Published:Updated:

ரூ.30,000 மாதச் செலவு... ஓய்வு பெறும்போது எவ்வளவு தேவை? - விளக்குகிறார் நிதி நிபுணர்

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பிரீமியம் ஸ்டோரி
கேளுங்கள், பதில் கிடைக்கும் பகுதியில், மூத்த குடிமக்கள் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு நிதி ஆலோசகர் கே.ராமலிங்கம் (Holisticinvest ment.in) பதில் அளித்துள்ளார்.

மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும்?

கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்

‘‘பல திட்டங்கள் இருக்கின்றன. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizen Saving Scheme) தற்போதைய நிலையில் ஆண்டு வட்டி 7.4%. வட்டியானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரித்து வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 வருடங்கள். மேலும், இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் (Post Office Monthly Income) ஆண்டுக்கு வட்டி 6.6% கிடைக்கும். இதில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 வருடங்கள். மேலும், வட்டியானது மாதம்தோறும் கணக்கிடப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் (Post Office Time Deposit for 5 years) 6.7% வட்டியானது ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ரூ.30,000 மாதச் செலவு... ஓய்வு பெறும்போது எவ்வளவு தேவை? - விளக்குகிறார் நிதி நிபுணர்

ஆர்.பி.ஐ மாறுபடும் வட்டி பாண்டில் (RBI Floating Rating Bond) வட்டி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாறக்கூடியதாகும். இந்த முதலீட்டுத் திட்டத்தின் தற்போதைய வட்டி 7.15%. மேலும் வட்டியானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படும்போது, அந்தக் குறிப்பிட்ட அரை ஆண்டுக் காலத்தின் வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஏழு ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் (Pradhan Mantri Vaya Vandana Yojana - PMVVY) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். ஆனால், மற்ற முதலீட்டுத் திட்டங்களைப் போல இல்லாமல், உதாரணமாக இந்தத் திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்ச தொகையான ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகையானது மாதம்தோறும் ரூ.9,250 ஆக பிரித்து பென்ஷன் தொகையாக வழங்கப்படும். இதை வட்டி விகிதத்தில் கணக்கிட்டால் 7.4 சதவிகிதத்தை நீங்கள் மாதம்தோறும் பெறுவீர்கள். மேலே கூறப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில், உதாரணமாக உங்களிடம் உள்ள தொகையில் ரூ.15 லட்சத்தை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் திட்டத்திலும், ரூ.15 லட்சத்தை பி.எம்.வி.வி.ஒய் திட்டத்திலும், மீதமுள்ள தொகையில் 20 சதவிகிதத்தை ஈக்விட்டி தொடர்பான லார்ஜ்கேப் அல்லது இண்டெக்ஸ் ஃபண்டிலும் மீதமான பணத்தை நீங்கள் ஆர்.பி.ஐ மாறுபடும் வட்டி பாண்ட், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.’’

மூத்த குடிமக்கள் 60 வயதுக்குப் பிறகு, ஈக்விட்டி சந்தை முதலீடுகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

இந்துமதி, இ-மெயில் மூலம்

‘‘மூத்த குடிமக்கள் தங்களது ஒட்டுமொத்த அஸெட் அலோகேஷனில் 20 சதவிகிதத்தை ஈக்விட்டி தொடர்பான, அதாவது லார்ஜ்கேப் அல்லது இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மிட்கேப் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. லார்ஜ்கேப் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்வதால், ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. இப்படிக் கிடைக்கும் லாபத்தை நீங்கள் கடன் ஃபண்டில் அல்லது மற்ற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோல, ஒவ்வொரு 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களது ஈக்விட்டி முதலீட்டின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை நீங்கள் கடன் ஃபண்டில் மறுமுதலீடு செய்யலாம். இதனால் உங்களது ஓய்வூதிய காலத்தில் முதலீட்டு வருமானமும் அதிகரிக்கும், செலவுகளைச் சமாளிக்கத் தேவையான தொகையும் கையில் இருக்கும்.’’

ரூ.30,000 மாதச் செலவு... ஓய்வு பெறும்போது எவ்வளவு தேவை? - விளக்குகிறார் நிதி நிபுணர்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் வசதி இருக்கிறதா?

அ.கண்ணன், நாகர்கோவில்

‘‘மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தைப் பொறுத்தவரை, மாதம்தோறும் முதலீடு செய்ய முடியாது. இந்தத் திட்டத்தில் ஒரு கணக்குக்கு ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஆனால், முதலீட்டாளர் வேண்டுமென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைப் பயன் படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ரூ.1 லட்சத்தை ஒரு மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டால் உங்களால் மீண்டும் அந்தக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியாது. ஆனால், அடுத்த மாதம் வேண்டுமென்றால், நீங்கள் உங்களது பெயரில் புதிய மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி அதில் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு நபர் எத்தனை மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும் அவரால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரைவில் பணி ஓய்வு பெறப்போகிறேன். என் முதலீடு எல்லாம் சேர்ந்தால் சுமார் ரூ.50 லட்சம் சேரும். மூன்றாண்டு காலத்துக்கு எனக்குப் பணம் தேவைப்படாது. அதன்பிறகு மாதம்தோறும் செலவுக்குத் தேவைப்படும் விதமாக எதில் முதலீடு செய்ய வேண்டும்?

கே.சந்தியா, சத்தியமங்கலம்

‘‘மூன்றாண்டுகளுக்கு பணம் தேவைப்படாது என்பதால், இந்த மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் சேமித்த பணத்தில் ரூ.15 லட்சத்தை மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலும், ரூ.15 லட்சத்தை பி.எம்.வி.வி.ஒய் திட்டத்திலும், ரூ.10 லட்சத்தை கடன் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். மீதமுள்ள பணத்தை ஈக்விட்டி தொடர்பான முதலீட்டுத் திட்டங்களான லார்ஜ்கேப் அல்லது இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த மூன்றாண்டுகளில் உங்களது ஈக்விட்டி முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வட்டியை நீங்கள் கடன் ஃபண்டில் மறுமுதலீடு செய்யலாம். இதனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களது செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணமும் உங்களிடம் இருந்துகொண்டே இருக்கும்.’’

ரூ.30,000 மாதச் செலவு... ஓய்வு பெறும்போது எவ்வளவு தேவை? - விளக்குகிறார் நிதி நிபுணர்

என்.பி.எஸ்ஸில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்து வருகிறேன். பணி ஓய்வு பெற்றபின் இந்தப் பணம் எனக்கு எப்படிக் கிடைக்கும், எனக்கு பென்ஷன் கிடைக்குமா?

கி.நிவேதா, சென்னை - 45

‘‘நீங்கள் பணி ஓய்வு பெற்றபின், உங்களது என்.பி.எஸ் கணக்கின் மொத்த தொகையில் 60%-ஐ மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வருமான வரி கிடையாது. மேலும், மீதியுள்ள தொகையை வைத்து மாதம்தோறும் உங்களுக்கு பென்ஷன் வழங்கப்படும்.’’

ரூ.30,000 மாதச் செலவு... ஓய்வு பெறும்போது எவ்வளவு தேவை? - விளக்குகிறார் நிதி நிபுணர்

என் வயது 28. நான் 55 வயதில் பணி ஓய்வு பெற விரும்புகிறேன். இப்போது எங்கள் குடும்பச் செலவு மாதம் ரூ.30,000. நான் 55 வயதில் ஓய்வு பெறும்போது என் குடும்பச் செலவு எவ்வளவு இருக்கும்? இப்போது என்னிடம் சேமிப்பு எதுவும் இல்லை. நான் மாதம் எவ்வளவு முதலீடு செய்து வரவேண்டும்?

கிருபாகர், திருச்சி - 5

நீங்கள் ஓய்வு பெறும்போது உங்களது மாத செலவானது 6% வருடா வருடம் உயர்ந்திருக்கும். எனவே, ரூ.1,44,970-ஆக இருக்கும். மேலும், உங்களது ஆயுள் காலம் 80 வயது என வைத்துக் கொண்டால், பணி ஓய்வு பெற்றபின் 25 ஆண்டுகளுக்கு உங்களுக்குப் பணம் தேவை. அப்போது ரூ.3,24,04,142 இருந்தால்தான் 80 வயது வரை நீங்கள் கவலை இல்லாமல் வாழமுடியும். இந்தப் பணத்தைப் பெற மாதந்தோறும் நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் சில ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.13,430-ஐ பிரித்து முதலீடு செய்து வரவேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு