Published:Updated:

விலை குறையும் தங்கம் - வெள்ளி... இப்போது வாங்கலாமா..? தேவைக்கும் முதலீட்டுக்கும் வழிகாட்டல்

C O V E R S T O R Y

பிரீமியம் ஸ்டோரி

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிவேகமாக அதிகரித்தது என்றால், மறுபக்கம் தங்கம் விலை அதைவிட வேகமாக உயர்ந்தது. நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நகைக்கடைகள் மூடப்பட்டிருந்ததால், ஒரு சில மாதங்கள், மக்கள் நகைகளை வாங்காமல் இருந்தார்கள். இல்லையென்றால், விலையேற்றத் தையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவித்திருப்பார்கள். கொரோனா காலத்தில் கொண்டாடப் பட்ட அட்சய திருதியை அன்று இணையம் வழியாக மக்கள் தங்கம் வாங்கியதே இதற்கு சாட்சி.

தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வரலாறு காணாத உச்சபட்ச விலையை அடைந்து, ஒரு கிராம் தங்கம் 5,416 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 43,328 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு, கொரோனாவின் பாதிப்புகள் மெல்ல மெல்லக் குறைய, அனைத்து நாடுகளின் பங்குச் சந்தை வர்த்தகமும் தன் பழைய நிலைக்குத் திரும்ப, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய, அன்றிலிருந்து இன்று வரை தங்கத்தின் விலை வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. கடந்த எட்டு மாதங்களில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 1,201 ரூபாய் குறைந்து, 4,215 ரூபாயில் (10.03.2021) வர்த்தகமாகி வருகிறது. ஒரு சவரனுக்கு 9,608 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம்
தங்கம்

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை, எட்டு மாதங்களில் மீண்டும் மளமளவென சரிய என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ளவும், விலை குறையும் நேரத்தில் தேவைக்குத் தங்கம் வாங்கலாமா, நீண்டகாலத்துக்கு அதில் முதலீடு செய்யலாமா என்பது குறித்தும் நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

முதலில் சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானி, “தற்போதைய தங்கத்தின் விலை வீழ்ச்சியானது நுகர்வோர்களுக்கும், தங்கத்தின் மீது முதலீடு செய்வோர் களுக்கும் கிடைத்திருக்கும் வரப் பிரசாதமாகும். இந்தச் சரியான நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

அதேபோல, திருமணத் தேவை களுக்காக தங்கத்தைச் சேமிப்பவர்கள் அல்லது உடனடித் தேவை இருப்பவர்கள் திட்டமிட்டு தங்க நகைகளை வாங்கி வைக்கலாம். இதனால் நுகர்வோர்களுக்குப் பெரிய தொகை மிச்ச மாகும். இன்னும் ஓரிரு வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. அதன் பிறகு விலை உயரத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

நடப்பு மார்ச் மாதத்திலேயே தங்கத்தின் விலை ஏற்றம் ஆரம்பிக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தை வர்த்தகமானது சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதால், முதலீட்டாளர்களின் கவனம் இன்னும் தங்கத்தின் மீது திரும்பவில்லை. அதனால் தங்கம் விலை உயராமல், வீழ்ச்சியிலேயே இருக்கிறது. இந்த நிலை மாறி, விலை ஏற ஆரம்பித்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிகபட்ச விலையைக் காட்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வருகிற ஜூலை மாதத்துக்குள், தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்றார் தெளிவாக.

ஜெயந்திலால் ஜலானி, ஞானசேகர் தியாகராஜன்
ஜெயந்திலால் ஜலானி, ஞானசேகர் தியாகராஜன்

மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் தங்கத்தின் விலை ஏற்றத்தைப் பற்றியும், இறக்கத்தைப் பற்றியும் கேட்டோம்.

“கடந்த ஆண்டில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை, ராக்கெட் வேகத்தில் இறங்கிக் கொண் டிருப்பதை நினைத்து, ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள் நடுக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

தங்கத்தின் விலை வீழ்ச்சி விரைவில் கட்டுக்குள் வரும். அப்போது விலை வீழ்ச்சி தடைப்பட்டு, விலை ஏற்றம் தொடரும். அதனால் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள் பயந்துபோய், தங்க முதலீட்டிலிருந்து பின்வாங்க வேண்டாம். தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், தங்க நகைகளை வாங்குபவர்களும் இந்த விலை வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திச்சாலித்தனம்.

அதே சமயம், மொத்தமாகவும் இதில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதை விட பங்குச் சந்தை சார்ந்த மற்ற முதலீடுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன.

‘கடந்த ஆண்டில் பங்குச் சந்தை கணிசமாக இறங்கியபோது ஒரு குறிப்பிட்ட தொகையை அதில் முதலீடு செய்தேன். அது இப்போது டபுள் மடங்கு ஆகியிருக்கிறது. ஏற்கெனவே போட்ட பணத்தை மட்டும் பங்குச் சந்தையில் வைத்துக்கொண்டு, கிடைத்திருக்கும் லாபத்தை எடுத்து மொத்தமாகத் தங்கத்தில் போடலாமா?’ என்று என்னை சிலர் கேட்கிறார்கள். அப்படிச் செய்யாமல், உங்களுக்குக் கிடைத்திருக்கும் லாபம் 5 லட்சம் ரூபாய் என்றால், அந்தத் தொகையில் 2.5 லட்சம் ரூபாயை மட்டும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.

மீதமிருக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வெள்ளியிலும் முதலீடு செய்யலாம். ஏனெனில், தங்கத்துக்கு இணையாக வெள்ளியின் விலையும் ஏற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

நான் இதைச் சொல்ல முக்கியமான காரணம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின், கிளீன் எனர்ஜி திட்டம். விரைவில் தீர்ந்துபோகக்கூடிய பெட்ரோல் மாதிரியான எரிபொருள் களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சோலார் மற்றும் காற்றாலை எனர்ஜிகளை அதிகம் பயன்படுத்து வதை ஜோ பைடன் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளார். இதனால் அதிகமான அளவில் சோலார் பேனல்கள் தயாரிக்கப்படும்.

அப்படித் தயாரிக்கும் சோலார் பேனல்களில் வெள்ளி அதிக அளவில் பயன்படுத்தப்படும். இதனால் வெள்ளிக்கு அதிகளவில் தேவை உருவாகும். அதனால் வெள்ளியின் விலை நாளடைவில் அதிகரிக்கும்” என்றவர், தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கான காரணம் பற்றியும் சொன்னார்.

தங்கத்தின் அதிகபட்ச விலை
தங்கத்தின் அதிகபட்ச விலை

“இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கம் விலை அதிகரிக்கும். இதுவே இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றால் தங்கம் விலை குறையும்.

கடந்த நவம்பர் 2020-ல் 74.70 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 72.8 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று வெளியான பட்ஜெட் அறிக்கையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது. இதுவும் தங்கத்தின் விலைச்சரிவுக்கு ஒரு காரணமாகும். மேலும், கடன் பத்திரங்கள் மூலம் அதிக லாபம் பார்க்க முடிவதால், அதிகமான முதலீட்டார்கள் அதையே வாங்க விரும்புகின்றனர். இதனாலும், தங்கத்தின் விலை சரிந்திருக்கிறது” என்றார்.

நீண்டகால முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கும் தேவைக்கு தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கும் தங்கத்தின் இப்போதைய விலைக்குறைவு, தவறவிடக் கூடாத ஒரு வாய்ப்பு என்பதே நிபுணர்களின் கருத்து.

டி.எம்.மீர், திலகவதி, கோபிநாதன், தாமோதரன்
டி.எம்.மீர், திலகவதி, கோபிநாதன், தாமோதரன்

‘‘தங்கத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருக்கிறேன்!’’

டி.எம்.மீர், தாளவாடி.

“கொரோனா காலத்தில் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தபோது, ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, பங்குகளை வாங்கியிருந்தேன். அந்தப் பங்குகள் இப்போது எனக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கின்றன. அந்த லாபத்தை எடுத்து, விலைக் குறைந் திருக்கும் தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறேன். இன்று வரை தங்கத்தில் ரூ.5 லட்சம் ரூபாயைப் போட்டிருக்கிறேன். என் தந்தையும், தங்கத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்திருக்கிறார். அதனால், தங்க முதலீடு என்னைக் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

‘‘ரூ.2 லட்சம் ரூபாயை மிச்சம் பிடித்திருக்கலாம்!

திலகவதி, சென்னை.

‘‘கொரோனா காலத்தில்தான் என் மகளுக்கு நான் திருமணத்தை நடத்தி னேன். அப்போது அவளுக்கு சீர் செய்ய 30 சவரன் நகை தேவைப்பட்டது. ஆனால், விலை மிகவும் அதிகமாக இருந்ததால், என்னால் 20 சவரன் நகைதான் போட முடிந்தது. அதுவும் கடன் வாங்கிதான் சமாளித்தேன். ஆனால், இப்போது தங்கத்தின் விலை சவரனுக்கு 9,000 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. இன்றைய நிலை அன்று எனக்கு இருந்தால், இன்னும் கூடுதலாக தங்கத்தை வாங்கியிருப்பேன். 30 சவன் நகையைப் போட்டு மகளையும் கௌரவப் படுத்தியிருப்பேன். அல்லது எனக்கு 2 லட்சம் ரூபாய் வரை பணம் மிச்சமாகியிருக்கும். என்றைக்கு இருந்தாலும் தங்கம் வருமானம் தரக்கூடிய பொருள்தான். அதனால் இருக்கும் கடன்களை அடைத்துவிட்டு, எதிர்காலத் தேவைக்காக தங்கத்தை சிறுக சிறுகச் சேமித்து வைக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.’’

‘‘வருடத்துக்கு 25 கிராம் தங்கம் வாங்குவேன்!"

கோபிநாதன், திருவண்ணாமலை.

‘‘நான் பருவதமலை பகுதியில் டீக்கடை நடத்திதான் என் குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.அதன் காரணமாக எனக்கு முதல் குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளுக்கு எப்படியாவது 5 கிராம் தங்கநகை வாங்கி பரிசளித்துவிடுவேன். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அதனால் தங்கத்தின் தேவை அதிகமாகியிருக்கிறது. இப்போது வருடத்துக்கு 25 கிராம் வரை நகை வாங்கி சேமித்து வருகிறேன். கடந்த வருடம் கொரோனா தாக்கத்தால் என்னால் நகைகள் ஏதும் வாங்க முடியவில்லை. இந்த வருடம் தங்கத்தின் விலை இறங்கியிருப்பதால், சேமித்த பணத்தைக் கொண்டு நகை வாங்கப் போகிறேன்.’’

’‘பெரும்பகுதி தங்கத்துக்கே..!

’’தாமோதரன், வேலூர்.

“முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டே, பகுதி நேரமாக வேலைக்குப் போய் சம்பாதிக் கிறேன். எனக்குத் திருமண வயதில் அக்கா இருப்பதால், அவரின் திருமணத் தேவைக்காக நகைகளை சேமிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியைத் தங்க நகைகள் வாங்க ஒதுக்கி வருகிறேன். இன்று தங்கத்தில் விலை குறைந்திருப்பதால், சீட்டு போட்டும் நகைகள் வாங்க தீர்மானித்திருக்கிறேன்.”

- சே.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு