Published:Updated:

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... வரிச் சேமிப்புக்கு எப்படிப் பயன்படுத்தலாம்?

வரி சேமிப்புடன் செல்வமும் பெருகும்!

பிரீமியம் ஸ்டோரி

MUTUAL FUND

ங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் என்ற இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Savings Scheme) மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும் என்பது இன்னும் கூட பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அமைப்பின் விதிமுறையின்படி, இந்தத் திட்டம் மூலம் திரட்டப்படும் நிதியில் குறைந்தபட்சம் 80 சதவிகிதத் தொகை நிறுவனப் பங்குகள் மற்றும் அதுசார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

குறைவான லாக்-இன் காலம்..!

இந்த வகை ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகளில் ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) நிபந்தனை களுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரிச் சலுமை பெற முடியும். இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்க முடியாது. இதை ‘லாக்இன் பீரியட்’ என்பார்கள். வரிச் சேமிப்பு திட்டங்களில் மிகக் குறைவான லாக்இன் கொண்ட திட்டம் இதுதான். மற்ற திட்டங்களின் லாக்இன் காலம் ஐந்து ஆண்டுகள் தொடங்கி 15 ஆண்டுகள் வரை தொடர்கிறது.

ஹசன் அலி, 
நிதி ஆலோசகர், 
Siptiger.com
ஹசன் அலி, நிதி ஆலோசகர், Siptiger.com

குறைந்தபட்ச முதலீடு

வரிச் சேமிப்பு திட்டமான இதில் மொத்த முதலீடு மற்றும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆக உள்ளது.

இ.எல்.எஸ்.எஸ்ஸின் மூலமான, மூலதன ஆதாயம், டிவிடெண்ட் இரண்டுக்கும் 2018 ஏப்ரலுக்கு முன் முழுமையாக வரிச்சலுகை இருந்தது. இப்போது டிவிடெண்ட் மற்றும் மூலதன ஆதாயத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.

டிவிடெண்ட் வருமானம் முதலீட்டாளரின் இதர வருமானமாகக் கருதப்பட்டு, அவர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி விதிக்கப்படுகிறது. இந்த ஃபண்டின் யூனிட்டுகளை லாக்இன் பிரீயட் முடிந்து விற்கும்போது கிடைக்கும் நீண்டகால ஆதாயத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதன் பிறகு 10% வரி உண்டு. இப்படி வரி கட்டினாலும், வரிச் சலுகை அளிக்கும் இதர முதலீடுகளைவிட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு லாபகரமாகதான் இருந்து வருகிறது.

குறைவான சதவிகிதம் வருமான வரி கட்டும் புதிய வரி முறையைத் தேர்வு செய்தால், இந்த இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் மூலம் வரிச் சலுகை கிடைக்காது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்

யாருக்கு ஏற்றது?

இந்த ஃபண்டில் முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் நிதி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், இதன்மூலம் கிடைக்கும் வருமானம் பங்குச் சந்தையைச் சார்ந்திருக்கும். அந்த வகையில், முதலீட்டின் மீது ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த ஃபண்ட் வகை இருக்கிறது.

லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி?

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி சுமார் 25-30 பங்குகளில் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. மேலும், சில ஃபண்டுகளில் அதிகமாக லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இது, ‘அதிக ரிஸ்க் வேண்டாம்; ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்தால் போதும்’ என்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

‘அதிக ரிஸ்க் என்றாலும் பரவாயில்லை, அதிக வருமானம் வேண்டும்’ என்பவர்கள், மிட் கேப், ஸ்மால்கேப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

லாக்இன் முடிந்தபின் எடுக்கலாமா?

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்யப்பட்ட முதலீட்டை அதன் லாக்இன் மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர் எடுத்துவிடுகிறார்கள். அது தேவையில்லை. அப்படி எடுக்கும் போது எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை அறிந்து எடுப்பது அவசியம். நீங்கள் எடுக்க நினைக்கும்போது, வருமானம் குறைவாக இருந்தால், பங்குச் சந்தை ஏறும் வரை காத்திருந்து எடுப்பது லாபகரமாக இருக்கும். இந்தத் திட்டத்தில் செய்த முதலீட்டைக் குறைந்த பட்சம் 5 முதல் 8 ஆண்டுகளுக் காவது தொடர்ந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

மூன்றாண்டுகள் கழித்திருக்கும் நிலையில் நல்ல லாபத்தில் இருந்தால், யூனிட்டுகளை விற்று மறுமுதலீடு செய்வதன்மூலம் மீண்டும் வரிச் சலுகை பெறலாம்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மாதம் சுமார் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதை இரண்டு அல்லது மூன்று ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வதன்மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதுடன், வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு.

டிவிடெண்ட், குரோத் எது பெஸ்ட்?

வரிச் சேமிப்பு ஃபண்ட் முதலீட்டின்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு, ஒருவரின் அடிப்படை வரி வரம்புக்கேற்ப (5.2%, 20.8%, 31.2%) வரி கட்ட வேண்டி வரும். குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்து, யூனிட்டுகளை விற்று பணமாக்கும் போது, நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை வரி கிடையாது. அதன் பிறகு 10% வரி செலுத்தினால் போதும். இதனால், டிவிடெண்ட் ஆப்ஷனைவிட குரோத் ஆப்ஷன் லாபகரமாக இருக்கும்.

அதிக வருமானத்துக்கு வாய்ப்பு..!

தற்போதை நிலையில், பி.பி.எஃப்-க்கு 7.10%, தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 6.8%, வங்கி எஃப்.டி-க்கு 6 முதல் 6.90% என வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், இஎ.ல். எஸ்.எஸ் ஃபண்டில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் டாப் 10 ஃபண்டுகள் ஆண்டுக்கு 12-16% வருமானம் தந்திருக்கின்றன. இதுவே மூன்றாண்டு காலத்தில் டாப் 10 ஃபண்டுகள் 8-13% வருமானம் தந்திருக் கின்றன. இந்த ஃபண்டில் ரிஸ்க் இருந்தாலும் அது நீண்ட காலத்தில் குறைவதற்கு நிறைய வாய்ப்புண்டு.

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உங்களின் வருமான வரியை மட்டும் மிச்சப்படுத்தவில்லை. கூடவே நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்கவும் செய்கிறது என்பதை மறக்காதீர்கள்!

பிட்ஸ்

மிழக அரசின் ஜி.எஸ்.டி வரி வசூல் வளர்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்களாக இரட்டை விகிதத்தில் இருந்து வருகிறது. கடந்த நவம்பரில் இந்த வரி வசூல் 10% உயர்ந்து, ரூ.7,084 கோடியாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு