பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

“செலவுகளைக் குறைத்துக்கொண்டு - எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறோம்!”

எஸ்.ஐ.பி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி

நானும் எஸ்.ஐ.பியும்!

நிறைய பேர் செலவுகள் போக மீதமிருக்கும் தொகையைத்தான் முதலீடு செய்வார்கள். சிலர் மட்டுமே, செலவுகளைச் சுருக்கிக்கொண்டு எதிர்கால இலக்குகளுக்கான முதலீட்டைத் தொடர்வார்கள். அந்த வகையில் சென்னை, சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.செந்தில் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு 47 வயது. கடந்த ஆறு வருடங்களாக எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறார். தன் முதலீட்டு அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்கும்போது நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். நான் பொறியாளர். தற்போது சொந்தமாக புராஜெக்ட்டுகளைச் செய்துவருகிறேன். நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியின் நண்பர் ஒருவர் மூலம், எஸ்.ஐ.பி முதலீடு பற்றித் தெரிந்துகொண்டேன்.

மனைவி ரஷிதா, அம்மா லலிதா, மகன் சிவராஜ் குமார் மற்றும் மகள் ஹரிணியுடன் முதலீட்டாளர் செந்தில்...
மனைவி ரஷிதா, அம்மா லலிதா, மகன் சிவராஜ் குமார் மற்றும் மகள் ஹரிணியுடன் முதலீட்டாளர் செந்தில்...

பொதுவாக, நிதி ஆலோசகர்களில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யச் சொல்வார்கள். ஆனால், நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி ஆரம்பத்திலேயே இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டு, என்னை முதலீடு செய்யச் சொன்னார். தோராயமான வருமானமாக 12% எதிர்பார்த்தால், அதற்கு எஸ்.ஐ.பி முறையில் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கணக்கிட்டுச் சொன்னார்.

மேலும், ஆரம்பத்தில் எவ்வளவு தொகையை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய வேண்டும்... பிறகு அதை எப்போது அதிகரிக்க வேண்டும் என விளக்கிச் சொல்லியிருந்தார். மேலும், ‘ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் இருக்கிறது. ஆனால், அவை நீண்டகாலத்தில் பரவலாக்கப்பட்டுவிடும்’ என நிதி ஆலோசகர் சொல்லியிருந்ததால், அவ்வப்போது ஏற்படும் இறக்கத்தைக் கண்டு நான் கலங்குவதில்லை.

ஆரம்பத்தில் ஐந்து ஃபண்டுகளில் தலா 6,000 ரூபாய் வீதம் மாதம் 30,000 ரூபாய் முதலீடு செய்தேன். இப்போது, 50,000 ரூபாய் வரை மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். மற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டு எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்கிறோம்.

மகள் திருமணம் மற்றும் மகனின் உயர்கல்விதான் எனது முக்கியமான இலக்குகள். வீட்டுக் கடன் இருக்கிறது. கடன் தொகைக்கு இணையாக டேர்ம் பிளான் எடுத்திருக்கிறேன். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தால், பங்குச் சந்தை சார்ந்த எஸ்.ஐ.பி முதலீடும் ஏற்ற இறக்கம் காணும். ஆனால், நீண்டகாலத்தில் பணவீக்க விகிதத்தைவிட 2 - 3% கூடுதலாக வருமானம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கிறேன். பேராசை எதுவும் இல்லை என்பதால், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறேன்’’ என்று முகத்தில் மகிழ்ச்சி தெரியச் சொல்கிறார் செந்தில்.

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.