Published:Updated:

30 ஆண்டுகளில் கோடீஸ்வரராக சுலப வழி..! - தினசரி முதலீடு ரூ.40 மட்டுமே..!

ஒருவரது ஓய்வு பெறும் காலம் அவரது வயது, அவர் பார்க்கும் வேலை, மனநிலை, உடல் ஆரோக்கியத்தை பொறுத்து மாறும்!

பிரீமியம் ஸ்டோரி
ன்றைய காலகட்டத்தில் அரக்கப்பரக்க வேலை பார்க்கும் அனைவருக்கும் ஓய்வுக்காலத்திலாவது ‘காலாற’ அமைதியாக, வசதியாகப் பொழுதைக் கழிக்க மாட்டோமா என்ற ஏக்கமும் கனவும் கண்டிப்பாக இருக்கும்.

அப்படிப்பட்டக் கனவை நனவாக்குவதற்குக் கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை என்னென்ன, அதைவிட முக்கியமாக என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதையும் எளிமையாக, உதாரணங்களுடன் குறிப்பிட்டு நிதி ஆலோசகர் பி.வி.சுப்ரமணியம் ‘ரிட்டையர் ரிச் – இன்வெஸ்ட் Rs. 40 ஏ டே’ (Retire Rich – Invest Rs. 40 A Day) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். பல பதிப்புகள் மூலம் சுமார் 1.5 லட்சம் பிரதிகள் விற்றிருக்கும் இந்தப் புத்தகத்தில், நடுத்தர வயதினர் ஒவ்வொருவருக்கும் பயன் தரும் சுவாரஸ்யமான பாடங்கள் இனி...

30 ஆண்டுகளில் கோடீஸ்வரராக சுலப வழி..! - தினசரி முதலீடு ரூ.40 மட்டுமே..!

வயதுக்கும் ஓய்வுக்கும் சம்பந்தமில்லை..!

தனியார் நிறுவனங்களில் 58 வயது, மத்திய அரசில் 60 வயது என ஓய்வு பெற வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒருவர் எப்போது ஓய்வெடுக்க வேண்டுமென்பது அவரது வயது, அவர் பார்க்கும் வேலை, மனநிலை, உடல் ஆரோக்கியம் எனப் பல விஷயங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும். உதாரணமாக, ஜிம்னாஷியம் செய்யக்கூடியவர்கள் 20 வயதிலும், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் 34 வயதிலும், நடிகைகள் 32 வயதிலும் நடிகர்கள் 75 வயதிலும், விற்பனையாளர்கள் 50 வயதிலும், மற்றவர்கள் 58, 60, 65 வயதிலும் ஓய்வு பெறுகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

ஓய்வு பெற்றபின் எத்தனை வயது வாழ்வீர்கள்?

சிலர் 55 வயதில் பணி ஓய்வு பெற்று 95 வயது வாழ்பவர்களும் உண்டு. உதாரணத்துக்கு, 24 வயதில் வேலை பார்க்க ஆரம்பிக்கும் ஒருவர் 55 வயதில் பணி ஓய்வு பெற்று 87 வயது வரை வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அவர் வேலைக்குச் சேரும் முன் பெற்றோர்களின் வருமானத்தைச் சார்ந்தவராக இருந்திருப்பார். அதன்பின் அவர் தனது வருமானத்தில் வாழ்ந்திருப்பார். ஆனால், பணி ஓய்வுக்குப் பின்னான 32 வருடங்களும் அவர் தனது வருமானத்துக்கான ‘செக்’கைத் தானே எழுதிக்கொள்ள வேண்டும்!

30 ஆண்டுகளில் கோடீஸ்வரராக சுலப வழி..! - தினசரி முதலீடு ரூ.40 மட்டுமே..!

ஓய்வு பெறும் காரணங்கள்...

ஓய்வுக்கால நிதிக்குத் திட்டமிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில...

1. நிதி நெருக்கடியிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள. 2. தனிப்பட்ட நபர் கடனைக் குறைக்க அல்லது முழுமையாக அகற்ற. 3. நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக காலம் வாழ நேரிட்டாலும் வாழும் முறையில் (லைஃப் ஸ்டைல்) மாற்றம் ஏற்படாமல் இருக்க. 4. பணி மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை அறிந்து அதிக விலையுள்ள பொருள்கள் வாங்குவதற்கு உதவ. 5. குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவுக்கு உதவ. 6. எதிர்பாராத ரிஸ்க் உண்டாகும்போது ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க. 7. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைக்கக்கூடிய சொத்துகளை வாங்க (கார், வீடு எல்லாம் சொத்துகள் அல்ல... எந்தத் தேய்மானமும் இல்லாமல் வளரும் முதலீடுகளே சொத்துகள்). 8. நிம்மதியாக ஓய்வுபெற. 9. காப்பீட்டில் அடங்காத மருத்துவ செலவுகளைச் சமாளிக்க. 10. உங்கள் மரணத்துக்குப் பின் குழந்தைகளுக்கென்று சொத்துகளை விட்டுச் செல்ல. 11. எதிர்பாராத செலவைச் சமாளிக்க எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

தினசரி ரூ.40 முதலீடு போதும்..!

தினமும் 40 ரூபாயை உங்கள் ஓய்வுக் காலத்துக்கென்று 30 ஆண்டுகள் தொடர்ந்து பங்குச் சந்தையில் (சென்செக்ஸ்) முதலீடு செய்தால், அது சுமார் ரூ.1.15 கோடியை ஈட்டித் தரும் (அதாவது, வருடத்துக்கு 18% என்ற அளவில் வருமானம்!) தினமும் ரூ.40 எனில், வருடத்துக்கு ரூ.14,600. இதை பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால், அது 30 வருட முடிவில் ரூ.16.5 லட்சமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட இரண்டுக்குமே முதலீடு செய்யக்கூடிய தொகை ஒன்றுதான் (ரூ.14,600 X 30 = ரூ.4,38,000) ஆனால், முதலீட்டுக்குத் தெரிவு செய்யும் சாதனத்தைப் (பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் (SIP), பி.பி.எஃப் போன்றவை) பொறுத்து ஓய்வுக்கால நிதி அமையும். தினசரி 40 ரூபாயா, அது என்ன கணக்கு என்று நீங்கள் கேட்கலாம்.

30 ஆண்டுகளில் கோடீஸ்வரராக சுலப வழி..! - தினசரி முதலீடு ரூ.40 மட்டுமே..!

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இந்தப் புத்தகத்தை எழுதியபோது ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.40 ஆக இருந்ததால், அதையே உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஒரு டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.75 ஆக இருப்பதால், நாம் அந்தத் தொகையை தினமும் சேமித்து, முதலீடு செய்யலாம்.

ஸ்மார்ட் கோல் வேண்டும்..!

ஓய்வுக்காலத்துக்கான குறிக்கோளைத் தீர்மானிப்பது முக்கியமாகும். அதன்பின் அந்தக் குறிக்கோள்களை அடைய எவ்வளவு நிதி தேவை என்பதைத் தீர்மானிப்பதற்கு பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிக்கோள்கள் என்பது ‘SMART’ ஆக இருக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட நோக்கத் துடனும் (Specific), அளவிடக் கூடியதாகவும் (Measurable), அடையக் கூடியதாகவும் (Achievable), யதார்த்த மானதாகவும் (Realistic), தொடர்ந்து பின்பற்றக்கூடியதாகவும் (Tracked) இருக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுக்காரர்களிடம், நம்மோடு வேலை செய்வோர்களிடம் இருக்கும் அனைத்துப் பொருள்களும் நம்மிடமும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு என்ன தேவையோ, அதற்குச் செலவிட வேண்டும். வாரன் பஃபெட் சொன்னதுபோல, தேவையற்றவையை வாங்கினால், நெருக்கடி நேரத்தில் தேவை யானவற்றை விற்க நேரிடும்.

பணி ஓய்வுக்குப் பின்னான 32 வருடங்களும் உங்கள் வருமானத்துக்கான ‘செக்’கை நீங்கள்தான் எழுதிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தால், ஓய்வுக்காலத்துக்கு நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிடுவீர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முறையான நிதித் திட்டம் இருக்கிறதா?

சேமிக்க அல்லது முதலீடு செய்ய முடியாதவர்கள் அதற்காகப் பல காரணங்களைக் கூறுவார்கள். ஆனால், அந்தக் காரணங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால், அவர்களிடம் முறையான நிதித் திட்டமிடல் இல்லை என்பது தெரியும். இதோ சில உதாரணங்கள்:

1. தேவைக்கு அதிமானதைவிட பெரிய வீடு அல்லது நகரத்தில் விலை அதிகமாக இருக்கக் கூடிய முக்கியமான இடத்தில் வீடு வாங்குவது. 2. அடுத்து, 5-6 ஆண்டுகளுக்கு ஒருமுறை காரை மாற்றுவது அல்லது ஆடம்பரமான கார் வாங்குவது. 3. பங்குச் சந்தை, கமாடிட்டி டிரேடிங்கில் ஏற்படக்கூடிய நஷ்டம். 4. அடிக்கடி நண்பர்கள், குடும்பத்தினருடன் வெளியில் சென்று சாப்பிடுவது. 5. அதிக எண்ணிக்கையில் உடைகளை வாங்குவது. 6. சாதாரண பொருளுக்கு பந்தாவுக்காக அதிக விலை தருவது. 7. மின்னணுச் சாதனங்களை குறிப்பாக, மொபைல்போன்களை அடிக்கடி மாற்றுவது. 8. அதிக செலவு செய்து சுற்றுலா செல்வது. 9. பணத்தை நமக்காக எப்படி வேலை செய்யவைப்பது என்பதைத் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்காமல் காலம் கடத்துவது. 10. கடன் அட்டை இருப்பதால், தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது.

30 ஆண்டுகளில் கோடீஸ்வரராக சுலப வழி..! - தினசரி முதலீடு ரூ.40 மட்டுமே..!

மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால்...

மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் 30 ஆண்டு முடிவில் (ஆண்டுக்கு 15% வளர்ச்சி தந்தால்)ரூ.69,23,280 ஆக அதிகரிக்கும். இந்தத் தொகையை அடைய நீங்கள் 360 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் செய்யும் முதலீடு ரூ.3,60,000 மட்டுமே. எனவே, இளம் வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் ஓய்வுக்காலத்தை ‘நிதி சார்ந்த’ அச்சம் எதுவும் இல்லாமல் அமைதியாக, ஆனந்தமாக, சுதந்திரமாக அனுபவிக்கலாம்!

நிதித் திட்டமிடல் எவ்வளவு அவசியம் என்பதை இந்த கோவிட்-19 காலகட்டம் நமக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கிறது. எனவே, ‘செல்வந்தர்களாக’ பணிஓய்வு பெற இந்தப் புத்தகத்தை வாசித்துப் பார்ப்பதுடன், அதில் தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளையும் கருத்தில்கொண்டு நிதி ஆலோசகரின் உதவியுடன் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு