Published:Updated:

சேமிப்பும் முதலீடும்! A to z

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

புதிய தொடர் - 1

சேமிப்பும் முதலீடும்! A to z

புதிய தொடர் - 1

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

நாம் அனைவரும் 2020 மார்ச் மாதத்தை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோம். கோவிட் 19-ன் தாக்கம் நம் அனைவரிடையே சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத் துவத்தை ஒரு பாடமாகச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறது.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

எனக்குத் தெரிந்து இந்த கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படாதவர்கள், சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கத்தைக் கொண்டிருந்தவர் கள்தாம். கொரோனாவுக்குப் பிறகு, இன்றைக்குப் பெரும்பாலானோருக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கம் வந்திருப்பது பாராட்டுக்குரியது.

நம்மவர்கள் சேமிப்பதில் கில்லாடியாக இருக் கிறார்கள். கொரானாவுக்கு முன் 2019-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு (Household Savings) 19.8 சதவிகிதமாக இருந்தது. அது கொரோனா பாதிப்புக்குப் பிறகு, 2020 ஜூன் காலாண்டில் 22.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், நம்மவர்களிடையே சேமிப்புப் பழக்கம் அதிகரிக்க காரணமாக இருந்த கொரோனாவுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோம்.

பொதுவாக, நாம் எந்த ஒரு முதலீட்டையும் மோசம் என்று சொல்ல முடியாது. காரணம், அனைத்து முதலீடுகளிலும் சாதகங்களும் பாதகங்களும் கலந்தே இருக்கின்றன. உதாரணமாக, பங்குச் சந்தை முதலீட்டை எடுத்துக்கொண்டால், அது குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க்கானது. சில சமயம், போட்ட மூலதனம்கூட முழுமையாகக் காணாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தருவதாக அது இருக்கிறது.

பணவீக்கம் என்பது விலைவாசி உயர்வு என எளிதாக நாம் புரிந்துகொள்ளலாம். அது நம் பணத்தின் மதிப்பை விழுங்கும் பெரிய பூதமாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு பொருளின் விலை இந்த ஆண்டு ரூ.100. அடுத்த ஆண்டு அது ரூ.110-ஆக உயர்கிறது எனில், பணவீக்க விகிதம் 10% ஆகும். இந்த அளவுக்கு நமது பணம் / முதலீட்டின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் மட்டுமே நாம் கடன் வாங்காமல் வாழ முடியும். இல்லையெனில், நிலைமையைச் சமாளிக்க கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

நாம் ஏன் பணத்தைச் சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியமான காரணமாக பணவீக்க விகிதம் இருக்கிறது. இன்றைக்கு 50,000 ரூபாயைப் பெட்டி ஒன்றில் பூட்டி வைக்கிறோம். பணவீக்கம் 6% என்கிற அளவில் இருக்கிறது எனில், 10 ஆண்டுகளில் அதன் மதிப்பு சுமார் ரூ.27,900-ஆகக் குறைந்துவிடும். அதுவே 15 ஆண்டுகளில் ரூ.20,860 ஆகவும், 25 ஆண்டுகளில் ரூ.11,650 ஆகவும் குறைந்து விடும். எனவே, பணத்தைப் பூட்டி வைக்காமல் அதை முதலீடு செய்து பெருக்க வேண்டும்.

அதற்கு முக்கியமாக சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் மிச்சமாவது ஆகும். இந்த மிச்சமாகும் பணத்தை பல மடங்கு பெருக்குவது முதலீடாகும். ஒருவர் தன் வருமானத்தில் குறைந்தது 10% முதல் 30% வரைக்கும் சேமிப்பது கட்டாயம். அதற்கு மேலும் சேமிக்க முடிந்தால் சிறப்பு.

சேமிப்பும் முதலீடும்! A to z

பலரின் கேள்வி, ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதாக இருக்கிறது. நாம் இன்றைக்கு வாங்கும் சம்பளம் இன்றைக்கு செலவு செய்வதற்கு மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் கல்வி, கல்யாணம், நம் ஓய்வுக் காலச் செலவுகளுக்கு எல்லாம் சேர்த்துதான். ஒருவர் சராசரி யாக அவரின் 28 வயதிலிருந்து 58 வயது வரைக்கும் சுமார் 30 ஆண்டுகள் ஈட்டும் வருமானம், அவர் வருமானம் ஈட்டாமல் இருக்கப்போகிற 59 வயதிலிருந்து சுமார் 70 வயது வரைக்குமான 20 ஆண்டுகளுக்கும் சேர்த்துதான். இந்தியர்களின் சராசரி ஆயுள் 1960-ம் ஆண்டில் 42-ஆக இருந்தது, இப்போது சுமார் 70 வயதாக உள்ளது. வருங்காலத்தில் 80 வயதாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரின் வாழ்க்கை முறை (Life-Style) மேம்படவும் முக்கிய ஆசைகளான சொந்த வீடு, சொந்த கார், பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக ஆக்கிப் பார்க்கும் ஆசை என எல்லா ஆசைகளும் நிறைவேற முதலீடு செய்வது கட்டாயமாகும். அதுவும் மாதச் சம்பளதாரர்கள், சரியாக முதலீடு செய்வதன் மூலமே தங்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்தத் தொடரில் வங்கிச் சேமிப்பு, தொடர் சேமிப்பு (ஆர்.டி), சேமநல நிதி (பி.எஃப்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (பொது சேமநல நிதி, செல்வமகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்றவை), எஃப்.டி, (வங்கி மற்றும் கார்ப்பரேட்), கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட், தங்கம், என்.பி. எஸ் எனப் பலவற்றின் சாதக, பாதகங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

(தெரிந்துகொள்வோம்)

உண்மையான வருமானம் எவ்வளவு?

நாம் முதலீடு செய்யும் பணத்துக்குக் கிடைக்கும் வட்டி அல்லது மதிப்பு அதிகரிப்பை நாம் வருமானம் என்கிறோம். இந்த வருமானத்திலிருந்து பணவீக்க விகிதத்தைக் கழித்தால் கிடைப்பதுதான் உண்மையான வருமானம் (Real Return) ஆகும். உதாரணமாக, ஓராண்டு வங்கி எஃப்.டி-க்கு 6% வட்டி கிடைக்கிறது. பணவீக்க விகிதம் 5% எனில், உண்மையான வருமானம் 1% ஆகும். இதுவே எஃப்.டி வட்டி 5%, பணவீக்க விகிதம் 6% எனில், உண்மையான வருமானம் மைனஸ் 1% ஆகும். நீண்ட கால முதலீட்டில் பணவீக்க விகிதத்தைவிட 2% - 3% வருமானம் கிடைத்தால் மட்டுமே நம் எதிர்காலத் தேவைகளைக் கடன் வாங்காமல் நம்மால் சமாளிக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism