Published:Updated:

அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்! - சந்தேகங்களும் தீர்வுகளும்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அஞ்சலக 
முதலீட்டுத்
திட்டங்கள்
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பிரீமியம் ஸ்டோரி
ஞ்சலக சேவைகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த நாணயம் விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னை பிராந்திய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுமதி ரவிச்சந்திரன் அளித்துள்ள பதில்கள்...

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலம் முதலீடு செய்வதில் ஏதாவது வருமான வித்தியாசம் இருக்கிறதா?

- பி.கிறிஸ்டி, கோயம்புத்தூர்

“பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF) மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் (SCSS) ஆகிய இரண்டும் மத்திய அரசு நடத்தும் திட்டங்கள். அவற்றைத் தபால் அலுவலகம் அல்லது மத்திய அரசால் பி.பி.எஃப் சந்தா பெற அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கலாம். பி.பி.எஃப் மற்றும் எஸ்.சி.எஸ்.எஸ் திட்டங்களில் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் தொடங்கப்படும் கணக்குகளுக்கு ஈட்டப்படும் வட்டியில் வித்தியாசம் இல்லை.”

அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்! - சந்தேகங்களும் தீர்வுகளும்..!

தபால் அலுவலக ஆர்.டி-யில் கடந்த இரண்டு வருடங்களாக முதலீடு செய்துவருகிறேன். கொரோனா பாதிப்பால் கடந்த மூன்று மாதங்களாக ஆர்.டி செலுத்த முடியவில்லை. அடுத்த மாதம் முதல் ஆர்.டி-யைத் தொடர்ந்தால், எனக்கு அபராதம் விதிக்கப்படுமா?

- மலர்மதி, பாளையங்கோட்டை,.

“உங்கள் ஆர்.டி கணக்கைத் தொடரலாம். ஆர்.டி கணக்கின் சந்தாதாரர்கள் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ன் தவணைகளை 31.07.2020 வரை அபராதக் கட்டணம் இன்றி, தங்கள் ஆர்.டி கணக்குகளில் வரவு வைத்து தங்கள் கணக்கைத் தொடரலாம்.’’

என்னுடைய பி.பி.எஃப் முதலீடு 2020 ஜூன் மாதத்துடன் முடிந்துவிட்டது. இப்போதைக்கு எனக்கு அந்தப் பணம் தேவைப்படவில்லை. இதர நிலையான வருமான முதலீடுகளின் வருமானமும் இதைவிடக் குறைவாக இருக்கிறது. எனவே, இதே முதலீட்டைத் தொடர விரும்புகிறேன். பி.பி.எஃப் கணக்கை இன்னும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்க வாய்ப்பிருக்கிறதா?

- அ.கதிரேசன், சிவகாசி

“முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் பி.பி.எஃப் கணக்கை ஐந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்க முடியும். அதாவது, முதலீட்டுக் காலமான 15 ஆண்டுகள் முடிந்து, 16-ம் நிதியாண்டின் ஏப்ரல் 1-ம் தேதியிருந்து அல்லது கணக்கு ஏற்கெனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்டிருந்தால், 6-வது நிதியாண்டின் ஏப்ரல் 1-லிருந்து, ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கை நீட்டிக்க முடியும்.

நீட்டிக்கப்பட்ட காலத்தில் சந்தா செலுத்துவதற்கான வசதியும் உண்டு.”

மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் மருத்துவ சிகிச்சை, மகள் திருமணம் போன்ற தேவைகளுக்கு இடையில் பணத்தை எடுக்க முடியுமா? குறைந்தபட்ச லாக்இன் பிரீயட் எவ்வளவு?

- உமாபாரதி, திருவாரூர்

“முடியும். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து இந்தக் கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அனுமதி உண்டு. கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் காலாவதியான பிறகு எந்த நேரத்திலும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறவும், கணக்கை முடிக்கவும் வைப்புத் தொகையாளருக்கு அனுமதி உண்டு.”

தபால் நிலைய சேமிப்பு
தபால் நிலைய சேமிப்பு

வருமான வரி 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை பெற, தபால் அலுவலகத் திட்டங்களில் எவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்? அனைத்துத் திட்டங்களிலும் பணத்தை எடுக்கும்போது வரி செலுத்த வேண்டிய நிலை இருக்காதுதானே?

- க.அன்புக்கரசி, கல்லிடைக்குறிச்சி

“என்.எஸ்.சி., ஐந்து ஆண்டு டைம் டெபாசிட் (TD), பி.பி.எஃப்., எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் சுகன்யா சம்ருதி கணக்கு திட்டங்கள் 80சி வருமான வரி விலக்கின்கீழ் வருகின்றன. இந்தத் திட்டங்களின்கீழ் உள்ள முதலீடுகள் 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெற தகுதியுடையவை.

பி.பி.எஃப் மற்றும் எஸ்.எஸ்.ஏ ஆகியவற்றின்கீழ் ஈட்டப்பட்ட வட்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, அதேசமயம், ஐந்து ஆண்டு டி.டி., எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் என்.எஸ்.சி-யின் கீழ் ஈட்டப்பட்ட வட்டிக்கு வரி விதிக்கப்படும்.”

இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம் கார்டு மற்றும் காசோலை வழங்கப்படுகிறதா?

- தி.மங்களம், புதுக்கோட்டை

“இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம் அட்டை வழங்கப்படுவதில்லை. 08.07.2020 முதல் இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் காசோலைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி (IPPB) மொபைல் வங்கிப் பயன்பாடு (ஆப்) மூலம் நிதி பரிமாற்றங்கள் மற்றும் மின்சாரக் கட்டணம், டி.டி.ஹெச் (DTH) ரீசார்ஜ் மற்றும் பல பயன்பாடுகளை வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட் போன் மூலம் சுலபமாகச் செய்ய முடியும். ஆர்.டி., பி.பி.எஃப்., எஸ்.எஸ்.ஏ., பி.எல்.ஐ போன்ற பி.ஓ.எஸ்.பி கணக்குகளுக்கான வைப்புத் தொகையையும் தபால் நிலையங்கள் செல்லாமலேயே இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி மொபைல் பயன்பாடு மூலம் செய்துகொள்ளலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாதந்தோறும் பென்ஷன் பெறுவதுபோல் ஏதாவது திட்டம் தபால் அலுவலகத்தில் இருக்கிறதா?

- வீ.அமிர்தராஜ், உடன்குடி

“இருக்கிறது. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், பிரதம மந்திரி அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து, ரூ.5,000 வரை மாத ஓய்வூதியம் பெறலாம். மாதச் சந்தாவும் மிகவும் குறைவு. அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) 01.05.2009 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலமாகவோ, தலைமை அஞ்சலகங்கள் மூலமாகவோ சேர்ந்து பயன் பெறலாம்.

முழுமையான விவரங்களுக்கு இந்தியா தபால் வலைதளத்தைப் பார்வையிடவும் அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி திட்டத்தில் சேரலாம்.”

தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்களுக்கு இப்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி மாற்றப்படுகிறது. ஒருவர் எந்த வட்டி விகிதத்தில் முதலீட்டை ஆரம்பிக்கிறாரோ, அந்த வட்டி விகிதமே கடைசி வரைக்கும் வழங்கப்படுமா?

- க.வெங்கடராஜ், திருத்தணி

“அனைத்துத் தபால்துறை திட்டங்களுக்கும் (சேமிப்புக் கணக்கு, பி.பி.எஃப்., எஸ்.எஸ்.ஏ தவிர) கணக்கு முதிர்ச்சி அடையும் வரை கணக்கு திறக்கும் தேதிக்கான வட்டி விகிதம் பொருந்தும். எடுத்துக்காட்டாக, ஜூன் 2020-ல் திறக்கப்பட்ட ஒரு ஆர்.டி கணக்கு அதன் முதிர்வு வரை 5.8% வட்டி பெறும்.

சேமிப்புக் கணக்கு, பி.பி.எஃப்., எஸ்.எஸ்.ஏ கணக்குகளுக்குக் காலாண்டில் அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்.’’

என் மகள் பெயரில் சுகன்யா சம்ருதி கணக்கு தொடங்கினேன். ஊரடங்கு வந்ததால் பணம் கட்ட முடியவில்லை. ஆன்லைன் மூலம் பணம் கட்டுவது எப்படி?

- சுந்தர்.ஆர், சென்னை-8

“பணத்தை இணையவழி மூலம் கட்டலாம். இதற்கு நீங்கள் ஒரு முறை அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று (இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். பிறகு, அதன் மூலம் இனிவரும் நாள்களில் போஸ்ட் ஆபீஸ் செல்லாமலேயே மாதந்தோறும் இணையவழிப் பணப் பரிவர்த்தனை செய்ய இயலும்.”

போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முழுமையாகக் காப்பீடு அளிக்கும் (Pure Life Insurance) டேர்ம் பிளான் இருக்கிறதா?

- அ.திருமலை, மறைமலைநகர்,

“டேர்ம் பிளான் எதுவும் தற்போது அஞ்சலகத்தில் இல்லை. ஆனால், இதைக் கொண்டு வரும் திட்டம் அஞ்சல்துறையில் பரிசீலனையில் உள்ளது.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான உங்களின் பலவிதமான கேள்விகளுக்கு சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான எஸ்.சதீஷ்குமார் பதிலளிக்கிறார்.

அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்! - சந்தேகங்களும் தீர்வுகளும்..!

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு