என் வயது 70. ரூ.4 லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறேன். இந்த ஃபண்ட் முதலீட்டைத் தொடரலாமா என ஆராய்ந்து சொல்லவும்.
- கீதா, மெயில் மூலமாக

“உங்களுக்கு 70 வயதாகிறது. உங்கள் வயதையொட்டிய முதலீட்டாளர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மார்க்கெட் ஏற்ற இறக்கத்துக்்கு உட்பட்டது; மூலதனத்துக்கான முழுமையான பாதுகாப்பை அதில் எதிர்பார்க்க முடியாது’ என்பதுதான் அது. உதாரணமாக, நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் கடந்த மூன்று மாதங்களில் 25% இறக்கம்கண்டுள்ளது. இதை நீங்கள் கவனத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உங்கள் மாதாந்தர குடும்பச் செலவுக்கு போதுமான வருமானம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இண்டெக்ஸ் அல்லது லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இப்போதிருக்கும் சூழ்நிலையில், உங்கள் முதலீட்டைக் குறிப்பிட்ட காலம் வரை பரவலாக முதலீடு செய்தால் நல்லது. ஒரே ஃபண்டில் முதலீடு செய்வதற்கு பதிலாக, மிரே அஸெட் ஹைபிரிட் ஃபண்டிலும் முதலீட்டை பிரித்துச் செய்யுங்கள்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான் இரண்டு ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டைத் தொடரலாமா, மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா..?
நான் முதலீடு செய்யும் ஃபண்டுகள்... ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் (ரூ.5,000), எஸ்.பி.ஐ லார்ஜ்கேப் அண்ட் மிட்கேப் ஃபண்ட் (ரூ.5,000).
-சரத்குமார், மெயில் மூலமாக

“எஸ்.பி.ஐ லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டின் செயல்பாடு ஓரளவுக்கு நன்றாக உள்ளது. இந்த இறக்கத்திலும் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், பேங்க்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் செக்டாரில் இந்த ஃபண்டின் முதலீடு குறைவாக இருந்ததால், நீண்டகால அடிப்படையிலும் அதன் செயல்திறன் நன்றாக இருக்கிறது. எனவே, அதை அப்படியே தொடரவும்.
ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டை நிறுத்திவிடவும். இப்போது மார்க்கெட் அதிகம் இறங்கியிருப்பதால், உங்கள் முதலீட்டை இரண்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும். நீங்கள் யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
நான் மொத்த முதலீடாகப் பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறேன். 24 வயதாகும் என் மகளின் பெயரில் முதலீடு செய்திருக்கிறேன். அவருடைய 60-வது வயதில் ரூ.1.2 கோடி வருமானம் கிடைக்குமா?
முதலீடு செய்துள்ள ஃபண்டுகள்... எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் ரூ.20,000, எல் அண்ட் டி புரூ. ஃபண்ட் ரூ.30,000, ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.55,000, மிரே அஸெட் புளூசிப் ஃபண்ட் ரூ.35,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.30,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.30,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.30,000.
- சி.ஆர்.லட்சுமி நாராயணன், மெயில் மூலமாக

“உங்கள் முதலீடு ஆண்டுக்கு 12% வருமானம் தரும்பட்சத்தில் உங்களின் 60-வது வயதில் ரூ.1.18 கோடி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யும்போது பங்குச் சந்தை சில ஆண்டுகளில் அதிக லாபம் தந்தால், பிராஃபிட் புக் செய்து, மறு முதலீடு செய்தால் இலக்குகளை அடைவதற்கு ஏதுவாக இருக்கும். உங்களிடமுள்ள முதலீட்டில் மூன்று மாற்றங்கள் தந்திருக்கிறேன். அதுபோல உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்கவும்.

பங்குச் சந்தை இறக்கத்தில் எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்த ஃபண்டை விற்றுவிடவும். இந்த மார்க்கெட் இறக்கத்தில் நிறைய குரோத் ஃபண்டுகள் நல்ல விலையில் இருக்கின்றன. அவற்றில் முதலீடு செய்யவும். அதேபோல், எல் அண்ட் டி ஹைபிரிட் ஃபண்டின் செயல்பாடு குறைந்திருக்கிறது. அதை விற்றுவிடவும். ஹெச்.டி.எஃப்.சி ஹைபிரிட் ஃபண்டின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. அதன் போர்ட்ஃபோலியோவில் வங்கி மற்றும் ஃபைனான்ஸ் பங்குகள் அதிகமாக இருப்பது சாதகமாக இல்லை. எனவே, இந்த ஃபண்டையும் விற்றுவிடவும். நிறுத்திய ஃபண்டுகளுக்கு பதிலாக, மோதிலால் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், மிரே அஸெட் ஹைபிரிட் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.”
நான் 2008-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். அதில் சில ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடராமல் விட்டு விட்டேன். என் போர்ட் ஃபோலியோவை ஆய்வு செய்து சொல்லவும்.
என் முதலீடுகள்... ஃப்ராங்க்ளின் டெம்ப்பிள்டன் ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.2,500, ரிலையன்ஸ் நிப்பான் பேங்க்கிங் ஃபண்ட் ரூ.2,500, ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,500, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,500, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் ரூ.3,000, யூ.டி.ஐ எம்.என்.சி ஃபண்ட் ரூ.3,500. முதலீட்டை நிறுத்திய ஃபண்டுகளில் இருப்புத் தொகை... நிப்பான் இந்தியா ஃபண்ட் ரூ.35,000, யூ.டி.ஐ மல்டிகேப் ஃபண்ட் ரூ.35,000, ஆக்ஸிஸ் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.45,071, ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.25,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட் ரூ.52,499.
- முகமது யூனூஸ், மெயில் மூலமாக

“நீங்கள் 15 ஃபண்டுகளில் முதலீட்டை வைத்திருப்பது டைவர்சிஃபிகேஷன் என நினைத்தால், அது தவறு.
நிறைய ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அதை நிர்வகிப்பதும் சராசரி முதலீட்டாளர்களுக்கு மிகவும் கஷ்டம். சராசரி முதலீட்டாளர்களுக்கு 8 முதல் 10 ஃபண்டுகளே மிகவும் அதிகம். எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பு செய்து கொடுத்திருக்கிறேன். அதற்கு ஏற்றாற்போல் முதலீடு செய்யவும். தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப பரிந்து செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆண்டொன்றுக்கு முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் இரண்டு காலாண்டுகளுக்குக் கூர்ந்து கவனித்து, அந்த ஃபண்டை போர்ட்ஃபோலியோவிலிருந்து நீக்கிவிடவும். நீண்டகால முதலீடு செய்யும்போது டிவிடெண்ட் ஆப்ஷனைத் தவிர்க்கவும். உங்கள் போர்ட்ஃபோலியோ 15 - 20% வருமானம் தந்தால், பிராஃபிட் புக் செய்துகொண்டு, மறுபடியும் சூழ்நிலைக்கேற்ப முதலீடு செய்யவும்.
ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி மல்டிகேப் ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி பிசினஸஸ் எமெர்ஜிங் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி அண்ட் பாண்ட் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டுத் தொகையைப் பிரித்துக்கொண்டு முதலீடு செய்யவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.