம் பிட்ஸ்

பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியாவைத் தொடர்ந்து அதிக நஷ்டம் தரும் நிறுவனமாகி வருகிறது தபால் துறை. 2018-ல் பி.எஸ்.என்.எல் ரூ.8,000 கோடியும், ஏர் இந்தியா ரூ.5,340 கோடியும் நஷ்டம் கண்டது. ஆனால், தபால் துறையோ 2018-ல் ரூ.18,000 கோடி வருமானமாக ஈட்டியிருக்கிறது. ஆனால், ஊழியர்களுக்கான  செலவு மட்டுமே ரூ.16,620 கோடியைத் தாண்டுகிறதாம். ஒரு போஸ்ட் கார்டுக்காக தபால் அலுவலகம் செலவழிக்கும் தொகை ரூ.12.15. ஆனால், அது விற்கப்படுவதோ வெறும் 50 காசுக்கு. பிறகு எப்படி நஷ்டம் வராமல் இருக்கும்?

ஏற்றுமதியில் உச்சம்!

நாணயம் பிட்ஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறது இந்திய ஏற்றுமதித் துறை. 2014-ல் 310 பில்லியன் டாலராக இருந்த இந்திய ஏற்றுமதி, 2018-ல் 331 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. விவசாய விளைபொருள்கள் மட்டும் சுமார் 25 பில்லியன் டாலர் அளவுக்கு (ரூபாய் மதிப்பில் ரூ.1.60 லட்சம் கோடி) ஏற்றுமதி ஆகியிருக்கிறதாம்!

ஊபர் ஐ.பி.ஓ யாருக்கு லாபம்?

நாணயம் பிட்ஸ்

வருகிற மே மாதத்தில் ஐ.பி.ஒ வரப் போகிறது ஊபர் நிறுவனம். இதற்கான ஆவணங்களை நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தந்துவிட்டு, ஐ.பி.ஓ தேதிக்காகக் காத்திருக்கிறது ஊபர். இந்த ஐ.பி.ஓ-வின்மூலம் மிகப் பெரிய  லாபம் அடையப்போவது ஜப்பானின் சாஃப்ட்பேங்க்தான். இந்த நிறுவனத்திடம் மட்டும் ஊபரின் 222.2 மில்லியன் பங்குகள் உள்ளன. இதற்கடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகளை அதிக அளவில் வைத்திருப் பவர் ஊபரைத் தொடங்கிய ட்ராவிஸ் கலாநிக். 117.5 மில்லியன் பங்குகள் இவர் வசமுள்ளது. ட்ராவிஸுடன்  சேர்ந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கிய கெர்ரட் கம்ப்பிடம் 82 மில்லியன் பங்குகள் உள்ளன.

கொடுத்துவச்ச மகராசன்கள்!

விற்பனைக்கு வரும் கீதாஞ்சலி ஜெம்ஸ்!

நாணயம் பிட்ஸ்

நிரவ் மோடியுடன் சேர்ந்து வங்கிகளை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாயைக் கூட்டுக்கொள்ளை அடித்த மெஹுல் சோக்‌ஷிக்குச் சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தை விற்பனைக்குக் கொண்டுவர முடிவெடுக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் 31 வங்கிகளுக்கு ரூ.12,558 கோடியைத் தரவேண்டியிருக்கிறது. நிரவ் மோடியுடன் சேர்ந்து மெஹுல் சோக்‌ஷி வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட நிலையில், இந்த நிறுவனம் வங்கிகளுக்குத் தரவேண்டிய பணம் எப்படித் திரும்பக் கிடைக்கும் என்று வங்கிகள் ஆவலாக எதிர்பார்த்திருந்தன. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்க முடிவாகியிருப்பது வங்கிகளுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான்!

வங்கிகளுக்கு மட்டுமல்ல, வங்கி முதலீட்டாளர்களுக்கும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு