நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: மீண்டும் மோடி... அடுத்த ஐந்தாண்டுகளில் நிஃப்டி 20000 புள்ளிகள்!

ஷேர்லக்: மீண்டும் மோடி... அடுத்த ஐந்தாண்டுகளில் நிஃப்டி 20000 புள்ளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: மீண்டும் மோடி... அடுத்த ஐந்தாண்டுகளில் நிஃப்டி 20000 புள்ளிகள்!

ஓவியம்: அரஸ்

ம்மிடம் காலையில் போனில் சொன்னபடியே சரியாக மாலை நான்கு மணிக்கு ஷேர்லக் நம் கேபினுக்குள் நுழைந்தார். ஆர்டர் செய்து தயாராக வைத்திருந்த திராட்சை ஜூஸை  அவருக்குத் தந்தோம். அதை வாங்கிப் பருகியவரிடம், “தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிட்டதே’’ என்றோம். ‘‘வந்ததும் வராததுமாக அரசியல் தூண்டில் போடுகிறீரா?’’ என்று நம்மைக் கிண்டலடித்தபடி பதில் சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக். 

ஷேர்லக்: மீண்டும் மோடி... அடுத்த ஐந்தாண்டுகளில் நிஃப்டி 20000 புள்ளிகள்!

“தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்கிற எக்ஸிட் போல் முடிவுகள் வெளியான நாளி லிருந்தே பங்குச் சந்தைகள் களைகட்டிவிட்டன. இத்தனைக்கும் அமெரிக்க - சீன வர்த்தகப் போர் காரணமாகப் பல்வேறு நாடுகளின் சந்தைகள் இறக்கத்தின் போக்கில் இருக்க, நம்முடைய பங்குச் சந்தைகள் மட்டும் மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே இருந்தன. தேர்தல் முடிவு வெளியான அன்றும் சந்தைகள் உயரவே செய்தன.

தேர்தல் முடிவு வரும்முன் சந்தை  ஓரளவுக்கு இறங்கியிருந்ததால், மீண்டும் ஓர் ஏற்றத்தை எல்லோரும் எதிர்பார்த்தனர். எக்ஸிட் போல் செய்தி வரவே, டிரேடர்கள் களத்தில் குதித்து சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சில நாள்களுக்கு வைத்திருந்தனர். இந்த ஏற்றத்தில் நல்ல லாபம் பார்த்தபிறகு, பங்குகளை விற்கத் தொடங்கவே, தேர்தல் முடிவு வெளியான வியாழன் அன்றே சந்தைகள் இறங்கியது. ஆனால், வெள்ளிக்கிழமை சந்தைகள் மீண்டும் கணிசமாக உயர்ந்தன.

அடுத்த சில வாரங்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு அமெரிக்க - சீனப் பிரச்னை காரணமாகச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், மோடியின் தலைமையிலான பா.ஜ.க-வின் ஆட்சிக் காலத்தில் பங்குச் சந்தைகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டதுபோல இந்த முறையும் முன்னேற்றம் காணும் என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள். 2014-ல் மோடி பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டபோது நிஃப்டி 7500 புள்ளிகளாக இருந்தது, தற்போது 12000 புள்ளிகளை எட்டும் அளவுக்கு வளர்ந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யத் தொடங்கிய விஷயங்களை, இந்த ஐந்து ஆண்டுகளில் சரியாகச் செய்துமுடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், இனிவரும் மாதங்களில் பங்குச் சந்தைகள் நல்ல முன்னேற்றம் காணும். அடுத்த ஐந்தாண்டு காலத்தில் நிஃப்டி 20000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகவே வாய்ப்பிருப்பதாகவே அனலிஸ்டுகள் சொல்கிறார்கள்.

இனிவரும் காலத்தில் நமது முதலீட்டில் ஒருபகுதியை பங்குச் சந்தையில் வைத்திருப்பது அவசியத்திலும் அவசியம்’’ என்று நீண்ட விளக்கத்தைத் தந்தவர், மிச்சமிருந்த திராட்சை ஜூஸைக் குடித்துவிட்டு, தொடர்ந்து நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஏர்டெல் நிறுவனத்தின் உரிமைப் பங்கு  வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதே?

“பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.25,000 கோடி அளவுக்கு உரிமைப் பங்கு வெளியிட்டது. பங்கு ஒன்றின் விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, 114 கோடி பங்குகள் வெளியிடப்பட்டன. போட்டி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகியவற்றை எதிர்த்து சந்தையில் தொடர்ந்து தாக்குப் பிடிப்பதற்காகவும் 4ஜி நெட்வொர்க் சேவைகளுக்கான முதலீட்டுக்காகவும் தனது பேலன்ஸ்ஷீட்டில் நிதியிருப்பை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஏர்டெல் இந்தப் பங்கு வெளியீட்டு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்களிடமிருந்து 1.07 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்,   ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்தப் பங்குகளை அதிக அளவில் ஆர்வம் காட்டியுள்ளன.”

பங்கு ‘பைபேக்’ விதிமுறைகளில் செபி மாற்றம் கொண்டுவர முயற்சிசெய்வது ஏன்?  

“மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பங்குளைத் திரும்ப வாங்கிக்கொள்ளும் ‘பைபேக்’ குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, ‘பைபேக்’ விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

நிதி அளவீட்டுக்குப் பதிலாக, ‘பைபேக்’ பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்புதல் அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக செபி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில்   எல் அண்டு டி நிறுவனத்தின் ‘பைபேக்’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க செபி மறுத்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். ஏனெனில், அந்த ‘பைபேக்’க்கு ஒப்புதல் அளித்தால், அது அந்த நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம், அளிக்கப்பட்ட மூலதனம் ஆகிய இரண்டும் இருப்புத் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகரித்துவிடும். இது நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதால், அந்த ‘பைபேக்’க்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது செபி.

எல் அண்டு டி குழுமத்தின் கடன் சுமை அதிகரித்ததற்கு அதன் துணை நிறுவனமான எல் & டி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம்தான் காரணம்.  இதன் காரணமாகத்தான் அதனுடைய கடன் - பங்கு விகிதம் 6:1 என்ற அளவில் அதிகரித்தது. செபியால் நியமிக்கப்பட்டிருக்கும் மூலதனச் சந்தை ஆலோசனைக் குழு, பங்குகளைத் திரும்ப வாங்கும் நிறுவனங்களின் கடன் - பங்கு மூலதன விகிதம் 2:1-ஆக இருக்கலாம். இது வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு இல்லாதபடி புதிய விகிதமாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்.”

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையில் நுழைவதற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதன் பின்னணியைச்  சொல்லுங்கள்.
  

“மியூச்சுவல்  ஃபண்ட் நிறுவனங்கள் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையில் பங்கெடுக்கும் வகையில், புதிய விதிமுறைகளை செபி தற்போது வெளியிட்டுள்ளது. ஆனாலும், அரசின் தலையீடு அடிக்கடி இருக்கக்கூடிய மற்றும் அத்தியாவசிய கமாடிட்டி சட்டத்தின்கீழ் வரும் வேளாண் உற்பத்திப் பொருள்கள் போன்ற முக்கியமான கமாடிட்டிகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்கெடுக்க அனுமதியில்லை. 

ஷேர்லக்: மீண்டும் மோடி... அடுத்த ஐந்தாண்டுகளில் நிஃப்டி 20000 புள்ளிகள்!

இந்த விதிமுறைகள் கடந்த 21-ம் தேதி முதல் நடைமுறைக்கு  வந்துள்ளன. தங்கத்தைப் பொறுத்தவரை, கோல்டு டெரிவேட்டிவ்களில் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் பங்கெடுக்க முடியும். மற்ற கமாடிட்டி டெரிவேட்டிகளைப் பொறுத்த வரை, பங்கு சார்ந்த, கடன் சார்ந்த மற்றும் தங்கம் ஆகியவற்றின் கலவையான திட்டங்களில் முதலீடு செய்ய லாம் என்றும் செபி தெரிவித்துள் ளது. மேலும், டெலிவரிக்கு எடுத்த பொருள்களையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 30 நாள்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என செபி நிபந்தனை விதித்துள்ளது.’’ 
 
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  உருவெடுத்திருக் கிறதே! 

“முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.39,588 கோடியை நிகர லாபமாக ஈட்டி, இந்தியாவின் மிக அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பாலிமர் உற்பத்தி தொழில் மூலம் ஈட்டும் லாபத்தைக் காட்டிலும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.”

பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் தங்களது முதலீடுகளைக் குறைக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியிருப்பது வருத்தம் தரும் நிகழ்வுதானே! 

“இது தொடர்பான ஆய்வில் பங்கெடுத்த இந்திய நிறுவனங்களில் 81% நிறுவனங்கள், அடுத்த இரு ஆண்டுகளில் தங்களது முதலீடுகளைக் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன. அதே சமயம், 67% நிறுவனங்கள், அடுத்த 12 மாதங்களில் மிகப் பெரிய அளவில் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கைகள் நடக்கலாம் என எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்துள்ளன.

இந்திய அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் வெற்றிக்கான காரணங்கள், சவால்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அளவீடுகளாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.’’
 
பங்குச் சந்தை  மதிப்பில் டாடா குழுமத்தைப் பின்னுக்குத் தள்ளி, ஹெச்.டி.எஃப்.சி குழுமம் முன்னேறி யிருக்கிறதே?

“பங்குச் சந்தை மதிப்பின் (மார்க்கெட் கேப்பிட்டலை சேஷன்) அடிப்படையில்  இந்தியாவின் மிகுந்த மதிப்பு மிக்க குழுமமாக ஹெச்.டி.எஃப்.சி உயர்ந்துள்ளது. இந்தக் குழுமம், வங்கி, வீட்டு வசதிக் கடன், காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

இந்தக் குழுமத்தைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் மற்றும் க்ருஹ் (Gruh) ஃபைனான்ஸ் ஆகிய நிதி சார்ந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்குச் சந்தை மதிப்பில் ரூ.11.66 லட்சம் கோடிகளாகும்.

மென்பொருள், உப்பு, உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த வணிகத்தில் டாடா குழும நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றின்  ஒட்டுமொத்த பங்குச் சந்தை மதிப்பு  ரூ.11.64 லட்சம் கோடியாக உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தைவிட ரூ.2000 கோடி குறைவாகும்.  

இந்தியாவின் பழைமையான தொழில் துறை குழுமத்தை, நிதி சார்ந்த குழுமம் முந்துவது முதல் முறையல்ல. கடந்த ஆறு மாத காலமாக இரண்டு குழுமங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான சந்தை மதிப்பிலேயே தொடர்கின்றன.

18 மாதங்களுக்குமுன்பு, இந்தக் குழுமங்களுக்கு இடையே சந்தை மதிப்பில் அதிக வித்தியாசம் இருந்தது. 2018, ஜனவரியில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.9.6 லட்சம் கோடியாகவும்  ஹெச்.டி.எஃப்.சி குழுமத்தைவிட 15% அதிகமாகவும் இருந்தது. நிதிச்சேவையில் முதலீட்டாளர்கள்மீது கவனம் செலுத்திச் செயல்பட்டதால், தற்போது டாடா குழுமத்தைவிட முன்னிலை பெற முடிந்துள்ளது.”

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்கின் தரக்குறியீடு குறைக்கப்பட்டுள்ளதே?

“அதிக வாராக் கடன் ஒதுக்கீடு, குறைந்துவரும் வருவாய்,  எதிர்பாராத புதிய செலவினங்களில்   ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில், இந்த வங்கியின் நீண்டகால  செயல்பாட்டுக்கான தரக்குறியீட்டை AA+ லிருந்து AAஆக, தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா குறைத்துள்ளது.  வங்கிக் கிளைகள் விரிவாக்கத்தால், செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம் உயர்ந்து லாபம் குறையக்கக்கூடும் என்றும் இக்ரா ரேட்டிங் நிறுவனம் கூறியுள்ளது.

மூன்று பெரிய வாராக் கடன்கள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தமான சூழலைச் சரிக் கட்டுவதற்காக ரூ.420 கோடியை இந்த வங்கி ஒதுக்கீடு செய்தது. இதன் காரணமாக வங்கியின் நிதிநிலை மோசமடைந்துள்ளது. மேலும், கிளைகள் விரிவாக்கத்துக்கான முதலீடு, வாராக் கடனுக்கான ஒதுக்கீடு போன்றவற்றால் நடப்பு 2019-20-ம் நிதியாண்டிலும் இதன் லாபம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த நிறுவனத்தின் தரக்குறியீடு குறைக்கப் பட்டிருக்கிறது.”

நான்காம் காலாண்டில் பங்கு நிறுவனங்களின் லாபம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என ஆய்வாளர்கள் சொல்கிறார்களே!

‘‘பல்வேறு நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் வேகமாக வெளியாகி வருகின்றன. நான்காம் காலாண்டில் வெளியான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை எடுத்து ஆராய்ந்த ஆய்வாளர்கள்,  இந்த நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10% குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  இந்த நிறுவனங்களின் விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத் துடன் ஒப்பிட்டால் 9% குறைந்திருக்கிறது. 

ஆனால், நிதி மற்றும் எரிசக்தித் துறை சார்ந்த நிறுவனங்களையும் சேர்த்துப் பார்த்தால், கடந்த ஆண்டில் இதே காலாண்டினைவிட 26% அதிகமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. எஃப்.எம்.சி.ஜி பங்குகள் நல்ல லாபம் தந்துள்ளன.’’
 
பங்கு மற்றும் கடன் சந்தையிலிருந்து அந்நிய முதலீடு வெளியேறியிருப்பதன் காரணம் என்ன?


“நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்கு மற்றும் கடன் சந்தையிலிருந்து 5,264 கோடி ரூபாயை விலக்கினர். ஆனால், பிப்ரவரியில் 1,17,900 கோடி ரூபாயை முதலீடு செய்தனர். மார்ச் மாதத்தில் அந்நிய முதலீடு 38,211 கோடி ரூபாயாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 17,219 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு மே மாதத்தில் 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளிலிருந்து 4,786 கோடி ரூபாயை விலக்கியுள்ளனர். இதே காலத்தில் கடன் சந்தையிலிருந்து வெளியேறிய அந்நிய முதலீடு 1,613 கோடி ரூபாயாக உள்ளது. ஆக, இந்திய மூலதனச் சந்தையிலிருந்து ஒட்டுமொத்த மாக 6,399 கோடி ரூபாய் வெளியேறியிருக்கிறது.”

பங்கு வெளியீட்டில் களமிறங்க என்.சி.டி.இ.எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதே?

“விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்டும் நோக்கத்துடன் பங்கு வெளியீட்டில் களமிறங்க நேஷனல் கமாடிட்டி அண்டு டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் (என்.சி.டி.இ.எக்ஸ்) திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.400-500 கோடி வரையிலான நிதியைத் திரட்ட உத்தேசித்திருக்கிறது.

தற்போதைய நிலையில், என்.சி.டி.இ.எக்ஸ் நிறுவனத்தில் என்.எஸ்.இ-தான் மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. அதாவது, அதன் பங்கு மூலதனம் மட்டுமே 15 சதவிகிதமாக இருக்கிறது. அடுத்து, எல்.ஐ.சி நிறுவனம் 11.10 சதவிகித  பங்குகளை வைத்திருக்கிறது. நபார்டு வங்கிக்கு 11.10 சதவிகிதமும், இஃப்கோவிற்கு 10 சதவிகித பங்குகளும் இருக்கிறது.

ஓமன் இந்தியா ஜாயின்ட் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்டுக்கு 10 சதவிகிதப் பங்குகளும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 7.29 சதவிகிதப் பங்குகளும் இருக்கின்றன. கனரா வங்கியும் ஐ.டி.எஃப்.சி பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டும் முறையே 6% மற்றும் 5% பங்கு மூலதனங்களைக் கொண்டுள்ளன.

இந்தப் பங்கு வெளியீட்டின்மூலம் இந்த நிறுவனங்களெல்லாம் நன்மை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.”

இமாமி சிமென்ட் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு குறித்து சொல்லுங்களேன்...


“இமாமி சிமென்ட் நிறுவனம், தனது விரிவாக்கப் பணிகளுக்காகத் தேவையான பகுதி நிதியைத் திரட்டுவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. சிமென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனம் மூன்று தொழிற்சாலைகளை வைத்திருக்கிறது. மேலும், ஒரு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலையும் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 93 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெளியீட்டில் 500 கோடி ரூபாய் அளவுக்கு புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், ஏறக்குறைய இதே மதிப்பிற்கு தற்போதைய நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர் களின் பங்குகளும் வெளியிடப்படவுள்ளன. இதன்மூலம் திரட்டும் நிதி, கடன்களை திரும்பச் செலுத்துவதற்காகவும் இதர பொது நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த உள்ளதாக இமாமி சிமென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ், ஆக்ஸிஸ் கேப்பிட்டல், சி.எல்.எஸ்.ஏ இந்தியா, எடில்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், நோமுரா ஃபைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இமாமி சிமென்ட் பங்கு வெளியீட்டை நிர்வகிக்கின்றன” என்றபடி கிளம்பத் தயாரானவரிடம் ஓர் அரசியல் கேள்வி கேட்டோம்.

‘‘அடுத்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதானா?’’

‘‘அருண் ஜெட்லிக்கு தரத்தான் ஆசை. ஆனால், அந்தப் பணியைச் சரியாகச் செய்யத் தேவையான அளவுக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.  எனவே, ப்யூஷ் கோயலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள் என் டெல்லி நண்பர்கள்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஷேர்லக்

வங்கிக் கணக்கில் பணம் வைத்துக்கொள்ளுங்கள்!

பி
ரதமர் மோடி தொடங்கிவைத்த சிறப்பான இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY). எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும் இல்லாதவர்கள் இந்த இரு பாலிசிகளுக்கான பிரீமியத்தைக் கட்டுவது அவசியம். இந்த மாதத்தின் இறுதியில் இந்தத் திட்டங்களுக்கான பிரீமியம் கட்ட வேண்டும். இதற்குத் தேவையான பணத்தை அனைவரும் தங்கள் வங்கிக் கணக்கில் மறக்காமல் வைத்திருப்பது அவசியம்!