Published:Updated:

ஃபண்ட் முதலீடு... 30 - ல் ஆரம்பம் 60 - ல் நிம்மதி! - ஓய்வுக்கால நிதித் திட்டம்

ஃபண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் முதலீடு

கடன் சார்ந்த முதலீடுகள் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருமா என்பது சந்தேகமே!

ஃபண்ட் முதலீடு... 30 - ல் ஆரம்பம் 60 - ல் நிம்மதி! - ஓய்வுக்கால நிதித் திட்டம்

கடன் சார்ந்த முதலீடுகள் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருமா என்பது சந்தேகமே!

Published:Updated:
ஃபண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் முதலீடு
‘வருமுன் காப்போம்’ என்ற பழமொழி கொரோனா நோய்க்கு மட்டுமல்ல, ஓய்வுக்காலத்துக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.

நவீன மருத்துவ வசதிகள் பெருகியிருக்கும் இன்றைய காலத்தில், மனிதர்களின் சராசரி ஆயுள் காலமும் அதிகரித்திருக்கிறது. இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 68 வயது. ஆயுள்காலம் முழுக்கச் சுறுசுறுப்பாக இயங்கி உழைப்பது சிரமம். 60 வயதை நெருங்கும்போதே உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டுவிடுகிறது. உடல் உழைப்பு குறையும்போது, வருமானம் குறையத் தொடங்குகிறது. அதற்குப் பிறகு சேமிப்பையோ, வாரிசுகளையோ நம்பி வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. ஓய்வுக்காலத்தில் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்குக் கையில் பணம் இல்லையென்றால், நம் வாழ்க்கையே நரமாகிவிடும். ஆனால், இன்றைக்குப் பலரும் 50 வயதைத் தாண்டிய பிறகே ஓய்வுக்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.ராமலிங்கம்
வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.ராமலிங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சிக்கல் எதிர்காலத்தில் உங்களுக்கு வராமலிருக்க வேண்டுமா... அதற்கு வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும்போதோ, தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டத் தொடங்கும்போதோ ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை ஆரம்பித்துவிடுவது அவசியம். ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டு விழிப்புணர்வு, முதலீட்டின் தேவை குறித்து Askgopal.in நிறுவனர் வி.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

“வாழ்க்கையில் கடுமையான உழைப்புக்குப் பிறகு ஓய்வுக்காலம் என்பது ஒரு வசந்த காலமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். குறிப்பாக, ஓய்வூதியம் போன்ற நிதி சார்ந்த விஷயங்கள் சரியாக இருந்தால், அதுவே ஓய்வுக்காலத்தில் ஒருவித நிம்மதியைப் பலருக்கும் தந்துவிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், தற்போதைய சூழலில் ஓய்வுக்காலம் என்பது ஒரு போராட்டக் காலமாக இருக்கிறது. முக்கியமாக, ஓய்வுக்காலத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் பலரும் திணறிவருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பணி ஓய்வுக் காலத்தில் இருப்பவர்களை `நிரந்தர ஓய்வூதியம் பெறுபவர்கள்’, `ஓய்வூதியம் பெறாதவர்கள்’ என இரு வகையாகப் பிரிக்கலாம். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வரத் தொடங்கிவிடும். ஆனால், தனியார்துறையில் பணியாற்றியவர்களுக்கு அது கிடைக்காது. அவர்கள் உழைத்த காலத்தில் சேர்த்துவைத்திருந்த பணத்தை வைத்துக்கொண்டு ஓய்வுக் காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் அல்லது வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஃபண்ட் முதலீடு
ஃபண்ட் முதலீடு

எதிர்காலத்தில் இந்த நிலை யாருக்கும் வரக் கூடாதென்றால், முப்பது வயது முதலே ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டைத் தொடங்கிவிட வேண்டும். ஓய்வுக்காலச் சேமிப்புக்கு அல்லது முதலீட்டுக்குப் பல வழிகள் உள்ளன. அரசு நடத்தும் என்.பி.எஸ்., இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நடத்தும் ஓய்வுக்காலத் திட்டங்கள் எனப் பல வகைத் திட்டங்கள் உள்ளன. ஓய்வுக்காலத்துக்கு நீண்டகாலத்தில் நல்ல வருமானம் பெற விரும்புகிறவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம்.

ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டுத் திட்டமிடலைச் செய்யும்போது ஒரு விஷயத்தைக் கட்டாயம் கருத்தில்கொள்ள வேண்டும். அது, பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தருவதாக இருக்க வேண்டும்.

நம் நாட்டில் வட்டி விகிதம் குறைந்துவருவதால், கடன் சார்ந்த முதலீடுகள் முதலீட்டுத் தொகைக்கு பாதுகாப்பு அளித்தாலும், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருமா என்பது சந்தேகமே.

பங்கு முதலீடுகளில் நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானம் ஈட்டலாம். என்றாலும், முன் அனுபவம் இல்லாத காரணத்தால் புதியவர்களுக்குப் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் எப்போதுமே சவாலானவையே. இந்த நிலையில், ஒரு நிதி ஆலோசகரின் துணையுடன் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் எஸ்.ஐ.பி முறையில் ஓய்வுக்கால முதலீட்டை மேற்கொள்வது நல்லது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓய்வுக்காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டுக் காலம் என்பது மிகவும் முக்கியம். முதலீட்டுக் காலத்துக்கேற்ப, ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்ற கூட்டுவட்டி முறையில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கும் வாய்ப்புள்ளது. இது குறித்து என்.ஜே பார்ட்னர் எஸ்.ராமலிங்கத்திடம் கேட்டபோது, “மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கூட்டுவட்டிக்கும் நீண்டகால முதலீட்டுக்கும் தொடர்பிருக்கிறது. முதலீட்டுக்காலம் அதிகரிக்க அதிகரிக்க, கூட்டுவட்டியின் பலனும் அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான், `இளம் வயதிலேயே முதலீட்டைத் தொடங்க வேண்டும்’ என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

ஃபண்ட் முதலீடு
ஃபண்ட் முதலீடு

30 வயதுள்ள ஒரு முதலீட்டாளர், தனது முதல் சம்பளத்தில் சிறு தொகையாக 3,000 ரூபாயை மாதந்தோறும் எஸ்.ஐ.பி மூலம் மல்டிகேப்/டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டில் ஓய்வுக்கால நிதிக்காக 28 வருடங்கள் முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 10% வருமானம் கிடைத்தால், அவருடைய 58 வயதில் கிடைக்கும் தொகை ரூ.50 லட்சம். இதே 50 லட்சம் ரூபாய் இலக்கை அடைய 10 வருடங்கள் கழித்து அதாவது, தனது 40 வயதில் ஆரம்பிக்க முற்படும்போது மாத எஸ்.ஐ.பி தொகையாக 8,700 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். 45 வயதில் ஆரம்பித்தால் 16,000 ரூபாய் மாத எஸ்.ஐ.பி தொகை தேவை.

ஈக்விட்டி எஸ்.ஐ.பி முதலீடு என்பது சீன மூங்கிலைப் போன்றது. முதல் வருடம் அதை நீரூற்றி, பேணிப் பாதுகாக்க, இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளிலும் பொறுமையோடும் சிரத்தையோடும் பராமரிக்க, ஐந்தாம் ஆண்டுகளில் சிறு துளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கும். அடுத்த ஆறே வாரங்களில் 90 அடிகள் வளர்ந்து நிற்கும். இதேபோல முதல் 3-5 வருடங்களில் நீங்கள் தொடங்கும் ஈக்விட்டி எஸ்.ஐ.பியும் சந்தையின் ஏற்ற இறக்க பாதிப்பைச் சந்தித்து கூட்டு வட்டியின் அதிசயத்தால் நீண்டகாலத்தில் விலைவாசி உயர்வை ஈடுசெய்து ஒரு நல்ல வருமானத்தை வழங்கும்” என்றார்.

ஓய்வுக்காலத்துக்காக 30 வயதில் திட்டமிட்டு முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதுக்குப் பிறகு கஷ்டமில்லாமல் இருக்கலாம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே முதலீட்டைத் தொடங்கிவிட்டேன்..!

ஃபண்ட் முதலீடு... 30 - ல் ஆரம்பம் 60 - ல் நிம்மதி! - ஓய்வுக்கால நிதித் திட்டம்

கோடீஸ்வரி (வயது 26), ஐ.டி நிறுவன ஊழியர்

‘‘எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்து முதலில் எதுவுமே தெரியாது. என்னோடு பணியாற்றும் நண்பர்களில் சிலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அப்போதுதான் என்னிடம் செலவுபோக மீதமுள்ள தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்ற யோசனை வந்தது. நிதி ஆலோசகரை அணுகி, எனக்கான நிதித் திட்டமிடலை முறையாக வகுத்துக்கொண்டேன். அதன்படி எனது ஓய்வுக்காலச் சேமிப்பை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டேன். இரண்டு ஃபண்ட் திட்டங்களில் தலா 1,000 ரூபாயை நீண்டகால இலக்கில் முதலீடு செய்துவருகிறேன். மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, நீண்டகால இலக்கில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது பங்குச் சந்தை இறக்கங்களைப் பார்த்து பதற்றப்படக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் நம் மூலதனம் கொஞ்சம் குறைந்தாலும், பிறகு சரியாகிவிடும்!’’

படம்: வி.சதீஷ்குமார்

20 ஆண்டு என் இலக்கு..!

ஃபண்ட் முதலீடு... 30 - ல் ஆரம்பம் 60 - ல் நிம்மதி! - ஓய்வுக்கால நிதித் திட்டம்

எம்.வடிவேல் முருகன் (வயது 31), தனியார் நிறுவனப் பணியாளர்

‘நல்ல வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டி எனது குடும்பத்தையும், எனது அடுத்த தலைமுறையையும் பொருளாதாரரீதியாக நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் மனதில் எப்போதும் உண்டு. 2015-ம் ஆண்டிலிருந்து நாணயம் விகடன் வாசித்துவருகிறேன். அதன் மூலம் பவர் ஆஃப் காம்பவுண்டிங் குறித்துத் தெரிந்துகொண்டதால் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆர்வம் பிறந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிதி ஆலோசகரின் வழிகாட்டலின்படி, எனது ஓய்வுக்கால நிதிக்காகத் திட்டமிட்டு முதலீடு செய்துவருகிறேன். 5,500 ரூபாயை இரண்டாகப் பிரித்து இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எனது ஓய்வுக்காலத் தேவைக்காகவே மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். இந்த முதலீட்டை இன்னும் 20 ஆண்டுக்காலத்துக்கு தொடர்வேன்.’’

படம்: தே.அசோக் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism