Published:Updated:

2021-ம் ஆண்டு... இனி நம் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - புத்தாண்டுக்கு உற்சாகமாகத் தயாராவோம்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

INVESTMENT

ம்முடைய வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கப் போகிற ஒரு வருடம். கோவிட் 19 என்று பெயர் இருந்தாலும், கொரோனாவின் முழுமையான கோர தாண்டவம் தெரிய வந்தது 2020-ல்தான். தன்னை விழுங்க நேரம் பார்த்து அருகில் நெருங்கும் பாம்பைப் பற்றி அறியாமல் இரையைத் தேடிக் கொண்டிருக்கும் தவளையைப்போல 2019-ம் வருடம் இதே டிசம்பர் மாதத்தில் அனைவரும் மும்முரமாக 2020-ல் மேற்கொள்ளப் போகிற பொருளாதார முடிவுகளையும் திட்டங்களையும், சபதங்களையும் பற்றி முழங்கிக் கொண்டிருந்தோம்.

நம் முதல் செலவே சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும்; இனி பட்ஜெட் போட்டுதான் செலவழிக்க வேண்டும்; எமர்ஜென்சி ஃபண்ட் ஒன்றை உருவாக்கியே தீர வேண்டும்; கடன் என்ற பேச்சே கூடாது என்று எத்தனை எத்தனை சபதங்கள் எடுத்தோம். ஆனால், 2020 வழக்கமான வருடங்கள்போல் இல்லாமல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

முதல் செலவாக மட்டுமல்ல, முடிவான செலவாகக்கூட சேமிக்க இயலாமல் தவித்தோம்; பட்ஜெட் போட்டு செலவழிக்கும் அளவுக்கெல்லாம் பணம் இல்லை; எமர்ஜென்சி வந்தேவிட்ட பின், எமர்ஜென்சி ஃபண்டாவது, ஒன்றாவது; நகைக் கடன், வீட்டு அடமானக் கடன், தனிநபர் கடன் என்று ஒரு கடன் பாக்கியில்லாமல் வாங்க வேண்டியதாயிற்று.

இப்படி நம் சபதங்கள் அனைத்தும் நொறுங்கி தூள் தூளானாலும், முக்கியமான ஒன்று நம் அனைவருக்கும் கிட்டியது. அது நிதி நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு. கோவிட் புகட்டிய பாடத்தில், இனி நிதி ஆலோசகர்கள் இத்தகைய சபதங்கள் பற்றிப் பேசவே தேவை இல்லை என்னும் அளவுக்கு மேற்கண்டவை எல்லாம் வாழ்நாள் சபதங்களாக மனதில் நிலைத்து விட்டன.

அதற்காக புது வருட சபதங்களை எடுக்காமல் விட்டுவிட முடியுமா, என்ன? மேலும் மக்கள், நிலம், தங்கம், பேங்க் எஃப்.டி போன்ற பாரம்பர்ய முதலீடு களைத் தாண்டி புதிய முதலீடுகள் பற்றி சிந்திக்கக் கற்றிருப்பதைக் காட்டுகிறது அல்லவா? எனவே, 2021-க்கு ஏற்ற புதிய பொருளாதார சபதங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

அஸெட் அலோகேஷன் (சொத்து ஒதுக்கீடு)

தங்கம், ரியல் எஸ்டேட், கடன் சந்தை, பங்குச் சந்தை, கைமுதல் (Cash) என்று முதலீடுகளைப் பிரிப்பதை அஸெட் அலொகேஷன் என்பார்கள். நம் வயது, மன நிலை, பொருளாதார இலக்குகள், சேமிக்க முடிந்த தொகை இவற்றைக் கணக்கில் எடுத்து இந்த 2021-ல் எந்தெந்த முதலீடுகளில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை வருடம் தொடங்கும் முன்னரே முடிவு செய்யலாம். இதனால் அவ்வப் போது உணர்ச்சிக்கு அடிமையாகி தவறுகள் செய்வதைத் தவிர்க்க இயலும்.

2021-ம் ஆண்டு... இனி நம் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - புத்தாண்டுக்கு உற்சாகமாகத் தயாராவோம்!

டைவர்சிஃபிகேஷன் (பலவகைப் படுத்துதல்)

அஸெட் அலொகேஷனின் இன்னொரு பகுதிதான் டைவர் சிஃபிகேஷன். தங்கத்தில் முதலீடு என எடுத்துக்கொண்டால், ஆபரணம் வாங்கப் போகிறோமா, ரிசர்வ் வங்கியின் கோல்டு பாண்டில் முதலீடு செய்யப் போகிறோமா அல்லது பங்குச் சந்தை மூலம் கோல்டு இ.டி.எஃப்பில் இறங்கப் போகிறோமா என்பதை முடிவு செய்யலாம். ரியல் எஸ்டேட் வாங்க விரும்புகிறோம் என்றால் நிலமா, வீடா, ஃப்ளாட்டா அல்லது கமர்ஷியல் சொத்துகளா என்ற தேர்வை சீர்தூக்கிப் பார்க்கலாம்.

கடன் சந்தையில் பேங்க் எஃப்.டி, கம்பெனி பாண்டுகள், ரிசர்வ் வங்கியின் பாண்டுகள், போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகள் கடன் மியூச்சுவல் ஃபண்ட் என்று பலரகம் உண்டு. பங்குச் சந்தை முதலீட்டிலும் நேரடியாக ஈடுபடுதல், ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் ஈடுபடுதல் என்பவை தவிர, லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப், செக்டார் பங்குகள், இன்வெஸ்ட்டிங், டிரேடிங், இன்ட்ரா டே, எஃப் அண்ட் ஓ என்று பலதரப்பட்ட வகைகள் உண்டு. இவை பற்றி முன்கூட்டியே அறிந்து, யோசித்து புதிய முதலீடுகள் பற்றிய முடிவை எடுத்தால், நம் போர்ட் ஃபோலியோவும் கைதேர்ந்த தோட்டக்காரன் வைத்த மரம் செடி போல கிடு கிடு வளர்ச்சி பெறும்.

உங்கள் நிகர மதிப்பைக் கணக்கிடுங்கள்..!

உங்கள் சொத்துகள் என்னென்ன, கடன்கள் என்னென்ன என்று பட்டிய லிட்டு, சொத்து மதிப்பிலிருந்து கடன் மதிப்பைக் கழித்தால் வருவது உங்கள் நிகர மதிப்பு. ஒவ்வொரு வருடமும் நம் நிகர மதிப்பு ஏறுமுகமாக இருக்க வேண்டும். கடன்கள் குறைய வேண்டும்; சொத்து மதிப்புகூட வேண்டும். இதை நாம் வருடம் ஒருமுறை யாவது கண்காணித்தல் அவசியம். இது வெறும் கணக்குப் பார்ப்பதற்காக மட்டுமல்ல; வருடா வருடம் நம் நிகர மதிப்பு கூடுவதைப் பார்க்கும்போது ஏற்படும் அலாதி ஆனந்தத்துக்காகவும் கூடுதல் உற்சாகத்துக்காகவும்தான்.

குடும்பம் தெரிந்துகொள்ளட்டும் (Let the Family Know)

இரு மாதங்களுக்கு முன் வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிய செய்திதான். நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், சேர்த்து வைத்தாலும், பெருக்கினாலும், அது யாருக்குப் போய் சேர வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களுக்குத் தெரியாமல்போனால் நம் முயற்சிகள் அத்தனையும் வீணே. ஆகவே, நம்மிடமிருக்கும் சொத்து விவரங்களைப் பட்டியலிட்டு, அவை இருக்கும் இடம், அது சம்பந்தமான ஆவணங்கள் இருக்குமிடம் இவற்றை கம்ப்யூட்டரில் ஒரு ஃபைலாக ஏற்றிவிட்டால், பாஸ்வேர்டு கொடுத்து சேவ் செய்து, அந்தப் பாஸ்வேர்டை முக்கியமான நபர்களிடம் பகிரலாம்; அல்லது க்ளௌட் கம்ப்யூட்டிங் முறையில் சேவ் செய்து, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்கும்படி ஏற்பாடு செய்யலாம்.

இதுபோலவே நமது தினசரி வாழ்வுக்குத் தேவையான பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கடன் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், உயில், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஆகியவற்றை நகல் எடுத்து ஒரு சிறிய பெட்டியில் போட்டு வைத்தால் ஒரு அவசரம் என்று வரும்போது அதை மட்டும் கையில் எடுத்துச் சென்றால் போதும்.

காலம் எத்தனையோ நல்ல / கெட்ட மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதற்குத் தகுந்தாற்போல், நம் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம்.

வருகிற 2021-ல் உங்கள் முதலீடு லாபகரமாக அமைய வாழ்த்துகள்!

பிட்ஸ்

ம் நாட்டில் ரூ.5 லட்சம் அளவுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள், தற்போது ரூ.25 லட்சம்- ரூ.50 லட்சம் வரை எடுப்பதாகவும், ரூ.1 கோடிக்கு பாலிசி எடுப்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இன்ஷூரன்ஸ் துறை நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள்!