Published:Updated:

கட்டாயம் கடைப்பிடிக்க 8 நிதி அம்சங்கள்!

உங்களை வளமாக்கும் யோசனைகள்!

பிரீமியம் ஸ்டோரி
காலம் சாதகமாக இருந்தபோதெல்லாம் நிதியியல் சார்ந்த அனுபவமிக்கவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் கடைப்பிடிக்கச் சொன்ன நிதி சார்ந்த பல விஷயங்களை `பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று காலம் தாழ்த்தியவர்கள் பலர் உண்டு.

ஆனால் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உரிய நேரத்தில், சரியானவற்றில் செய்யத் தவறியது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த ஊரடங்கு நாள்கள் நமக்கு மறக்க முடியாதபடி எடுத்துச் சொல்லிவிட்டன. எனவே, எப்போதும் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை நிதி நடவடிக்கைகளை மீண்டும் ஒரு முறை மனதில் ஏற்றிக்கொள்வோம்.

கட்டாயம் கடைப்பிடிக்க 8 நிதி அம்சங்கள்!

1. அவசரகால நிதி

இது ஏன் அவசியம் என்பதை இந்த ஊரடங்கு காலம் நன்கு உணர்த்தியிருக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அவசரகால நிதிக்காக மாதா மாதம் ஒரு தொகையை ஒதுக்கிவைக்கக் கற்றுத்தந்திருக்கிறது. எனவே, உங்கள் குடும்பச் செலவுக்கு மாதம் எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என்பதை முதலில் கணக்கெழுதிக்கொள்ளுங்கள். வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகைச் சாமான்கள், குழந்தைகளுக்கான தேவைகள், செல்போன் ரீசார்ஜ்கள், வேலை தொடர்பான பயணச் செலவுகள் போன்ற முக்கியச் செலவினங்கள் இதில் அடங்கும், இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து இறுதியில் கிடைக்கும் உங்கள் மாதச் செலவுகளின் சராசரியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்படியான சுமார் பத்து மடங்குத் தொகையை அவசரகால நிதியாகச் சேர்ப்பதே உங்களின் முதல் நடவடிக்கையாக, இலக்காக இருக்கட்டும். சேமிப்புவழியில் இந்தத் தொகையைச் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.

2. சேமிப்பு முக்கியம்; முதலீடு அதைவிட முக்கியம்!

உங்கள் எதிர்காலச் செலவுகளுக்கான பணத்தை இப்போதே சேர்க்கத் தொடங்குகள். சேமிப்பின் மூலமும் நீங்கள் பணம் சேர்க்கலாம்; முதலீட்டின் மூலமும் பணம் சேர்க்கலாம். `சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் என்ன வித்தியாசம்’ என்று கேட்கிறீர்களா... சேமிப்பு என்பது அசலுக்குப் பாதகம் தராதது. ஆனால், குறைவான லாபத்தைத் தருவது. இதற்கு உதாரணம், வங்கி எஃப்.டி., கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள். ஆனால், முதலீடு என்பது குறுகியகாலத்தில் அசலுக்குக் கொஞ்சம் பாதகத்தை ஏற்படுத்தினாலும் நீண்டகாலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடியது. உதாரணமாக, பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள். உங்கள் தேவைக்கான பணம் எத்தனை ஆண்டுகள் கழித்துத் தேவை என்பதைப் பொறுத்து நீங்கள் உங்கள் முதலீட்டு வழியைத் தேர்வு செய்யலாம்.

3. சொந்த வீடு அவசியம்!

வீட்டு வாடகை என்பது இன்றைய குடும்பங்களின் கடினமான மாதச் செலவாக உருவெடுத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஒருவரின் மாத வருமானத்தின் 25% தொகை, அவரது வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. உணவுக்காகச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ வீட்டு வாடகை தருவதற்காகவே சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.

எனவே, `குடும்பத்துடன் வசிப்பதற்கு ஒரு சொந்த வீடு அவசியம் வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதியாக இருங்கள். அதை அடைவதற்கான வழிகளில் உங்கள் கவனம் இருக்கட்டும்.

அப்படி நீங்கள் வாங்க நினைக்கும் வீட்டின் மதிப்பு, உங்கள் வருடாந்தர சம்பளத்தைப்போல ஐந்து அல்லது ஆறு மடங்காக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

4. காப்பீடு

இதுவரை இல்லையென்றாலும் இனியாவது மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு (டேர்ம் பிளான்) எடுப்பதில் அக்கறை காட்டுங்கள். இப்போது நாம் சந்தித்திருக்கும் ஊரடங்கு போன்ற எதிர்பாராத ஆபத்துக் காலங்களில் இந்தக் காப்பீடுகள் பெற்றுத் தரும் பாதுகாப்பு மிக அதிகம். வீட்டில் உள்ளவர்கள் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டால் மருத்துவக் காப்பீடுகள் போலச் சமயத்தில் உதவுவது வேறெதுவும் இருக்க முடியாது.

முதலீடு
முதலீடு

ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று அதிக தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாவிட்டாலும், ரூ.2 லட்சத்துக்காவது காப்பீடு எடுத்து குறைந்தபட்சப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆயுள் காப்பீடு என்கிறபோது ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

முதலீடு
முதலீடு

5. டிஜிட்டல்வழி பணப் பரிமாற்றம்

மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள முயலுங்கள். உங்களின் வங்கி வழிச் சேவைகளை வீட்டிலிருந்தே பெறவும், பயன்படுத்தவும் தெரிந்துகொள்ளுங்கள். இவற்றை அறிந்து கொள்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பழக்கமான அதிகாரிகளிடமோ, உங்களின் நம்பிக்கையான நண்பர்களிடமோ அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும் விளக்கங்கள் பெற முடியும். முதலில் எல்லாமே புரியாததுபோலத்தான் இருக்கும். ஒரு முறைக்கு இரு முறை தொடர்ந்து முயலுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. எல்லாவற்றையும் கடனில் வாங்காதீர்கள்!

கடன் வழங்கும் நிறுவனங்கள், சலுகையுடன் கடன் தருகின்றன என்பதற்காக எந்த ஆடம்பரப் பொருளையும் வாங்கும் எண்ணத்துக்கு வராதீர்கள். வேலை பார்க்கும் நிறுவனம் தரும் சம்பளத்தை மனதில்கொண்டு, எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் இ.எம்.ஐ-யில் வாங்கிக் குவிக்காதீர்கள்.

முதலீடு
முதலீடு

7. சொந்த வீடு... முன்னுரிமை கொடுங்கள்!

இருக்கும் வேலையின் நிலைத்தன்மையையும் எண்ணிப் பாருங்கள். சொந்த வீடு வாங்குவதற்காக அல்லது கட்டுவதற்காக கடன் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். மற்றபடி வேறு எந்தவிதமான கடனுக்கும் ஆட்படுவதற்கு முன்பு ஒன்றுக்குப் பல முறை யோசித்து முடிவெடுங்கள்.

வீடு வாங்குவதற்குப் பெறும் வங்கிக் கடனை குறைந்த ஆண்டுகளில் (5 முதல் 10 ஆண்டுகள்) திருப்பிச் செலுத்தும் வசதியைத் தேர்வு செய்யுங்கள். இதனால் திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைத் தொகை அதிகமாக இருந்தாலும், வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். உங்கள் மாத வருமானத்தில் இ.எம்.ஐ கட்டுவதற்கான தொகை 40 சதவிகிதத்துக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

8. எளிதில் பணமாக்கும் முதலீடுகள் அவசியம்..!

உங்கள் முதலீடு மனை, தங்கம், தொழில், முதிர்வுத் தேதி வரை காத்திருக்கும் வரையான முதலீடு எனப் பல வழிகளில் செய்யப்படுவது நல்லது.

முதலீட்டைப் பல வகைகளில் பரவலாக்கம் செய்வதில்தான் ஒரு முதலீட்டாளரின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனாலும், உங்கள் முதலீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்தையாவது உடனே ரொக்கமாக மாற்றக்கூடிய வகையைச் சார்ந்த முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். (உதாரணம், வங்கிச் சேமிப்புக் கணக்கு, எஃப்.டி., மியூச்சுவல் ஃபண்ட் லிக்விட் ஃபண்டுகள் போன்றவை).

இந்த எட்டு விஷயங்களையும் மனதில் நிறுத்திக்கொண்டால் மட்டும் போதாது. இவற்றை நம் வாழ்க்கையிலும் உடனடியாகப் பின்பற்றத் தொடங்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு