Published:Updated:

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

பெண்களுக்கான எளிய வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
பெண்களுக்கான எளிய வழிகாட்டி

- பெண்களுக்கான எளிய வழிகாட்டி

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

- பெண்களுக்கான எளிய வழிகாட்டி

Published:Updated:
பெண்களுக்கான எளிய வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
பெண்களுக்கான எளிய வழிகாட்டி

சேமிப்பு, சிக்கனம் என்பதெல்லாம் பெண்களுக்குக் கைவந்த கலை. ஆனால், சேமிப்பு என்றாலே... வீட்டில் யாருக்கும் தெரியாமல் அடுக்களை பாத்திரங்களில் சேமிப்பது, அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் மூலமாக எந்தவித உத்தரவாதமும் இல்லாத சீட்டுகளில் சேர்வது அல்லது வட்டிக்குக் கொடுத்து வாங்குவது என்பதுதான் பெரும்பாலானவர்களின் சாய்ஸாக இருக்கிறது. ஆனால், இவையெல்லாம் பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிந்துவிடுவதுதான் வாடிக்கை. இதற்கு சமீபத்திய உதாரணம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதியைச் சேர்ந்த பலரும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் ஆர்வமூட்டியதால், லட்சக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு, தற்போது அந்தப் பணம் போன இடம் தெரியாமல் பரிதவித்து நிற்பதுதான்.

சிவகாசி மணிகண்டன்
சிவகாசி மணிகண்டன்

வேலூர், காட்பாடியில் இயங்கிவரும் ‘ஐ.எஃப்.எஸ்’ என்கிற நிதி நிறுவனம், தன்னுடைய பினாமிகளை ஏஜென்ட்டுகளாக களத்தில் இறக்கிவிட்டு, ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறோம்’ என்று ஒரு கதையை எடுத்துவிட்டு, பத்திரத் தில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டு பணத்தை வசூலித்தது. ‘பத்திரத்திலேயே எழுதிக் கொடுக்கிறார்களே’ என்று நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். தெரிந்தவர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர். இப்படி பல்லாயிரம் கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. கடைசியில், அந்த நிறுவனத்தின் முக்கிய புள்ளிகள் எல்லாம் தலைமறைவாகிவிட, ஏஜென்டுகளும் தலைமறைவாகி யுள்ளனர். அலுவலகங்கள் எல்லாம் பூட்டிக்கிடக்கின்றன. இந்த ஏஜென்ட்டுகள் அனைவருமே பெரும்பாலும் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களைத்தான் முதலீடு செய்ய வைத்துள்ளனர். அதனால்தான் பலரும் நம்பி முதலீடு செய்துள்ளனர். ஆனால், கடைசியில் மொத்தமும் அதிகாரபூர்வமற்ற பணப் பரிமாற்றம் என்பதால், காவல்துறைகூட நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், போட்ட பணத்துக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதுதான் உண்மை.

‘சரி, வங்கியில் பணத்தைப் போட்டால் பெரிதாக லாபம் இல்லை; தபால் அலுவலகம் உள்ளிட்ட சேமிப்புகளிலும் பெரிதாக வருமானம் இருப்பதில்லை; தங்கத்தின் விலை... வாங்க முடியாத அளவில் உயர்ந்திருக்கிறது; நிலத்தை வாங்கிப் போடலாம் என்றால், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளும் பெரிதாக வளர்ச்சியில் இல்லை. இத்தகைய சூழலில் என்னதான் செய்வது?’ என்று தோன்றுகிறதுதானே?

அதற்காகவேதான் இருக்கிறது... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. ஆம், இப்போது இது பலரையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
CatLane

‘ஆனால், வழக்கமான முதலீடுகள்போல இது இல்லையே. சீட்டு, வட்டிப் பணம் போன்றவற்றைத் தெரிந்தவர்கள் மூலமாகச் செய்தோம். ஆனால், இது யாரென்றே தெரியாத நபர்கள் மூலமாக அல்லவா செய்யவேண்டியிருக்கிறது. இதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்?’ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றது தானே?!

ஆனால், அப்படி பயந்து விலகி நிற்கத் தேவையில்லை. பெண்களும் தாராளமாக இதில் முதலீடு செய்யலாம். இதற்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் செபி அமைப்பின் கண்காணிப்பு இருக்கிறது. யாரும் ஏமாற்றி விட்டு, மோசடி செய்துவிட்டு போக முடியாது. அதேசமயம், இது பங்குச் சந்தை முதலீடு என்பதால், ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால், நீண்டகால அடிப்படையில், இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்தான், நல்ல லாபத்தைத் தருபவையாக உள்ளன என்பது தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பெண்கள் எப்படி சுலபமாக முதலீடு செய்யலாம், லாபம் ஈட்டலாம். அது எப்படி என்பது பற்றி இந்த இணைப்பிதழில் எளிமையாகக் கற்றுத் தருகிறார் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன் (Aismoney.com).

``அனைத்து தரப்பினரின் தேவைகளுக்கும் ஏற்ற முதலீட்டுத் திட்டங் களை  மியூச்சுவல் ஃபண்ட் கொண்டுள்ளது. இதனாலேயே இதை ஒரு சூப்பர் மார்க்கெட் என்று கூட சொல்லலாம். இதில் ஒருநாள் தொடங்கி பல ஆண்டுகள் வரைக்கும் முதலீடு செய்யும் திட்டங்கள் இருக்கின்றன.

பெரும்பாலானோர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே பங்குச் சந்தை என்றும், அது அதிக ஆபத்தானது என்றும் நினைக்கிறார்கள். அது தவறு. ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்கள் தொடங்கி, மிக அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் வரைக்கும் பல திட்ட வகைகள் இதில் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு வகை ஃபண்டும் வெவ்வேறு ரிஸ்க் மற்றும் வருமான அளவை கொண்டது’’ என்ற அறிமுகத்துடன், சிவகாசி மணிகண்டன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் வழிகாட்டல்கள் இதோ..

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

ஒரே முதலீட்டு நோக்கம் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி, அதனை முதலீட்டாளர்கள் அனைவரின் சார்பாகவும் முதலீடு செய்யும் ஒரு நிறுவனம்தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். இந்த நிறுவனம், முதலீட்டுப் பணத்தைப் பெருக்கி, அதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சேவைக் கட்டணமாக தான் எடுத்துக்கொண்டு, மீதியை முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகைக்கேற்ப பிரித்து வழங்கி வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்கள் இரு தரப்பும் லாபம் அடைவதால், இதைத் தமிழில் பரஸ்பர நிதி என்பார்கள்.

யார் முதலீடு செய்யலாம்?

18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐக்கள்) முதலீடு செய்யலாம். மைனர்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் முதலீடு செய்யலாம்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
Deepak Sethi

என்னவெல்லாம் தேவை?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆதாரம் தேவைப்படும். முக்கியமாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம்.  மார்பளவு வண்ணப் புகைப்படம் இரண்டு தேவைப்படும்.

முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் அட்டை, பான் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். இந்த ஆவணங்களின் பிரதியில் முதலீட்டாளர் கையொப்பம் போட்டிருக்க வேண்டும்.

முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?

மியூச்சுவல் ஃபண்டில் முதல் தடவை முதலீடு செய்யும்போது  கே.ஒய்.சி (Know Your Customer) என்கிற படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இதில் பான் எண், ஆதார் எண், வீட்டு முகவரி, ஆண்டு வருமானம், வெளிநாட்டில் சொத்து உள்ளதா போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இந்த கே.ஒய்.சி படிவத்தை மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள் அல்லது  ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள், ஏஜென்ட்கள் போன்றவர்களிடம் கொடுக்கலாம். கே.ஒய்.சி படிவத்தை ஒருமுறை நிரப்பிக் கொடுத்தால், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய முடியும்.

ஆதார் மற்றும் பான் எண் அடிப்படையில், இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம் இ-கே.ஒய்.சி செய்யலாம். கே.ஒய்.சி முடிந்ததும் மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகங்கள், இதற்கென இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (Mutual Fund Distributors), ஆன்லைன் ஆகிய வழிகளில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து முதலீட்டைத் தொடங்கலாம்.

விண்ணப்பப் படிவத்தில் முதலீடு செய்பவரின் பெயர், வயது, வீட்டு முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, பணம் செலுத்துவதற்கான காசோலை எண், வங்கி பெயர்/கணக்கு எண் போன்ற தகவல்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். டிவிடெண்ட் (ஆதாயப்பங்கு), முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதேபோல் யூனிட்களை விற்கும்போது அந்தப் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.

குறைந்தபட்ச முதலீடு என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதம் ரூ.100, ரூ. 500, ரூ.1,000 கூட முதலீடு செய்ய முடியும்.  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP - Systematic Investment Plan) முறையில் சிறிய தொகையையோ, அல்லது மொத்தத் தொகையையோ முதலீடு செய்து வரலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு எந்த ஓர் உச்ச வரம்பும் இல்லை.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தற்கான ஆதாரமாக அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் இருக்கிறது. இதை தபால் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்புவார்கள். முதலீடு குறித்த அனைத்து விவரங்களையும் முதலீட்டாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் ஆக அனுப்புவார்கள்.

லாபம் எப்படிக் கிடைக்கும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் லாபத்தை இரு வழிகளில் முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறார்கள். ஒன்று டிவிடெண்ட் (Dividend). மற்றொன்று வளர்ச்சி (Growth). டிவிடெண்ட் ஆப்ஷனில் லாபம் இடையிடையே வழங்கப்படும். குரோத் ஆப்ஷனில் எப்போது பணம் தேவையோ லாபத்தை அப்போது எடுத்துக் கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பப் படிவத்தில் முதலீட்டாளர் டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன் எதையும் தேர்வு செய்யவில்லை என்றால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே குரோத் ஆப்ஷனை தேர்வு செய்துவிடும்.

நிகர சொத்து மதிப்பு - விளக்கம்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கேற்ப முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் (Units) ஒதுக்கித் தருவார்கள். புதிதாக ஃபண்ட் வெளியிடுவதை நியூ ஃபண்ட் ஆஃபர் (NFO- New Fund Offer) என்பார்கள். அப்போது ரூ.10 முக மதிப்பு (Face Value) கொண்ட யூனிட்களாகப் பிரித்துக் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு ஒருவர் ரூ.1,000 முதலீடு செய்தால், அவரின் கணக்கில் ரூ.10 மதிப்பு கொண்ட 100 யூனிட்கள் வரவு வைக்கப்படும்.

ரூ.10 என்பது திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகும். ஓராண்டு கழித்து ரூ.10 என்பது ரூ.11 ஆக அதிகரித்திருந்தால் முதலீட்டின் மதிப்பு ரூ.1,100 ஆக உயர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

யூனிட்டின் மதிப்பை நிகர சொத்து மதிப்பு (Net Asset Value - NAV) என்பார்கள். இந்த என்.ஏ.வி மதிப்பு அதிகரித்து வந்தால், அந்தத் திட்டம் லாபத்தில் இருக்கிறது என்று அர்த்தம். மதிப்பு, தொடர்ந்து குறைந்தால் அந்த ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை என்று அர்த்தம்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் சிறந்தது?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

நிதி மேலாண்மை, முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல், சிறு முதலீட்டுத் தொகை, குறைவான முதலீட்டுச் செலவு, வரிச் சலுகை எனப் பல நன்மைகளை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் ஒருவர் பெற முடியும்.

1. நிதி மேலாண்மை: நிபுணத்துவம் கொண்ட நிதி மேலாளர்கள் மூலம் கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது.

2. முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல்: முதலீட்டில் ரிஸ்க்கை குறைக்கும் ஒருவகையான முதலீட்டு உத்தி, முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல் (Diversification) ஆகும். ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டால், அதன் முதலீட்டுத் தன்மைக்கேற்ப சுமார் 20-25 கடன் பத்திரங்கள் அல்லது 25-50 பங்குகளில் முதலீடு பிரித்து செய்யப்பட்டிருக்கும். இதில் ஒன்றிரண்டு சரியாகச் செயல்படவில்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்குப் பெரிதாக வருமான இழப்பு இருக்காது.

3. குறைவான முதலீட்டுத் தொகை: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய சிறிய தொகை போதும். ரூ.100, ரூ.500, ரூ.1,000 இருந்தாலே முதலீட்டை ஆரம்பித்துவிடலாம் என ஏற்கெனவே பார்த்தோம். இந்தக் குறைந்தபட்ச தொகை நிறுவனத்துக்கு நிறுவனம், திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.

4. வரிச் சலுகை & வருமான வரி அனுகூலம்: மியூச்சுவல் ஃபண்டில் உள்ள வரி சேமிப்பு ஃபண்ட் ஆன இ.எல்.எஸ்.எஸ்ஸில் (ELSS - Equity-Linked Savings Scheme), செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும்  வருமான வரிச் சலுகை கிடைக்கும். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 என்பதால் அனைவரும் முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும். இருக்கிற வருமான வரி சேமிப்பு திட்டங்களிலே இதுதான் குறைவான லாக் இன் பிரீயட் (Lock-in period) கொண்டதாகும்; மூன்று ஆண்டுகள் மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு மற்ற முதலீட்டுத் திட்டங்களைவிட குறைவான வரி கட்டினால் போதும்.

5. எளிதில் பணமாக்குதல்: மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்களை பங்குச் சந்தை (டீமேட் மூலம் முதலீடு செய்திருந்தால்) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் விற்று பணமாக்க முடியும். ஃபண்டின் முதலீட்டுத் தன்மையைப் பொறுத்து உடனடியாக, 1,2,3 வணிக தினங்களுக்குள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும். மேலும், பணத் தேவைக்கேற்ப யூனிட்களை விற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. அதாவது, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் ரூ. 1 லட்சம் இருக்கிறது, ரூ.10,000 தேவை என்றால் அதற்கு இணையான யூனிட்களை மட்டும் விற்றால் போதும்.

6. அதிக வருமானம்: மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் அது கடன் ஃபண்டாக இருந்தாலும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டாக இருந்தாலும் மற்ற முதலீடுகளை விட அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். காரணம், அதில் இருக்கும் வரி அனுகூலம் மற்றும் நிதி மேலாளர்களின் நிதி நிர்வாகம் ஆகும்.

7. ஒழுங்குமுறை & முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு: மியூச்சுவல் ஃபண்ட் துறையை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் என்கிற செபி (SEBI - The Securities and Exchange Board of India) அமைப்பு கண்காணித்து வருகிறது. செபியின் பல்வேறு விதிமுறைகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த ஒழுங்குமுறை முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் முன்னேற்றத்துக்கு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆஃம்பி (AMFI - The Association of Mutual Funds in India) செயலாற்றி வருகிறது.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

8. வெளிப்படைத்தன்மை: மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் வெளிப்படைத்தன்மை அதிகம். அந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம், எந்தெந்த கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

9. ஒவ்வோர் இலக்குக்கும் ஏற்ற திட்டங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும் நோக்கங்களின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பல்வேறு வகையான முதலீட்டாளர்களின் தேவைகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, முதலீட்டாளர்களை ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள், அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் எனப் பிரிக்கலாம். இந்த முதலீட்டாளர்களின் தேவைகளை மனதில் வைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுவனங்கள் வடிவமைத்து வைத்திருக்கின்றன.

10. தொடர் முதலீடு & மொத்த முதலீடு: மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒருவர் சீரான முதலீட்டு முறை என்கிற எஸ்.ஐ.பி (SIP - A Systematic Investment Plan) மற்றும் மொத்தமாக முதலீடு செய்யும் `லம்ப்சம்' (Lumpsum) என்கிற முறையில் முதலீடு செய்யலாம். ஒருவர் இந்த இரு முறைகளிலும் கூட இணைந்து முதலீடு செய்ய முடியும். மொத்த முதலீடாக குறிப்பிட்டத் தொகையை செய்துவிட்டு, அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் (வாரம், மாதம், காலாண்டு) தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பித்துவிட்டு, இடையில் மொத்த முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

குறுகிய காலத் தேவைக்கு ஏற்ற கடன் ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கடன் சந்தை ஃபண்ட் (Debt Fund), பங்குச் சந்தை ஃபண்ட் (Equity Fund), கலப்பின ஃபண்ட் (Hybrid Fund) என மூன்றாகப் பிரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறுகிய காலத்தில் பணம் தேவைப்படும் என்கிறபோது, ரிஸ்க் குறைவான கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

கடன் ஃபண்டுகள் என்றால் என்ன?

 முதலீட்டாளர்களிடமிருந்து திரப்பட்டும் நிதி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் டெபாசிட்டுகள், அரசு கடன் பத்திரங்கள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யப்படுவது, கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள் எனப்படும்.

கடன் ஃபண்டுகளில் ரிஸ்க் உள்ள திட்டங்களும் உள்ளன; ரிஸ்க் இல்லாத திட்டங்களும் இருக்கின்றன. கில்ட் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட் போன்றவை ரிஸ்க் குறைவான பிரிவில் முக்கியமானவை. மூலதனத்துக்குக்கு இழப்பு இல்லாத வகையில் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளக் கூடிய வகையில் முதலீடு செய்வது இந்த வகை ஃபண்டுகளின் சிறப்பாகும்.

கடன் ஃபண்டுகளை பொறுத்தவரை மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட முதலீடு களை குறுகிய காலம் என்றும், மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு உட்பட்ட முதலீடுகளை நடுத்தர காலம் என்றும், ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீடு களை நீண்ட காலம் என்றும் சொல்லலாம்.

 ஃபிக்ஸட் டெபாசிட்டை விட சிறந்தது கடன் ஃபண்ட்!

கடன் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவாக இருப்பது போல், வருமானமும் குறைவாகத்தான் இருக்கும். அதே நேரத்தில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கம்பெனிகளுக்கு பதிலாக இந்தக் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்தக் கடன் ஃபண்டுகளில் முதலீடு எத்தனை நாள்களுக்கு இருக்கிறதோ அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். எஃப்.டி மாதிரி இடையில் எடுப்பதற்கு அபராதம், முழுப் பணத்தையும் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் இதில் இல்லை. மேலும், ஒரே வருமானம் என்றாலும் நீண்ட காலத்தில் லாபத்துக்கு வரிக்குப் பின்னால் கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கின்றன. இதனால், விவரம் தெரிந்த பலரும் கடன்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.

குறுகிய கால கடன் ஃபண்ட்... வகைகள்!

ஓவர்நைட் ஃபண்ட் (Overnight Fund),  லிக்விட் ஃபண்ட் (Liquid Fund), அல்ட்ரா சார்ட் டூரேஷன் ஃபண்ட் (Ultra Short Duration Fund), லோ டூரேஷன் ஃபண்ட் (Low Duration Fund), மணி மார்க்கெட் ஃபண்ட் (Money Market Fund), ஷார்ட் டூரேஷன் ஃபண்ட் (Short Duration Fund), கார்ப்பரேட் பண்ட் ஃபண்ட் (Corporate Bond Fund), பேங்கிங் அண்ட் பி.எஸ்.யூ ஃபண்ட் (Banking and PSU Fund), கில்ட் ஃபண்ட் (Gilt Fund) ஆகிய ஃபண்ட் வகைகள், குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவை. இவற்றை பற்றிப் பார்ப்போம்.

ஓவர்நைட் ஃபண்ட் (Overnight Fund): ஒரே ஒரு நாள் முதிர்வு கொண்ட இதில், பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள்தான் முதலீடு செய்யும்.

லிக்விட் ஃபண்ட் (Liquid Fund): இந்த ஃபண்ட் வங்கிச் சேமிப்பு கணக்குக்கு மாற்று என்பதால் அதை விரிவாகப் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட திட்டம், லிக்விட் ஃபண்ட். அதிக தரக்குறியீடு கொண்ட நல்ல நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவாக இருக்கிறது. இதன் பெயருக்கேற்ப இதனை விரைவாக பணமாக்க முடியும்.

 லிக்விட் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; முதலீடு செய்து ஆறு நாள்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ‘கையில் இருக்கும் பணத்தை, ஒரு வாரம், பத்து நாள், இருபது நாள், ஒரு மாதம் என ஏதாவது ஒரு ரிஸ்க் இல்லாத திட்டத்தில் போட்டு கொஞ்சம் வருமானம் பார்க்க முடியுமா' என்று கேட்டால், அதற்கு ஏற்றதுதான் இந்த லிக்விட் ஃபண்ட். இந்த ஃபண்டில் 7, 10, 15 நாள்களுக்குக்கூட பணத்தைப் போட்டு லாபம் பார்க்கலாம்.

குறுகிய காலத் தேவைக்குப் பணத்தைப் போட்டு வைக்க, அவசரக்கால தேவைக்கு எமர்ஜென்ஸி ஃபண்ட் உருவாக்க இந்த லிக்விட் ஃபண்ட் உதவும்.

லிக்விட் ஃபண்டில் இன்று காலை 11 மணிக்குள் எழுதிக்கொடுத்தால், நாளை காலை 11 மணிக்குள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும். நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஓரிரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்,  லிக்விட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி போன்ற முன்னணி வங்கிகளுடன் இணைந்து ஏ.டி.எம் கார்டு கொடுத்திருக்கின்றன. இதைக் கொண்டு மொத்த தொகையில் பாதியை எப்போது வேண்டுமானாலும் ஏ.டி.எம் மூலம் எடுத்துக் கொள்ளலாம். மீதித் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் எழுதிக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இந்த கார்டை பயன்படுத்தி ஷாப்பிங்கும் செய்ய முடியும்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

ஆன்லைன் கணக்கு இருக்கும்பட்சத்தில், லிக்விட் ஃபண்டிலிருந்து முதலீட்டாளரின் வங்கிக் கணக்குக்கு மொத்த தொகையையும் சுமார் 30 நிமிடத்துக்குள் மாற்ற முடியும். ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவை மொபைல் செயலி (App) மூலம் நொடியில் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யும் வசதி மற்றும் பணம் எடுக்கும் வசதியை வழங்குகின்றன.

லிக்விட் ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100-லிருந்து ஆரம்பிக் கிறது.  வங்கி சேமிப்பு கணக்கை விட சிறிது அதிக வருமானம் கொடுப்பதாக இந்த லிக்விட் ஃபண்ட் இருக்கிறது.

தற்போதைய நிலையில் இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் ஆண்டுக்கு சுமார் 4% ஆக இருக்கிறது. வங்கி சேமிப்புக் கணக்குக்கான வட்டி பொதுவாக 2.7% முதல் 3% ஆக இருக்கிறது.

அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்ட்  (Ultra Short Duration Fund): 3 முதல் 6 மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்கள் இதில் முதலீடு செய்ய லாம். ஓராண்டில் டாப் ஃபண்டுகளின் வருமானம் சுமார் 4% ஆக உள்ளது.

லோ டூரேஷன் ஃபண்ட் (Low Duration Fund): இந்த ஃபண்டில், 6 முதல் 12 மாதங்களில் பணம் தேவைப்படுபவர்கள் முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் சுமார் 4-5% ஆக உள்ளது.

மணி மார்க்கெட் ஃபண்ட் (Money Market Fund): முதலீட்டுக் காலம் சுமார் ஓராண்டு என்றால் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் ஓராண்டில் சுமார் 4% ஆக உள்ளது.

ஷார்ட் டூரேஷன் ஃபண்ட் (Short Duration Fund): முதலீட்டுக் காலம் ஓராண்டு முதல் மூன்றாண்டுக்குள் என்றால் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் மூன்றாண்டுக் காலத்தில் ஆண்டுக்கு 7% - 8.45% ஆக உள்ளது.

கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் (Corporate Bond Fund): இந்த ஃபண்டில் திரட்டப்படும் பணத்தில் குறைந்தபட்சம் 80% பெரிய நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். அதுவும் அதிக தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்யப்படும். அந்த வகையில், இந்த கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்டில் ரிஸ்க் சற்று குறைவாக உள்ளது. முதலீட்டுக் காலம் ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இருக்கலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் மூன்றாண்டில் 6.5 - 7.5% ஆக உள்ளது.

பேங்கிங் அண்ட் பிஎஸ்யூ ஃபண்ட் (Banking and PSU Fund): இந்த ஃபண்டில் திரட்டப்படும் தொகையில் குறைந்தபட்சம் 80%, வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். அரசு சார்ந்த நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் மிக குறைவாகும். இந்த ஃபண்டுகளின் மூலம் பாதுகாப்பான, நிலையான, தொடர்ச்சியான வருமானத்தை எதிர்பார்க்கலாம். மூன்றாண்டுக்குள் முதலீட்டுக் காலம் இருந்தால் இதில் முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் 6% -7% ஆக உள்ளது.

கில்ட் ஃபண்ட் (Gilt Fund): முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும்  பணத்தில் குறைந்தபட்சம் 80% அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம். அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் இல்லை. இதனால், மூலதனத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், மூத்தக் குடிமக்கள் ஆகியோருக்கு ஏற்ற திட்டம் ஆகும்.  இந்த ஃபண்டிலும் மூன்றாண்டு வரை முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் 6% - 6.45% ஆக உள்ளது.

 பிள்ளைகளின் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி ஆண்டுக் கட்டணம், காப்பீட்டு திட்டங்களின் ஆண்டு பிரீமியம், உள்நாட்டு சுற்றுலாவுக்கு தேவையான தொகை போன்றவற்றுக்கு இந்த குறுகிய கால கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

நடுத்தர, நீண்ட கால கடன் ஃபண்டுகள்... எந்தத் தேவைகளுக்கு முதலீடு செய்யலாம்?

நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் ஃபண்டுகளில் மீடியம் டூரேஷன் ஃபண்ட் (Medium Duration Fund), மீடியம் டு லாங் டூரேஷன் ஃபண்ட் (Medium to Long Duration Fund), கில்ட் ஃபண்ட் வித் 10 இயர் கான்ஸ்டன்ட் டூரேஷன் ஃபண்ட் (Gilt Fund with 10 Year Constant Duration Fund) ஆகியவை முக்கியமானவையாகும்.

மீடியம் டூரேஷன் ஃபண்ட் (Medium to Long Duration Fund): முதலீட்டுக் காலம்  3 மற்றும் 4 ஆண்டுகளுக்கு இடையே இருந்தால் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்டில் சிறிய வீடு வாங்க, வீட்டுக் கடன் வாங்க முன்பணம், சிறிய கார் வாங்க தேவைப்படும் தொகை, வெளிநாட்டு சுற்றுலா, பிள்ளைகளின் கல்வி அல்லது கல்யாணத்துக்கு இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள்தான் இருக்கிறது என்றால் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்ட் பிரிவில் டாப் ஃபண்டுகளின் வருமானம் 7.5% - 9% ஆக உள்ளது.

மீடியம் டு லாங் டூரேஷன் ஃபண்ட் (Medium to Long Duration Fund): முதலீட்டுக் காலம் 4 மற்றும் 7 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருந்தால் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். பெரிய வீடு வாங்க வீட்டுக் கடன் முன்பணம், பெரிய கார் வாங்க தேவைப்படும் தொகை, வெளிநாட்டு சுற்றுலா, பிள்ளைகளின் உயர்க்கல்வி, கல்யாணத்துக்கு இன்னும் சுமார் 5 ஆண்டுகள் இருக்கிறது என்கிற நிலையில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இந்த மீடியம் டூரேஷன் ஃபண்ட் இருக்கிறது. இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானமும் 7.5% -9% ஆக உள்ளது.

 லாங் டூரேஷன் ஃபண்ட் (Long Duration Fund): முதலீட்டுக் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஃபண்ட் ஏற்றதாகும். கார் வாங்க, வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணத்துக்கு சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தால் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் 7.5% - 8.5% ஆக உள்ளது.

கில்ட் ஃபண்ட் வித் 10 இயர் கான்ஸ்டன்ட் டூரேஷன் ஃபண்ட் (Gilt Fund with 10 Year Constant Duration Fund): முதலீட்டுக் காலம் சுமார் 10 ஆண்டுகள் என்றால் இதில் முதலீடு செய்யலாம். டாப் ஃபண்டுகளின் வருமானம் சுமார் 9% ஆக உள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், பெரிய கார், சொந்த வீடு வாங்க, பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணத்துக்கு சுமார் 10 ஆண்டுகள் இருக்கும் நிலையில் இந்த ஃபண்ட் பிரிவில் முதலீடு செய்யலாம்.

நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு சார்ந்த ஃபண்டுகள்!

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள், கடன் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது ரிஸ்கானவை; குறுகிய காலத்தில் மூலதனத் துக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இழப்பு எல்லாம் மூன்று அல்லது ஐந்தாண்டுகளுக்கு உட்பட்ட முதலீடுகளுக்குத்தான் அதற்கு மேற்படும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு மூலம் சுமார் 12% முதல் 15% வருமானம் பெற வாய்ப்புள்ளது.

முதலீட்டுக் காலம் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில்தான் இந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள்தான் முதலீடு செய்ய வேண்டும்.

லார்ஜ் கேப் (Large Cap), மிட் கேப் (Mid Cap), ஸ்மால் கேப் (Mid Cap) ஃபண்டுகள்!

ஈக்விட்டி ஃபண்டுகளை லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என மூன்று பெரும் பிரிவாக செபி பிரித்துள்ளது. இந்த ஃபண்டுகளில் 5, 10, 15, 20 ஆண்டுகள் என நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை குறைக்க முடியும். மேலும், நீண்ட காலத்தில் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது மூலம் பணத்தை பல மடங்கு பெருக்கி செல்வம் சேர்க்க முடியும்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

ரிஸ்க்குக்கு ஏற்ற ஃபண்டுகள்!

ஈக்விட்டி ஃபண்டை பொறுத்தவரையில் ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் லார்ஜ் கேப் ஃபண்ட், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் பிளெக்ஸி கேப் ஃபண்ட் (Flexi Cap Fund) மற்றும் மல்டி கேப் ஃபண்டுகளில் (Multi Cap Fund) முதலீடு செய்யலாம். நடுத்தர அளவு ரிஸ்க் எடுப்பவர்கள் லார்ஜ் கேப் ஃபண்ட் (Large Cap Fund) மற்றும் மிட் கேப் ஃபண்டுகளிலும் (Mid Cap Fund), அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மிட் கேப் (Mid Cap), ஸ்மால் கேப் (Small Cap), செக்டோரல் ஃபண்டுகளிலும் (Sectoral Cap Fund) முதலீடு செய்யலாம்.

முதலீட்டுக் காலம் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் என்கிற பட்சத்தில் லார்ஜ் கேப், ஃபிளெக்ஸி கேப் மற்றும் மல்டி கேப் ஃபண்டுகளிலும், சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் 8 ஆண்டுகளுக்கு மேல் என்றால் லார்ஜ் கேப் ஃபண்ட் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளிலும் 8 ஆண்டுகளுக்கு மேல் என்றால் மிட் கேப், ஸ்மால் கேப், செக்டோரல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

கலப்பின ஃபண்டுகள் (Hybrid Funds) குறைந்த ரிஸ்க்கில் நல்ல வருமானம்!

நடுத்தர அளவு ரிஸ்க்கில் பணவீக்க விகிதத்தை விட  நல்ல வருமானத் துக்கு ஹைபிரிட் திட்டங்கள் உள்ளன. முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணத்தை நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவது கலப்பின திட்டங்கள் எனப்படுகின்றன.

நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீட்டு சதவிகிதத்துக்கேற்ப இந்த ஃபண்டுகளில் ரிஸ்க் அளவு இருக்கிறது.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
Deepak Sethi

பெண்களுக்கு ஏற்ற கலப்பின ஃபண்டுகள்!

இந்த ஹைபிரிட் ஃபண்டுகளில் பெண்களுக்கு ஏற்ற ஃபண்டுகளாக டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்ட் (Dynamic asset allocation fund), மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் (Multi asset allocation fund) ஆகிய இரண்டை குறிப்பிடலாம். இந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10%-க்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்ட் (Dynamic asset allocation fund): பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டைக் கூட்டி குறைத்து முதலீடு செய்வது, டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்ட் ஆகும். இந்தத் திட்டம் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும்போது கடன் பத்திரங் களில் முதலீடு அதிகரிக்கப்படும். இதுவே பங்குச் சந்தை வீழ்ச்சியிலிருந்து நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்படும். சுமார் மூன்றாண்டு இலக்குகளுக்கு இந்த ஃபண்டில் முதலீடு செய்வது சரியாக இருக்கும். இந்தப் பிரிவில் டாப் ஃபண்டுகளின் வருமானம் 12% - 15% ஆக உள்ளது.

மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் (Multi asset allocation fund): முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் தொகை, குறைந்தபட்சம் மூன்று சொத்து பிரிவுகளில் குறைந்தபட்சம் தலா 10% வீதம் முதலீடு செய்வது மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் ஆகும்.

மூன்று சொத்து பிரிவு என்கிறபோது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் ஆகும். சில மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் வெளிநாட்டு பங்குகளிலும் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் ஃபண்டின் ரிஸ்க் குறைக்கப்படுவதோடு, வருமானமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது பங்குச் சந்தை சரிவில் இருக்கும். அந்த வகையில் இந்த ஃபண்ட்டின் ரிஸ்க் சற்று குறைவாக இருக்கும். 3 ஆண்டுக்கு மேற்பட்ட இலக்குகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தப் பிரிவில் டாப் ஃபண்டுகளின் வருமானம் 12-16% ஆக உள்ளது.

எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி... எதை எப்போது பயன்படுத்தினால் லாபம்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகம் பேர் முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கு முக்கிய கரணம்... எஸ்.ஐ.பி (SIP-Systematic Investment Plan), எஸ்.டி.பி (STP-Systematic Transfer Plan) மற்றும் எஸ்.டபிள்யூ.பி  (SWP-Systematic Withdrawal Plan) ஆகிய மூன்று முதலீட்டு வசதிகள்தான். இவற்றை எப்போது பயன்படுத்தினால் லாபம் எனப் பார்ப்போம்.

சீரான முதலீட்டுத் திட்டம்:

எஸ்.ஐ.பி என்பது தனி முதலீட்டுத் திட்டமல்ல. இது ஒரு முதலீட்டு முறையாகும். மொத்தமாக பெரிய தொகையை முதலீடு செய்ய வசதி இல்லாத வர்களுக்கு உதவும் முதலீட்டு முறைதான் இது. தபால் அலுவகலம் மற்றும் வங்கி ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) போல், ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வருவதுதான் மியூச்சுவல் ஃபண்டில் சீரான முதலீட்டுத் திட்டம் எனப்படுகிறது. இந்த எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டாளர் ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நிலையான தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். குறிப்பிட்ட தொகையை வழக்கமான இடைவெளியில், அதாவது வாரம், மாதம் மற்றும் காலாண்டு போன்ற இடைவெளியில் முதலீடு செய்ய முடியும். இப்படி எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதால் பங்கு சார்ந்த திட்டங்களில் நேரம், காலம் பார்க்க தேவையில்லை. சந்தையின் ஏற்றம் மற்றும் இறக்கத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்வது மூலம் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

சீராக பணம் எடுக்கும் திட்டம்

பணி ஓய்வுக்காலத்தில் இருப்பவர்கள், முதலீட்டின் மூலம் இடையிடையே செலவுக்கு பணம் தேவைப்படுகிறவர்களுக்கு ஏற்றது இந்த சீராக பணம் எடுக்கும் திட்டம் (Systematic Withdrawal Plan- SWP) என்கிற எஸ்.டபிள்யூ.பி ஆகும்.

இதை சிறிது சிறிதாக முதலீடு செய்கிற எஸ்.ஐ.பி. திட்டத்தின், தலைகீழ் எனலாம். இந்த எஸ்.டபிள்யூ.பி முறையில் தொடர்ந்து சீரான இடைவெளியில் பணம் திரும்ப பெறப்படுகிறது. இந்த எஸ்.டபிள்யூ.பி முறையில் வாரம், 15 நாள்கள், மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை ஃபண்டிலிருந்து குறிப்பிட்ட தொகையை நம் வங்கிக்கணக்கு மாற்றிக் கொள்ள முடியும்.  மாதம் எவ்வளவு தொகை தேவையோ அதற்கேற்ப யூனிட்கள் விற்கப்பட்டு, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

ஒருமுறை, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் எழுதிக் கொடுத்துவிட்டால், அதில் குறிப்பிட்டுள்ள ஆண்டுகளுக்கு அல்லது ஃபண்டில் பணம் இருக்கும் வரை, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். வேண்டாம் என்றால் இடையில், நிறுத்திக்கொள்ளலாம்.

 எஸ்.டபிள்யூ.பி முறையில் மாதா மாதம் வங்கிக் கணக்கு பென்ஷன் போல் ஒரு தொகை வந்து சேருவதால், பணி ஓய்வுப் பெற்றவர்கள் மத்தியில் இதற்கு அண்மைக் காலத்தில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

சரியான திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?

 இந்தியாவில் 45 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் நூற்றுக்கணக்கான திட்டங்களை கொண்டிருக் கின்றன. இவை எல்லாம் சேர்ந்தால் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சரியான திட்டத்தை எப்படித் தேர்வு செய்வது என முதலீட்டாளருக்கு குழப்பம் ஏற்படுவது இயற்கையே.

 சரியான ஃபண்டுகளை தேர்வு செய்துவிட்டால் போதும் நிதி இலக்குகள் எல்லாம் சுலபமாக நிறைவேறிவிடும்.

 நட்சத்திரக் குறியீடுகள், ஃபண்டுகளின் கடந்த கால செயல்பாடுகளின் அடிப்படையில் முதலீட்டுக்கு ஃபண்டுகளை தேர்வு செய்தாலும், தனிநபர்களின் முதலீட்டுக் காலம், ரிஸ்க் எடுக்கும் திறன், ஃபண்டுகளின் எதிர்கால செயல்பாடு, வருமான எதிர்பார்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வதுதான் மிகச் சரியாக இருக்கும்.

முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் ஃபண்ட் தேர்வு!

தனிநபர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் ஒவ்வொரு நிதித் தேவைக்கும் என குறிப்பிட்ட வகையான ஃபண்டுகள் இருக்கின்றன.

மூன்று முதல் ஆறு மாதத்துக்கு உட்பட்ட குறுகிய கால முதலீடு என்றால் கடன் ஃபண்டில் ஒரு வகையான குறைவான ரிஸ்க் கொண்ட லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். ஓராண்டுக்கு மேல் மூன்றாண்டுக்கு உட்பட்ட முதலீடு என்றால் இதர கடன் சந்தை ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

 மூன்று முதல் ஐந்தாண்டுக்கு உட்பட்ட முதலீட்டை நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஹைபிரீட் ஃபண்டுகளில் மேற்கொண்டு வரலாம்.

ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டுக் காலம் என்கிறபோது, முழுக்க முழுக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

 ரிஸ்க் எடுக்கும் திறன் அடிப்படையில்!

முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப திட்டங்களை தேர்வு செய்வது மிக அவசியமாகும்.

பிள்ளைகளின் உயர் கல்வி மற்றும் திருமணம் செலவுகள், சொந்த வீடு வாங்குதல், ஓய்வுக்கால முதலீடுகள் போன்றவற்றுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். ஆனால், முதலீட்டாளர் அதிக ரிஸ்க் எடுக்கும் திறனை கொண்டிருப்பதோடு, முதலீட்டுக்கான கால வரம்பு குறைந்தபட்சம் 8 -10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது அவசியம்.

இவர்கள் மல்டி கேப் ஃபண்ட், லார்ஜ் கேப் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட், மிட் & ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாகவும் முதலீட்டுக் காலம் குறைவாகவும் இருந்தால் கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள் அல்லது கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவது நல்லது.

மேலே குறிப்பிட்ட நிதி இலக்குகளுக்கு நடுத்தர அளவு ரிஸ்க் எடுப்பவர்கள் என்றால் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், ஃபிளக்ஸி கேப் ஃபண்ட்,  மல்டி கேப் ஃபண்ட், லார்ஜ் கேப் ஃபண்ட் போன்ற ஃபண்ட் வகைகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம்.

தங்கத்தில் முதலீடு செய்ய உதவும் ஃபண்டுகள்!

பெண்களுக்கு தங்க நகை மிகவும் பிடிக்கும். மேலும், பல பெண்கள் தங்கத்தை முதலீட்டு நோக்கிலும் வாங்கி வைக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யும்போது மியூச்சுவல் ஃபண்டில் உள்ள கோல்டு இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு வேண்டும்.

 மியூச்சுவல் ஃபண்டில் உள்ள கோல்டு சேவிங்ஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். இந்த இரு திட்டங்களிலும் முதலீட்டுத் தொகைக்கேற்ப யூனிட்களை ஒதுக்கி தருவார்கள். இதற்கு முன் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் 24 காரட் விலைக்கு இணையாக இருந்தது. இப்போது பெரும்பாலான திட்டங்களில் ஒரு கிராம் என்பதை நூறாக பிரித்து ஒரு யூனிட் என வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சுமார் ரூ.50 இருந்தால்கூட இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்கத்தின் விலை மாற்றத்துக்கேற்ப யூனிட்களின் மதிப்பும் மாறும். இதில் தங்கமாக தரமாட்டார்கள். நம் தேவைக்கு யூனிட்களை விற்று நாம்தான் தங்க நகையாக வாங்கிக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போது, நகையாக வாங்கி வைத்தால் பின்னர் டிசைன் மாறிவிடும். அதை புதிய நகையாக மாற்றும்போது இருமுறை செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டி வரும். இந்த கோல்டு திட்டங்களில் முதலீடு செய்து வரும்போது, தேவைக்கு யூனிட்களை விற்று தங்க நகை வாங்கும் போது பழைய நகை என்கிற பிரச்னை இல்லை. மேலும், சேதாரம் ஒருமுறை கொடுத்தால் போதும்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: வருமான வரி எப்படி?

 மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமான வரி என்பது ஃபண்ட் வகை மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்திருக்கிறது. கடன் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் வெவ்வேறாக வரி விதிப்புகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கடன் ஃபண்டுகள் என்கிறபோது, மூன்றாண்டுக்கு உட்பட்ட வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். மூன்றாண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டுக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் பணவீக்க விகித சரிகட்டலுக்கு பிறகு 20% வரி கட்டினால் போதும்.  இங்கே பணவீக்க விகித சரிகட்டல் என்பது வருமானத்திலிருந்து பணவீக்கத்தை கழித்து மீதி லாபத்துக்கு வரிக்கட்டுவது ஆகும்.

இதுவே ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ஆதாயத்தில் நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரிக் கட்ட வேண்டும். ஈக்விட்டி ஃபண்டுகளில் ஓராண்டுக்கு உட்பட்ட குறுகிய கால முதலீட்டு லாபத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 15% வரி கட்ட வேண்டும்.

சம்பாதிப்பது ஆண்களாக இருந்தாலும், காலம் காலமாக நிதி நிர்வாகத்தில் பெண்கள் திறமையாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இப்போது பெண்களும் சம்பாதிக்கும் சூழலில், நவீன முதலீடுகளிலும் அவர்கள் பாய்ச்சல் காட்ட... கெட் செட் கோ!

*****

ரொக்கப் பணம்... நோ!

காசோலை அல்லது கேட்பு காசோலை அல்லது ஆன்லைன் மூலமாகத்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். ரொக்க பணமாக கட்ட முடியாது. பணத்தைத் திரும்ப எடுக்கும் போதும் ரொக்கமாக தர மாட்டார்கள். வங்கிக் கணக்கில்தான் வரவு வைப்பார்கள்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

புதிய ஃபண்ட் லாபமா?

நம்மவர்களுக்கு எப்போதும் புதிதாக அறிமுகமாகும் பொருள்கள் மீதுதான் அதிக ஆர்வம். அந்த ஆர்வத்தை மியூச்சுவல் ஃபண்டிலும் பார்க்கலாம். புதிதாக திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது யூனிட் களை அதன் முகமதிப்பு 10 ரூபாயி லேயே வாங்கலாம்.  இதனால், அதிக யூனிட்கள் கிடைக்கும். இது வளர்ந்து ரூ.11, ரூ.12 என உயர்ந்து கொண்டே இருக்கும். வளர்ந்த நிலையில் வாங்கும்போது குறைந்த யூனிட்களே கிடைக்கும். பலர் அதிக யூனிட்கள் கிடைக்கும் என்பதற்காக என்.எஃப்.ஓ (New Fund Offer - NFO)-ல் முதலீடு செய்கிறார்கள்.

இதற்கு பதில், நன்றாக செயல்படும் திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபகரமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், புதிய கருத்து (Theme) அடிப்படையில் ஃபண்ட் வெளிவரும்போது, அதன் என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்யலாம்.

எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

ஒருவருக்கு முதலீடு செய்யும் பணம் எவ்வளவு காலத்துக்குப் பிறகு தேவை என்பதைப் பொறுத்து அதற்கேற்ற கடன் ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும். ஒரு சொத்தை விற்றுவிட்டு அடுத்த சொத்து வாங்குகிற வரைக்கும் அந்தப் பணத்தை பாதுகாப்பாகவும், சிறிது வருமானம் ஈட்டுவதாகவும் வைக்க குறுகிய கால கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதேபோல், பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் ஆகிய தேவைகளுக்கு சிறிது காலத்தில் பணம் தேவை என்கிற நிலையில் அந்தத் தொகையை குறுகிய கால கடன் ஃபண்டுகளில் போட்டு வைக்கலாம். இதுபோன்ற தேவை உள்ளவர்கள் பணம் தேவைப்படும் காலத்தைப் பொறுத்து, அதற்கு ஏற்ப முதிர்வு கொண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

எக்காலத்துக்கும் ஏற்ற கடன் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட்  கடன் திட்டங்களில் எக்காலத்துக்கும் ஏற்றதாக டைனமிக் பாண்ட் ஃபண்ட்  (Dynamic Bond Fund)  இருக்கிறது.

இந்த ஃபண்டில் திரட்டப்படும் தொகை, அனைத்து முதிர்வு கொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் சூழ்நிலைக்கேற்ப பிரித்து முதலீடு செய்யப்படும்.

டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் 8.5% - 9% ஆக உள்ளது.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

ரிஸ்க்கை குறைத்து லாபத்தை அதிகரிக்க...

ஈக்விட்டி ஃபண்டை பொறுத்தவரையில் எப்போதும் மொத்தமாக முதலீடு செய்துவிடக் கூடாது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்தால் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரே ஒரு ஃபண்டில் மட்டும் முதலீடு செய்யாமல் முதலீட்டுத் தொகையைப் பொறுத்து 3 அல்லது 5 ஃபண்டுகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது ரிஸ்க்கை குறைத்து லாபத்தை அதிகரிக்க உதவும்.

பெண்களுக்கு ஏற்ற பங்குச் சந்தை ஃபண்டுகள்!

ஈக்விட்டி ஃபண்டுகளில் பெண்களுக்கு ஏற்றதாக பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் லார்ஜ் கேப் ஃபண்ட், அனைத்து பிரிவு பங்குகளிலும் முதலீடு செய்யும் ஃபிளக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் மல்டி கேப் ஃபண்டை குறிப்பிடலாம். இந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைப்பதோடு, ரிஸ்க்கும் குறைவாக இருக்கும்.

எஸ்.ஐ.பி முக்கிய நன்மைகள்

1.  சீரான முதலீட்டு அணுகுமுறை மூலம் முதலீட்டாளர்கள் இடையே தொடர்ந்து சேமிக்கும் பழக்கம் உருவாகிறது,

2. ஏழைகள், கிராமப்புறத்தினர் பயன்பெறும் நோக்கத்தோடு மாதம் ரூ.100, ரூ.500 கூட முதலீடு செய்யலாம்.

3.  முதலீட்டாளரின் வசதிக்கேற்ப மாதத்தின் முதல் வாரம், இரண்டாம் வாரம், மூன்றாம் வாரம், நான்காம் வாரம் என எப்போது வேண்டுமானாலும் முதலீடு முடியும்.

4.   சம்பள உயர்வு, வருமான அதிகரிப்புக்கேற்ப எஸ்.ஐ.பி முதலீட்டை ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது ரூபாயில் மதிப்பில் அதிகரித்து கொள்ள முடியும்.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
Deepak Sethi

சீரான பணப் பரிமாற்ற திட்டம்.!

ஒரு ஃபண்டில் செய்திருக்கும் முதலீட்டை அதே நிறுவனத்தின் ஒரு வேறு ஃபண்டிற்கு குறிப்பிட்ட காலத்துக்கு குறிப்பிட்ட தொகையை மாற்றுவது, சீரான பரிமாற்ற திட்டம் (Systematic Transfer Plan -  STP) எனப்படும்.

இந்த முறையில் பங்குச் சந்தை ஃபண்ட்லிருந்து கடன் ஃபண்டுக்கு, கடன் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு முதலீட்டை மாற்ற முடியும். இப்படி மாற்றும்போது, முதலீட்டுத் தொகையை மொத்தமாக அப்படியே கூட மாற்றிக் கொள்ளலாம் அல்லது முதலீட்டின் ஒரு பகுதியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்தை மட்டும் கூட மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதுவும் கிட்டத்தட்ட எஸ்.ஐ.பி முறை போல்தான். ஒரே ஒரு வித்தியாசம் வங்கியிலிருந்து பணம் செல்வதற்கு பதில் ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டுக்கு செல்கிறது.

வங்கியைவிட கூடுதல் லாபம்... கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு எஸ்.ஐ.பி முறையும், சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப முதலீடு செய்வதற்கு எஸ்.டி.பி முறையும் பணத்தை முறையாக எடுத்து பயன்படுத்த எஸ்.டபிள்யூ.பி முறையும் பயனுள்ளதாக இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... நல்லா தெரிஞ்சுக்கணுமா?

தங்கத்தைவிட, ரியல் எஸ்டேட் சொத்துகளைவிட நீண்ட காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது, என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள வாரம்தோறும் நாணயம் விகடன் இதழைப் படியுங்கள்!

இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந் தாலும் சரி, நடுத்தர வயதினராக இருந்தாலும் சரி... யூடியூப் வீடியோக்கள் மூலமாகவே நிறைய விஷயங் களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி வீடியோக்கள் மூலம் நீங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ள https://bit.ly/3Q8bIGI லிங்கில் நாணயம் விகடன் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பலனடையுங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விஷயங்களை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பை நாணயம் விகடன் வழங்குகிறது. மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் நீங்களும் கலந்துகொள்ள https://bit.ly/3bxA2Th லிங்கில் நாணயம் விகடன் ஃபேஸ்புக்கை ஃபாலோ செய்து பலனடையுங்கள்!