Published:Updated:

கேள்வி - பதில் : கிரெடிட் கார்டு பயன்பாடு லாபம் தருமா?

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

தெளிவான விளக்கம்

கேள்வி - பதில் : கிரெடிட் கார்டு பயன்பாடு லாபம் தருமா?

தெளிவான விளக்கம்

Published:Updated:
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

என்னுடன் பணியாற்றும் நண்பர் எந்தப் பொருள் வாங்கினாலும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறார். சம்பளம் வரும்போது செலுத்துகிறார். இதில் அவருக்கு லாபம் இருப்பதாகவும் கூறுகிறார். அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா?

வி.ஹரிஹரன், சென்னை-47

ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்

“அவர் சொல்வது உண்மைதான். கிரெடிட் கார்டை கவனமாகப் பயன்படுத்தினால் லாபம்தான். கிரெடிட் கார்டின் லிமிட்டிலுள்ள பணத்தை உங்களுடைய பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 45 நாள்களுக்கு வட்டி இருக்காது. பில்லிங் தேதியைக் கணக்கில்கொண்டு கவனமாகத் திருப்பிச் செலுத்திவிட்டால், வட்டியில்லாத கைமாற்றுப்போலப் பயன்படுத்தலாம். எதிர்பாராத நிதித்தேவை ஏற்பட்டால் யாரையும் எதிர்பார்க்காமல் கிரெடிட் கார்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அனைத்து ஆன்லைன் பயன்பாட்டுக்கும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது எளிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில ஆன்லைன் தளங்கள், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் தள்ளுபடி (Discount) தருகின்றன. அதேபோல, சில கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் கார்டுக்குச் சலுகைகள் கிடைக்கும். கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதைப் பொறுத்து ரிவார்டு பாயின்ட்டுகள் கிடைக்கும். இந்த பாயின்டுகளுக்கு ஏற்ப பொருளாகவோ, பணமாகவோ வெகுமதிகள் கிடைக்கும். கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் உயரவும் வாய்ப்பிருக்கிறது.

அதேசமயம், பில் தொகையை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால், அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.”

எனக்கும் என் மனைவிக்கும் அவரவர் நிறுவனங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறது. தற்போது எங்கள் மகன் வேலைக்குச் சேர்ந்திருக்கும் நிறுவனத்திலும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி தருகிறார்கள். அதிலும் எங்கள் பெயரை இணைக்கலாமா?

ஜி.நாகராஜன், திருநெல்வேலி-2

கே.பி.மாரியப்பன் இன்ஷூரன்ஸ் நிபுணர்

“தவறில்லை. சிகிச்சைச் செலவு கூடுதலாக இருக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் பணிக்காலம் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு மகனின் அலுவலகத்தில் தரும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.114 என்ற விலையில் மதர்சன் சுமி நிறுவனத்தின் 200 பங்குகள், ரூ.508 என்ற விலையில் ஜே.பி.கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 100 பங்குகள், ரூ.638 என்ற விலையில் லூபின் நிறுவனத்தின் 50 பங்குகள் என முதலீடு செய்திருக்கிறேன். இவற்றை மேலும் தொடரலாமா என்று ஆலோசனை கூறவும்.

கே.மணிகண்டன், கோவை-1

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“மதர்சன் சுமி நிறுவனம், கடந்த 52 வாரங்களில் குறைவான பங்கு விலையைத் தற்போது எட்டியிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகப் பெரிதும் இறங்கியிருக்கும் பங்குச் சந்தை மீண்டு வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்பதால் அதற்கேற்ப நீண்டகாலத்துக்கு இதைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

ஜே.பி.கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்குகள் தற்போதுள்ள பங்குச் சந்தை இறக்கத்தால் பாதிக்கப்பட வில்லை. எனவே, குறுகியகால இலக்குக்காக இந்தப் பங்குகளை அப்படியே தொடரலாம். லூபின் நிறுவனப் பங்குகளையும் குறுகியகால இலக்குக்காக அப்படியே தொடரலாம்.’’

ஆர்.கணேசன், கே.பி.மாரியப்பன்,  எஸ்.சதீஸ்குமார்
ஆர்.கணேசன், கே.பி.மாரியப்பன், எஸ்.சதீஸ்குமார்

என் பூர்வீகச் சொத்தை விற்றுவந்த ரூ.20 லட்சத்தைப் பொதுத்துறை வங்கியின் வைப்பு நிதியாக வைத்திருக்கிறேன். இதற்கு வருமான வரி செலுத்த வேண்டுமா?

வி.செந்தில்குமார், மதுரை-3

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“உங்களுக்கு வந்த பூர்வீகச் சொத்து உங்களுடைய முன்னோரால் இரண்டாண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டிருந்தால் அதற்கு மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டும்.

அந்தச் சொத்து வாங்கப்பட்ட காலம், வாங்கிய விலை, மூலதன ஆதாயத்துக்கான இண்டக்சேஷன்படி, கணக்கீடு செய்து கிடைக்கப் பெற்ற ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குழந்தைப் பிறப்புக்கான சிகிச்சைச் செலவுக்கு க்ளெய்ம் செய்ய, 24 மணி நேரம் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை எடுத்திருக்க வேண்டுமா?

ஸ்ரீவித்யா, சென்னை-33

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“ஆம். குழந்தைப் பிறப்புக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் விதிமுறையைப் பொறுத்தவரை, 24 மணி நேரம் உள்நோயாளியாகச் சிகிச்சை எடுத்திருக்க வேண்டியது கட்டாயம்.”

பி.மனோகரன், எஸ்.ஸ்ரீதரன் , கே.அழகுராமன்
பி.மனோகரன், எஸ்.ஸ்ரீதரன் , கே.அழகுராமன்

என் மகனின் எதிர்கால நலனுக்காக சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்புகிறேன். 15 ஆண்டுக் காலத்தில் ரூ.1.5 கோடி கிடைக்கும்படியான திட்டத்தைப் பரிந்துரைக்கவும். அதற்கான பிரீமியம் விவரத்தையும் தெரிவிக்கவும்.

எஸ்.சங்கரன், சேலம்

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“இன்ஷூரன்ஸ் என்பது ஒரு முதலீடல்ல. எனவே, நீங்கள் உங்கள் பெயரில் டேர்ம் இன்ஷூரன்ஸ் சுமார் ரூ.1 கோடிக்கு எடுத்துக்கொள்ளவும். பிறகு மியூச்சுவல் ஃபண்டில் மாதமொன்றுக்கு 30,000 ரூபாயை முதலீடு செய்து, அதற்கு 15 ஆண்டுகள் கழித்து 12% வருமானம் கிடைத்தால், ரூ.1.5 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 15 ஆண்டுகளில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் தங்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியும், நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டின் தொகையும் கிடைக்கும்.”

புதிதாகக் கட்டியிருக்கும் அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கியிருந்தேன். முழுத் தொகையையும் செலுத்திய பிறகும் அந்த வீட்டுக்கான நிறைவுச் சான்றிதழைத் தராமல் பில்டர் இழுத்தடிக்கிறார். சட்டரீதியாக அதைப் பெறுவதற்கு என்ன வழி?

ஜெ.வாசுதேவன், சென்னை-54

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்

“உங்கள் நிலையைப் பார்க்கும்போது, முதலில் உங்கள் பில்டர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்பான ‘ரெரா’வில் பதிவு செய்திருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும். வீட்டின் நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) வழங்கவில்லை எனவும், அதை வழங்க வேண்டும் எனவும் ‘ரெரா’விடம் மனுவைத் தாக்கல் செய்து உங்களுக்கான தீர்வைப் பெறலாம். பில்டர் மேற்படிச் சான்றிதழைக் கொடுக்கத் தவறும்பட்சத்தில், ‘ரெரா’ தக்க நடவடிக்கை எடுத்து அபராதத்துடன் சான்றிதழைக் கொடுக்கச் செய்யும்.”

பங்குச் சந்தையில் என் மனைவியுடன் இணைந்து முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்?

பி.ராஜகுரு, திருச்சி-6

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு புரோக்கரிடம் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கும்போது, நீங்கள் உங்கள் மனைவியின் பெயரையும் சேர்த்து ஜாயின்ட் அக்கவுன்ட்டாக ஆரம்பிக்கலாம். உங்கள் டீமேட் கணக்கிலுள்ள பங்குகள் உங்கள் இருவரையும் சாரும். ஆனால், ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கிய பிறகு, உங்கள் மனைவியை அந்தக் கணக்கிலிருந்து விலக்க முடியாது என்பது விதிமுறை. அதையும் கவனத்தில்கொள்க.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism