பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

முதலீட்டில் பெண்கள் எப்படி?

முதலீட்டில் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டில் பெண்கள்

ஒரு விரிவான அலசல்

சேமிப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட நம் சமூகம், இப்போது முதலீடு என்ற அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. முதலீடு குறித்த விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டுவிட்டது. பெண்கள் மத்தியிலும் இப்போது ஏற்படத் தொடங்கியிருக்கிறது. நம் நாட்டிலுள்ள பெண்கள் அஞ்சறைப் பெட்டிகளில் சேமித்த காலத்திலிருந்து மாறி, வங்கியிலும் தங்கத்திலும் பணத்தைப் போட்டு, தற்போது பங்குச் சந்தை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முதலீட்டில் பெண்கள்
முதலீட்டில் பெண்கள்

`இந்தியாவுக்கே பட்ஜெட் போடும் இடத்தில் ஒரு பெண் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்தியப் பெண்களின் முதலீட்டுப் பழக்கம் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது...’ என்று இரண்டு முக்கிய நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம்.

நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன், “எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிதி ஆலோசகர் பணியை நான் ஆரம்பித்தபோது, ஆண்கள் மட்டுமே முதலீட்டாளர்களாக இருந்தார்கள். தற்போது மூன்றில் ஒரு பங்கு பெண் முதலீட்டாளர்கள் வந்துவிட்டார்கள். பெண்களின் முதலீட்டு விழிப்புணர்வை அவர்களின் வயதைக்கொண்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். 25-40 வயது வரையிலான பெண்கள் ஒரு ரகம்; 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இன்னொரு ரகம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும்கூட தங்கள் வருமானம் முழுவதையும் ஆண்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்: முதலீடு குறித்த முடிவுகளையும் ஆண்களிடமே விட்டுவிடுகிறார்கள். அதைத் தாண்டி முதலீடு செய்ய வருபவர்களும்கூட பாதுகாப்பான, பாரம்பர்ய முதலீடு என்ற சிந்தனையில் வங்கி வைப்பு நிதி, தங்கத்தில் முதலீடு, நிலம் வாங்குவது, அஞ்சலகச் சேமிப்பு போன்றவற்றிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.

முதலீட்டில் பெண்கள்
முதலீட்டில் பெண்கள்

இவற்றைத் தாண்டி வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். `வீடுகளைக் கட்டி வாடகைக்குவிட்டு, வாடகை வருமானத்தைக்கொண்டு வாழலாம்’ என்ற எண்ணத்தோடும் சிலர் இருக்கிறார்கள். இத்தகைய சிந்தனையில் இருப்பவர்களிடம் ‘குடியிருப்பதற்கு தவிர கூடுதலாக வீடு வாங்கி வாடகைக்குவிட வேண்டாம். அதில் 2% மட்டுமே வருமானம் எதிர்பார்க்க முடியும். எனவே, மியூச்சுவல் ஃபண்டுக்கு வாங்க...’ என்று ஆலோசனை கூறுகிறேன்.

25 வயது முதல் 40 வரையுள்ள பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள். என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்தும் நிறைய விசாரிக்கிறார்கள். பங்குகளில் முதலீடு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், பெரும்பாலும் அவர்கள் அதில் முதலீடு செய்வதில்லை. மியூச்சுவல் ஃபண்டில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன, எந்த மாதிரியான திட்டங்களைத் தேர்வு செய்வது என்ற விழிப்புணர்வு பெறுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்காக நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.

லலிதா ஜெயபாலன், சித்ரா நாகப்பன்
லலிதா ஜெயபாலன், சித்ரா நாகப்பன்

ஐ.டி நிறுவனங்களில் முதலீடுகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நான் நடத்துகிறேன். அதிலும் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாகக் கூட்டங்கள் நடத்துகிறேன். ஏனென்றால், ஆண்கள் மத்தியில் முதலீடு தொடர்பான சந்தேகங்களைக் கேட்க பெண்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்காகத் தனியாகக் கூட்டம் நடத்தும்போது சரளமாக நிறைய கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுகிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தைகளில் பெண்களின் முதலீடு அதிகரிக்கும் என்று தெரிகிறது” என்றார்.

வளரும் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் முதலீடு குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்!

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஆலோசகராக கடந்த 24 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் சித்ரா நாகப்பனிடம் பேசினோம். “முதலீட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான பெண்களுக்கு விழிப்புணர்வே கிடையாது. தங்கள் வீட்டிலுள்ள கணவரோ, தந்தையோ முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்குவார்கள் என்ற சிந்தனையிலேயே இருக்கிறார்கள்.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதலீடு என்றால் ராக்கெட் சயின்ஸ்போல கடினமானது என்று நினைத்துக்கொண்டு இனம்புரியாத பயத்துடன் ஒதுங்கிக்கொள்கிறார்கள். தற்போதுதான் அவர்களுக்கு வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பழக்கமெல்லாம் வந்திருக்கிறது. எனவே, முதலீடு குறித்த சிந்தனை சற்றுக் குறைவாகவே இருக்கிறது.

ஆனால், வளரும் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் முதலீடு என்றால் என்ன, மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நானும் என் கணவரும் நானும் நிறைய கல்லூரிகளுக்குச் சென்று பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து விழிப்புணர்வு தருகிறோம். கல்லூரிகளில் பொருளாதாரம், வணிகவியல் சார்ந்த பாடங்களை எடுத்துப் படிக்கும் பெண்களுக்கு முதலீடுகள் குறித்து ஓரளவு விஷயம் தெரிந்திருக்கிறது. முதலீடு செய்யும் ஆர்வத்துடன் ஆலோசனை கேட்க வரும் பெண்களில் சிலரும்கூட வருமான வரிச் சலுகை குறித்த யோசனை கேட்பதற்காகவும், அவர்கள் வீட்டிலுள்ள ஆண்கள் முதலீடு செய்வதைப் பார்த்த அனுபவத்திலும்தான் வருகிறார்கள்.

பெண்களின் முதலீட்டு விழிப்புணர்வுக் குறைபாட்டில் கிராமம், நகரம் என்ற வித்தியாசமே கிடையாது. என்னிடம் ஆலோசனை கேட்டு முதலீடு செய்யும் பெண்களில் மாணவிகள், தொழில்முனைவோர், ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் முதலீட்டில் வரிச் சலுகை, குழந்தைகளின் படிப்பு போன்ற காரணங்களே முக்கிய இலக்குகளாக இருக்கின்றன” என்றார்.

முதலீடு என்பது தனிநபரின் வருமானத்தை உயர்த்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஆண்களைப்போல பெண்களும் முதலீட்டு விழிப்புணர்வைப் பெற்றால், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எளிதில் அதிகரிக்கலாம். எனவே, பெண்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும். சேமிப்பிலிருந்து முதலீடு என்ற அடுத்தகட்ட விழிப்புணர்வை ஊட்டுவதில் நிதி ஆலோசகர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. எனவே பள்ளி, கல்லூரி மற்றும் பெரிய நிறுவனங்களில் பெண்களுக்கான முதலீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இவர்களின் முதலீடு எதில்?

ஶ்ரீ.லஷ்மி, ஐ.டி நிறுவன மனிதவள அலுவலர், ஹைதராபாத்

“நான் கடந்த 10 ஆண்டுகளாக முதலீடு செய்துவருகிறேன். ரூ.50,000 வரை பங்குகளிலும், ரூ.1 லட்சம் வரை மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்கிறேன். எனது பங்குத் தேர்வில் மிட்கேப் பங்குகளை பெரும்பாலும் சேர்த்துக்கொண்டேன். எனது வருமானத்தில் கணிசமான பகுதி வரிக் கழிவில் போவதால், வரிச் சலுகை பெறுவது முதன்மைத் தேவையாக இருக்கிறது. அதுபோக, எனது தனிப்பட்ட தேவைகளுக்காக அதிக ரிஸ்க் இல்லாமல், ஓரளவு மிதமான வருமானம் ஈட்டும் வகையில் முதலீடு செய்கிறேன். தவிர கணிசமான தொகையைத் தங்கத்திலும் முதலீடு செய்கிறேன்.”

ஶ்ரீ.லஷ்மி, பெ.செந்தாமரைச்செல்வி, ஆர்.கார்த்திகாயினி
ஶ்ரீ.லஷ்மி, பெ.செந்தாமரைச்செல்வி, ஆர்.கார்த்திகாயினி

பெ.செந்தாமரைச்செல்வி, அரசு பள்ளி ஆசிரியை, புதுக்கோட்டை

“நான் நாணயம் விகடன் வாசித்து வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது குறித்து என் கணவரிடம் பேசியபோது அவருக்குத் தயக்கமாக இருந்ததால் வேண்டாம் என மறுத்தார். நான்தான் அவரிடம் எடுத்துச்சொல்லி சம்மதிக்கவைத்தேன். மொத்தத் தொகையாக ரூ.1 லட்சத்தையும், எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் 2,000 ரூபாயையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறேன். மாதாந்தர எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கவிருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை ரூ.1 லட்சத்தை மொத்த முதலீடாகவும் செய்யவிருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை முன்னரே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போதாவது தொடங்கினோமே என்று நினைக்கிறேன்.’’

ஆர்.கார்த்திகாயினி, மருத்துவர், கடலூர்

“நான் ஆரம்பத்தில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்யத் தொடங்கி, தற்போது மாதந்தோறும் ரூ.50,000 வரை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை. அவளின் மேற்படிப்பு மற்றும் என் ஓய்வுக்காலத் தேவைகளைக் கணக்கில்கொண்டு முதலீடு செய்துவருகிறேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் பணவீக்கத்தைத் தாண்டிய நல்லதொரு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.’’