Published:Updated:

அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பி.எம்.எஸ் முதலீடு செய்யலாமா? - ஓர் உஷார் ரிப்போர்ட்

ஃபண்டுகளில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும். ஆனால், பி.எம்.எஸ் முதலீட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் தேவை!

பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட் குறித்து முதலீட்டாளர் களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆனால், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்று சொல்லப்படும் பி.எம்.எஸ் (portfolio management services) பற்றி மிகக் குறைவான தகவலே முதலீட்டாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. இந்த வகையான முதலீடு சாதாரண முதலீட்டாளர்களுக்கானது அல்ல என்றாலும், இதில் முதலீடு செய்கிற அளவுக்குத் திறன் கொண்ட முதலீட்டாளர்கள்கூட இதுபற்றித் தெரியாமலே இருக்கின்றனர். இதனால் இந்த வகை முதலீட்டை இன்னும் பலரது கவனத்துக்குக் கொண்டுசெல்ல செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. செபி என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது, பி.எம்.எஸ் யாருக்கு ஏற்றது, மியூச்சுவல் ஃபண்டுகளைவிட எப்படி அதிக வருமானம் கொடுக்க முடிகிறது என்பதைப் பற்றி பார்க்கும் முன் பி.எம்.எஸ் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.

பி.எம்.எஸ் என்றால்..?

மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடானது பங்குகள் மற்றும் கடன் சந்தையில் மறுமுதலீடு செய்யப்பட்டு, அவை யூனிட்டுகளாக இருக்கும். ஆனால், பி.எம்.எஸ்-யில் செய்யப்படும் முதலீடு பங்குச் சந்தையில் பங்குகளாக மட்டுமே வாங்கப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு முதலீட்டாளரின் பெயரில் டீமேட் கணக்கு இருக்கும். பங்குகள் வாங்குவது மற்றும் விற்பது முதலீட்டாளருக்குத் தெரியும். அந்தப் பங்கின் டிவிடெண்ட் மற்றும் பங்கு பிரிப்பு உள்ளிட்ட அனைத்தும் முதலீட்டாளருக்குக் கிடைக்கும். ஃபண்ட் மேனேஜர் அந்தக் கணக்கை நிர்வாகம் மட்டுமே செய்வார்.

முதலீடு
முதலீடு

குறைந்தபட்ச முதலீடு ரூ.50 லட்சம்

மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும். ஆனால், பி.எம்.எஸ்-யில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் தேவை. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத் தொகை ரூ.25 லட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தொகையை ரூ.50 லட்சமாக செபி உயர்த்தியது. அதாவது, பெரும் முதலீட்டாளர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும் என்பதுதான் செபியின் நோக்கம். (2012-ம் ஆண்டுக்கு முன் குறைந்தபட்ச முதலீடு ரூ.5 லட்சமாக இருந்தது)

பி.எம்.எஸ்-யில் முதலீடு செய்பவர்களின் குறைந்தபட்ச முதலீட்டை உயர்த்தியிருப்பதால், முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்தத் துறையின் எதிர்காலம் என்னவாகும், விநியோகஸ்தர் களின் கட்டணத்தை வெளிப் படையாக அறிவிப்பதால் எதேனும் பாதிப்பு ஏற்படுமா, புதிதாக வரும் முதலீட்டாளர்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் பி.எம்.எஸ் பஜார் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான பல்லவராஜனிடம் கேட்டோம். விளக்கமாகப் பேசினார் அவர்.

அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பி.எம்.எஸ் முதலீடு செய்யலாமா? - ஓர் உஷார் ரிப்போர்ட்

‘‘குறைந்தபட்ச முதலீட்டை உயர்த்தி யிருப்பதால் புதிதாக வரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம், முதலீட்டுத் தொகையை செபி உயர்த்தியதா அல்லது கொரோனா காரணமாக ஊரடங்கு கொண்டுவரப்பட்டதா என்பது தெரிய இன்னும் சில காலம் ஆகும்.

காரணம், பி.எம்.எஸ்-யில் ஒரு முதலீட்டாளரைக் கொண்டு வர அவரிடம் பவர் ஆஃப் அட்டர்னி வாங்க அவரை நேரில் அழைத்து, கையொப்பம் வாங்க வேண்டி யிருக்கிறது. இந்த லாக்டெளன் காரணமாகப் பல முதலீட்டாளர்களைச் சந்திப்பதில் சிக்கல் இருப்பதாலும் புதிய முதலீட்டாளர்களின் பங்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தற்போது சுமார் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பி.எம்.எஸ் சேவையை வழங்கி வருகின்றன. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை உயர்த்தியது மட்டுமல்லாமல், மேலும் பல விதிமுறைகளை செபி உருவாக்கியிருக்கிறது. அதனால் இன்னும் சில ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியேறலாம் எனக் கருதப்படுகிறது.

அதிக வருமானம்..?

தற்போது பி.எம்.எஸ் நிறுவனங்களைக் கையாளும் தொகை பெருமளவுக்கு உயர்ந் துள்ளதால் பி.எம்.எஸ் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு உருவாகியிருக்கிறது. ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு அடிப்படையில் பார்த்தால்கூட, மியூச்சுவல் ஃபண்டுகளைவிட பி.எம்.எஸ் அதிக வருமானம் கொடுத்துள்ளன. இதற்குக் காரணம், இந்த பி.எம்.எஸ் நிர்வகிக்கும் மேனேஜருக்கு உள்ள சுதந்திரம்.

அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பி.எம்.எஸ் முதலீடு செய்யலாமா? - ஓர் உஷார் ரிப்போர்ட்

மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜருக்கு பல விதிமுறைகளும் எல்லைகளும் வகுக்கப் பட்டுள்ளன. ஆனால், பி.எம்.எஸ் ஃபண்ட் மேனேஜர் சிறப்பான செயல்பாட்டுக்காக என்ன முடிவுகளை வேண்டுமானாலும் எடுக்கலாம். தவிர, மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறைய பங்குகள் இருக்கும். ஆனால், பி.எம்.எஸ்-யில் சராசரியாக 25 பங்குகள் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகளவுக்கு முதலீட்டுத் தொகை வெளியேறுகிறது எனில், சிறப்பாகச் செயல்படும் பங்குகளிலிருந்து லாபத்தை விற்று முதலீட்டாளர்களுக்குத் தரவேண்டும். ஆனால், பி.எம்.எஸ்-யில் ஒரு முதலீட்டாளர் முதலீட்டை விட்டு வெளியேற நினைத்தால், அவருடைய முதலீடு மட்டுமே வெளியேறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யாருக்கு ஏற்றது?

முதலீட்டுத் தொகை அதிகம் என்பதால், பெரும் முதலீட்டாளர்களால் மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதற்காக ஒருவரிடம் ரூ.50 லட்சம் மட்டுமே இருக்கிறது எனில், அந்தத் தொகையை அப்படியே பி.எம்.எஸ்-யில் முதலீடு செய்ய முயலக்கூடாது. தவிர, குறைந் தபட்சம் ஐந்தாண்டுக் கால திட்டத்துடன்தான் முதலீட்டைத் தொடங்க வேண்டும்.

முதலீடு
முதலீடு

அதைத் தொடர்ந்து அந்த ஃபண்ட் எப்படிச் செயல் படுகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை அறிய வேண்டும். மேலும், ஒவ்வொரு ஃபண்டுக்கும் ஒவ்வொரு முதலீட்டு அணுகுமுறை இருக்கும். அது முதலீட்டாளர் எதிர்பார்க்கிற மாதிரி இருக்கிறதா என்பதை அறிந்த பிறகு முதலீடு செய்யலாம்’’ எனப் பல்லவராஜன் கூறினார்.

எவ்வளவு கமிஷன்?

முன்புபோல இல்லாமல், பி.எம்.எஸ் விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்பதை முதலீட்டாளர் களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனச் செபி தெரிவித்திருக்கிறது. சராசரியாக விநியோகஸ்தர் களுக்கு 1% கமிஷன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.50 லட்சம் எனில், சராசரியாக ரூ.50,000 கமிஷனாகக் கிடைக்கும்.

காப்பி அடிக்க முடியுமா?

உதாரணமாக, பி.எம்.எஸ் மூலம் ரூ.2 கோடி முதலீடு செய்ய திட்டமிடுகிறார் எனில், குறைந்தபட்ச தொகையான ரூ.50 லட்சத்தை மட்டும் பி.எம்.எஸ்-யில் முதலீடு செய்துவிட்டு மீதமுள்ள தொகைக்குச் சொந்தமாக முதலீடு செய்ய முடியும் எனப் பலர் நினைக்கிறார்கள். இப்படிச் செய்வது சாத்தியம்தான். ஆனால், பி.எம்.எஸ் மேனேஜர் ஆராய்ச்சி செய்து முதலீடு செய்கிற அளவுக்கு தனிப்பட்ட நபர்களால் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. சில நேரத்தில் ஒரு பங்கை ஃபண்ட் மேனேஜர் விற்றுவிட்டு வேறு பங்கில் முதலீடு செய்வார். என்ன காரணத்துக்காக விற்றார் என்பது தெரியாததால், முதலீட்டாளரும் அதைச் செய்ய வேண்டியிருக்கும். அல்லது சொந்த ரிஸ்க்கில் அந்தப் பங்கைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியிருக்கும்.

நன்கு புரிந்துகொண்டு...

பி.எம்.எஸ் முதலீடு என்பது பெரும் முதலீட்டாளர்களுக்கானது மட்டுமே. அவர்கள் கூட இதில் முதலீடு செய்வதற்குமுன் இந்த முதலீட்டைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வது அவசியம். வெறும் லாபத்துக்கு மட்டுமே ஆசைப்பட்டு இதில் இறங்கக் கூடாது. தவிர, எந்த பி.எம்.எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம், நமது முதலீட்டை நிர்வகிக்கும் மேலாளர் எப்படி, கடந்த காலத்தில் அவர் தந்த லாபம் எனப் பலவற்றை ஆராய்ந்த பின் முதலீடு செய்வது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு