நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள்..! - சந்தேகங்கள்... தீர்வுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
சொக்கலிங்கம் பழனியப்பன்

இ.எல்.எஸ்.எஸ் மூன்று ஆண்டுகள் லாக்-இன் கொண்டிருப்பதால், முதன்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது!

கேளுங்கள், பதில் கிடைக்கும் பகுதியில், வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் (இ.எல்.எஸ்.எஸ்) குறித்த நாணயம் விகடன் வாசகர்களின் சந்தேகங்களுக்கு ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com) நிறுவனத்தின் டைரக்டர் சொக்கலிங்கம் பழனியப்பன் விளக்கமளிக்கிறார்.

நான் கடந்த மூன்று வருடங்களாக, வருடத்துக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி குரோத் ஃபண்டில் வருமான வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்திருக்கிறேன். லாக்-இன் காலம் மூன்று வருடங்கள் முடிந்த பிறகு முதலீட்டை இப்போது எவ்வாறு வெளியே எடுத்து, மீண்டும் அதே ஃபண்டில் முதலீடு செய்து நடப்பு 2020-21–ம் நிதியாண்டில் வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வது?

- கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்

“நீங்கள் இரண்டு வகைகளில் இதைச் செய்யலாம். லாக்-இன் காலம் முடிந்த பிறகு அந்த ஃபண்டில் ரிடெம்ப்ஷன் கொடுத்துவிடுங்கள். தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். வந்த தொகையை இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மறுமுதலீடு செய்துகொள்ளுங்கள். இல்லையெனில், ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனமும் ஒரு லிக்விட் அல்லது ஓவர்நைட் ஃபண்டை வைத்துள்ளன; வங்கிக் கணக்குக்குப் பணம் வர வேண்டாம் என்றால், அந்த நிறுவனத்துக்குள்ளேயே இருக்கும் லிக்விட் அல்லது ஓவர்நைட் ஃபண்டில் மாற்றிவிட்டு, சில தினங்கள் கழித்து மீண்டும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுக்கு மாற்றிவிடுங்கள்.”

வரிச் சேமிப்பு  மியூச்சுவல் ஃபண்டுகள்..! - சந்தேகங்கள்... தீர்வுகள்!

நான் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர் (என்ஆர்.ஐ). என்னுடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் அவசியம் இருக்க வேண்டுமா?

- கே.ரவிசந்திரன், இ-மெயில் மூலம்

“நீங்கள் இந்தியாவில் டாக்ஸ் ஃபைல் செய்து, உங்களுடைய வருமானம் டாக்ஸ் வரம்பிலிருந்து (ரூ.2.50 லட்சத்துக்கு மேல்), நீங்கள் வருமான வரியை (ரூ 1.50 லட்சம் வரை) பிரிவு 80சி பிரிவின்கீழ் சேமிக்க விரும்பினால், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இல்லையெனில் அவசியமில்லை.”

நான் வரிச் சேமிப்புக்காக லார்ஜ்கேப் பங்குகளில் அதிக முதலீடு செய்யும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளேன். தற்போதைய நிலையில், அந்தப் பிரிவிலுள்ள சிறந்த ஃபண்டைப் பரிந்துரைக்கவும்.

- சாருமதி, இ-மெயில் மூலம்

“ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா டாக்ஸ் பிளான், பி.என்.பி பரிபா லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட். இங்கு தரப்பட்டுள்ள நான்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக லார்ஜ்கேப் பங்குகளைத் தங்களது போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பதுடன் நல்ல செயல்பாட்டையும் கொண்டுள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு ஃபண்டை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.”

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்

நான் ஒரு வங்கி ஊழியர். ஆண்டுச் சம்பளம் ரூ.10 லட்சத்துக்குமேல். சம்பளத்தில் மாதம் ரூ.5,500 வரிச் சேமிப்புக்குச் செல்கிறது. நான் எவ்வளவு தொகைக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் மூலம் அதிகபட்சம் வரி சேமிக்க முடியும்?

- எஸ்.சிவராமகிருஷ்ணன், மதுரை

“தற்போது வருடத்துக்கு ரூ.66,000 நீங்கள் சேமித்து வருகிறீர்கள். 80சி பிரிவின்கீழ் வருடத்துக்கு ரூ.1,50,000 வரைக்கும் வரியைச் சேமிக்கலாம். ஆகவே, இ.எல்.எஸ்.எஸ் மூலம் வருடத்துக்கு 84,000 ரூபாயை நீங்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளலாம்.”

நான் ரூ.5,000 ரூபாயை தலா ரூ.500 வீதம் டாப் 10 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இதனால் எனக்கு இழப்பு இல்லாமல் அதிக வருமானம் கிடைக்கும்தானே?

- வி.செந்தில்குமார், ஒரத்தநாடு

“5,000 ரூபாய்க்கு அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் போதுமானது. ஃபண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், வருமானம் அதிகமாகாது. நீங்கள் முதலீடு செய்துவரும் 10 ஃபண்டுகளில், எட்டு ஃபண்டுகளை நிறுத்தி விட்டு, சிறந்த இரு ஃபண்டுகளில் மட்டும் தலா ரூ.2,500 வீதம் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.’’

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீட்டில் லாக்-இன் பிரீயட் மூன்று ஆண்டுகள் முடிவதற்கு முன்னர் எந்தக் காரணங்களுக்காக எடுக்க முடியும்?

- கலைச் செல்வி, புதுக்கோட்டை

“பொதுவாக எடுக்க முடியாது. மூன்று வருடங்கள் என்பது கட்டாய லாக்-இன். வரிச் சலுகைக்காக முதலீடு செய்திருப்பவர், இறக்கும் தறுவாயில் முதலீடு செய்த ஓராண்டுக்குப் பிறகு வாரிசுதாரர்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.”

வரிச் சேமிப்பு  மியூச்சுவல் ஃபண்டுகள்..! - சந்தேகங்கள்... தீர்வுகள்!

புதிதாக வந்திருக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஒன்றின் என்.ஏ.வி மதிப்பு 9 ரூபாயாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இருக்கும் ஃபண்ட் ஒன்றின் என்.ஏ.வி சுமார் 315 ரூபாயாக உள்ளது. புதிய ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக யூனிட்டுகள் கிடைப்பதால், பிற்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்தானே?

- அமிர்தராஜ், சாத்தான்குளம்

“உங்களின் கூற்று உண்மையல்ல. புதிதாக வெளிவந்த ஃபண்டின் என்.ஏ.வி ரூ.9. அந்த யூனிட்டின் மதிப்பு ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.18 ஆகிறது என்றால், அதே அளவில் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பழைய திட்டத்தில் 315 ரூபாயாக உள்ள என்.ஏ.வி ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.630 ஆகியிருக்கும். மொத்தத்தில் இரண்டு ஃபண்டுகளும் ஐந்து ஆண்டுகளில் 100% வருமானம் கொடுத்துள்ளன என்பதுதான் உண்மை. ஆகவே, என்.ஏ.வி மதிப்பைப் பார்த்து முதலீடு செய்யாமல், ஃபண்டின் செயல்பாட்டைவைத்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.”

இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டை அதன் லாக்- இன் காலம் முடிந்தவுடன் எடுத்துவிட வேண்டுமா?

- விவேகானந்த், குத்தாலம்

“பணத் தேவை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், விட்டு வையுங்கள். பொதுவாக, பங்கு சார்ந்த திட்டங்கள் நல்ல வருவாயைத் தருவதற்குக் குறைந்தது 7 - 10 ஆண்டுகளாவது ஆகும். அதிக காலம் விட்டுவைக்கும் வரை நல்லது. இது இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களுக்கும் பொருந்தும்.’’

`மியூச்சுவல் ஃபண்டில் முதன்முதலாக முதலீடு செய்பவர்களுக்கு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்தான் ஏற்றவை’ என்கிறான் என் நண்பன். விளக்க முடியுமா?

- இந்திரக் குமார், கடையநல்லூர்

“இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம், வரிச் சேமிப்பு. உதாரணமாக, நீங்கள் 30% வரி வரம்பில் இருந்தால், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் போதே 45,000 ரூபாயைச் சேமித்துவிட்டீர்கள். ஆக முதலீட்டிலிருந்து உங்களுக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ, வரிச் சேமிப்பே முதல் சேமிப்பாகிவிடுகிறது. ஆகவே, நிறைய முதலீட்டாளர்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீட்டை விருப்பத்துடன் முதலீடு செய்வார்கள்.

மேலும், ஒருவர் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் முதன்முதலாகச் சேமிக்க அல்லது முதலீடு செய்யச் செல்வது, வரியைச் சேமிக்கத்தான். ஆகவேதான் உங்கள் நண்பர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும், இ.எல்.எஸ்.எஸ் ஒரு டைவர்சிஃபைடு ஃபண்ட் மற்றும் மூன்று ஆண்டுகள் லாக்-இன் கொண்டிருப்பதால், அது முதன்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்) குறித்த உங்கள் கேள்விகளுக்கு பி.எஃப் உதவி கமிஷனர் (வேலூர்) ஆர்.கணேஷ் பதில் அளிக்கிறார்.

வரிச் சேமிப்பு  மியூச்சுவல் ஃபண்டுகள்..! - சந்தேகங்கள்... தீர்வுகள்!

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.