Published:Updated:

கேள்வி - பதில் : வீட்டு வாடகையை உயர்த்திய உரிமையாளர்...

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

யாரிடம் புகார் செய்வது..?

என் வீட்டு உரிமையாளர் வருடத்துக்கு ஒரு முறை 10% வாடகையை உயர்த்துவார். ஆனால், இப்போது 20% உயர்த்திவிட்டார். இது குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது?

செங்குட்டுவன், மதுரை

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“பொதுவாக, வாடகை வீடுகளுக்கு ஆண்டுக்கு 5% முதல் 10% வரை வாடகையை உயர்த்துவார்கள். தற்போது வந்திருக்கும் புதிய வாடகைச் சட்டப்படி (Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlords and Tenants Rules 2019), அந்த வீட்டில் எவ்வளவு காலம் குடியிருக்கலாம், வாடகையை ஆண்டுக்கு எவ்வளவு உயர்த்துவது என்பதை வீட்டு உரிமையாளரும் வாடகைதாரரும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்; இந்த ஒப்பந்தப்படி நடக்கவில்லையென்றாலோ, ஒப்பந்தமே போடப்படாமல் சிக்கல் ஏற்பட்டாலோ அது குறித்து `வாடகை அதிகாரி’ என்ற பொறுப்பிலிருக்கும் அதிகாரியிடம் முறையிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த அதிகாரி இருப்பார். அவர், இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி உரிய வாடகையை நிர்ணயிப்பார்.”

வி.எஸ்.சுரேஷ், த.முத்துகிருஷ்ணன், கே.ஆர்.சத்யநாராயணன்
வி.எஸ்.சுரேஷ், த.முத்துகிருஷ்ணன், கே.ஆர்.சத்யநாராயணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த நான்கு ஆண்டுகளாக துபாயில் பணியாற்றிவரும் நான், மூன்று மாத விடுப்பில் இந்தியா வந்திருக்கிறேன். தற்போது இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்வதற்கான வழிமுறையைக் கூறவும்.

பிரசாத், முகநூல் வழியாக

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“நீங்கள் துபாயில் வேலை பார்ப்பவர் என்பதால், `என்.ஆர்.ஐ’ எனப்படும் வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்ற கணக்கில் வருவீர்கள். இந்தியப் பங்குச் சந்தையில், நேரடியாக உங்கள் பெயரில் முதலீடு செய்யலாம். அதற்கு நீங்கள் ஒரு பங்குத் தரகரிடம் என்.ஆர்.ஐ-க்கு உண்டான டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியராக டீமேட் கணக்கைத் தொடங்கினால்,  நீங்கள் பங்குகளை முதலீட்டின் அடிப்படையில் மட்டுமே வாங்கவோ விற்கவோ முடியும். அந்த டீமேட் கணக்கில் முதலீடு மற்றும் வர்த்தகமும் செய்ய முடியும்.

ஒரு டீமேட் கணக்கைத் தொடங்க பான் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், வங்கிக் கணக்கு, உங்கள் புகைப்படம் போன்ற சான்றிதழ்கள் தேவை.”

வாடகையை ஆண்டுக்கு எவ்வளவு உயர்த்துவது என்பதை வீட்டு உரிமையாளரும் வாடகைதாரரும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வரி இல்லாத பாண்டுகளில் (Tax Free Bonds) முதலீடு செய்யலாமா... இவற்றில் இருக்கும் ரிஸ்க்குகள் என்னென்ன?

திவ்யா, சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“வரி இல்லாத பாண்டுகளை அரசு நிறுவனங்கள் வெளியிடும். இவற்றில் முதலீடு செய்வதில் ரிஸ்க் எதுவும் கிடையாது. ஆனால், இவற்றில் ஆறு சதவிகிதத்துக்குமேல் வருமானம் எதிர்பார்க்க முடியாது. தற்போது இந்த பாண்டுகள் வெளியிடப்படவில்லை. பாண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால், அவை பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குச் சந்தையைத்தான் அணுக வேண்டும்.”

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

வங்கி சேமிப்புக் கணக்குக்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி விலக்கு உண்டா?

லட்சுமணன், சேலம்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“வங்கி சேமிப்புக் கணக்குக்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், வருமான வரிச்சட்டம் 80TTA பிரிவின்படி, ரூ.10,000 வரை வரிவிலக்கு உண்டு. மூத்த குடிமக்களுக்கு 80TTB பிரிவின்படி, ரூ.50,000 வரை வரிவிலக்கு உண்டு.

இந்த 50,000 ரூபாயில் வங்கிச் சேமிப்புக்கான வட்டி, அஞ்சலகச் சேமிப்புக்கான வட்டி மற்றும் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியும் கணக்கில் கொள்ளப்படும்.”

நான் சென்ற ஆண்டு எம்.பி.ஏ முடித்தேன். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக ஆக என்ன படிப்பு படிக்க வேண்டும், எவ்வளவு செலவாகும்?

பிரபு, சென்னை

எஸ்.பி.சண்முகம், இயக்குநர், ஷான் ஃபின்பிளான் பிரைவேட் லிமிடெட்

“மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டராக https://certifications.nism.ac.in/nismaol/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, V-A என்ற தேர்வு எழுத வேண்டும். இதற்குக் கட்டணமாக ரூ.1,500 மற்றும் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

இந்த ஆன்லைன் தேர்வை சென்னையிலுள்ள மூன்று மையங்களில் ஏதாவது ஒன்றில் எழுதலாம். அந்த விவரங்கள் இணைய தளத்தில் இருக்கும். 50 அல்லது அதற்குமேல் மதிப்பெண்கள் பெற்றால், பத்து நாள்களில் சான்றிதழை அந்த தளத்திலேயே டவுன்லோடு செய்துகொள்ளலாம். அடுத்து, ‘amfiindia.com’ இணையதளத்தில் அந்தச் சான்றிதழை இணைத்து விநியோகஸ்தராக ஆக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணமாக ரூ.3,000 + ஜி.எஸ்.டி (தனிநபர்களுக்கு) செலுத்த வேண்டும். இது மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு ரூ.1,500+ஜி.எஸ்.டி செலுத்தி மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐம்பது வயதான எனக்குப் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. தற்போது புற்றுநோயின் அறிகுறி இருப்பதாகத் தெரிகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சைச் செலவுக்கு எனது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பயன்படுத்த முடியுமா, இதற்கு மாற்று வழி ஏதும் இருக்கிறதா?

- தேவந்திரன், மெயில் மூலமாக

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

“புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்குப் புற்றுநோய் வந்தால் கண்டிப்பாக சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும். புகைபிடிப்பவர்கள் பாலிசி எடுக்கும்போது தாங்கள் புகைபிடிப்பதை விண்ணப்பத்தில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். தெரியப்படுத்தாதவர்களுக்கு க்ளெய்ம் தர மாட்டார்கள். தெரியப் படுத்தியிருக்கும் பட்சத்தில், புற்றுநோய் வந்தால் அதற்கான மூல காரணம் என்ன என்பதைப் பொறுத்து க்ளெய்ம் கொடுப்பது குறித்து முடிவெடுப்பார்கள்.

உதாரணமாக, மரபுவழியாக வந்ததா அல்லது கொழுப்புக்கட்டி புற்றுநோயாக மாறியதா என்று ஆராய்ந்து காப்பீடு நிறுவனம் க்ளெய்ம் தொகை தரும். புகையிலையால் வரும் வாய்ப்புற்று, புகைபிடித்தலால் வரும் நுரையீரல் புற்றுநோய்க்கு க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே.” 

எஸ்.பி.சண்முகம், கே.பி.மாரியப்பன்
எஸ்.பி.சண்முகம், கே.பி.மாரியப்பன்

கடந்த ஓராண்டாக ஷேர் புரோக்கர் மூலமாகப் பங்கு முதலீடு செய்துவருகிறேன். மொபைல் ஆப் மூலமாக முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்?

- குமரவேல், சென்னை

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“உங்களுடைய புரோக்கிங் நிறுவனத்துக்கான மொபைல் டிரேடிங் ஆப் இருக்கிறதா என்று புரோக்கரிடம் விசாரித்து, அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். ஆப்பில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

ரிஜிஸ்டர் செய்யும் முறையை உங்களுடைய புரோக்கரே உங்களுக்கு மெயில் மூலமாகத் தருவார். ரிஜிஸ்டர் செய்த பிறகு உங்களுக்கு பயனர் எண் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். உங்களுடைய போர்ட்ஃபோலியோவை பார்ப்பது, பண வரவு செலவுகளைக் கண்காணிப்பது, ஆர்டர் போடுவது உள்ளிட்டவற்றை அதன் மூலம் செய்ய முடியும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com