நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

அமர்சிங், தலைமை ஆலோசகர், ஏஞ்சல் புரோக்கிங்

ழக்கமாக, மதிப்பீட்டு மாதிரிகளின் (valuation models) அடிப்படையில் நாம் பங்குகளில் முதலீடு செய்கிறோம். கூடவே, பி/இ (p/e), பி/பிவி (p/bv) போன்ற விகிதங்களைக் கணிக்கிறோம். இவற்றைத் தவிர, பங்குகளில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளன. அவை மதிப்பீட்டு மாதிரிகளில் பிரதிபலிக்காமல் இருக்கலாம். அதுமாதிரியான ஐந்து விஷயங்களைப் பார்ப்போம்.

பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

1. வணிகமாதிரியின் வலிமை

இதை நேரடியாக  அளவிடுவது கடினமானது. ஆனால், இதை ஓர் உதாரணத்துடன் நம்மால் விளக்க முடியும். நோக்கியா நிறுவனத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 2007-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தபோது, மக்களின் விருப்பம் திடீரென நோக்கியா சிம்பியன் ஓ.எஸ் (Nokia Symbian O/S) போன்கள் பக்கம் திரும்பியது. போன்கள், தொடர்ந்து பேசுவதற்கான ஓர் உபகரணமாக மட்டுமே இருக்கும்; கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்புகள் மட்டுமே தொடர்ந்து தரவுகளுக்கான (data) ஈர்ப்பாக இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் நோக்கியா போன்களின் மாடல்கள் இருந்தன.

ஆனால், அது தவறான அனுமானமாகி விட்டது. அதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே, நுகர்வோர்களின் விருப்பம் மொபைல் போன்களில் டேட்டா பயன்படுத்துவதை நோக்கிப் பெருமளவில் திரும்பிவிட்டதுடன், அங்கே ஆப்பிள் ஐ.ஓ.எஸ் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்டு போன்ற இயக்கமுறைமைகள் (Operating systems) ஆக்கிரமித்துக்கொண்டன. நோக்கியா மாடல் போனின் வணிகமாதிரி, சந்தையில் போட்டிபோடும் அளவுக்கு வலுவில்லாமல் இருந்ததை அந்த நிறுவனம் ஆராயாமல் இருந்ததே ஆச்சர்யம்.   

பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இந்தியாவின் மருந்துத் துறையை எடுத்துக் கொள்வோம். 25 ஆண்டுகளாக இந்திய மருந்துத் துறை நிறுவனங்கள் அறிவார்ந்த சொத்துகளில் (Intellectual property - IP) மிகவும் அரிதாகவே முதலீடு செய்தது. பொது இயல்புகளைக்கொண்ட  காப்புரிமை இல்லாத குறைந்த செலவில் தயாரிக்கும்  மருந்துகளிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தின. குறைந்த விலையில் மருந்து தயாரிக்கும் நாடுகளிடமிருந்து ஏற்பட்ட போட்டி மற்றும் அமெரிக்க வாடிக்கையாளர்களின் தேவை அதிகமானபோது, பெரும்பாலான மருந்து கம்பெனிகள் மதிப்பையும் லாபத்தையும் இழக்கத் தொடங்கின. ஆகவே, வணிக மாதிரியின் வலிமை மட்டுமே நல்ல வளர்ச்சிக்குப் போதுமானதல்ல.

2. சிறந்த மேலாண்மை 
 
நல்ல மேலாண்மையைக்கொண்ட  பாரம்பர்ய நிறுவனங்களின் பங்குகளுக்கு  சந்தைகள் பிரீமிய விலையை அளிக்கத் தயாராக இருக்கின்றன. சிறந்த நிர்வாகத் தகுதி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு காரணமாகத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகள் சிறப்பான பிரீமியத்தைப் பெறுகின்றன. இந்தியா வுக்குள்ளேயேகூட, நீண்ட கால பாரம்பர்யத்தைக் கொண்ட டாடா, பிர்லா, மஹிந்திரா போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற புதிய தொழில் நிறுவனங்களின் பங்குகள், மிகச் சிறந்த மேலாண்மைத் தரம் காரணமாக எப்போதுமே பிரீமியம் விலையில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தக் குழுமங்களெல்லாம் ஒரு வலுவான நிர்வாகத் தரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அப்படிச் செய்தால்தான், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடிய வகையிலான வளர்ச்சி அதிகரிக்கும்.

3. நேர்மையான கார்ப்பரேட் நிர்வாகம்

ஒரு நிறுவனத்தின் கார்ப்பரேட் நிர்வாகம் என்பது நேர்மையானதாக இருக்க வேண்டும். கம்பெனியின் பங்குதாரர்கள், குறிப்பாக  சிறுபான்மைப் பங்குதாரர்களின் நலன்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் செயல்படுகிறதா என்ற அடிப்படையிலேயே, கார்ப்பரேட் நிர்வாகம் அளவிடப்படுகிறது. நிதிநிலை முடிவுகள் போன்ற அறிவிப்புகள், வெளிப்படைத்தன்மை, நிர்வாகக் கொள்கைகள் மற்றும் நிலைத்தன்மை போன்றவைதான் பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன. 

பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

சமீபத்தில், ஒட்டுமொத்த பங்குச் சந்தை சரிவின்போது, பல நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையான சரிவைச் சந்தித்தபோது, கார்ப்பரேட் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய நேர்மையான நிறுவனப் பங்குகள் சரிவடைய வில்லை.

இதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம். ஜீ குழுமத்தில் நடந்த சில பரிவர்த்தனைகள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை பெரும் சரிவைச் சந்தித்தது. அதேபோன்று, மன்பசந்த் பெவரேஜஸ் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் சில ஆட்சேபனைகளைத் தெரிவித்ததுடன், கேள்விக்குரிய சூழ்நிலையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனப் பங்கின் விலை 80 சதவிகிதத்துக்கும் மேல் சரிவடைந்தன.

இன்ஃபிபீம் நிறுவனம், அந்தக் குழுமத்தின் மற்ற நிறுவனங்களுக்கு நிதியைத் திருப்பிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை, ஏறக்குறைய 90% சரிந்தது.
 
ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்யும்போது,  கார்ப்பரேட் நேர்மை மற்றும் நிர்வாகப் பிரச்னைகள் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளன. 

4. மற்றவர்கள் நுழைய முடியாத தடையின் சாதகங்கள்

25 ஆண்டுகளுக்கு முன்னரே, பிசினஸின் எதிர்காலம் போட்டியின் சாதகங்களை (Competitive advantages) உருவாக்குவதில்தான்  இருந்ததாகப் பிரபல அமெரிக்கப் பொருளாதார வல்லுநரும் பிசினஸ் வியூக வகுப்பாளருமான மைக்கேல் போர்ட்டர் (Michael Porter)குறிப்பிட்டி ருந்ததை இங்கே நினைவுகூர வேண்டும். வழக்கமாக, மற்றவர்கள் நுழைய முடியாத (Entry barriers) வணிகமாகத்தான் போட்டியின் சாதகமாக இருக்கும்.

உதாரணமாக, ரிலையன்ஸ் ஜியோ மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டாக்களை வழங்கி, டேட்டா சந்தையில் ஏற்படுத்திய பூகம்பம் காரணமாக இந்திய தொலைத் தொடர்பு துறையில் ஒரு நுழைவுத் தடையை உருவாக்கி வைத்துள்ளது. இந்த பிசினஸுக்காக அந்த நிறுவனம் ஒதுக்கிவைத்திருக்கும் தொகை, அதற்கு மிகப் பெரிய சாதகமாக இருப்பதுடன், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால்கூட அதேபோன்று செயல்பட முடியாத நிலை காணப்படுகிறது. 

பங்குகளில் முதலீடு.... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

முதலீட்டு உலகில் மற்றவர்கள் எளிதில் நுழைய முடியாத தடைகளை அகழிகள் (Moats) என அழைக்கப்படுகின்றன. அதாவது, மற்ற கம்பெனி களின் போட்டிகளிலிருந்து நிறுவனத்தை இது பாதுகாக்கிறது.

5. பிராண்ட் மதிப்பு

பிராண்டுகளையும் அகழியில் ஒரு வகை எனச்  சொல்லலாம். பிராண்டு என்பது பெயர் அல்லது தரம், சேவை மற்றும் சென்றடைவதைப் பிரதிபலிக்கும் வாடிக்கையாளர் தொடர்புடையது.

ஹிந்துஸ்தான் லீவர், நெஸ்லே மற்றும் பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள், தரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளன. உணவுப் பொருள்கள் என வரும்போது, இது மிகவும் முக்கியமானது. இதேபோன்றுதான், ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோட்டக் வங்கி போன்றவை, அதன் சொத்து தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத வளர்ச்சியுடன் கூடிய பிராண்டை உருவாக்கியுள்ளன.

பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தருணத்தில், முதலீட்டாளர்கள் பிராண்ட் மதிப்பைப் பார்த்துத்தான் முதலீட்டு முடிவை எடுக்கிறார்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிடப் பட்டுள்ள கருத்துகள் அமர்சிங்கின் (தலைமை ஆலோசகர் - ஏஞ்சல் புரோக்கிங்) கருத்தாகும். இவை தகவலுக்காக மட்டுமே. 

தமிழில்: பா.முகிலன்