Published:Updated:

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!
பிரீமியம் ஸ்டோரி
ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

ஆகாஷ்

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

ஆகாஷ்

Published:Updated:
ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!
பிரீமியம் ஸ்டோரி
ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

ங்குச் சந்தை, கமாடிட்டி சந்தைகளில் முதலீடுசெய்து, கொள்ளை லாபம் தருகிறோம் என்று சொல்லி, அப்பாவி மக்களின் பணத்தைக் கபளீகரம் செய்துவரும் கோவையைச் சேர்ந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (UTS) மற்றும் நெல்லையைச் சேர்ந்த கனெக்ட் டிரேடிங் சொல்யூஷன் (CTS) நிறுவனங்கள் பற்றி கடந்த வார நாணயம் விகடனில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். 

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

அன்றைய தினம் நாணயம் விகடன் வெளியான உடனேயே கோவை, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை எனப் பல ஊர்களிலும் உள்ள புத்தகக் கடைகளுக்குச் சென்று, விற்பனைக்கிருந்த நாணயம் விகடன் இதழ்கள் அனைத்தையும்  அள்ளிச் சென்றார்கள் யு.டி.எஸ் மற்றும் சி.டி.எஸ் ஊழியர்கள். ‘‘சார், நாணயம் அஞ்சு காப்பிதான் இருக்கா? இந்தாங்க, பணம் கொடுக்குறோம். நாளைக்கு உங்கள் கடையில் நாணயம் விகடன் வந்துச்சுன்னா, அதை அப்படியே எங்ககிட்ட கொடுத்துடுங்க’’ என்று அட்வான்ஸாகப் பணம் தந்து, சில கடைக்காரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி னார்கள் யு.டி.எஸ் மற்றும் சி.டி.எஸ் ஊழியர்கள்! 

இந்த நிலையில், இந்த இரு நிறுவனங்களின் பின்னணியைப் பற்றி விசாரிக்கக் களமிறங்கினோம். நாம் முதலில் விசாரித்தது கோவைச் சேர்ந்த    யு.டி.எஸ் நிறுவனத்தை.

யு.டி.எஸ் ரமேஷின் பின்னணி

“2009-ம் ஆண்டிலிருந்தே இந்த நிறுவனம் செயல்படுவதாக அதன் இணையதளத்தில் சொல்லப்பட்டாலும், கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் செயல்படுகிறது’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சூலூரைச் சேர்ந்த ரமேஷ். பெரிய பின்புலம் எதுவும் ரமேஷுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் ‘ரியல் எஸ்டேட்’ பிசினஸ் செய்து வந்த  ரமேஷ், அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த பிசினஸுக்குத் தாவியதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபிறகு, அவருக்குக் கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டத் தொடங்கியது. கோவையில் சிறிய அளவில் தொடங்கிய யு.டி.எஸ் நிறுவனம், இன்றைக்கு தமிழகம் முழுக்க 16 கிளைகளாக முன்னேறியிருக்கிறது. சில மாதங்களுக்குமுன் இந்த நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்படும் அளவுக்கு வருமான வரித் துறையினரின் கவனத்தை ஈர்த்தார் ரமேஷ். 

அரசிடமிருந்து எந்த முறையான அனுமதியும் வாங்காமல், மக்களிடமிருந்து பணத்தை வாங்கி, பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தைகளில் டிரேட் செய்து, அதன்மூலம் 10% நிச்சயமான வருமானம் தருவதாகச் சொல்லி, மக்களை இழுத்து வருகிறார் யு.டி.எஸ் ரமேஷ். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

உதாரணமாக, ஒரு நிறுவனம் கமாடிட்டி சந்தையில் டிரேட் செய்ய வேண்டுமெனில்,      எம்.சி.எக்ஸ் எக்ஸ்சேஞ்சிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இதற்கு ரூ.10 லட்சத்துக்குமேல் செலவாகும். இப்படிப் பதிவு செய்துகொண்ட நிறுவனம்தான் தன்னுடைய நிறுவனப் பெயரை விளம்பரம் செய்து, டிரேடிங் செய்ய முடியும். கமாடிட்டி டிரேடிங் செய்ய   எம்.சி.எக்ஸ்-ல் பதிவு செய்துகொள்ளவில்லை எனில், எந்த நிறுவனம் எம்.சி.எக்ஸ்-ல் பதிவு செய்துகொண்டுள்ளதோ, அந்த நிறுவனத்தின்  சப்-புரோக்கிங் அனுமதிபெற்று, அந்த நிறுவனத்தின் பெயரில்தான் டிரேட் செய்ய முடியும். இந்தத் துறையில் புழங்கும் மிகச் சிலருக்கே தெரியும் தகவல் இது. 

ஆனால், யு.டி.எஸ் நிறுவனமோ 2020-ல்தான் எம்.சி.எக்ஸ்-ல் உறுப்பினராகப் போவதாகச் சொல்கிறது. அப்படியிருக்க, யு.டி.எஸ் நிறுவனம்  தனது நிறுவனத்தின் பெயரில் எப்படி கமாடிட்டி டிரேட்  செய்ய முடியும்; அதற்காக  மக்களிடமிருந்து பணம் வாங்க முடியும்? ஆனால், அப்பாவி மக்கள் இதெல்லாம் தெரியாமல் இந்த நிறுவனத்திடம்  பணம் தந்துகொண்டிருப்பதுதான் பரிதாபம்! 

சீட்டு கம்பெனியா, டிரேடிங் கம்பெனியா?

பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் டிரேடிங் செய்வதற்கு யு.டி.எஸ் நிறுவனம் முறையான எந்த அனுமதியும் வாங்கவில்லை என்றாலும், சீட்டு கம்பெனி நடத்துவதற்கு அரசிடமிருந்து அனுமதி வாங்கியிருக்கிறது. யுனிவர்சல் சிட் ஃபண்ட்ஸ் (UCF) என்கிற பெயரில் சீட்டு நடத்தும் நிறுவனத்தை கோவை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி எனப் பல நகரங்களில் நடத்த அனுமதி வாங்கியிருக்கிறது.

இந்த நிறுவனத்தில் பணம் போடுகிறவர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள பத்திரத்தில் அனைத்து விவரங் களையும் எழுதித் தருகிறது யு.சி.எஃப். டெபாசிட் தாரர்களிடமிருந்து எவ்வளவு பணம் பெறப்படு கிறது, இந்தப் பணத்துக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படும், எத்தனை மாதங்களில் இந்தப் பணம் திரும்பத் தரப்படும் என்கிற விவரங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், மக்களிடமிருந்து டெபாசிட்டாக வாங்கும் பணத்தை வைத்து இந்த நிறுவனம் என்ன செய்கிறது, ஆண்டுக்கு 12% எப்படி வட்டி தருகிறது என்பதைப்பற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

இந்த நிறுவனத்தில் பணம் போடுகிறவர்கள் அனைவருக்கும் இந்தப் பத்திரம் வழங்கப்படுவதால், மக்கள் நம்பிக்கையுடன் பணத்தைத் தந்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், இந்தப் பத்திரத்தினை வைத்து பணம் போட்டவர்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்பது பலருக்கும் தெரிவ தில்லை. பணம் போட்டவர்கள் இந்தப் பத்திரத்தினைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு சில ஆயிரங்களை அவர்கள் செலவு செய்தாக வேண்டும். அதுகூட பெரிய விஷயமில்லை; இந்தப் பத்திரத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய    யு.சி.எஃப் நிறுவனத்திலிருந்து யாராவது ஒருவர் வந்து கையெழுத்திட வேண்டும். இதுமாதிரி கையெழுத்திட எந்த நிறுவனமும் சம்மதிக்காது என்பதால், இந்தப் பத்திரத்தை வைத்து எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

யு.சி.எஃப் நிறுவனம் சமீபத்தில் புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் கூட்டம் ஒன்றை நடத்தியது. புதுச்சேரி காராமணி குப்பத்தில்  இதன் அலுவலகம் செயல்படுகிறது. கடலூர், நெய்வேலி, பண்ருட்டி எனப் பல ஊர்களில் உள்ள மக்கள் இந்த நிறுவனத்தில் பல லட்சம் பணத்தைப் போட்டிருக்கிறார்கள். 

இதுமட்டுமல்ல, யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் நிறுவனம் வர்த்தக விவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெற்றி ருக்கிறது. ஆனாலும், இந்தச் சான்றிதழை அடிப்படையாக வைத்து பிசினஸ் செய்யவோ, மக்களிடமிருந்து டெபாசிட்டாகப் பணத்தை வாங்கவோ கூடாது என்று அந்தச் சான்றிதழில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி யு.சி.எஃப் நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

நடுத்தர மக்களைப் பணக்காரராக ஆக்கவேண்டும்


கோவை யு.டி.எஸ் நிலவரம் இப்படியிருக்க, நெல்லை சி.டி.எஸ் நிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது. இந்த நிறுவனம் பற்றி நாணயம் விகடனில் கட்டுரை வெளியான மே 5-ம் தேதியன்று திருச்சியில் கூட்டம் ஒன்றை நடத்தியது சி.டி.எஸ். இந்த நிறுவனத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.எம் ஏஜென்டுகள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இந்த நிறுவனத்தின் எம்.டி சங்கரநாராயணன் வழக்கம்போல உற்சாகமாகப் பேசினார்.

‘‘உலக அளவில் மிகச் சில நிறுவனங்களே 300% லாபம் தந்துள்ளன. வாரன் பஃபெட் 300% லாபம் கண்டார். அவருக்கு அடுத்து திருபாய் அம்பானிதான் 300% லாபம் பார்த்தார். அடுத்தபடியாக, சி.டி.எஸ் (Connect trading solution) நிறுவனம்தான் 300% லாபம் தந்திருக்கிறது. 

