Published:Updated:

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதிர்காலத்தைப்பத்தின பயத்தைப் போக்கிடுச்சு!”

உதாரணமாய் விளங்கும் புதுச்சேரி பெண்...

பிரீமியம் ஸ்டோரி

INVESTMENT

“வாழ்க்கையில நிறைய போராட்டங்களைச் சந்திச்சிட்டேன். நான் கடந்து வந்த ஒவ்வொரு கஷ்டமும் எனக்கு சேமிப்போட முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுத்துட்டே இருந்துச்சு. லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறவங்கதான் சேமிக்கணும்னு அவசியம் இல்ல. ஒவ்வொரு மாசமும் நாம் சேர்த்து வைக்கும் 500 ரூபாய்கூட மிகப் பெரிய நம்பிக்கையை நமக்குள் விதைக்கும். அப்படி நாம் சேமிக்கும் தொகை, சேமிப்பாக மட்டும் இல்லாமல் முதலீடாகவும் இருந்தால் எதிர்காலத்துக்கு நிச்சயம் கைகொடுக்கும்’’ என்று எதார்த்தமாக பேச ஆரம்பிக்கிறார் பாக்கியம்மாள்.

புதுச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் தினச் சம்பளத்தில் வேலை பார்க்கிறார் பாக்கியம்மாள். இவர் தன்னுடைய மகளின் படிப்புக்காகவும் திருமணத்துக்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த ஐந்து ஆண்டு களாக முதலீடு செய்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள அவரின் வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“என் கணவர் பெயின்டர் வேலை பார்த்துட்டு இருந்தார். வேலைக்குப் போனால் ஒரு நாளைக்கு 300 ரூபாய் வரை சம்பாதிச்சுட்டு வருவார். நாங்க ரெண்டு பேருமே எதுவும் படிக்கல. அதனால சேமிப்பை பத்தியெல்லாம் எங்களுக்கு எந்த விவரமும் தெரியல. சம்பாதிச்ச ஒவ்வொரு காசும் வீட்டுச் செலவுக்கு சரியா இருந்துச்சு.

கல்யாணமாகி நான்கு வருஷம் கழிச்சுதான் எங்களுக்குக் குழந்தை பிறந்துச்சு. சேமிப்பு எதுவும் இல்லாததால எதாவது அவசர செலவுன்னாக்கூட கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துல இருந்தோம்.

பெரியளவு கஷ்டம் இல்லாமல் இருந்த நிலையில், என் கணவருக்கு நடந்த ஒரு விபத்து எங்களோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போட்டுருச்சு’’ அதுவரை சாதாரணமாகப் பேசிவந்த பாக்கியம்மாளின் குரல் தழுதழுக்க, அழத் தொடங்கினார். நாம் சில விநாடிகள் அமைதியாக இருந்தோம். கண்களைத் துடைத்தபடி மீண்டும் அவரே பேச ஆரம்பித்தார்.

பாக்கியம்மாள்
பாக்கியம்மாள்

“ஒரு நாள் வேலைக்குப் போன என் கணவர், பொழுது அடங்கியும் வீட்டுக்கு வரல. விசாரிச்சப்ப, ‘பெயின்ட் அடிக்கிறப்ப சாரத்திலிருந்து கீழே விழுந்துட்டாரு’ன்னு சொன்னாங்க. அரசு ஆஸ்பத்திரியில சேர்த்துருந்தாங்க. சில மாசத்துல காயம் ஆறினாலும், அவருக்கு மனநிலை சரியில்லாம போச்சு. கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு குடும்பச் செலவுக்கும், மருத்துவச் செலவுக்கும் நான் படாதபாடு பட்டேன். சொந்தபந்தமெல்லாம் உதவி செஞ்சாலும், யாரையும் தொடர்ந்து தொல்லை பண்ண எனக்கு கஷ்டமா இருந்துச்சு.

குழந்தையை அக்கம்பக்கத்துல விட்டுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். தினக்கூலி வேலைதான் கிடைச்சுது. ஆனா, என் குடும்பத்தைக் காப்பாத்த எனக்கு இருந்த ஒரே வழி அதுதான். அதனால தயங்கமா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். 15 வருஷமா என் கணவரையும் மகளையும் என் சம்பாத்தியத்துல பார்த்துக்கிறேன்’’ என்றவர், அதன்பிறகு, அவர் தன் முதலீட்டைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘‘ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம். என் மகளைத் தனியார் பள்ளிக்கூடத்தில்தான் படிக்க வைக்கிறேன். வீட்டில் சிறுவாடு காசு சேர்த்து வைப்பேன். கணவரோட மருத்துவச் செலவுக்கு அது கைகொடுக்கும். உண்மையைச் சொல்லணும்னா, வீட்டில் சேமிக்கிறது நல்ல விஷயம். சின்னச் சின்ன செலவுக்குக்கூட அந்தக் காசை எடுத்து செலவு செஞ்சு சமாளிச்சுக்கலாம்.

என் பொண்ணு பெரியவளா ஆனதுக்கு அப்புறம் அவளோட திருமணத்துக்காக சேமிக்கணும்னு யோசிச்சுட்டு இருந்தேன். நிறைய பேர் தங்கம், அஞ்சலகச் சேமிப்புனு சேமிப்புக்காக நிறைய வழிமுறைகளைக் காட்டினாங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு மேடம், ‘ராஜசேகரன் என்கிறவரைப் போய் பாரு. நீ பணம் சேக்குறதுக்கு நல்ல ஐடியா கொடுப்பாரு’ன்னு சொன்னாங்க. அவர்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சாங்க. அவர்கிட்ட பேசுறப்ப, ‘மியூச்சுவல் ஃபண்ட்ல பணம் போடுங்க’ன்னு சொன்னாரு. ஆரம்பத்துல மியூச்சுவல் ஃபண்டுன்னா என்னன்னு எனக்குப் புரியல. அதைப் புரிஞ்சிகிட்டு, எனக்குப் புரியுற மாதிரி விளக்கமா எடுத்துச் சொன்னாரு. நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையா பதில் சொன்னாரு. 10, 15 வருஷம் கழிச்சு நான் கட்டின பணம் எந்த நஷ்டமும் இல்லாம கிடைக்கிறதோட, கூடுதல் லாபமும் கிடைக்கும்னு சொன்னாரு.

என் சம்பளத்தில் குடும்பச் செலவுங்க எல்லாம் போக, என்னால மாசம் 1,700 ரூபா வரை சேமிக்க முடியும்ங்கிற முடிவுக்கு வந்தேன். அதுக்கேத்த மாதிரி நாலு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை எனக்குத் தேர்வு செஞ்சு தந்தாரு. என் பொண்ணோட உயர்கல்விக்காக மாசம் இரண்டு லார்ஜ்கேப் பண்டுகளில் தலா 400 ரூபா கட்டுறேன். மகளின் திருமணத் துக்காக மாதம் 400 ரூபா ஸ்மால் கேப் ஃபண்டிலும் முதலீடு செஞ்சுட்டு இருக்கேன்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி எமர்ஜென்சி ஃபண்டில் மாசம் 500 ரூபா முதலீடு பண்ண ஆரம்பிச்சேன். இதுவரை 13,500 ரூபாய் கட்டியிருக்கேன். இந்த கொரோனா நேரத்தில் வீட்டின் நிதி நிலைமை ரொம்ப சிரமமாக இருக்கவே, எமர்ஜென்சி ஃபண்டில இருந்த பணத்தை எடுத்தேன். மொத்தமா 18,000 ரூபா கிடைச்சுது. பேங்க்ல போட்டு வெச்சுருந்தாகூட இவ்வளவு லாபம் கிடைச்சிருக் காதுன்னு விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. கொரோனா வந்தப்ப வேலைக்குப் போக முடியாததால எனக்கு சம்பளம் கிடைக்கல. அப்பகூட வேற வேலை செஞ்சு பணம் சம்பாதிச்சு முதலீடு செஞ்சேன்.

இப்ப என் எதிர்காலத்தைப் பத்தி எனக்கு எந்த பயமும் இல்லை. எந்தப் பிரச்னை வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்ங்கிற துணிச்சல் என்னோட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எனக்குக் கொடுத்திருக்கு. இன்னும் எவ்வளவு வருஷம் என்னால இந்த முதலீட்டைத் தொடர முடியுமோ, அவ்வளவு வருஷம் தொடருவேன்” என்று நமக்கு விடை கொடுத்தார் பாக்கியம்மாள்.

வசதி படைத்த மனிதர்களே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள் என்கிற நிலை மாதிரி, இன்றைக்கு குறைந்த வருமானம் கொண்டவர்களும், பெண்களும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு புதுச்சேரி பாக்கியம்மாள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!

கனவுகள் நிஜமாக வேண்டும்!

ராஜசேகரன்
ராஜசேகரன்

பாக்கியம்மாளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து எடுத்துச் சொன்ன ராஜசேகரனைச் (Wisdomwealthplanners.com) சந்தித்தோம். ‘‘மாதம் ரூ.5,000, ரூ.10,000 முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு உதவுகிற அதே நேரத்தில், மிகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைத்தால், அவர்களுக்கு உதவுவதை கடமையாக நினைக்கிறேன். பாக்கியம்மாள் முதலில் 100, 200 ரூபாய் முதலீடு செய்தால் போதும் என்றார். அவருடைய மகளின் படிப்பு, திருமணச் செலவுகளுக்கான முதலீட்டுத் திட்டத்தைத் தந்தபோதுதான் அதிக பணத்தை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டார். சாதாரண மனிதர்களின் கனவுகள் நிஜமாக வேண்டுமெனில், நீண்டகால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது என் அனுபவம். இது மாதிரி சிறிய அளவில் முதலீடு செய்பவர்கள் மாதந்தோறும் முதலீடு செய்யும்போது, வங்கியில் ஒருமுறை பணம் இல்லாமல் போனால்கூட நிறைய அபராதம் விதிக்கிறார்கள். ஏழைகளான இவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டுமெனில், இந்த அபராதத்தைக் குறைக்க வேண்டும் அல்லது முழுவதுமாக நீக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார் ராஜசேகரன்.

பிட்ஸ்

ச்சு நிறுவனமான ஆப்டிவேர், மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த ஒரு இன்ஜினீயரை ஆண்டுக்கு 1.39 கோடி ரூபாய் சம்பளமாகத் தந்து வேலைக்கு எடுத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு