Published:Updated:

உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா... உங்களுடைய முதலீடு எப்படி இருக்க வேண்டும்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

P E R S O N A L F I N A N C E - தவறுகளைத் தவிர்க்க ஆலோசனைகள்

உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா... உங்களுடைய முதலீடு எப்படி இருக்க வேண்டும்?

P E R S O N A L F I N A N C E - தவறுகளைத் தவிர்க்க ஆலோசனைகள்

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

வாழ்க்கையில் பல விஷயங் களைத் தப்பும் தவறுமாகச் செய்து அடிபட்டு, அனுபவப் பட்டு புரிந்து கொள்ளும் போது வயது 40 ஆகிவிடுகிறது. இந்த வயதுக்குப் பிறகு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று முடிவெடுப்பார்கள். முக்கியமாக, முதலீட்டு விஷயங்களில் 40 வயதுக்காரர்களுக்கு கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இப்போது நீங்கள் 40 வயதுக்காரராக இருந்தாலும், 40 வயதை நெருங்கு பவராக இருந்தாலும் இனி நீங்கள் என்ன செய்ய வேண்டும், 40 வயதில் ஒருவர் முதலீட்டுத் திட்டங்களை எப்படி வகுத்துக்கொள்ள வேண்டும், இந்த வயதுக்குப் பிறகு, பொருளாதார ரீதியாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன, தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன என்கிற கேள்விகளை நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் கேட்டோம். நாம் கேட்ட அனைத்து கேள்வி களுக்கும் விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

முதலீடு
முதலீடு

பதற்றம் வேண்டாம்...

“40 வயதுவரை எந்த வகையிலும் திட்டமிடாமல் வாழ்ந்துவிட்டோமே, இனி இருக்கிற 10, 20 ஆண்டுகளில் பணம் சேர்க்க வேண்டுமே என்று நினைத்து பதற்றப் படாதீர்கள். பதற்றம் மேலும் சில தவறுகளைச் செய்ய வைத்துவிடும். இனிமேலாவது வாழ்க்கையை நீங்கள் திட்டமிட்டு நடத்தினால்தான் சிக்கலின்றி தப்பிக்க முடியும். அடுத்த 15 முதல் 20 ஆண்டுக் காலத்துக்கு முறையாக முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம். Better late than never என்கிற மாதிரி, தாமதம் என்றாலும் இனியாவது ஆரம்பியுங்கள். நீண்ட கால முதலீட்டுக்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளதால், முறையான அஸெட் அலகேஷன் செய்து முதலீடு செய்தால், நீங்கள் ஓரளவுக்காவது பணம் சேர்க்க முடியும் என்பது நிச்சயம்.

செலவுத் திட்டம் உள்ளதா..?

இந்த வயதில் உள்ளவர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது வேறு ஏதாவது கடன்கள் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் கடன் இருப்பவர்கள் தங்களுடைய மாத வருமானத்தில் 30% தொகையை இ.எம்.ஐ.க்காக ஒதுக்கலாம். மாத/வருட வருமானத்தில் 30 சதவிகிதத்துக்கு மேல் இ.எம்.ஐ கட்டுகிற மாதிரி கடன்களை வாங்கி வைத்திருப்பது ஆபத்தானது. மீதமிருக்கும் 70% தொகையில் 35% தொகையை வீட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, மளிகைச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை போன்ற தேவைகளுக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். மீதமிருக்கும் 35% தொகையைக் கட்டாயமாக முதலீட்டுக்காக ஒதுக்க வேண்டும். கடன் எதுவும் இல்லை அல்லது கடன்களுக்கான இ.எம்.ஐ பெரிய அளவில் இல்லை என்றால், அதையும் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக ஒதுக்கும்போது, நீண்டகால இலக்குகளை நீங்கள் எதிர்பார்க்கும் காலத்தைவிட முன்பாகவே அடைந்துவிடலாம்.

முதலீட்டு போர்ட்ஃபோலியோ!

40 வயது என்றவுடனே பயமும் பதற்றமும் அடையத் தேவையில்லை உங்களுடைய முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்கும் தொகையில் 60% வரை ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதாவது, 15% பணத்தை பங்குச் சந்தையில் நேரடியாகவும், 15% பணத்தை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். மீதமிருக்கும் 40% தொகையை வங்கி எஃப்.டி அல்லது அஞ்சலக ஆர்.டி, பி.பி.எஃப், கோல்டு பாண்டுகள் போன்ற அதிக ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.

தங்கம், சிட் ஃபண்ட், ரியல் எஸ்டேட்...

பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்கி வைப்பதை சிறந்த முதலீடாகப் பார்க்கிறார்கள். ஆனால், தங்க நகைகளை வாங்கி வைத்து, பயன்படுத்துவதால் நாம் மனம் மகிழலாமே தவிர, அதில் பல அசெளகர்யங்களும் கண்ணுக்குத் தெரியாத இழப்புகளும் இருக்கும் என்பதால், அது சரியான முதலீட்டு முறை இல்லை. பலரும் பணத்தைச் சேர்க்கிறேன் என சிட் ஃபண்டுகளில் போடுகிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை. சில சமயங்களில், சீட்டு நடத்துபவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விடுவதால், இழப்புதான் ஏற்படுகிறது. இன்னும் பலர், ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பெரிதாக நம்புகிறார்கள். நீங்கள் இருக்க ஒரு வீடு இருந்தாலே போதும்; அடுத்தடுத்து வீடு, மனை என்று வாங்கிக்கொண்டே போவதால், பெரிய லாபம் எதையும் பார்க்க முடியாது. ரிஸ்க்கே எடுக்க விரும்பாத பலர், வங்கி எஃப்.டி தவிர வேறெந்த முதலீட்டையும் நம்புவதில்லை. ஆனால், அவற்றின்மூலம் பணவீக்கம் அளவுக்கே வருமானம் கிடைக்கும்.

