நடப்பு
பங்குச் சந்தை
அறிவிப்பு
Published:Updated:

முதலீட்டில் லாபம் பார்க்கும் உத்திகள்!

பங்கு, ஃபண்ட், தங்கம், வீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பங்கு, ஃபண்ட், தங்கம், வீடு

பங்கு, ஃபண்ட், தங்கம், வீடு

ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் எனப் பல்வேறு பிரிவுகளில் நம்மில் பலர் முதலீடு செய்திருப்போம். இந்த முதலீடுகளில் லாபம் பார்க்கும் உத்திகள் என்பது முதலீட்டுக்கு முதலீடு மாறுபடும். எந்த முதலீட்டில் எந்த உத்தி மூலம் லாபம் ஈட்ட முடியும் எனப் பார்ப்போம்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை முதலீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

பங்கு, ஃபண்ட், தங்கம், வீடு
பங்கு, ஃபண்ட், தங்கம், வீடு

“பங்குச் சந்தை முதலீடுகளில் போர்ட்ஃபோலியோ மிகவும் முக்கியப் பங்குவகிக்கிறது. இதை வடிவமைப்பதே ஒரு கலை. நல்ல வருமானம் கிடைப்பது வலுவான போர்ட்ஃபோலியோவில் இருக்கிறது. தனிப்பட்ட சில பங்குகளின் மதிப்பு குறைந்தாலும்கூட, ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவின் மதிப்பு குறையாது.

நீண்டகால முதலீடாக இருக்கும்பட்சத்தில் போர்ட்ஃபோலியோவின் செயல்பாட்டை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ காலாண்டுக் கணக்கிலோ கண்காணிக்கலாம். நிறுவனங்களின் காலாண்டு முடிவில் சிறிய அளவிலான மாற்றம் இருந்தால் அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், சின்ன சின்ன இறக்கங்கள் நீண்டகாலத்தில் சரியாகிவிடும். குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகும்போது அந்த நிறுவனத்தின் பங்கிலிருந்து வெளியேறுவது குறித்து முடிவெடுக்கலாம்.

தங்கம்
தங்கம்

உங்கள் முதலீடு குறுகிய காலத்துக்கானதாக இருக்கும்பட்சத்தில், மாதந்தோறும் போர்ட்ஃபோலியோவைச் சரிபார்ப்பது அவசியம். பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் எப்படியிருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். குறுகியகால முதலீடு என்பது ஐந்து ஆண்டுக்கால கட்டத்துக்குள் இருக்கக்கூடியது.

ஒரு நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் தொடர்ந்து இரண்டு மூன்று காலாண்டுகளாக சரியில்லாத நிலையில் அந்தப் பங்கிலிருந்து வெளியேற தயங்கக் கூடாது. அதேபோல ஒரு நிறுவனத்தில் நிர்வாகச் சிக்கல் தொடர்ந்தால் அந்தப் பங்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இப்படி முடிவெடுக்கும்போது சென்டிமென்ட்டுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து தெரிந்துகொள்ள கூகுள் அலர்ட் வசதி இருக்கிறது. அது தொடர்ச்சியாக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த முக்கியச் செய்திகளை நமக்கு அனுப்பியபடி இருக்கும். ஒரு நிறுவனப் பங்கு ஓரளவு நஷ்டத்தை அடையும்போதும், அதிலிருந்து வெளியேறும்போதும் ‘அடடா நஷ்டமாகிவிட்டதே...’ என்று நம் மனதுக்குள் ஒரு நெருடல் இருக்கும். அப்போது, ‘இந்த அளவு நஷ்டத்துடனாவது தப்பித் தோமே...’ என்று நிம்மதியடைய வேண்டும். அதேபோல் நம் லாப இலக்கை எட்டியதால் வெளியேறிய பிறகு, அந்தப் பங்கு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தால் ‘அவசரப்பட்டு வெளியேறிவிட்டோமோ...’ என்று வருந்தக் கூடாது. `எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட்டோம்’ என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டும். லாபத்தை வெளியே எடுக்கும்போது, அதில் ஒரு பகுதியை மறுமுதலீடு செய்ய வேண்டும். இப்படித் திரும்பத் திரும்பச் செய்தால், ஒருகட்டத்தில் லாபம் மட்டுமே சந்தைக்குள் முதலீடாகச் சுழன்று கொண்டிருக்கும்” என்றார்.

வ.நாகப்பன், எஸ்.ராமலிங்கம்
வ.நாகப்பன், எஸ்.ராமலிங்கம்

மியூச்சுவல் ஃபண்ட்

`மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எவ்வாறு செயல்பட வேண்டும்...’ என்று நிதி ஆலோசகர் எஸ்.ராமலிங்கத்திடம் கேட்டோம். “விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல, உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டியின் மகத்துவம். அதைப் புரிந்துகொண்டவர்கள், அதன் பலனை அடைகிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது நம்மில் பலர் வட்டி வருமானம் ஒன்றை மட்டுமே முக்கியமானதாக நினைத்து முதலீட்டுக் காலம் குறித்து மறந்துவிடுகிறோம்.

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உலக அரசியல் சூழல்களை கவனித்துவர வேண்டும்!

பங்கு சார்ந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்பவர்கள் குறைந்தது 5-8 ஆண்டுகள் முதலீடு செய்து காத்திருக்க வேண்டும். தென்னையைப் பயிர்செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு காய்களை அறுவடை செய்யத் தொடங்கும் விவசாயியைப் போல் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். குறுகியகால முதலீடுகளில், குறுகியகாலப் பயிர்களைப் பராமரித்து சில மாதங்களிலேயே அறுவடை செய்வதைப்போல, தங்கள் முதலீட்டைப் பராமரித்து வருமானம் ஈட்ட வேண்டும்.

நிர்ணயித்த இலக்கை நம் முதலீடு அடையும்போது யூனிட்டுகளை விற்றுப் பணமாக்க வேண்டும். பங்கு சார்ந்த ஃபண்டில் முதலீடு செய்து இலக்கை அடைந்துவிட்டால், அந்தத் தொகையை லிக்விட் ஃபண்டில் முன் ஜாக்கிரதையாக மாற்றிவைத்து, சந்தைச் சரிவில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம். `தற்போது பணத் தேவை இல்லை’ என்று நினைக்கும் முதலீட்டாளர்கள் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்த பிறகு, அவை ஈட்டிய லாபத்தை மட்டும் பங்கு சார்ந்த ஃபண்டுகளுக்கு மாற்றி, லாபத்தில் மட்டும் சிறிது ரிஸ்க் எடுத்து முதலீட்டு வருமானத்தை அதிகரிக்க முயலலாம்.

பங்கு அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகளின் வருமானம் தொடர்ந்து 2-3 ஆண்டுகள் இறங்கு முகமாகவே இருந்தால், பெஞ்ச்மார்க் குறியீட்டைவிட தொடர்ந்து குறைவான வருமானம் தரும் பட்சத்தில், இழப்பை ஏற்றுக்கொண்டு விற்று பணமாக்கவோ அல்லது வேறு ஃபண்டில் முதலீடு செய்யவோ வேண்டும். எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது எளிது. ஆனால் அவற்றிலிருந்து முதலீட்டை எடுப்பது, இன்னொரு ஃபண்டுக்கு மாற்றுவது போன்றவற்றில் கூடுதல் கவனத்துடன் இருந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும்” என்றார்.

தங்கம்

தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கான முதலீட்டு ஆலோசனையை கமாடிட்டி நிபுணர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.

ஞானசேகர் தியாகராஜன், மணிசங்கர்
ஞானசேகர் தியாகராஜன், மணிசங்கர்

“தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்கள் முதலீட்டை அப்படியே தொடர்வது நல்லது. ஏனெனில், உலக அளவிலான பிரச்னைகள்தான் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்யும். அதேபோல அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் வட்டியைக் குறைத்தால், தங்கத்தின் விலை ஏற்றம் பெறும். வட்டிக் குறைப்பு இல்லையென்றால் தங்கத்தின் விலை குறையக்கூடும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உலக அரசியல் சூழல்களை கவனித்துவர வேண்டும்” என்றார்.

ரியல் எஸ்டேட்

`ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்...’ என்று தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரொமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கரிடம் கேட்டோம்.

“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன்னர் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு வீட்டையோ, மனையையோ முதலீட்டுக்காக வாங்குவதாக இருந்தால் குறைந்தது 5-7 ஆண்டுகள் கழித்துதான் அதன் மதிப்பு உயரும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, வாங்கிய உடனேயே விலையேற்றத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

வீட்டுக்கு அருகில், அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பள்ளிகள், மருத்துவமனை, விற்பனையகங்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். நிலத்தடி நீர் பயன்பாட்டுக்குரியதாக இருக்கிறதா, குடிநீர் வசதி இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

வீட்டுக்குச் செல்லும் பாதைகள், பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். வீட்டை விலைக்கு வாங்கி, அதை வாடகைக்குவிடும் பட்சத்தில், குடியேற வாடகைதாரர்கள் கிடைப்பார்களா என்றும் பார்க்க வேண்டும். வளர்ச்சி அடையக்கூடிய பகுதியில் வீடு அமைந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்” என்றார்.

இவை தவிர வங்கி வைப்பு நிதி, அஞ்சலகச் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் இருக்கின்றன. உங்களுக்கான தேவை, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றையும் தேர்வு செய்யலாம்.

தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என எதில் முதலீடு செய்தாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல..!

முதலீட்டில் லாபம் பார்க்கும் உத்திகள்!

இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன், “இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, எந்தத் தேவைக்காக இன்ஷூ ரன்ஸ் எடுக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். எண்டோவ்மென்ட் பாலிசியைப் பொறுத்தவரை 4% முதல் 6% வரை மட்டுமே வருமானம் எதிர்பார்க்க முடியும். பங்கு சார்ந்த யூலிப் பாலிசிகள் இருக்கின்றன. அதிக வருமானம் எதிர்பார்த்து இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இதைவிட அதிக நன்மைகளைக்கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். அடுத்ததாக டேர்ம் இன்ஷூரன்ஸ். இதுதான் சரியான இன்ஷூரன்ஸ் திட்டம். பாலிசி எடுப்பதற்கு முன்னர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகால க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அது சீராகவும் அதிகமாகவும் இருக்கும்பட்சத்தில் பாலிசி எடுக்கலாம்” என்றார்.