பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

விழிப்புணர்வு உத்தி... அனைத்துக்கும் முன் ஆயுள் காப்பீடு!

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நிர்வகிக்கப்படும் தொகை கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்ததற்குக் காரணம், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி (AMFI) மேற்கொண்ட புதுமையான பிரசாரம்தான். கடந்த 2017, மார்ச் மாதம் முதல் ‘மியூச்சுவல் ஃபண்ட் சரியானது’ (Mutual Funds Sahi Hai) என்கிற விளம்பரத்தின் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கிலிருப்பவர் வரை அனைவரிடமும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஆம்ஃபி.

வி.மாணிக்கம்
வி.மாணிக்கம்

இது போன்ற விழிப்புணர்வுப் பிரசாரம் ஒன்றை மேற்கொள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் திட்டமிட்டிருக்கிறது. ‘முதலில், ஆயுள் காப்பீடு’ (Sabse Pehle Life Insurance) என்ற ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை இந்தியா முழுக்க மேற்கொள்ளவிருக்கிறது. இந்தப் பிரசாரத்தின் மூலம் ஆயுள் காப்பீடுக்கும், காப்பீடு மற்றும் முதலீடு கலந்த யூலிப் பாலிசிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த விழிப்புணர்வுப் பிரசாரம்?

`நம் நாட்டில் கடந்த 2014-15-ம் ஆண்டில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தவர்களின் சதவிகிதம், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 2.7 சதவிகிதமாக இருந்தது. இது 2017-18-ம் ஆண்டில் 3.69 சதவிகிதமாகத்தான் அதிகரித்திருக்கிறது. இதை உலக அளவில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருப்பவர்களுடன் ஒப்பிட்டால், மிகவும் குறைவு’ என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் ஆரம்பித்திருக்கும் ஆயுள் காப்பீடு விழிப்புணர்வுப் பிரசாரம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சிலின் செயலாளர் வி.மாணிக்கம், “இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக ஊடகம் என அனைத்து வழிகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் மொழிகளில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், `எல்லாவற்றுக்கும் முன்னதாக ஆயுள் காப்பீட்டை எடுக்க வேண்டும்’ என்ற விஷயம் அனைவருக்கும் சென்று சேரும்” என்றார்.

விழிப்புணர்வு உத்தி... அனைத்துக்கும் முன் ஆயுள் காப்பீடு!

ஆயுள் காப்பீடு பாலிசிகளில் பல வகைகள் உள்ளன. காப்பீடும் முதலீடும் கலந்த பல திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் பிரீமியம் மிக அதிகம். முழுக்க முழுக்க ஆயுள் காப்பீடு அளிக்கும் டேர்ம் பிளானுக்கு மட்டும்தான் பீரிமியம் குறைவு. உதாரணமாக, 30 வயதுள்ள ஒருவர் 50 லட்ச ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியம் சுமார் 5,000 ரூபாய்தான். இதுவே, எண்டோவ்மென்ட் பிளானில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் பீரிமியம் செலுத்தினால் மட்டுமே ரூ.50 லட்சத்துக்கு கவரேஜ் கிடைக்கும். இந்தச் சின்ன விஷயம் தெரியாமல், பலரும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுத்து, குடும்பத்துக்குத் தேவையான அளவு பாதுகாப்பை உருவாக்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆயுள் காப்பீட்டை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்படும் டேர்ம் பிளான் எடுப்பதுதான் சரி. மீதமுள்ள தொகையை பி.பி.எஃப்., ஆர்.டி., மியூச்சுவல் ஃபண்ட் என எதில் முதலீடு செய்தாலும் எண்டோவ்மென்ட் பாலிசியின் இறுதியில் கிடைக்கும் தொகையைவிட அதிகமாகவே கிடைக்கும். எண்டோமென்ட் பாலிசியின் முதிர்வில் வருமானம் என்று பார்த்தால் சுமார் 5 சதவிகிதமாகத்தான் இருக்கிறது. ஆயுள் காப்பீட்டை அதன் மூலம் கிடைக்கும் வருமான வரிச் சலுகைக்காக மட்டும் எடுக்காமல், குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை மனதில்கொண்டு எடுக்க வேண்டியது அவசியம்.

`மியூச்சுவல் ஃபண்ட் சரியானது’ என்ற வாசகத்தை இந்தியாவில் இயங்கும் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அவற்றின் விளம்பரங்கள், கையேடுகளில் வெளியிட்டன. அதேபோல, இந்தியாவில் உள்ள 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்களும், ‘அனைத்துக்கும் முன் ஆயுள் காப்பீடு’ என்கிற பிரசார வாசகத்தை முன்னிறுத்த வேண்டும். அப்போதுதான் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையும்!