நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

ருமான வரியை மிச்சப்படுத்துவது எப்படி என நிதியாண்டின் ஆரம்பத்திலேயே நாம்  யோசிக்கிறோம். ஆனால், அதைச் செயல்படுத்துவதோ கடைசி நேரமாகத்தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. 

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

பொதுவாக, இந்தியாவில் வருமான வரிச் சேமிப்பு என்பது நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதாவது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டுமே அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.

விவரம் தெரிந்தவர்கள் தேர்வுசெய்யும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஆகட்டும், விவரம் தெரியாதவர்கள் தேர்வு செய்யும் ஆயுள் காப்பீடு பாலிசி ஆகட்டும், வரிச் சேமிப்புக்கான முதலீடு என்பது கடைசி மூன்று மாதங்களில் ஏதோ ஒரு அவசரகதியில் மேற் கொள்ளப்படுவதாகவே இருக்கும். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபியின் (AMFI)  தகவல்படி, நிதியாண்டின் கடைசி காலாண்டில்தான் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் 50 சதவிகிதத்துக்குமேல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இது ஆரோக்கியமான போக்கே அல்ல. காரணம்,  கடைசி  மூன்று மாதங்களில் அதிகமாக முதலீடு செய்தல் அல்லது அதிகமாக வருமான வரிக் கட்டுதல் போன்றவற்றால் மாதச் சம்பளக் காரர்கள் இந்த மாதங்களில் சிறிய செலவுகளைக் கூட சமாளிக்கப் பணமில்லாமல் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். செலவு களைச் சமாளிக்க நகை அடமானக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என ஏதோ ஒரு கடனில்  சிக்கிக்கொள் கிறார்கள்.  இந்தக் கடன்களிலிருந்து  மீள சில மாதங்கள் ஆகின்றன.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க நிதியாண்டின் தொடக்கத்தி லிருந்தே வருமான வரியைத் திட்டமிட்டு, அதற்கான சேமிப்பினை ஆரம்பித்துவிடுவது புத்திசாலித்தனம்.

கடைசி நேரத்தில் வருமான வரியைச் சேமிக்க நினைத்து, ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்போது, அதனால் நமக்கு வரிச் சலுகை கிடைப்பது தவிர, வேறெந்தப் பயனும் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. 

உதாரணமாக,  குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்யவேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அவசரகோலத்தில் எடுத்து, பணம் செலுத்திவிட்டு, பிற்பாடு அதைத் தொடர முடியாத நிலை ஏற்படும்போது, ஏற்கெனவே செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காமலே போய்விடுகிறது. வரிச் சலுகையின் மூலம் பெற்ற பணத்தைவிட, இப்படி நாம் இழக்கும் பணம் அதிகம்.  இப்படித் திட்டமிடாமல் நீங்கள் தேர்வுசெய்யும் வருமான வரி சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்குக் கெடுதலைத் தருமே தவிர, ஒருபோதும் உங்களுக்கு நன்மை செய்யாது. 

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

நடுத்தர வருமானப் பிரிவினர் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சத்தையும் வரிச் சேமிப்புக்குப் பயன்படுத்திவிட வேண்டும் என உறுதியாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதைச் செய்யக்  கடைசி காலாண்டு வரைக்கும் காத்திருப்பது தான் தவறு.  

நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் சரியாகத் திட்டமிட்டு முதலீட்டைச் செய்வதன்மூலம் சரியான திட்டங்களைத் தேர்வுசெய்து வருமான வரியை மிச்சப்படுத்துவதுடன், செல்வத்தையும் பெருக்கிக்கொள்வோம். அதற்கு என்ன செய்ய வேண்டும், வருமான வரிச் சேமிப்புக்கான ஈஸி பிராக்டிகல் டிப்ஸ் என்னென்ன என்று பார்ப்போம்.

வருமான வரியை மிச்சப்படுத்துவதில் 80சி  பிரிவு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. வருமான வரியை மிச்சப்படுத்தச் செய்யும் முதலீடுகள் அனைத்தும் லாக்இன் பீரியட் கொண்டவை. சில முதலீடுகளுக்கு முதலீட்டுப் பெருக்கம், முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கும் வரிச் சலுகை உண்டு. சில முதலீடுகளில் வருமானத்துக்கு வரிக் கட்ட வேண்டியிருக்கும். எனவே, இந்த முதலீடுகளில் எது உங்களுக்குத் தேவை, எது பொருத்தமானது மற்றும் அவசிய மானது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

அதன்பிறகு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இந்த முதலீடுகள்மூலம் கிடைக்கும் வருவாய்.  முதலீடு செய்வதின் முக்கிய நோக்கமே, அதிலிருந்து அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கடைசி நேரத்தில் எந்த வகையிலும் ஆராயாமல் நாம் செய்யும் வரிச் சேமிப்பு முதலீட்டில், பெரிய அளவில் வருமானம் எதுவும் கிடைக்காமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
       
ஆயுள் காப்பீடு   
       
வருமான வரிச் சேமிப்பு என்றாலே பலரும் ஆயுள் காப்பீடு  பாலிசிகள், அதுவும் பணப் பலன் அளிக்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகள் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஏற்கெனவே பல பாலிசிகளை எடுத்திருக்கும் நிலையில், புதிதாக மேலும் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள். இது தவறான நடவடிக்கை.

இதற்குப் பதில் உங்களின் ஆண்டுச் சம்பளத்தைப்போல 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொண்டு, மீதித் தொகையை இதர முதலீடுகளில் போடுவதுதான் சரியான முடிவாக இருக்கும். இதன்மூலம் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

உதாரணமாக, ரூ.5 லட்சத்துக்கு  எண்டோவ் மென்ட் பாலிசி எடுக்கவேண்டுமென்றால், அதற்கு ஆண்டுக்கு சுமாராக ரூ.50,000 பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இதையே 30 வயதுள்ள ஒருவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானை ரூ.5 லட்சத்துக்கு எடுத்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.500  பிரீமியம் கட்டினால் போதும்.   
  
பொதுவாக, ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தைப் போல் 12-15 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும். 30 வயதுள்ள ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.40,000 எனில்,  அவரின் ஆண்டுச் சம்பளம் ரூ.4.8 லட்சம். இதன் 12 மடங்கு ரூ.57.6 லட்சம். இந்தத் தொகைக்கு டேர்ம் இன்ஷுரன்ஸை எடுக்க வேண்டும் எனில், அவருக்கான ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.6,000 மட்டுமே. 

மருத்துவக் காப்பீடு

ஆயுள் காப்பீடு பாலிசியை வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் எடுக்கவேண்டும். ஆனால், மருத்துவக் காப்பீடு பாலிசியைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுப்பது அவசியம். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் பெயரிலும் தனித்தனி பாலிசி எடுப்பதற்குப் பதில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒருசேர கவர் செய்யும் ஃப்ளோட்டர் பாலிசியை எடுப்பது பல வகைகளில் நன்மை பயக்கும். 
                 
இந்த ஃப்ளோட்டர் பாலிசியை பிரீமியம் கட்டும் தகுதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைக்கும்  எடுத்துக்கொள்ளலாம். ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்த பிறகு வரிச் சேமிப்புக்கான இதர முதலீடுகளை மேற்கொள்வது அவசியம்.

அஸெட் அலோகேஷன்

வரிச் சேமிப்பு முதலீடுகள் என்கிறபோதும் அஸெட் அலோகேஷன் முறையைப் பின்பற்றி முதலீடு செய்வது நல்லது. இந்த முறையில் உங்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், தேவை ஆகியவற்றைப் பொறுத்து முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும்.

இளம் வயதினர் இ.எல்.எஸ்.எஸ், என்.பி.எஸ் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) போன்ற பங்குச் சந்தை சார்ந்த வரிச் சேமிப்புத் திட்டங்களில் அதிகத் தொகையை முதலீடு செய்துவரலாம்.     50 வயதைத் தாண்டியவர்கள் இந்த வகை முதலீட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

வரிச் சேமிப்பு முதலீடுகளை ரிஸ்க் குறைந்த, ரிஸ்க் அதிகமுள்ள திட்டங்களில் பிரித்து மேற்கொள்வது நல்லது. அப்படிச் செய்யும்போது நீண்ட காலத்தில் பரவலாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவரின் வரிச் சேமிப்பு முதலீடு, நிலையான வருமானம் தரக்கூடிய பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட இ.எல்.எஸ்.எஸ், என்.பி.எஸ் போன்றவற்றில் பிரித்து மேற்கொள்வது நல்லது.

வரிச் சேமிப்புக்கான முதலீட்டுக் காலம்

அடுத்து கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், வரிச் சேமிப்புக்கான முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பதாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர் ஒருவரின் வயது 55. அவர் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், இப்போது வரிச் சேமிப்புக்காக பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டில் (பி.பி.எஃப்) முதலீட்டை ஆரம்பிக்கக் கூடாது. காரணம், அது 15 ஆண்டுகளுக்கான திட்டமாகும். இதற்குப்பதிலாக, ரிஸ்க் இல்லாத வரிச் சலுகை முதலீடான வாலன்டரி பிராவிடன்ட் ஃபண்டில் (வி.பி.எஃப்) முதலீடு செய்துவரலாம். இதுவே பணியாளரின் வயது 30-40-க்குள் இருந்தால், தாராளமாக பி.பி.எஃப்-ல் முதலீடு செய்துவரலாம்.

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

அதிக லாபம் தரும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்

வரிச் சேமிப்பு முதலீடுகளில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி, அதிக லாபகரமாக இருப்பது இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்தான். இது மற்ற முதலீடுகளைவிட இரண்டு விஷயங்களில் கூடுதல் நன்மை தருவதாக இருக்கிறது. ஒன்று, நீண்ட காலத்தில் அதிக வருமானம் தருவது. இரண்டாவது, மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தகால லாக்இன் பீரியட்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் வழங்கப்படும் டிவிடெண்டுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகைதான் முதலீட்டாளருக்கு வழங்கப்படும். யூனிட்களை விற்றுப் பணமாக்கும்போது மூலதன ஆதாயத்தில் நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. அதற்கு மேற்படும் தொகைக்கு 11.62% வரி கட்டவேண்டிவரும். வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, உங்களின் வருமான வரியை மட்டும் மிச்சப்படுத்தவில்லை; நீண்ட காலத்தில் உங்களுக்குச் செல்வம் சேர்த்தும் தரும்.

வரிச் சேமிப்பு திட்டங்கள்  - 80சி-க்கு வெளியே

என்.பி.எஸ் கூடுதல் வரிச் சலுகை {80CCD1(b)}:
ஓய்வூதியச் சலுகை இல்லாதவர்கள், கூடுதலாக ஓய்வூதியம் தேவைப்படுபவர்கள் என்.பி.எஸ் திட்டத்தில் 80சி பிரிவைத் தாண்டி 80CCD(1)b-யின் கீழ் ரூ.50,000 வரைக்கும் செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை பெறமுடியும். 80சி மூலம் ரூ.1.5 லட்சம், இந்தப் பிரிவின்மூலம் 50,000 ரூபாயாக மொத்தம் ரூ.2 லட்சம் வரைக்கும் ஒருவர் நிதியாண்டில் என்.பி.எஸ் முதலீடு மூலம் வரிச் சலுகை பெறலாம்.

மருத்துவக் காப்பீடு (80D): 60 வயதுக்கு உட்பட்ட வரிதாரர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எடுக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுக்குக் கட்டும் பிரீமியத்தில் ரூ.25,000 வரை வரிச் சலுகை உண்டு. இதில் உடல் பரிசோதனைக்கு அளிக்கப்படும் ரூ.5,000 சேரும். வரிதாரர் அவரின் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்தால், கூடுதலாக ரூ.25,000 என மொத்தம் ரூ.50,000 பீரிமியம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் என்றால், அவர்களுக்கு ரூ.50,000 பிரீமியம் வரைக்கும் வரிச் சலுகை அனுமதிக்கப்படுகிறது. அந்தவகையில், வரிதாரர் அவரின் மூத்த குடிமகனாக இருக்கும் பெற்றோருக்கும் ஹெல்த் பாலிசி எடுத்தால், ரூ.75,000 பீரிமியத்துக்கு வரிச் சலுகை உண்டு. மேலும், மூத்த குடிமக்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவச் செலவு மற்றும் ஹெல்த் பாலிசி பிரீமியம் சேர்த்து நிதியாண்டில் அவர்களுக்கு ரூ.50,000 வரை வரிச் சலுகை உண்டு.  

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

#ஆயுள் காப்பீடு, யூலிப் பாலிசிகள் முதலீடுகள் அல்ல என்பதால் அவை இங்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள் (80 சிசிசி) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள் (80 சிசிடி), திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசல், பிள்ளைகளின் கல்விக் கட்டணம் ஆகியவற்றுக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கும் சேர்த்து நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சத்துக்குதான் வரிச் சலுகை உண்டு.

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

வீட்டுக் கடன் வட்டி {24(b)}: வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டியில் நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கு வரிச் சலுகை  உண்டு.

வீட்டு வாடகைப் படி {10(13A)}:  வசிக்கும் வீட்டுக்குக் கொடுக்கப்படும் வாடகைக்கு வரிச் சலுகை இருக்கிறது.  இதற்கு மொத்தச் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்குமேல் வாடகை தந்திருக்க வேண்டும். வசிக்கும் நகரம், பணியாளர் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப் படியைப் பொறுத்துக் கழிவு இருக்கிறது. வீட்டு வாடகை, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் இருந்தால், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வீட்டு வாடகை ரசீதில் குறிப்பிடுவது கட்டாயம்.

வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை (80GG): சம்பளத்துடன் வீட்டு வாடகைப் படி (HRA) வழங்கவில்லை எனில்,  நிபந்தனைக்கு உட்பட்டு மாதம் அதிகபட்சம் ரூ.5,000 வரை வீட்டு வாடகையை வருமானத்தில் கழித்துக்கொள்ளலாம். 
    
கல்விக் கடன் வட்டி (80E): வருமான வரி கட்டுபவர், தான்  வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியைத் திரும்பக் கட்டுவதில் வரிச் சலுகை இருக்கிறது. நிதியாண்டில் செலுத்தும் வட்டிக்குக் கிடைக்கும் வரிச் சலுகைக்கு வரம்பு இல்லை. வட்டி கட்ட ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் வரைதான் வரிச் சலுகை கிடைக்கும்.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு (80DD): வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள, செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.75,000 (தீவிரப் பாதிப்புக்கு ரூ.1.25 லட்சம்) வரை வருமான வரிச் சலுகை இருக்கிறது.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை (80DDB): எய்ட்ஸ், புற்று நோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய் களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரிச் சலுகை  உண்டு.
 
2019 - 20-ம் நிதியாண்டுக்கான வருமான வரித் திட்டமிடலை இப்போதே செய்யுங்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் எந்தக் கவலையும் இல்லாமல், லாபம் பெறுபவராக நீங்கள் இருப்பீர்கள்!

சி.சரவணன்

2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்!

எட்டு ஆண்டுகளாக வரித் திட்டத்தில் முதலீடு!

செ
ன்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ராமு காசி, வருமான வரியை மிச்சப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகளாக இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறார். அவர் கூறும்போது, “ரிஸ்க்கைக் குறைப்பதற்காக மூன்று இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்துவருகிறேன். இந்த ஃபண்டுகளில் அதன் லாக்இன் பீரியட் மூன்று ஆண்டுகள் முடிந்தபிறகு எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை எடுத்துப் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. ஒட்டுமொத்த சந்தை இறக்கத்தின்போது, இந்த ஃபண்டுகளின் என்.ஏ.வி மிகவும் இறக்கம் காணும். அப்போதெல்லாம் இந்த முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறிவிடலாம் என நினைப்பேன். ஆனால், முதலீட்டு ஆலோசகர் ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும்; காத்திருங்கள் எனச் சொன்னதால் விற்கவில்லை. இப்போது, நான் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள் சராசரியாக ஆண்டுக்கு 15 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்துள்ளன’’ என்றார்.