வைப்பு நிதியைத் தாண்டி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்தால்தான் அதிக வருமானம் ஈட்ட முடியும். அதனால்தான் 40 வயதில் இருப்பவர்கள், தங்களின் தேவையைப் பொறுத்து 60% தொகையை பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள் எனச் சொல்கிறேன்” என்றவர் இன்ஷூரன்ஸ் சார்ந்த விஷயங்களில் கவனிக்க வேண்டிய விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

யு.என்.சுபாஷ்
யு.என்.சுபாஷ்

டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

“ஆயுள் காப்பீடு என்று வரும்போது பலரும் என்டோவ் மென்ட் பாலிசிகளையே எடுக் கிறார்கள். இரண்டு காரணங் களுக்காக இந்த என்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். ஒன்று, அதிகமான பிரீமியம்; இரண்டாவது, குறைவான கவரேஜ். ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என்பது போல் கவரேஜ் கொண்ட பாலிசியின் இழப்பீடு மூலம் மனைவியும் இரண்டு குழந்தைகளும் எப்படிச் சமாளிப்பார்கள்? எனவே, குறைந்த பிரீமியத்தில் அதிகம் கவரேஜ் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதே சரி.

தற்போது பல அலுவலகங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குரூப் பாலிசியை எடுத்துத் தருகிறார்கள். எனவே, அலுவலகத்திலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, எதற்காகத் தனியாக எடுக்க வேண்டும் எனப் பலரும் நினைக்கிறார்கள். பொதுவாக, அலுவலகத்தில் தரப்படும் பாலிசிகளின் கவரேஜ், ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் வரையே இருக்கும். இந்த கவரேஜ் தொகை நிச்சயம் போதாது. மேலும், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் வரை மட்டுமே அந்த கவரேஜ் கிடைக்கும். அலுவலகம் மாறினால் அது காலாவதியாகும். 40 வயதுக்கு மேல், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருக்கவே கூடாது. எனவே, தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. இது ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருப்பது அவசியம்.

கடனுக்கான டேர்ம் 10 ஆண்டுகள்!

40 வயதில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்ட நினைப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, கடன் திரும்பச் செலுத்தும் காலத்தை 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்வது. மாதம்தோறும் கட்டும் இ.எம்.ஐ தொகை குறைகிறது என்பதற் காக இப்படிச் செய்வார்கள். ஆனால், 40 வயதில் கடன் வாங்கும்போது, கடனைத் திரும்பச் செலுத்தும் காலம், அதிகபட்சம் 10 ஆண்டுகள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வது அவசியம்.

இந்த வயதில், ஏதாவது ஒரு வகையில் பெரிய தொகை கிடைத்தால், உடனே வீட்டுக் கடனுக்கான தொகையைக் கட்டி முடித்துவிடலாம் என யோசிப்பவர்கள் அதிகம். ஆனால், அவசரப்பட்டு வீட்டுக் கடனுக்குச் செலுத்த வேண்டாம். ஏனென்றால், வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும். அது வருமான வரி செலுத்தும்போது பயனுள்ளதாக இருக்கும். திடீரென கிடைக்கும் பணத்தை அவசர கால தேவைக்கான நிதியில் போட்டு வைத்தால், திடீர்த் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை வராது.

அவசரகால நிதி அவசியம் வேண்டும்!

ஒருவர் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அவர் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை, டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது, அவசரகால நிதியைச் சேமிப்பது. இந்த இரண்டும் செய்துவிட்டாலே, மற்ற முதலீடு சார்ந்த விஷயங்கள் ஸ்மூத்தாக இருக்கும். நீங்கள் இந்த 40 வயதில்கூட, அவசரகால நிதியைச் சேமித்து வைக்காமல் இருந்தால், முதலில் அதற்கான சேமிப்புத் தொகையை மாதம்தோறும் ஒதுக்க ஆரம்பியுங்கள். குறைந்தபட்சம் 9 மாதங்கள் குடும்பத்தை வழிநடத்த தேவையான தொகை கையிருப்பாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 12 மாதங்களுக்கான தொகையை சேமித்து வைக்கலாம். கொரோனா காலத்தில், இந்த நிதி இல்லாமல்தான், பலரும் கஷ்டத்தைச் சந்தித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அதிகம் செலவு வேண்டாம்!

இந்த வயதில்தான், பெரும்பாலான வர்கள் அலுவலகத்தில் சீனியராக இருப்பார்கள். அதனால் அதற்கு ஏற்றவாறு அவர்களுடைய வருமானமும் அதிகமாக இருக்கும். பொதுவாக, வருமானம் அதிகமாக இருக்கும்போது, மனம் அதிகமாகச் செலவு செய்ய நினைக்கும். ஆனால், இந்த நேரத்தில்தான் சிக்கனப்படுத்த வேண்டும். சேமிப்பு, முதலீடு போக செலவு செய்ய ஆரம்பிப் பவர்கள்தான், தன் எதிர்கால இலக்குகளை சீக்கிரம் அடைகிறார்கள். அதனால் செலவுகளை அதிகம் செய்பவர்கள் உடனடியாகக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்றார் அவர்.

40 வயதை எட்டவிருப்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு நடப்பார்களா?

பிட்ஸ்

ங்கிசாரா நிதி நிறுவனமான மேக்னா ஃபின்கார்ப் நிறுவனத்தின் 60% பங்குகளை வாங்குகிறார் ஆதார் பூனாவாலா. இதன் மதிப்பு ரூ.3.4 கோடி ஆகும்!