Published:Updated:

தமிழகத்தில் அடியோடு சரிந்த வெளிநாட்டு முதலீடு... எடப்பாடி, பன்னீர் வெளிநாட்டுப் பயணங்கள் என்ன ஆனது?

எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம்
எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் சென்னையைவிட முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் டெல்லியில்தான் அதிகளவில் வெளிநாட்டு முதலீடு குவிந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பயன் அளித்ததா?

இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகிறார்கள். அதுபோல, வெளிநாட்டு முதலீடும் தமிழகத்துக்கு மற்ற மாநிலங்களைவிட சற்று அதிகமாகவே கிடைக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முதல்வர் கோட், சூட் போட்டு அசத்தினார். `இனிமேல், தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடு கொட்டோ கொட்டு என்று கொட்டும்' என்று இருவரும் தமிழகத்துக்குத் திரும்பிய பிறகு பேட்டியளித்தார்கள். எதிர்க்கட்சிகளோ, `வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்பி வந்திருக்கின்றனர்' என்று விமர்சித்தன. ஆனால், எதிர்பார்த்தது போல முதலீடுகள் ஒன்றும் குவியவில்லை. கடந்த காலங்களைவிட தமிழகத்தில் வெளிநாடு முதலீடு தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
வெளிநாட்டில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மொத்தம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் 12,360 சிறு, குறு, மத்திய ரக தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்தே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, பிரிட்டன், துபாய் போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிறகு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் ஆர்வமாக இருப்பதாக இருவருமே சொன்னார்கள்.

`ஜிம் முதல்... ஹேர்கட் வரை' - கொரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? #SocialDistancingIsGood

ஆனால், ரிசர் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடு தொடர்ச்சியாக குறைந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, 2015-16 நிதியாண்டில் ரூ. 29,781 கோடி முதலீடு கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.14,830 கோடியும் 2017-18-ம் ஆண்டு ரூ.22,354 கோடியும் 2018-19-ம் ஆண்டில் ரூ.18,164 கோடியும் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, வெளிநாட்டு முதலீடு மேலும் குறைந்து போனது என்பதுதான் உண்மை. அதாவது 2019-20-ம் ஆண்டில் ரூ.13,135 கோடி மட்டுமே நிதி கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வெளிநாட்டு முதலீடு தமிழகத்துக்கு கிடைத்திருப்பது இந்த ஆண்டில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் சென்னையைவிட முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் டெல்லியில்தான் அதிகளவில் வெளிநாட்டு முதலீடு குவிந்து வருகிறது. 2019-20 நிதியாண்டில் பெங்களூரு ரூ.49,417 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றுள்ளது. மும்பைக்கு ரூ.47,619 கோடி வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளது. அகமதாபாத் ரூ.30,218 கோடியும் டெல்லிக்கு அதிகபட்சமாக ரூ.67,314 கோடி வெளிநாட்டு முதலீடும் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடு குறைந்தது ஏன் என்று அரசு அதிகாரிகளிடத்தில் கேட்டால், `ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம் தவறானது' என்கிறார்கள். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஓசூரில் நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால், அந்த நிறுவனத்தின் தலைமையகம் வேறு மாநிலங்களில் இருக்கும். பொதுவாக, தலைமையகம் அமைந்துள்ள இடத்தைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இந்தப் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது என்றும் காரணம் சொல்கிறார்கள்.

தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று பேசினால்தான் முதலீடு கிடைக்கும். நம் மாநிலத்தைத் திரும்பிப் பார்ப்பார்கள்.
பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்

இது குறித்து பொருளாதார நிபுணர் ஷியாம் சேகரிடத்தில் பேசிய போது, ``எடப்பாடி என்றில்லை, யார் முதல்வராக இருந்தாலும், அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவுடனே நிதி கிடைக்க வேண்டுமென்று நாம் நினைப்பது தவறு. சவுதி அரேபியா கூட இப்போது நிதி முதலீட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறது. பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல வியட்நாம், வங்கதேசம் போன்ற பல நாடுகளுடன் நாம போட்டி போட வேண்டும். தாய்லாந்து, கொரியா கூட நமக்குப் போட்டி நாடுகள்தான். பக்கத்து மாநிலங்களைவிட நாம நல்ல நிலையில் இருக்கிறோம் என்பதை வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு இருப்பதே நல்லது. வெளிநாட்டு முதலீடு குறைகிறது என்று நாம் போகாமல் இருந்துவிடக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த வருஷமும் போகணும். அடுத்த வருஷமும் போகணும். மீண்டும் மீண்டும் சென்றால்தான் முதலீட்டாளர்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். முதலமைச்சர் வெளிநாட்டுக்குச் சென்றாரே... முதலீடு ஏன் வரவில்லை என்று கேட்பது தவறான அணுகுமுறை. யார் ஆட்சியில் இருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்று நம்மிடத்தில் உள்ள இயற்கை வளம், மனிதவளம், முதலீடு செய்வதற்கான சூழலை அவர்களுக்குத் தொடர்ந்து உணர்த்த வேண்டும். அதற்கான ரிசல்ட் படிப்படியாகக் கிடைக்கும். முதலீட்டுச் சூழல் தற்போது சரியில்லை. அதனால், நமக்கு முதலீடு கிடைக்காமலும் போயிருக்கலாம். கொரோனா வைரஸ் காரணமாக இனி வரும் மூன்று மாதங்கள் கஷ்டமான சூழல்தான். நமக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் அப்படித்தான்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு