Published:Updated:

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

தங்கம்

பிரீமியம் ஸ்டோரி

குறைந்த வருவாய் உள்ள கீழ்த்தட்டு மக்கள், நடுத்தட்டு மக்கள், பெரிய செல்வந்தர்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வரை, அனைவருமே நம்பத்தகுந்த ஒரு முதலீடாகப் பார்ப்பது தங்கத்தைதான். அப்படிப்பட்ட தங்கத்தைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிற நிலை ஆறு வருடங்களுக்குபின் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக ஏறாமல் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் தேதியன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.3,021. ஆறு மாதம் கழித்து அதாவது, ஜூன் 31-ம் தேதியன்று 22 காரட் தங்கம் விலை ரூ.3,252. இது ஜூலை 31-ம் தேதியன்று ரூ.3,336-ஆக உயர்ந்தது. ஆனால், இந்த ஆகஸ்டில் முதல் ஏழு நாள்களிலேயே 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.3,547-ஆக உயர்ந்தது.

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளில் உயராமலேயே இருந்த தால், அதைப் பிற்பாடு வாங்கிக்கொள்ளலாம் என்று பலரும் இருந்தனர். ஆனால், ஆறு மாதங்களிலேயே கிராம் ஒன்றுக்கு ரூ.500 உயர்ந்திருப்பதைக் கண்டு, அடடா, வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோமே என்று கவலைப்படத் தொடங்கியிருக்கிறார்கள் பலர். இந்தக் கவலை ஆண்களைவிடப் பெண்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள், தங்கத்தின் இந்த விலையேற்றம் மேலும் தொடருமா, இந்த விலையிலும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால், லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா அல்லது கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாமா என்கிற கேள்விகள் பலரின் மனதிலும் இருக்கவே செய்கிறது. காரணம், தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம், அதைப் பெருமளவில் வாங்கி, மீண்டும் விலையை உயர்த்திவிடுகிறார்கள் மக்கள். தங்கத்தின் விலை உயர்ந்தாலும் இன்னும் உயரும் என்று நினைத்து மீண்டும் வாங்குகிறார்கள். இதனால் தங்க நகைக் கடைகளில் கூட்டத்துக்கு எப்போதும் குறைவில்லை.

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

மேலும், தங்கத்தை வாங்கும் நம் மக்கள் அதை விற்க வேண்டும் என்று கனவிலும் நினைப்பதில்லை. அப்படியே விற்றாலும் விற்ற அளவுக்கான தங்கத்தை மீண்டும் வாங்கிவிடுவதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணங்களை முதலில் பார்ப்போம்.

உலகக் காரணங்கள்

தங்கம் என்கிற முதலீட்டைச் சுற்றி உலகளவில் நடக்கும் நிகழ்வுகளை விரிவாக ஆராய்ந்தால், உலகளவில் பல காரணங்கள் இருப்பது தெரியும். காரணம், உலகளவில் தற்சமயம் நடந்துவருகிற பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும், ஒருசேர தங்கத்தின் விலையேற்றத் திற்குக் காரணமாக அமைந்துள்ளன.

அமெரிக்காவும் தங்கம் விலையும்

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 2008–ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் டாலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்தன. இதனால் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து, அமெரிக்க அதிபர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்ற கருத்துகள் மேலோங்கி வருகின்றன.

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

அப்படியானால், இனிவரும் காலத்தில் டாலரின் மதிப்பு சரிவடைவதற்கான சூழ்நிலை உருவாகுமா என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை ஆம் என்று சொல்வதுதான் இன்றைய நிலை. மதிப்பு இறங்கும் டாலரை நாம் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்; எதிர்காலத்தில் மதிப்பு உயரும் தங்கத்தை வைத்துக்கொள்வோம் எனப் பலரும் தங்கத்தை வாங்கி முதலீடு செய்வதால், தங்கம் விலை அண்மைக் காலத்தில் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள் சில ஏற்பட்டுள்ளன. இது, தங்கத்தின் விலை உயர்வதற்கு இதுவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.

அமெரிக்க - சீனப் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி) 2019 முதல் காலாண்டில் அதாவது, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 3.1 சதவிகிதமாக இருந்தது. இது, இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) 2.1 சதவிகித மாகக் குறைந்து காணப்படுகிறது. நடப்பு மூன்றாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர்) 1.5 சதவிகிதமாக மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் சென்ற மாத இறுதியில் நடந்த எஃப்.ஓ.எம்.சி கூட்டத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன.

சென்ற ஐந்தாம் தேதியன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது மீண்டும் புதிய வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இது வர்த்தகப்போர், இப்போதைக்கு உடனடியாக முடிவுக்கு வராது என்ற நிலையையே தோற்றுவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு (300 பில்லியன் டாலர் மதிப்பிலான) வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 10% வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

அமெரிக்க அதிபர் எடுக்கும் நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அமெரிக்க ஃபெடரல் கருதுகிறது. இந்தச் சரிவைத் தடுக்க அமெரிக்க ஃபெடரலானது, வருகிற செப்டம்பர் எஃப்.ஓ.எம்.சி கூட்டத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர் பார்க்கின்றனர். தங்கத்தின் விலை அதிரடியாக உயர இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

இரண்டாவதாக, அமெரிக்காவின் உற்பத்தி சார்ந்த பி.எம்.ஐ குறியீடு ஒரு வருடத்திற்கு முன்பு 60-ஆக இருந்தது. அதிலிருந்து படிப்படியாகக் குறைந்து, சென்ற ஜூலையில் 51.2-ஆக குறைந்து வருவது (பார்க்க வரைபடம்-1), பொருளாதாரத்தில் மாற்றங்கள் நடைபெறுவதை (சரிந்து வருவதை) உணர்த்துகிறது.

இந்தக் குறியீட்டில் உற்பத்திச் சார்ந்த 18 துறைகள் இருக்கின்றன. கடந்த ஜூலையில் ஒன்பது துறைகள் வளர்ச்சிப்பாதையிலும் ஒன்பது துறைகள் வளர்ச்சி குன்றியும் காணப்படுகின்றன.

இந்த பி.எம்.ஐ குறியீடு 50-க்குமேல் இருக்கும் வரை, பொருளாதாரம், வளர்ச்சியில் இருப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. வரும் மாதங்களில் இது மேலும் சரிந்து 50–க்குக் குறையும்பட்சத்தில், தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என்பது நிபுணர்களின் கணிப்பு.

அமெரிக்கா தொடுத்துள்ள இந்த வர்த்தகப் போரானது அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் பாதிப்படையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஏனென்றால், உலகப் பொருளாதாரத்தில் இரண்டு பெரிய நாடுகளிடையே சிக்கல்கள் ஏற்படும்போது, அது மற்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனாவின் யுவான் நாணய மதிப்பிறக்கம்

சீனாவின் மத்திய வங்கி, சென்ற வாரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக யுவானின் மதிப்பை 7-ஆக இறக்கம் செய்திருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணம். இனி, அமெரிக்க - சீன வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் செயல்வடிவம் பெறுவது சாத்தியமல்ல என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் ஓர் அடையாளம்தான் சீனாவின் இந்த நடவடிக்கை. வர்த்தகப்போரினால் கடுமையான விளைவுகள் உலகளவில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்று உலகளவிலுள்ள முதலீட்டாளர்கள் நினைப்பதால், தங்கம் விலை உயர்கிறது.

டாலர் Vs இந்திய ரூபாய்

சென்ற வருடம் 2018 ஜனவரியில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.63 முதல் ரூ.64 வரை இருந்தது. அப்போது தங்கத்தின் சர்வதேச விலையானது 1,300 டாலர்களாக இருந்தது. நம் உள்நாட்டில் 1 கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.2807-ஆகக் காணப்பட்டது. தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71-ஆக அதாவது, 10% இறக்கம் அடைந்துள்ளது. அதே நேரத்தில், சர்வதேசத் தங்கத்தின் விலை 1 டிராய் அவுன்ஸ் 15% அதிகரித்து, 1,500 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் உள்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் 20 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3,500-ஆக வர்த்தகமாகி வருகிறது.

குறைந்துவரும் வட்டி விகிதம்

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்துவருகின்றன. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளும் குறைத்து வருகின்றன. இந்த வருட இறுதிக்குள் ஐரோப்பிய மத்திய வங்கியும் குறைப்பதாகக் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு வர்த்தகத்தில் காணப்படுகிற மந்தமான நிலை, வருடாந்திரப் பொருளாதார வளர்ச்சி இறக்கமாக இருப்பது, பணவீக்கம் குறைவாக இருப்பது, நிறுவனங்களின் செயல்பாடுகளில் தளர்ச்சி மற்றும் நுகர்வோரின் நம்பிக்கை யின்மை போன்றவற்றை நமக்கு உணர்த்து வதாகவே உள்ளன.

விலையேற்றம் நீடிக்குமா?

மத்திய வங்கிகள் வட்டியைக் குறைப்ப தால், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படச் சாத்தியக்கூறு இருப்பதை உணர்த்துகின்றன. தற்போது, இதுதான் தங்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியக் காரணியாக உள்ளது. வருகிற காலத்தில் மத்திய வங்கிகளின் கூட்டத்தில் வட்டி விகிதங்களை வேகமாகக் குறைக்க முயலுமாயின், தங்கத்தின் சர்வதேச விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

அதிகரிக்கும் மத்திய வங்கிகளின் முதலீடு

2019–ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மத்திய வங்கிகள் 375 டன்கள் அளவுக்குத் தங்கத்தில் முதலீடு செய்துள்ளது. வருகிற டிசம்பருக்குள் 675 - 725 டன்கள் வரை முதலீடுகள் செய்யப்படலாம் என்று கருதப் படுகிறது. குறிப்பாக சீனா, கடந்த 2018 டிசம்பருக்குப் பிறகு தொடர்ச்சியாகத் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. (பார்க்க வரைபடம் 2) ரஷ்யாவும் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு டால ரிலிருந்து தங்கத்தின் பக்கம் முதலீட்டைத் திருப்பியுள்ளன. ஆக, மத்திய வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடு செய்துவருவது டாலர் குறித்து எதிர்மறையான பார்வையையே தருவதாக இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு இனிவரும் காலத்தில் குறையுமேயானால், தங்கம் விலை நன்றாக ஜொலிக்கவே செய்யும்.

அமெரிக்கா தொடுத்துள்ள இந்த வர்த்தகப் போர், உள்நாட்டு நிறுவனங்களைப் பெருமளவு பாதிக்கச் செய்யும்பட்சத்தில், நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதாவது, விற்பனை மற்றும் நிகர லாபம் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் கடந்த 10 வருடங்களாகத் தொடர் ஏற்றத்தில் இருக்கும் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைச் சந்திக்கலாம். அந்த நிலையில், பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிற தங்கத்தின்மீது அனைவரின் கவனமும் திரும்ப வாய்ப்பிருக்கிறது.

இப்போது வாங்கலாமா?

சர்வதேச விலை, 2013-ம் ஆண்டுக்குப்பிறகு 1500 டாலருக்குமேல் வர்த்தகமாகி வருகிறது. ஆகையால், இந்த ஏற்றம் நீண்ட இடை வெளிக்குப்பிறகு அதிகரித்துள்ளது. இந்தத் தருணத்தில் மிகுந்த ஊசலாட்டத்துடன் மிக வேகமாக விலை ஏறவும் அதே வேகத்தில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது. விலை அதிகரிக்கும்போது, டிமாண்ட் என்று சொல்லக்கூடிய தேவை குறையும்.

ஆனால், சர்வதேச விலையுடன் ஒப்பிடும் போது, நம் உள்நாட்டில் 22 காரட் ஒரு கிராம் ரூ.3,000 என்பது ஆதரவு விலையாக இருக்கும். அதற்குக்கீழே பெரிய அளவில் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் தற்போதைய கணிப்பு.

நீண்ட கால முதலீட்டிற்கு எஸ்.ஜி.பி என்ற அரசு வெளியிடுகிற தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால், 2.5% உத்தரவாதம் உள்ள வட்டியுடன் முதிர்வுத்தொகை கிடைப்பது குறிப்பிடத்தக்கது; பாதுகாப்பானதும்கூட.

ஆபரணத் தங்கத்தைப் பொறுத்தவரை, திருமணத் தேவைக்காகத் தங்கம் வாங்க இருப்பவர்கள் இப்போதைய நிலைமைகளைத் தவிர்த்துவிட்டு, உடனே வாங்கிக்கொள்ளலாம். மற்றவர்கள் கோல்டு இ.டி.எஃப் அல்லது தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்தது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை மட்டும் பார்க்காமல், அதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கத் தெரிந்துகொண்டால், தங்கத்தில் எப்போது முதலீடு செய்யலாம் என்பது தெளிவாகப் புரியும்!

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

கோல்டு இ.டி.எஃப்-ல் பெருகும் முதலீடு!

தங்கத்தை நேரடியாக வாங்காமல், கோல்டு இ.டி.எஃப் மூலமும் வாங்கலாம். உலக அளவில் 110–க்கும் மேற்பட்ட கோல்டு இ.டி.எஃப் வர்த்தக மாகின்றன. உலக அளவில் முக்கியமான தங்க இ.டி.எஃப் நிறுவனமான எஸ்.பி.டி.ஆர் கோல்டு ட்ரஸ்டில் 2019-ல் இதுவரை 1.7 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு முதலீடு செய்துள்ளனர். இதேபோல், இரண்டாவது இடத்தில் இருக்கும் ‘ஐஷேர் கோல்டு ட்ரஸ்ட்’லும் 1.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். செய்கூலி, சேதாரத்தினால் பணத்தை இழக்க விரும்பாதவர்கள் கோல்டு இ.டி.எஃப்-ல் தாராளமாக முதலீடு செய்யலாம்!

உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?

இறக்குமதி குறைகிறது, விலை உயர்கிறது!

தங்கம் விலையேற்றம் காரணமாக, நம் உள்நாட்டில் தங்க இறக்குமதியானது வருடாந்தர அடிப்படையில் ஒப்பிடும்போது, முடிவடைந்த ஜூலையில் மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு 55 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதும் விலையேற்றம் காரணமாக, ‘ஸ்கிராப் கோல்டு’ என்று சொல்லப்படும் பழைய நகைகள் அதிகம் கிடைப்பதால், வர்த்தகர்கள் இறக்குமதியைத் தவிர்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு