நடப்பு
Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கம்... என்ன செய்வது?

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

குழப்பத்துக்கு சரியான தீர்வு!

என் வயது 47. நான் ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் (ரூ.1,500), ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் (ரூ.1,000) ஆகிய மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் ரூ.3 லட்சம் மொத்த முதலீடாகச் செய்திருக்கிறேன். அதன் மதிப்பு தற்போது ரூ.2.67 லட்சமாகக் குறைந்திருக்கிறது. எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்டில் ரூ.4 லட்சம் மொத்த முதலீடு செய்திருக்கிறேன். அதன் மதிப்பு தற்போது ரூ.2.74 லட்சமாகக் குறைந்திருக்கிறது. என் போர்ட்ஃபோலியோவை ஆய்வுசெய்து சொல்லவும். மேலும், கூடுதலாக ரூ.6 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவும் ஆலோசனை தேவை.

- தி.சங்கர், புதுச்சேரி

‘‘ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாக மந்தமாக இருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அவற்றில் பேங்கிங் மற்றும் ஃபைனான்ஷியல் செக்டார் பங்குகள் அதிக அளவில் இருப்பதால், இந்த கொரோனா சூழலிலிருந்து சந்தை மீண்டு வரும்போது இந்த இரண்டு ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது. அதுவரை காத்திருந்து நல்ல சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இவற்றிலிருந்து வெளியேறி, மோதிலால் ஆஸ்வால் 25 ஃபண்ட் மற்றும் கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் முதலீட்டைத் தொடரவும்.

ஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கம்... என்ன செய்வது?

எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்டின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளாகத் திருப்திகரமாக இல்லை. அதற்கு பதிலாக, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஆறு லட்சம் ரூபாயை எடெல்வைஸ் மல்டிகேப் ஃபண்டில் ரூ.2 லட்சமும், கோட்டக் எமெர்ஜிங் ஃபண்டில் ரூ.2 லட்சமும், டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்டில் 2 லட்சமும் பிரித்து முதலீடு செய்யவும்.”

என் மகள் பிறந்து இப்போதுதான் மூன்று மாதங்கள் ஆகின்றன. மகளின் மேற்படிப்புக்கு இப்போதிருந்தே மாதம் ரூ.2,500 முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். அதேபோல, மகளின் திருமணத்துக்கும் மாதம் ரூ.2,500 முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளேன். மகளின் மேற்படிப்புக்கு 18 ஆண்டுகளில் ரூ.6 லட்சமும், திருமணத்துக்கு 24 ஆண்டுகளில் ரூ.10 லட்சமும் (இன்றைய மதிப்பில்) எதிர்பார்த்து முதலீடு செய்துவருகிறேன்.

என் முதலீடுகளில் ஆர்.டி ரூ.1,000, `செல்வமகள்’ திட்டம் ரூ.1,000 தவிர மீதம் 3,000 ரூபாயை கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட் ரூ.1,500, மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட் ரூ.500 என மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய இலக்கை நிறைவேற்றிக்கொள்ள என்னுடைய போர்ட்ஃபோலியோ கைகொடுக்குமா..?

- சோமு, மெயில் மூலமாக

‘‘ஒரு போர்ட் ஃபோலியோவில் அஸெட் அலொகேஷன் நம்முடைய இலக்கை அடைய கைகொடுக்கும். எனவே, மார்க்கெட் ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது உங்கள் பணத்தை எடுத்துவிட வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆளாகாமல் பொறுமையாக இருக்கலாம். அத்துடன் பங்குச் சந்தை மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் போது, கடன் மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளிலிருந்து ஒரு தொகையை எடுத்து சிறிது காலத்துக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது.

சந்தை
சந்தை

உங்கள் முதலீட்டில் ஆர்.டி அதிக அளவு வருமானம் தராது. அதேபோல், இண்டெக்ஸ் ஃபண்டும் மார்க்கெட் குறியீட்டுக்கு ஏற்றாற்போல் வருமானம் தரும். நீண்டகால இலக்குகளுக்கு 70% பங்குச் சந்தையிலும், 30% கடன் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்தால் 11-12% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சந்தை
சந்தை

நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு 11% வருமானம் கிடைக்குமெனில், ஒரு மாதத்துக்கு ரூ.6,630-ம், 10% வருமானம் கிடைக்குமெனில், ஒரு மாதத்துக்கு ரூ.7,640-ம் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் இரண்டு மாறுதல்களைத் தந்திருக்கிறேன். ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.1,000, மோதிலால் ஆஸ்வால் ஃபண்டில் ரூ.500 முதலீடு செய்யவும்.”

மார்க்கெட் ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது உங்கள் முதலீட்டை எடுத்துவிட வேண்டும் என நினைக்கக் கூடாது!
சந்தை
சந்தை

எனக்கு மாதச் சம்பளம் ரூ.40,000. என் வயது 33. எனக்கு மூன்று வயதிலும், ஒரு வயதிலும் இரண்டு மகள்கள். நான் என் மகள்களின் திருமணம் மற்றும் என் ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்துவருகிறேன். நான் கூடுதலாக ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறேன். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும்.

நான் முதலீடு செய்யும் ஃபண்டுகள்... மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.2,500, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.5,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.2,500. என்னுடைய இலக்குகளை அடைய நான் இப்போது செய்துவரும் என் முதலீடுகள் சரியானவைதானா..?

- பிரபாகரன், மெயில் மூலமாக

“உங்கள் முதலீடு 15 ஆண்டுக்கால இலக்குக் கொண்டது என்றாலும், நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகள் ஐந்து மற்றும் பத்து ஆண்டுக்காலத்துக்கு ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்பதில் உறுதியில்லை. எனவே, குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு உங்கள் போர்ட் ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யவும். அதேபோல், சில ஆண்டுகள் பங்குச் சந்தை வருமானம் சராசரியைவிட மிக அதிகமாக இருக்கும்; அப்படி இருக்கும்போது, போர்ட்ஃபோலியோவில் 30% பிராஃபிட் புக் செய்து, அதை மீண்டும் முதலீடு செய்தால் உங்கள் போர்ட்ஃபோலியோவின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”

நான் எஸ்.ஐ.பி முறையில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள்... ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.2,500, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ரூ.2,500, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,500, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.1,500. இன்றைய காலகட்டத்துக்கேற்ப முதலீட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா? கூடுதலாக ரூ.2,000 முதலீடு செய்யவிருக்கிறேன். ஹைபிரிட் அல்லது நிப்ஃடி இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியா?

- ஆர்.கதிரவன், மெயில் மூலமாக

சந்தை
சந்தை

“எதிர்பாராதவிதமாக குறுகியகாலத்தில் பங்குச் சந்தை வேகமாகச் சரிந்ததால், இப்போது செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடரலாமா, புதிதாக எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க இது உகந்த நேரமா எனப் பலருக்கும் பலவிதமான கேள்விகள். ஒரு பொருளின் விலை குறையும்போது, நாம் யோசிக்காமல் அதை வாங்குகிற மாதிரி, பங்குச் சந்தை சரிவடையும் சூழலில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். எஸ்.ஐ.பி முறையே இதற்காக உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளை அப்படியே தொடரவும். ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்டைக் கூர்ந்து கவனியுங்கள். அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால், அதை நிறுத்திவிட்டு யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளைத் தொடரலாம். புதிய முதலீட்டை எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் செய்யவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.