Published:Updated:

ஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்!

நானும் எஸ்.ஐ.பியும்!

பிரீமியம் ஸ்டோரி

வேலை பார்த்து சம்பாதிக்கும் காலத்தில் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் மேற்கொள்வது பெரிய விஷயம். ஓய்வுபெற்ற ஒருவர் தன்னுடைய ஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்வது மிகப் பெரிய விஷயம்! கடந்த பத்தாண்டுகளாக ஒரு மாதம்கூட தவறாமல் எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடர்ந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுந்தரி. இவருக்கு இப்போது வயது 66.

ஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்!

நெடுஞ்சாலைச் துறையில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் சுந்தரி. “என் குடும்பம் மிடில் கிளாஸ் என்றுகூடச் சொல்ல முடியாது. பட்டப்படிப்பு படிக்க எனக்கு ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைத்தது; புத்தகங்களும் கல்லூரியிலேயே இலவசமாகக் கிடைத்தது. ஆனால், கல்லூரிக் கட்டணம் செலுத்த வீட்டில் பணம் இல்லாததால், பட்டப் படிப்பு படிக்க முடியாமல் போனது. ஆனாலும், எனக்குக் கிடைத்த அரசு வேலையை சிரத்தையாகச் செய்தேன்.

சம்பாதிக்கிற காலத்தில் பெண்கள் பலரும் செய்கிறமாதிரி, பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் ஆகிய திட்டங்களில்தான் நான் முதலீடு செய்தேன். இந்தச் சமயத்தில் நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன். நமது சேமிப்பும் முதலீடும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெறவேண்டும்; தவிர, அது கூட்டு வட்டி அடிப்படையில் வளர வேண்டும் என்று படித்தேன். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நல்ல வழி என என் நிதி ஆலோசகர் செல்வி சுகுமாறன் சொன்னார். இதனைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.1,000 முதலீடு செய்ய ஆரம்பித்தேன். அதன்பிறகு படிப்படியாக முதலீட்டை அதிகரித்து, ரூ.17,000 வரை முதலீடு செய்துவந்தேன்.

கடந்த 2011-ல் நான் ஓய்வு பெற்றேன். எனக்குக் கிடைத்துவரும் பென்ஷன் தொகையை என் செலவுகளுக்குப் பயன்படுத்தாமல், தொடர்ந்து எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்துவருகிறேன். அமெரிக்காவில் இருக்கும் என் பேரக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காகத்தான் இப்போது முதலீடு செய்து வருகிறேன்.

இப்போது ரூ.12,000, ரூ.10,000 மற்றும் ரூ.6,000 என மூன்று ஃபண்டுகளில் மொத்தம் ரூ.28,000 முதலீடு செய்து வருகிறேன். அடுத்த மாதம் இந்த முதலீட்டை இன்னும் அதிகரிக்கப் போகிறேன்.

ஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்!

மைக்ரோகேப் ஃபண்டில் நான் செய்த முதலீடு ஆண்டுக்குச் சராசரியாக 40% லாபம் தந்து வந்தது. அந்த ஃபண்டின் என்.ஏ.வி குறையலாம் என்று நினைத்து, அதிலிருந்த பணத்தை பேலன்ஸ்டு ஃபண்டுக்கு மாற்றினேன். அந்த ஃபண்டில் என் முதலீடுகள் இதுவரைக்கும் சராசரியாக 13.85% வருமானம் ஈட்டித் தந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே. ப்

எஸ்.ஐ.பி முதலீடு பற்றி என்னுடைய இளம்வயதிலேயே எனக்குத் தெரியாமல் போய் விட்டதே என்கிற வருத்தம் எனக்கு உண்டு. அதுபற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால், இன்னும் அதிகமான பணத்தை முதலீடு செய்திருப்பேன். இன்றைய இளைஞர்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்” எனப் பேசி முடித்தார் சுந்தரி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு