Published:Updated:

நிதிப் பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்!

Financial Protection
பிரீமியம் ஸ்டோரி
Financial Protection

முதலீட்டுக்கு முன் கவனியுங்கள்!

நிதிப் பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்!

முதலீட்டுக்கு முன் கவனியுங்கள்!

Published:Updated:
Financial Protection
பிரீமியம் ஸ்டோரி
Financial Protection

பொதுவாக நாம் தினசரி சந்திக்கும் பிரச்னை ‘ரிஸ்க்’. காலையில் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, அலுவலகம் போய் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் நாம் எடுக்கும் ரிஸ்க்குகள் எத்தனையோ இருக்கின்றன. அதனால்தான் `எல்லா இடங்களிலும் ரிஸ்க் வியாபித்திருக்கிறது’ (Risk pertains everywhere) என்கிறோம்.

நிதிப் பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்!

கடந்த 2018-ம் வருடம் நம் நாட்டில் வாகன விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம். இவர்களில் பலரது வயது 15-35 வயது வரை. இந்தியாவில் சாலை விபத்துகளால் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் இறக்க நேரிடுகிறது. 2018-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 1,000 நபர்களில் ஏழு பேர் பல்வேறு காரணங்களால் இறக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, நம் நாட்டில் 28% பேர் இதயநோயினால் இறக்கின்றனர். பக்கவாதத்தால் (Stroke) சுமார் 7% பேர் உயிரிழக்க நேரிடுகிறது. புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல்நோய் மற்றும் இதயநோயால் இறக்க நேரிடுபவர்களின் எண்ணிக்கை கடந்த 28 வருடங்களில் இரு மடங்காகியிருக்கிறது.

நிதிப் பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்!

பிரச்னைகளை எதிர்கொள்ள சிலருக்கு தைரியம் இருக்கும்; சிலருக்கு பண பலம் இருக்கும். ஆனால் எல்லோராலும், எல்லா சமயங்களிலும் ரிஸ்க்கை எளிதாகக் கையாள முடியாது. சில நேரங்களில் பண விரயம் ஏற்படலாம். பல சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உண்டு. இது போன்றவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்காமல், ‘நான் பணத்தைச் சேமிக்கிறேன், முதலீடு செய்கிறேன்’ என்று கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் போய்விடக் கூடாது.

சேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investment) ஆகிய இரு விஷயங்களுக்கு முன்னர் நாம் செய்ய வேண்டியது நிதிப் பாதுகாப்பு (Financial Protection). நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் கட்டாயம் செய்தாக வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே...

முடிந்த அளவு கடனைக் குறைத்து, கடனில்லா வாழ்க்கையை அடையும்போது பின்னாளில் நிதிச் சுதந்திரத்தை பெறுவது எளிதாகும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. தேவையான அளவுக்கு டேர்ம் பாலிசியையும் விபத்துக் காப்பீட்டையும் பெறுங்கள்!

இன்றைய காலத்தில் டேர்ம் பாலிசி (Term Insurance) எனப்படும் காப்பீட்டை ஒருவர் வைத்திருக்க வேண்டியது அவசியம். காப்பீடு என்றவுடன் வெறும் இரண்டு லட்ச ரூபாய், ஐந்து லட்ச ரூபாய் என்ற அளவில் பாலிசிகளைப் பெறுவதில் பலனில்லை. காப்பீடு என்பது குடும்பத்திலுள்ள வருமானம் பெறுபவர் ஒருவரின் பெயரில் எடுக்கப்பட வேண்டியது. அதுவும் அவரை நம்பியிருக்கும் குடும்ப நபர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, எடுக்கப்பட வேண்டிய ஒன்று.

நிதிப் பாதுகாப்பு
நிதிப் பாதுகாப்பு

உதாரணமாக, ராம் என்ற குடும்பத் தலைவரின் மாத வருமானம் ரூ.50,000 (ஆண்டுக்கு ரூ.6 லட்சம்). மாத வருமானத்தில் தன் தனிப்பட்ட செலவுக்காக 5,000 ரூபாயைச் செலவிடுகிறார். மீதமுள்ள 45,000 ரூபாயை தனது குடும்பத்துக்காக ஒதுக்குகிறார். ராமுவின் வருமானத்தை நம்பித்தான் அவர் குடும்பம் இருக்கிறது.

இந்த நிலையில் ராமு காப்பீடு எடுக்கச் செல்லும்போது, அவருக்கான சரியான காப்பீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். இதற்காக HLV என்ற கணக்கீடு உள்ளது. இந்தக் கணக்கீட்டுக்கான ஃபார்முலா Human Life Value = Annual Income - Personal Expenses / Bank Interest Rate %. இந்தக் கணக்கீட்டின்படி, ராம் எடுக்க வேண்டிய காப்பீட்டுத் தொகை ரூ.6 லட்சம் - ரூ.60,000 / 7% = 77,14,285 ரூபாய். அதாவது, ராம் எடுக்க வேண்டிய காப்பீட்டுத் தொகை அவரின் ஆண்டு வருவாயைப்போல 12 மடங்கு உள்ளது. பொதுவாக. டேர்ம் பாலிசி எடுப்பவர்கள் 10 - 15 மடங்கு அளவில் காப்பீடுத் தொகையை ஏற்படுத்துவது நல்லது.

விபத்துக் காப்பீட்டுக்கான (Accident Insurance) தொகையும், ஆண்டு வருமானத்தைப்போல 5 - 10 மடங்கு இருப்பது அவசியம். டேர்ம் பாலிசி மற்றும் விபத்துக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை மற்ற திட்டங்களைவிட மிகக் குறைவே.

2. மருத்துவக் காப்பீடு பெறுவது அவசியம்

தனிநபர் மட்டுமல்லாமல், குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டைப் பெறுவது இன்றைய காலத்தில் மிக அவசியம். எதிர்பாராத நிகழ்வால் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைபாடு அல்லது விபத்து போன்றவற்றுக்கான செலவுகள் ஏற்படும்போது, மருத்துவக் காப்பீடு பெரிதும் உதவும். இளம் தலைமுறைக் குடும்பம், மூத்த குடிமக்கள், சர்க்கரைநோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சை எனப் பல திட்டங்கள் மருத்துவ காப்பீட்டின் கீழ் வழங்கப்பட்டுவருகின்றன. இன்று ஒரு கோடி ரூபாய்க்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் வந்துவிட்டன. எனவே, அவற்றின் பயனை அறிந்து, அவற்றைப் பெறுவது நல்லது.

சேமிப்பு
சேமிப்பு

3. அவசரகால நிதியை உருவாக்குங்கள்!

குடும்ப நிதி நலனையும், உடல்நலனையும் பாதுகாக்க மேலே சொன்ன இரண்டு விஷயங்கள் உதவும். அதே நேரத்தில் குறுகிய காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க அவசரகால நிதித் திட்டமிடல் உதவும். வேலையிழப்பு, உடல்நலக் கோளாறு, புதிய வேலை அல்லது தொழிலுக்கு மாறுதல் என எதிர்பாராத சூழ்நிலையில் நமக்குத் தொடர்ச்சியான வருமானம் கிடைப்பது சிறிது காலம் தடைப்படலாம். அது போன்ற சூழலில் நாம் சேர்த்து வைத்திருக்கும் அவசரகால நிதி உதவும்.

பொதுவாக, அவசரகால நிதி என்பது, நமது மாத வருமானத்தைப்போல, ஆறு முதல் 12 மடங்காக இருந்தால் நல்லது. ஏனென்றால், நம் பிரச்னை குறுகியகாலமாக இருந்தால் இது போதுமானது. வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுபவர்கள், தங்கள் மாத வருவாயைப்போல 24 - 36 மடங்குக்கு இந்த நிதியை வைத்திருக்க வேண்டும். தொழிலில் தோல்வி அடைந்தாலும், அதிலிருந்து மீண்டுவரும் வரை அவசரகால நிதி பயன்படும். அவசரகால நிதிக்கான தொகையை ஒரு புதிய வங்கி சேமிப்புக் கணக்கை ஏற்படுத்தித் தொடங்குங்கள். அந்தத் தொகை அவசரகாலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

4. ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் முக்கியம்!

வளர்ந்துவரும் மருத்துவத்துறையால் தனிநபரின் ஆயுள்காலம் அதிகரித்துவருகிறது. எனவே, நமது ஓய்வுக்காலத்துக்கான கார்பஸ் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை முன்னரே திட்டமிட வேண்டும். ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் மேற்படிப்பைவிட, பெற்றோரின் ஓய்வுக்காலத் திட்டமிடல்அவசியமானது. குழந்தைக்கு மேற்படிப்புகான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அதற்காக உழைக்கும் வயது இருக்கிறது. எனவே, பெற்றோருக்கான ஓய்வுக்காலத்தில் யாரையும் நம்பி இல்லாமல், சுய நிதியை உருவாக்குதல் அவசியம்.

Savings and 
Investment
Savings and Investment

ஓய்வுக்காலத்துக்கான தொகையைச் வேலைக்குச் சேர்ந்தவுடன் அல்லது திருமணம் நடைபெற்ற நிலையில், அதற்கான தொகையைச் சிறுகச் சிறுக முதலீடு செய்யத் தொடங்குவது அவசியம். இதற்கு எஸ்.ஐ.பி முறை சிறந்தது. சேமிக்கும் தொகையின் அளவை ஒவ்வோர் ஆண்டும் சற்று அதிகரிப்பது நல்லது.

5. முதலீடு செய்வதைவிடக் கடனைக் குறைப்பது அவசியம்!

பொதுவாக, கடன் அதிகமாக இருக்கும் நிலையில், முதலீடு செய்ய மனம் வராது. அதே நேரத்தில், கடன் அதிகமாக இருக்கும்போது முதலீட்டின் பலனும் பெரிதாக இருக்காது. முதலில் கடனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். சில முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சாமர்த்தியமாகக் கடன் தவணையை விரைவாகக் கட்டி முடிக்கலாம். அது போன்ற முயற்சியைக் கற்றுகொள்வது நன்று. முடிந்த அளவு கடனைக் குறைத்து, கடனில்லா வாழ்க்கையை அடையும்போது பின்னாளில் நிதிச் சுதந்திரத்தை பெறுவது எளிதாகும்.

இந்த ஐந்து விஷயங்களை ஒருவர் நடைமுறைப்படுத்திவிட்டு, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை பற்றி யோசிக்கலாம்!