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

இன்றைக்கு நடுத்தர மக்கள் பணத்தைச் சேர்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பணக்காரர்களாக மாற்றவேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலில் மாற்றம் வரவேண்டும். சி.டி.எஸ் நிறுவனத்தை அடுத்த சில மாதங் களுக்கோ, ஆண்டுகளுக்கோ கொண்டு செல்வதை விட, அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்று அவர் பேசப் பேச, கூட்டத்துக்கு வந்திருந்த      எம்.எல்.எம் ஏஜென்டுகள் உணர்ச்சி வசப் பட்டனர். நமக்கோ, சதுரங்க வேட்டை படத்தில் வரும் ஹீரோ மேடையில் பேசும் காட்சிதான் ஞாபகத்துக்கு வந்தது.

செட்டப்பை மாற்றிய சி.டி.எஸ்

கடந்த ஞாயிறன்று, சி.டி.எஸ் பற்றி நாணயம் விகடனில் கட்டுரை வெளியானவுடன் உஷாரானது நெல்லையில் உள்ள ‘கனெக்ட்’ (சி.டி.எஸ் நிறுவனத்தைச் சுருக்கமாக ‘கனெக்ட்’ என்று சொல்லிவருகிறார்கள்!) தலைமை அலுவலகம். “பங்குச் சந்தையில் எல்லாம் டிரேடிங் செய்யவில்லை; பள்ளிக்குழந்தைகளுக்கு ஷூ வாங்கித் தருவது உள்பட பத்து, பதினைந்து தொழில்களைச் செய்துவருகிறோம்” எனச் சொல்லிவருகிறார் ‘கனெக்ட்’ சங்கர நாராயணன். (ஆனால், ‘கனெக்ட்’ இணையதளமோ பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில்தான் டிரேட் செய்வதாகச் சொல்கிறது). தான் சொல்வதை உண்மை என்று நிரூபிக்கிற மாதிரி, ‘கனெக்ட்’ அலுவலகத்தில் ஃப்ளவர்வாஷ் உள்பட பல பொருள்களை அடுக்கிவைக்க ஏற்பாடு செய்தார் சங்கர நாராயணன். காரணம், தன்னைப் பற்றி விசாரிக்க காவல்துறை எப்போது வேண்டு மானாலும் வரும் என்று எதிர்பார்த்தார்.

நாணயம் விகடனில் சி.டி.எஸ் பற்றி கட்டுரை வெளிவந்தவுடன், இந்த நிறுவனத்தைப் பற்றி தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்  நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளரான பாஸ்கரன். இதனைத் தொடர்ந்து ‘கனெக்ட்’ நிறுவனத்துக்குள் நுழைந்த காவல்துறை, அங்கு ஃப்ளவர்வாஷ், ஷூக்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. 

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

“நாங்கள் பங்குச் சந்தை டிரேடிங் எல்லாம் செய்வதில்லை. பொருள்களை மட்டுமே விற்கிறோம்” என்று அங்கிருந்த ஊழியர்கள் சொன்னதைக் கேட்டுக் குழம்பிப் போன காவல் துறையினர், “உங்க எம்.டி-யை விசாரணைக்கு வரச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றனர். 

இந்த நிறுவனம் கொள்ளை லாபம் தருவதைப் பார்த்து, பல ஆயிரம்பேர் இதில் முதலீடு செய்தி ருக்கிறார்கள். முக்கியமாக, நெல்லையின் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இதில் முதலீடு செய்திருக்கிறார்களாம். இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பிரபலங்களும் அடக்கம். இவர்கள் முதலீடு செய்ததைப் பார்த்து, இவர் களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களும்  முதலீடு செய்திருக்கிறார்களாம்.

‘‘இந்த நிறுவனத்தின்மீது பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாமல் இருக்கக் காரணம் இதுதான். விசாரணை என்று போனாலே முக்கியப் பிரமுகர்களிடமிருந்து கோரிக்கை வருகிறது. இந்த நிறுவனம் செயல்படாமல்போனால், அரசியல் புள்ளிகள், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை எப்படியாவது திரும்ப வாங்கிவிடுவார்கள். ஆனால், சாதாரண மக்கள் போட்ட பணத்தைத் திரும்ப வாங்கவே முடியாது’’ என்கிறார் காவல்துறை வட்டார நண்பர் ஒருவர்.

கடைசித் தகவல்: நெல்லை சி.டி.எஸ் நிறுவனம் பணம் தருவதை சில தினங்களாக நிறுத்தியிருக்கிறது. முதலில், வங்கியைக் காரணம் காட்டியது. பிற்பாடு, ஆடிட்டிங் நடப்பதாகச் சொல்லி பணம் தருவதை நிறுத்தியிருக்கிறது!

- பி.ஆண்டனிராஜ், எம்.புண்ணியமூர்த்தி